வான்கா - Page 36
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
“சரி... வின்சென்ட்...”- தனக்கு முன்னால் இருந்த டெஸ்க்கில் கையை ஊன்றியவாறு தெர்ஸ்டீக் சொன்னான்: “உன்கிட்ட முன்னாடி இருந்ததைவிட கொஞ்சம் வளர்ச்சி தெரியுது. நீ கடினமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்றதைப் புரிஞ்சுக்க முடியுது.”
“கடினமான முயற்சி மட்டும்தான் தெரியுதா? அதனோட விளைவு தெரியலையா?”
“இப்போ அதைப்பத்தி சொல்ல முடியாது,”
“நான் ஆரம்பத்துல வரைஞ்ச ஓவியங்களைக் கொண்டு வந்திருக்கேன்.அதைக் கொஞ்சம் பாக்குறியா?”
சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் ஸ்கெட்சுக்களை வின்சென்ட் எடுத்து தெர்ஸ்டீக்கின் முன்னால் வைத்தான். அறையில் ஒரே நிசப்தம் நிலவிக்கொண்டிருந்தது. தெர்ஸ்டீக் வாயே திறக்கவில்லை. மவுனமாக இருந்தான். வின்சென்ட் வரைந்த படங்கள் சுத்த மோசம் என்று இதற்கு அர்த்தம்!
“இந்தப் படங்கள்ல ஏதாவது வளர்ச்சி தெரியுதா?”- வின்சென்ட் இதுவரை நிலவிக்கொண்டிருந்த அமைதியைக் கலைத்தான்: “ப்ரபாண்டில் நான் வரைஞ்ச ஓவியங்கள்ல போரினேஜில் நான் வரைஞ்ச ஓவியங்களை விட வளர்ச்சி தெரியுதா இல்லியா?”
“ரெண்டு இடத்துலயும் வரைஞ்ச படங்கள்ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம். அதற்காக படங்கள் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கில்ல. எங்கேயோ தப்பு இருக்கு. அது என்னன்னு உடனே என்னால சொல்ல முடியல. ஒண்ணு செய். ஏற்கனவே இருக்கிற படங்களைப் பார்த்து வரையற வேலையை தொடர்ந்து செஞ்சிக்கிட்டே இரு. சொந்தமா ஏதாவது வரையிற அளவுக்கு நீ இன்னும் பக்குவமாகல. ஓவியக் கலையைப் பத்தி தொழில் நுணுக்க விஷயங்களையெல்லாம் நீ கத்தாதான் உன்னால யதார்த்த வாழ்க்கையை ஓவியத்துல கொண்டு வர முடியும்.”
வின்சென்ட் இதற்காக விரக்தி அடைந்துவிட வில்லை. இப்படி விமர்சனம் செய்தது தி ஹேகிலேயே எதையும் எதிர்மறையாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்ட தெர்ஸ்டீக். அவனே சொல்கிறான் வின்சென்ட்டிடம் கொஞ்சம் வளர்ச்சி தெரிகிறது என்று.
¤ ¤ ¤
வின்சென்ட் அடுத்த நாள் மவ்வைப் பார்க்கப் போனான். ஓவியன் என்ற முறையில் பிரசித்தி பெற்றிருந்து அவன், வின்சென்ட்டின் சித்தி மகளைத் திருமணம் செய்திருந்தான். குடும்ப உறவுகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள் வான்கா குடும்பத்தினர். வின்சென்ட்டை மவ் மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.
வலிமையான உடல் கட்டைக் கொண்டிருந்தான் மவ். தோள் உருண்டு திரண்டு இருந்தது. அகலமான நெஞ்சு. பெரிய தலை. பிரகாசமான கண்கள். நீலமான மூக்கு. அகலமான நெற்றி. முகத்தைச் சுற்றிலும் சாம்பல் நிறத்தில் தாடி. வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாய் வாரி விடப்பட்டிருக்கும் தலைமுடி.
மவ் தனக்குள் மறைந்து கிடக்கும் திறமையையும், ஆழமான ஆர்வத்தையும் வீணாக்க என்றுமே விரும்பியதில்லை. எப்போது பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். தளர்ச்சி தோன்றினால், அதை மாற்ற ஓவியம் வரைவதைத் தொடர்வான். மீண்டும் களைப்பு தோன்றும் பட்சம், இன்னும் சிறிது நேரம் வரைவான். அப்போது முதலில் தோன்றிய தளர்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டிருக்கும்!
புகையிலை, வார்னீஷ் ஆகியவற்றின் வாசனை நிரம்பியிருந்த ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த வின்சென்ட் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். ஸ்டுடியோவில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. ஸ்டுடியோ சொந்தக்காரனின் குணம் இதில் பிரதிபலித்தது.
ஓவியம் வரைதலும், ஓவியத்தைப் பற்றி பிரசங்கம் செய்வதும் எந்தக் காலத்திலும் ஒரே பாதையில் போகக் கூடியது அல்ல என்பதைத் திடமாக நம்பிய மவ், மற்ற ஓவியங்களில் இருந்து தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மவ்வை வின்சென்ட்டுக்கு மிகவும் பிடித்தது. அவனைப் போல தனக்கும் என்றாவதொருநாள் ஒரு குடும்பம் அமையுமா என்று தனக்குள் ஒரு கேள்வியை வின்சென்ட் கேட்டுக் கொண்டான்.
வின்சென்ட் வரைந்த ஓவியங்களைப் பார்த்த மவ் சொன்னான்: “ஓவியங்கள் மோசம்னு சொல்ல முடியாது. ஆனா, இதுல என்ன முக்கியத்துவம் இருக்குது?”
“முக்கியத்துவம்?... நான்...”
“நீ பள்ளிக்கூடத்துல படிக்கிற பிள்ளைங்க செய்யிற மாதிரி இன்னொருத்தர் வரைஞ்ச படத்தை அப்படியே பார்த்து வரைஞ்சிருக்கே. என்ன இருந்தாலும் மற்றவர்கள் வரைஞ்ச படம் தானே?”
“நான் நினைச்சேன்... அப்படிச் செஞ்சா அந்த ஓவியங்கள்ல உணர்ச்சிகளைக் கொண்டு வர முடியும்னு!”
“நீ பேசுறது சுத்த முட்டாள்தனமா இருக்கு! உனக்கு வரையணும்னு தோணிச்சின்னா, வாழ்க்கையில இருந்து ஏதாவது செய்ய முயற்சி பண்ணு. இன்னொருத்தர் செய்ததைப் பின்பற்றாதே. சொந்தமா நீ ஒண்ணும் வரையலியா?”
வின்சென்ட் மனதில் அப்போது தெர்ஸ்டீக் சொன்ன அறிவுரைகள் ஞாபகத்தில் வந்தன. தான் வரைந்த ஓவியங்களை மவ் காணும் பட்சம், இவனும் அதே கருத்தையே கூறினால்...?
“நான் போரினேஜிலும், ப்ரபாண்டிலும் சுரங்கத் தொழிலாளிகளையும் விவசாயிகளையும் ஓவியங்களா வரைஞ்சிருக்கேன். ஆனா, அந்த ஓவியங்களைப் பெரிசா சொல்றதுக்கு இல்ல...”
“பரவாயில்ல. எங்கே காமி. பார்ப்போம்!”
சிறிது தயக்கத்துடன் வின்சென்ட் தான் வரைந்த ஓவியங்களை எடுத்து மேஜை மேல் வைத்தான்.
மவ் ஓவியங்களுக்கு முன்னால் உட்கார்ந்தான். இடது கையால் தன் தலை முடியை அவன் கோதினான். அவ்வப்போது தாடிக்குள்ளே இருந்த இலேசாக சிரித்தான். வின்சென்ட் வரைந்திருந்த ஒரு தொழிலாளியின் படத்தை தான் தற்போது வரைந்து கொண்டிருக்கும் ஒரு ஓவியத்தின் அருகே வைத்து, இரண்டையும் ஒரே நேரத்தில் அலசிப் பார்த்தான். அடுத்த நிமிடம் எதையோ புதிதாகக் கண்டு பிடித்தமாதிரி, உரத்த குரலில் சொன்னான்: “இப்போதான் உன்னோட தப்பு என்னன்னே எனக்கு தெரியுது.”
மவ் விளக்கை நேராக வைத்தான். வின்சென்ட்டின் ஓவியத்தில் கண்களைப் பதித்தவாறு, ஒரு ட்ராயிங் பென்சிலால் வேகமாக தன் படத்தில் ஏதோ வரையத் தொடங்கினான்.
சிறிது நேரத்தில் அவன் வரைவதை நிறுத்தினான். பின்னால் நின்று, ஓவியத்தையே நோக்கியவாறு சொன்னான்: “இப்போத்தான் சரியாச்சு. இந்த ஆளு இப்போ இங்கே எங்கோ வாழ்ற ஆளு மாதிரி தெரியும்.”
வின்சென்ட்டின் தோளில் கை வைத்தவாறு மவ் சொன்னான்: “நீ சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிற. உன்னோட வரைதல்ல ஒரு ஒழுங்கு இல்லாம இருக்கலாம். அதுக்காக உன்னோட ஓவியத்தைக் குறை சொல்லிட முடியாது. இந்தத் துடிப்பையும், உயிரோட்டத்தையும் நான் வேற இடங்கள்ல் அபூர்வமாத்தான் பார்த்திருக்கேன். உன்னோட காப்பி புத்தகங்களைத் தூக்கி எறி. ஒரு பெயின்ட் பாக்ஸ் வாங்கிக்கோ. வண்ண ஓவியங்கள் வரைய இனியும் தாமதிக்க வேணாம். நீ படங்கள் வரைய வரைய, நீ வரையிறதுல ஒரு ஒழுங்கு தானாவே வந்துடும். நான் உனக்கு தேவையான விஷயங்களைச் சொல்லித் தர்றேன்.”