வான்கா - Page 35
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“நான் நினைச்சேன் நாம ரெண்டு பேரும் நல்ல கலை எது, கெட்ட கலை எதுன்னு இதுவரை விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு.”
¤ ¤ ¤
வின்சென்ட் இரவும் பகலும் தன் வேலையிலேயே கவனமாக இருந்தான். தியோ பாரீஸில் இருந்து படம் வரைவதற்கான பென்சில்களையும்,ப்ரஷ்களையும், மனித மற்றும் மிருகங்களின் உடலைமைப்பு பற்றிய புத்தகங்களையும், ஹால்பெயின் (ஜெர்மன் ஓவியர்) வரைந்த சில ஓவியங்களையும் அனுப்பியிருந்தான்.
மனித உருவங்கள் வரைவதில்தான் வின்சென்ட் கூடுதல் கவனம் செலுத்தினான். உடலமைப்பு சரியாக வந்துவிட்டால், மற்ற எல்லா விஷயங்களும் சரியாகவே அமையும் என்று அவனுக்குப் பட்டது. வாழ்க்கை ஓட்டத்தை ஓவியமாகத் தீட்ட அவன் மனம் தீவிரமாக வேட்கைப்பட்டது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் அவ்வப்போது உண்டாகும். ஒருநாள் வின்சென்ட் பால்ஸாக்கின் (ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்) ‘லே பேர் கொரியோ’ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது, தியோடரஸ் கேட்டார்: “நீ சாதாரணமாகப் பேசும்போது கூட கடுமையாக உழைக்கிறதைப் பத்தி பேசுவே. ஆனா, ஒண்ணுக்கும் உதவாத அந்த ஃப்ரெஞ்சு புத்தகத்தை இப்போ படிச்சிக்கிட்டு பொழுதை வீணாக்கிக்கிட்டு இருக்கே. இது தேவையா?”
அடுத்த நிமிடம் –
வின்சென்ட் புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தினான். தான் சொல்கின்ற விஷயங்களை ஒரு தடவை கூட தன் தந்தை புரிந்து கொள்வது மாதிரியே தெரியவில்லையே என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது.
“இங்க பாருங்கப்பா. ஒருத்தன் பெரிய ஓவியனா வரணும்னா அவன் ஓவியத்தைப் பற்றிய விஷயங்கள் மட்டுமில்ல, இலக்கியங்களைப் பற்றியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கணும்.”
“அதுதான் எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஒரு சர்ச்சுல போயி நான் பிரசங்கம் செய்யணும்னா சமையலறைக்குள்ள நுழைஞ்சு உன்னோட அம்மா எப்படி சமையல் பண்றான்னு நான் பார்த்துக்கிட்டு இருக்கணுமா என்ன?”
“மனிதனோட உருவத்தை வரையணும்னா, உடல்ல இருக்கிற எலும்புகளைப் பத்தியும், சதையைப் பத்தியும், மற்ற உறுப்புகளைப் பத்தியும் ஒரு ஓவியன் தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கணும்.”- வின்சென்ட் பொறுமையாகக் கூறினான்: “ஒரு தலையை வரையணும்னா அந்தத் தலைக்குள்ள என்னவெல்லாம் நடக்குதுன்னு அவன் தெரிஞ்சு வச்சிருக்கணும். வாழ்க்கையை ஓவியமா தீட்டணும்னா வெறும் உடலமைப்பை மட்டும் தெரிஞ்சு வச்சு பிரயோஜனமே கிடையாது – மனிதர்கள் தாங்கள் வாழ்ற உலகத்தைப் பத்தி என்ன நினைக்கிறாங்க, உலகத்தோட அவங்க எப்படி உறவு கொண்டாடி வாழ்றாங்க போன்ற எல்லா விஷயங்களையும் ஒரு ஓவியன் கட்டாயம் தெரிஞ்சு விரல் நுனியில வச்சிருக்கணும். ஒரு ஓவியனுக்கு, தன்னோட ஓவியக் கலையைத் தவிர, மற்ற விஷயங்களைப் பற்றி, எதுவுமே தெரியாம இருந்தா, அவன் எந்தக் காலத்திலயும் ஒரு மூணாம் தர கலைஞனாத்தான் இருக்க முடியும்.”
“வின்சென்ட்...” தியோடரஸ் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னார்: “நீ ஒரு தத்துவவாதியா ஆகப்போறேன்னு நினைக்கிறேன்.”
தன் தந்தைக்கு எந்த பதிலும் கூறாமல் புத்தகத்தைப் படிப்பதில் தீவிரமானான் வின்சென்ட்.
¤ ¤ ¤
பாரீஸுக்கு வரும்படி தியோ அவனை அழைத்திருந்தான். ஆனால், அதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தான் வின்சென்ட். தான் இப்போது வரைந்து கொண்டிருப்பவை, ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒரு ஓவியனின் அறைகுறைப் பிரசவங்கள் என்பதை அவன் அறியாமல் இல்லை. ஒருவேளை தான் தி ஹேக் நகரத்திற்குப் போவதாக இருந்தால், அவனின் நண்பனான தெர்ஸ்டீகும், கஸின் மவ்வும் அவனுக்குப் பலவிதத்திலும் உதவியாக இருக்கலாம். தியோவிற்கு தன் மனதில் உள்ள எண்ணத்தை கடிதமாக எழுதினான் வின்சென்ட். தியோவிற்கு அவனின் கருத்து சரியென்றே பட்டது. அதற்குச் சம்மதம் தந்ததுடன், பயணத்திற்குத் தேவையான பணத்தையும் அனுப்பி வைத்தான்.
தி ஹேக் – ஐரோப்பாவிலேயே சுத்தமான, நாகரீகமான நகரம் என்றால் இதைத்தான் கூறுவார்கள். ஒவ்வொரு தெருவும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும். தெருவின் இரு பக்கங்களிலும் பூத்து நிற்கும் செடிகள். சுத்தமான செங்கல்லால் கட்டப்பட்ட பலமான வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் ரோஜாவும், ஜெரானியாவும் பூத்து அழகு செய்து கொண்டிருக்கும். தரித்திரத்தின் கீற்றைக் கூட எந்த இடத்திலும் பார்க்க முடியாது.
தி ஹேகில் இருக்கும் குபில் காலரியின் மேனேஜராக இருப்பவன்தான் தெர்ஸ்டீக். ஒரு காலத்தில் வின்சென்ட் வேலை பார்த்த அதே நிறுவனம். தொடர்ந்து இந்நிறுவனத்திலேயே பணி புரிந்திருந்தால், ஒருவேளை வின்சென்ட்டும் மற்றவர்களைப் போலவே பணத்தையும், பதவியையும் அடைந்து பந்தாவாக இருந்திருக்கலாம்.
குபில் காலரி படு கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணாடியால் ஆன மேல் கூரையும், விலை உயர்ந்த விரிப்புகளும், அகன்ற மாடிப்படிகளும், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த விலை மதிப்புள்ள ஓவியங்களும் வின்சென்ட்டின் மனதில் ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சாதாரண குமாஸ்தாக்கள் கூட அருமையாக ஆடையணிந்திருந்தார்கள். அவர்களோடு இப்போது தான் இருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தான் வின்சென்ட். மிக மிகக் குறைவாக இருக்கும் தலைமுடி, சிவப்பு நிறத்தில் தாடி ரோமங்கள், விவசாயிகள் அணியும் கோட்டும், காலணியும், கையிடுக்கில் ஒரு பொதி – இதுதான் வின்சென்ட்டின் இப்போதைய தோற்றம். காலரியில் இருந்த ஊழியர்கள் வின்சென்ட்டை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
தெர்ஸ்டீக் ஒரு வசீகரமான தோற்றத்தைக் கொண்ட இளைஞன். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத முகம். அகலமான – உயர்ந்த நெற்றி. பின்னோக்கி வாரிவிடப்பட்டிருக்கும் ப்ரவுன் கலர் தலைமுடி. அழகாக ஒதுக்கிவிடப்பட்டிருக்கும் தாடி. பளபளப்பான இரண்டு கண்கள். மொத்தத்தில் – காண்போரைச் சுண்டி இழுக்கக் கூடிய அழகான தோற்றத்துக்குச் சொந்தக்காரன் தெர்ஸ்டீக்.
தெர்ஸ்டீக் வின்சென்ட்டை மகிழ்ச்சியுடன் கை குலுக்கி வரவேற்றான். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள்.
“நீ ரொம்ப நல்லா இருக்க தெர்ஸ்டீக்”- வின்சென்ட் சொன்னான்.
“நீ சொல்றது சரிதான். எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடிச்சிருக்கு. அது என்னை இளமையா இருக்க வைக்குது. வா... என்னோட அலுவலகத்துக்கு வா...”
வின்சென்ட் தன் கையில் கொண்டு வந்திருந்த ஓவியங்களை தெர்ஸ்டீக்கிடம் காட்டினான். எல்லாம் போரினேஜில் வைத்து அவன் வரைந்த ஓவியங்கள். தெர்ஸ்டீக் ஒன்றுமே பேசாமல் மவுனமாக அவற்றைப் பார்த்தான். எற்றனில் இருக்கும்போது வரைந்த ஓவியங்களைக் காட்டியபோது, என்னவோ மெல்ல தனக்குள் முணுமுணுத்தான். சமீபத்தில் வரைந்த ஓவியங்களைப் பார்த்தபோது தெர்ஸ்டீக் ஆர்வத்துடன் அவற்றைப் பார்த்தான்.
“இதுல லைன் சரியா வந்திருக்கு. ஷேடிங் எனக்கு பிடிச்சிருக்கு”
“எனக்கும் அப்படித்தான் பட்டது.”