வான்கா - Page 39
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
தான் மட்டும் எப்படி அவளிடம் இது குறித்து பேச முடியும்? ஆனால், பேசித்தான் ஆக வேண்டும். விரைவிலேயே தி ஹேக்கிற்குத் தான் போக இருப்பதால் சீக்கிரமே இந்த விஷயத்தை கேயிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் வின்சென்ட்.
கேயை முத்தமிட வேண்டும், அவளுடைய உடலில் உள்ள உறுப்புகளில் ஆசை தீர, உதட்டை வைத்து ஒத்தடம் தரவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் அவன் மனதில் வேட்கை எழுந்து, அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு அதை அடக்கிக்கொண்டு, நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். ஒரு நாள் அருவிக்கரையோரத்தில் இருந்த எம் மரங்களின் அருகில் நின்று வின்சென்ட், தான் வரைந்த ஓவியங்களை கேயிடம் காட்டிக் கொண்டிருந்தான். கேயின் உடலோடு மிகவும் நெருங்கி நின்றிருந்தான் வின்சென்ட். அவளின் மார்புப் பகுதி இலேசாக அவன் மீது உரசிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. கையில் வைத்திருந்த ஓவியங்கள் கீழே விழுந்தன. கேயை அப்படியே மார்போடு சேர்த்து இறுக கட்டிப்பிடித்தான். அடுத்த நிமிடம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில். அவன் பேசினான்: “கே... இதற்கு மேல் என்னால இதை அடக்கி வைக்க முடியாது. நான் உன்னை எந்த அளவுக்கு உயிருக்குயிரா காதலிக்கிறேன் தெரியுமா? முதல் தடவை உன்னைப் பார்த்த நாள்ல இருந்தே நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ எப்பவும் என் கூடவே இருக்கணும். நாம சேர்ந்தே தி ஹேக்கிற்குப் போவோம். அங்கே ஒரு வீடு பார்த்து குடியேறுவோம். நாம சந்தோஷமா அங்கே இருக்கலாம். நீ என்னைக் காதலிக்கறேல்ல கே? கண்ணே... நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உன் வாயால சொல்லு...”
கே எந்தவித அசைவும் இல்லாமல், அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் எதுவுமே அவள் காதுகளில் பதியவில்லை. அவள் தன் கறுப்பு விழிகளால் வின்சென்ட்டையே உற்று பார்த்தாள். தொண்டைக்குள் இருந்து வந்த உரத்த அலறலை வெளியே கேட்காத அளவிற்கு ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்ட கே, கோபமான குரலில் சொன்னாள்: “நான் ஒரு நாளும் உன்னைக் காதலிக்கல.”
குழந்தையை வாரி கையில் எடுத்த அவள், அடுத்த நிமிடம் திரும்பிகூடப் பார்க்காமல் வயல் வழியே ஓடினாள். அவ்வளவுதான் – வின்சென்ட் அதிர்ச்சியடைந்துபோய் சிலை என நின்று விட்டான். என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவே அவனால் முடியவில்லை. “கே... கே..”- வின்சென்ட் உரக்க அழைத்தான்: “ஓடாதே...”
அவன் அப்படி அழைத்ததும், கே இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி ஓடினாள். வின்சென்ட் கைகளை வீசியவாறு அவள் பின்னால் ஓடினான். கே ஓடும்போது கால் இடறி கீழே விழுந்தாள். வேகமாக ஓடிவந்த வின்சென்ட் அவளின் கையை எட்டிப் பிடித்தான். “கே... நான் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன். நீ இப்படி ஓடுறது நல்லதா? நீயும் என்னைக் காதலிக்கிறல்ல...? எனக்கு நீ எவ்வளவு அவசியம் தெரியுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிப்போம்.”
இதைக் கேட்டதும் அவளிடமிருந்த பயம் இப்போது வெறுப்பாக மாறியது. அவளின் கண்களில் அது தெரிந்தது. அவனின் கையைத் தட்டிவிட்டு, அவள் மீண்டும் ஓட முற்பட்டாள்.
“கே... கொஞ்சமாவது என்னைக் காதலிக்கறேன்னு சொல்லு...”
“நிச்சயமா இல்ல... நிச்சயமா நான் உன்னை கொஞ்சம் கூட காதலிக்கல...”
அடுத்த நிமிடம் – கே அந்த இடத்தைவிட்டு ஓடி மறைந்தாள். உயிரற்ற சவத்தைப் போல ஆன வின்சென்ட் அமைதியாக அந்த களி மண்ணில் உட்கார்ந்தான். அப்படியே சிலை என எந்தவித சலனமும் இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த அவன், மெல்ல எழுந்துபோய் சிதறிக்கிடந்த தன் ஓவியங்களைக் கையில் எடுத்தவாறு எந்தவித உயிரோட்டமும் இல்லாமல் மெல்ல வீடு நோக்கி நடந்தான்.
¤ ¤ ¤
வீட்டில் ஒரு பரபரப்பான சூழ்நிலை. கே அறைக்குள் தாழ்ப்பாள் போட்டு தன்னை அடக்கிக் கொண்டாள். வின்சென்ட்டின் தந்தை வலது கண்ணை மூடியவாறு என்னவோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் அப்படி இருக்கிறார் என்றால் ஏதோ கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.
“வின்சென்ட், நீ ஏன் அப்படி நடந்தே?”- அவனின் தாய் கேட்டாள்.
“நான் என்ன செஞ்சேன்னு நீங்க சொல்றீங்க?”
“உன்னோட கஸினை இப்படித்தான் அவமானப்படுத்துறதா?”
“கே நடந்தது முழுவதையும் உங்கக்கிட்ட சொன்னாளா?”
மேஜையின் ஒரு பகுதியை இறுகப் பற்றிக் கொண்டு அவனின் தந்தை கூறினார்:
“நீ அவளைக் கட்டிப்பிடிச்சு பைத்தியக்காரனைப் போல புலம்பினாயாமே!”
“நான் அவளைக் காதலிக்கிறேன்னு சொன்னேன். இதுல அவமானப்படுறதுக்கு என்ன இருக்கு?”
“நீ அவ்வளவுதான் சொன்னியா?”
“இல்ல. என்னோட மனைவியா இருக்க உனக்கு சம்மதம்தானேன்னு கேட்டேன்.”
“அவள் உன்னோட முதலாவது கஸின்றதை நீ மறந்துட்டியா?”
“அதனால என்ன?”
“அது ஒரு பொருந்தாத உறவு. இது உனக்கு தெரியலியா?”
“நீங்க சொல்றது சுத்த முட்டாள்தனமா இருக்குப்பா”- மெதுவான குரலில் சொன்னான் வின்சென்ட்.
“ஒரு விஷயம் நான் சொல்றேன்” – தியோடரஸ் உரத்த குரலில் சொன்னார்: “வான்கா குடும்பத்துல இப்படி ஒரு தப்பான காரியம் நிச்சயம் நடக்காது.”
“வின்சென்ட்... என்னோட அன்பு மகனே”- அவனின் தாய் அவனைச் சாந்தப்படுத்தும் வகையில் கூறினாள்: “நீ அவளைக் காதலிக்கிறேன்னா, இன்னும் கொஞ்சநாள் காத்திருக்கக் கூடாதா? அவளோட புருஷன் இறந்து ஒரு வருஷம்தானே ஆகுது! அவ வோஸ் மேல ஏகப்பட்ட பாசத்தை வச்சிருந்தவ. இது உனக்கே நல்லா தெரியும்... சரி... அது இருக்கட்டும். ஒருத்தியைக் கல்யாணம் பண்ணி காப்பாத்துற அளவுக்கு உன்கிட்ட பணம் இருக்கா என்ன?”
அன்று இரவு வின்சென்ட்டிற்கு தூக்கமே வரவில்லை. ‘இல்ல... இல்ல... நான் உன்னை காதலிக்கவே இல்ல...’ என்று கே சொன்ன வார்த்தைகள் சாவு மணி போல தொடர்ந்து அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. மறுநாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தபோது, கே வீட்டில் இல்லை. அவளை வின்சென்ட்டின் தந்தை, அவளின் வீட்டுக்கு அனுப்பிவிட்டிருந்தார்.
¤ ¤ ¤
கேக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினான் வின்சென்ட். தன் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களையும், வேட்க்கையையும், உணர்வுகளையும் ஒவ்வொரு கடிதத்திலும் அள்ளி கொட்டியிருந்தான். ஒரு கடிதத்திற்குக் கூட கே பதில் போடவே இல்லை.