
கேயையே வின்சென்ட்டின் கண்கள் உற்றுப் பார்த்தன. இப்படி ஒரு அழகியை தான் இதுவரை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்பதை மட்டும் நன்றாக அறிந்திருந்தான் வின்சென்ட். என்னதான் முயற்சி செய்து பார்த்தாலும் அவள் முகத்தை விட்டு தன் கண்களை அவனால் நீக்க முடியவில்லை என்பதே உண்மை. ஒரு சிப்பி செதுக்கியதைப் போன்ற அந்த அழகான முகத்தில்தான் என்ன மென்மைத்தன்மை! அவளின் கண்களில் ஒரு காவியத் துடிப்பு தெரிந்தது. ஆயிரம் கதைகளை அந்தக் கண்கள் சொல்லாமல் சொல்லின. அவளின் செவ்விதழ்கள் வின்சென்ட்டின் மனதைச் சதா நேரமும் சுண்டி இழுத்தன. இனம் புரியாத ஒரு உணர்வு அரும்பி வின்சென்ட்டின் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
சாப்பாடு முடிந்ததும், ஜான் தாயின் மடியில் தலையை வைத்து உறங்கத் தொங்கினான். கே மகனின் தலைமுடியை விரல்களால் வருடினாள். அவனின் முகத்தையே அவள் வெறித்துப் பார்த்தாள். தன் மகனின் முகத்தில் இறந்துபோன தன் கணவனை அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை வின்சென்ட் உணர்ந்து கொண்டான்.
மாலை நேரம் வரும்வரை தொடர்ந்து வின்சென்ட் படம் வரைந்து கொண்டிருந்தான். அவ்வப்போது ஜான் மழலைக்குரலில் ஏதாவது சொல்வான், இல்லாவிட்டால் தாளில் மையைச் சிந்தி விடுவான், அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடிப்பான். வின்சென்ட்டிற்கு அவனின் செயல்கள் மிகவும் பிடித்திருந்தன.
சாயங்காலமானதும், மூவரும் வீடு திரும்பினார்கள். வருகின்ற வழியில் இருந்த தடாகத்தில் மாலை நேர சூரியன் தன் பொற்கதிர்களை மஞ்சள் நிறத்தில் பரவ விட்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக கதிரவன் மலைக்குப் பின் மறைந்து கொண்டிருப்பதையே அவர்கள் கண் இமைக்காமல் பார்த்தனர். தான் வரைந்த ஓவியங்களை கேயிடம் காட்டினான் வின்சென்ட். ஓவியங்கள் சுமார் ரகத்தைச் சேர்ந்தவைதான் என்று அவள் மனதில் பட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் சொன்னாள்:
“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, வின்சென்ட்.”
“உண்மையாகவா சொல்ற, கே?”
அவள் வாய் திறந்து பேசியதும், இதுவரை மனதில் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களையும் வெளியே மனம் திறந்து அவளிடம் பேசி விட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தான் வின்சென்ட். தான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கும், தன்னைப் பார்த்து பரிதாபப்படுவதற்கும் தனக்கு ஒரு ஆள் கிடைத்திருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். அதற்காக தன் மனதிற்குள் அவன் பெருமை கூட பட்டுக் கொண்டான். தன் மனதில் இருந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் மடை திறந்த வெள்ளம் போல அவளிடம் கொட்டினான் அவன். தன் எண்ணங்கள், இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்று ஒன்றுவிடாமல் கூறினான். கொஞ்சம் கூட நிறுத்தாமல், தொடர்ந்து ஓடிவரும் நீரோட்டம்போல அவன் பேசிக்கொண்டே இருந்தான். படு வேகமாக அவன் பேசியதை கேயால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவளுக்கு தலையைச் சுற்றுவது மாதிரி இருந்தது. அவன் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான் என்று அவளுக்கே தெரியவில்லை. அவன் கைகளை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டே பேசுவதை வியப்புடன் பார்த்தாள் அவள். தொடர்ந்து அவன் பேசிக் கொண்டிருந்ததற்கு மத்தியில் அவளுக்கு நன்கு அறிமுகமான ஒரு ஓவியரின் பெயரை அவன் உச்சரிக்கவே, அவள் சொன்னாள்:
“அந்த மனிதர் வோஸின் நண்பர். பல நேரங்கள்ல வீட்டுக்கு வந்திருக்கார்.”
அவ்வளவுதான்-
தடையே இல்லாமல் மழை என பெய்து கொண்டிருந்த அவன் வாய்ச் சொற்கள் நின்றன. வோஸ்! வோஸ்! எப்போது பார்த்தாலும் வோஸ் பெயரைத் தவிர இவளுக்கு வேறு ஒன்றுமே தெரியாதா? அவன் மரணத்தைத் தழுவி ஒரு வருடமாகிவிட்டது. இன்னுமா அவனை அவள் மறக்காமல் இருக்கிறாள்? வோஸ் – ஊர்ஸுலாவைப் போல ஒரு கடந்த காலச் சின்னம். இவள் எதற்கு பேசும்போதெல்லாம் வோஸின் பெயரை வேண்டுமென்றே உச்சரித்துக் கொண்டிருக்கிறாள்?
¤ ¤ ¤
இளவேனில் காலம் படுவேகமாகக் கடந்தோடியது. காட்டில் இருந்த பைன் மரங்களின் இலைகள் ப்ரவுன் நிறத்தில் காட்சியளித்தன. கேயும் ஜானும் வின்சென்ட்டுடன் சதா நேரமும் காட்சியிளிப்பவர்களாக ஆனார்கள். கேயின் ஒட்டிப் போயிருந்த கன்னங்களில் இலேசாக சதைப்பிடிப்பு உண்டானது. வெளிறிப் போயிருந்த முகத்தில் உயிரோட்டம் வரத் தொடங்கியது. அவளின் நடையில் ஆரம்ப நாட்களில் வின்சென்ட் அவளிடம் கண்ட வேகம் தென்பட ஆரம்பித்தது. தன்னுடைய இளம் பிராயத்து வாழ்க்கையைப் பற்றியும், தான் படித்த புத்தகங்களைப் பற்றியும், வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் மனம்விட்டு அவள் பேசத் தொடங்கினாள். கேயின் இந்தப் புதிய வாழ்க்கையைப் பார்த்து உண்மையிலேயே குடும்பத்தில் உள்ள எல்லோருமே மனப்பூர்வமாக சந்தோஷப்பட்டனர்.
ஊர்ஸுலாவை விட்டு பிரிந்த பிறகு, கடந்த ஏழு வருடங்களாக தான் உயிரோடு இருந்தது எப்படி என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான் வின்சென்ட். தன்னுடன் இனிமையாகப் பேசிக் கொண்டிருக்கவோ, கண்களில் அன்பை வைத்துக் கொண்டு பார்க்கவோ, முகத்தில் காதல் வயப்பட்டு விரல்களால் வருடவோ, முத்தங்கள் தந்து மூச்சடைக்க வைக்கவோ இதுவரை அவனின் வாழ்க்கையில் யாருமே வரவில்லை என்பதே உண்மை. இது வாழ்க்கையா? கொடுமையானதாயிற்றே இது! மிச்லே என்ன சொல்லியிருக்கிறான்? `ஒரு பெண்ணின் சுவாசம் பட்டாலே ஒரு ஆண் ஆணாக இருப்பான்’ என்று அவன் சொன்னது எத்தனை உண்மையானது! தனக்கு இப்போது இருபத்தெட்டு வயது நடக்கிறது! இருந்தாலும், முழுமையான உயிரோட்டத்துடன் தான் இல்லை என்பதையும் வின்சென்ட் உணர்ந்தே இருக்கிறான். கேயின் பேரழகும், அவளின் தற்போதைய நெருக்கமும் அவன் மனதில் புத்துணர்வை உண்டாக்கியிருக்கின்றன என்பது நிஜம். அவன் அவளின் அழகை மட்டுமா காதலிக்கிறான்? அவளின் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு பார்வையையும் அவன் தன் உயிரைவிடப் பெரிதாக நினைத்து காதலித்தான். தன் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அவள் இரண்டறக் கலந்து இழையோடி இருப்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். இந்தக் காதல் மட்டும் இல்லை என்றால் தான் உயிரற்ற ஜடம்- இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று திடமாக நம்பினான் வின்சென்ட். காதல்தான் வாழ்க்கையின் உப்பு. இப்போதைய இந்தக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, முன்பு ஊர்ஸுலாவிடம் தான் கொண்ட வேட்கை சிறு பிள்ளைத்தனமாகத் தெரிந்தது வின்சென்ட்டிற்கு.
கேயுடன் சேர்ந்து நடக்கும்போது, எங்கே நிதானம் தவறி விடுவோமோ என்று பயப்படவும் செய்தான் வின்சென்ட். கே ஒருபோதும் காதலைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ பேசினதே இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook