வான்கா - Page 42
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
தனக்கு நேர் எதிரான நடவடிக்கைகளைக் கொண்ட மனிதன் என்பதை, பார்த்தபோதே தெரிந்து கொண்டான் வின்சென்ட். சுற்றி நடக்கும் எந்தச் செயலுமே சொல்லப் போனால் தெபோக்கைப் பாதிப்பதில்லை. எல்லா விஷயங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சர்வ அலட்சியமாக எதையும் பார்க்கக் கூடிய மனப்போக்கு உள்ளவன் தெபோக். அறிமுகமான சில நிமிடங்களிலேயே வின்சென்ட்டைத் தன் ஸ்டுடியோவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தான் அவன்.
ஸ்டுடியோ முழுவதும் வெல்வெட் மயமாக இருந்தது. நீளமான இருக்கைகள், தலையணைகள், புத்தக அலமாரிகள், மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விரிப்புகள் – எல்லாம் சேர்ந்து ஒரு ஆடம்பர சூழலை அந்த ஸ்டுடியோவிற்கு உண்டாக்கி இருந்தன. தன்னுடைய ஸ்டுடியோவுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது தான் ஒரு சாமியார்தனமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதை வின்சென்ட்டே உணர்ந்தான்.
அடுப்பில் தேநீர் தயாரானவுடன், கேக் வாங்கிக்கொண்டு வரும்படி வேலைக்காரியை வெளியே அனுப்பினான் தெபோக். தான் வரைந்த ஓவியங்களை ஈஸலில் சரியாக வைத்த அவன் வின்சென்ட்டிடம் சொன்னான்: “இதுதான் நான் சமீபத்துல வரைந்த ஓவியம். ஒரு சுருட்டு பிடி. புகை உள்ளே போச்சுன்னா ஒருவித சுகமும் உற்சாகமும் கிடைக்கும்.”
தெபோக் நீட்டிய நீளமான ரஷ்யன் சுருட்டை வாயில் பொருத்தி புகைத்தான் வின்சென்ட். அதிலிருந்து வந்த கருத்த புகைப்படலத்தினூடே தெபோக் வரைந்த ஓவியங்களை அவன் பார்த்தான். மற்ற எல்லா ஓவியர்களையும்போல தெபோக்கும் தன் படங்களைப் பற்றி வின்சென்ட் என்ன கூறப் போகிறான் என்று ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன சொல்லலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் வின்சென்ட். பின்புலங்களை நன்றாகவே வரைந்திருந்தான் தெபோக். ஆனால், ஓவியங்களை பிரமாதம் என்று கூற முடியாது. தெபோக்கின் இயல்பைப் போலவே அந்த ஓவியங்களிலும் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும் கலைஞர்களின் மனம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவனாகையால் வின்சென்ட் தெபோக்கிடம் பட்டும் படாமலும் தன் கருத்தைச் சொன்னான்: “பின்புலக் காட்சிகளை ரொம்பவும் பிரமாதமா வரைஞ்சிருக்கீங்க. எப்படி வரைஞ்சா, பாராட்டுற அளவுக்கு அது இருக்கும்ன்ற விஷயத்தை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க.”
தன் ஓவியங்களை மனம் திறந்து பெரிய அளவில் வின்சென்ட் பாராட்டுகிறான் என்று நினைத்துக் கொண்ட தெபோக் அவனுக்கு நன்றி சொன்னான். தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, வின்சென்ட் மனதில் ஒரு குழப்பம். தெபோக்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுடன் நட்பு கொண்டிருப்பதை மனப்பூர்வமாக வின்சென்ட் விரும்பவும் செய்தான். ஆனால், அவன் வரைந்த ஓவியங்களைப் பற்றி உண்மையான தன் கருத்தை எப்படி சொல்லாமல் இருப்பது?
“உங்களோட ஓவியத்துல ஒரே ஒரு விஷயம் எனக்கு அவ்வளவா பிடிக்கல.”
“என்ன அது?”- எங்கோ பார்த்தவாறு கேட்டான் தெபோக்.
“உங்களோட ஓவியத்துல ஆட்களோட உருவ அமைப்பு... அது அவ்வளவு சரியா இருக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”- அலட்சியமாக சாய்ந்தவாறு ஏதோ ஒரு ரகசியத்தைக் கூறுகிற மாதிரி மெதுவான குரலில் தெபோக் சொன்னான்: “நான் மனித உருவங்களைச் சரியா வரைய பல தடவை முயற்சி செஞ்சு பார்த்தேன். ஆனா, எனக்கு என்னவோ அது சரியா வரவே இல்ல. சொல்லப்போனா... இயற்கைக் காட்சிகளை வரையிறதுலதான் எனக்கு விருப்பம் அதிகம். அதனால உருவங்களை வரையிறதுல நான் பெரிசா கவனம் எடுத்துக்கறது இல்ல. என்ன... நான் சொல்றது சரிதானே?”
“என் விஷயம் உங்களுக்கு நேர் மாறானது”- வின்சென்ட் சொன்னான்: “பின்புலங்களை வரையிறப்போ நான் முன்னாடி இருக்கிற பாத்திரங்களோட உருவ அமைப்புலயும் தீவிரமா கவனம் செலுத்துவேன். ஓவியக் கலையைப் பொறுத்தவரை என்னைவிட நீங்க முன்னாடி இருக்கிற மனிதர். இன்னும் சொல்லப்போனா மக்களின் அங்கீகாரம் பெற்ற ஓவியர் நீங்க. ஆனா, ஒரு விஷயத்தை நான் சொல்ல அனுமதிப்பீங்களா?”
“தாராளமா சொல்லு. கேட்க நானும் ஆவலா இருக்கேன்.”
“அப்படின்னா சொல்றேன். உங்களோட ஓவியங்கள்ல உணர்ச்சி வெளிப்பாடு கொஞ்சம் குறைவா இருக்கு...”
“உணர்ச்சி வெளிப்பாடு... என்ன உணர்ச்சியை நீ சொல்ற?”
“அதை விளக்கிச் சொல்றது கஷ்டம். ஆனா, இந்த ஓவியங்கள்ல இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கலாம்....”
தெபோக் அடுத்த நிமிடம் எழுந்தான். தன் ஓவியத்தை உற்று பார்த்தவாறு சொன்னான்: “இங்க பாரு நண்பா! மத்தவங்க சொல்றாங்கன்றதுக்காக என்னோட ஓவியங்கள்ல உணர்ச்சிகளைக் கொட்டுறதுக்கு நான் ஆள் இல்ல. நான் எதைப் பார்க்கிறேனோ, என் மனதில் என்ன தோணுதோ அதை வரையிறேன். என் மனசுல ஒரு உணர்ச்சியுமே தோணலைன்னா பிறகெப்படி அதை படத்துல கொண்டு வர முடியும்? நீ சொல்ற உணர்ச்சியை ஏதாவது காய்கறி கடையில காசு கொடுத்து வாங்க வேண்டியதுதான்.”
¤ ¤ ¤
வின்சென்ட்டின் கையில் இருந்த பணமெல்லாம் செலவழிந்துவிட்டது. தியோவின் பணம் இன்னும் வந்து சேரவில்லை. அவன் சாப்பிட்டே மூன்று நாட்களாகி விட்டன. வயிறு நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. ஓவியம் வரைவதன் மூலம் பசியை மறக்க முற்பட்டான் வின்சென்ட். ஆனால், முடியவில்லை. கடைசியில் தெர்ஸ்டீக், பாரீஸில் இருந்து திரும்பி வந்தபோது அவனிடம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கினான். வேகமாக வெளியே சென்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டான். வயிற்றில் இருந்த நெருப்பு அடங்கியது. ஆனால், மனதில் தனிமையுணர்வு தோன்றி அவனை அலைக்கழித்தது. அவனால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. நேராக ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மதுக்கடைக்குள் நுழைந்து அமர்ந்தான்.
‘மினுக் மினுக்’ என்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கு வெளிச்சம் அறைக்குள் இருந்த இருட்டை விரட்டுவதற்குப் போதுமானதாக இல்லை. சிமெண்ட் தரையும், நிறம் இழந்து போயிருந்த சுவரும், சுவரையொட்டி கிடந்த சில பெஞ்சுகளும், பழைய கல் மேஜைகளும் அந்த இடம் அந்த அளவிற்கு ஒன்றும் தரமான இடமல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மன மகிழ்ச்சியை ஒருவன் எப்படிப் பெற முடியும்? கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற எண்ணி தேடி வருபவர்களுக்கு ஒரு தற்காலிக இடம் அது என்பது மட்டும்தான் உண்மை.
வின்சென்ட் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். மனம் திறந்து பேசுவதற்கு இங்கு யாருமே இல்லை. மவ், வின்சென்ட்டின் குருஸ்தானத்தில் இருப்பவன். தெர்ஸ்டீக், இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வியாபாரி. தெபோக்கை எடுத்துக் கொண்டால் அவன் ஒரு பணக்கார உல்லாசப் பேர்வழி.