வான்கா - Page 29
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8809
சிறிது நேரத்தில் இயந்திர கதியில் அடுத்தடுத்து ஓவியங்களைத் தாளில் தீட்டத் தொடங்கினான். தொழிலாளிகளின் தனித்துவம் தொனிக்கும் சித்திரங்கள்! ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். கடைசி தொழிலாளி கண்களை விட்டு மறைந்தபோது தாளில் முகம் இல்லாத ஐந்து ஓவியங்கள் இருந்தன. அறைக்குச் சென்று அந்த ஓவியங்களைச் சீராக்கத் தொடங்கினான். அதிகாலை நேர இருட்டில் பரபரப்பான அந்த நிமிடங்களில் சரியாகச் செய்ய முடியாமல் போன, அதே நேரத்தில் – தன் மனதின் உள்ளே ஆழமாகப் பதிந்திருக்கும் தொழிலாளிகளின் தனிப்பட்ட அடையாளங்களையும், குணங்களையும் இப்போது தான் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களில் சேர்க்க முற்பட்டான்.
உடல் அளவு ஓவியங்களில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தான் வின்சென்ட். உடல் உறுப்புகளின் அளவில் பொருத்தமில்லாமை இருப்பதை அவனால் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. தான் வரைந்த படங்களைப் பார்த்தபோது அவனுக்கே சிரிப்பு வந்தது. இருந்தாலும், ஓவியங்களில் இருந்த உருவங்கள் போரினேஜின் மனிதர்கள்தான். அதில் யாரும் மாறுபட்ட கருத்தைக் கூற முடியாது. தன் திறமைக் குறைவை ஒரு நிமிடம் குறைப்பட்டுக் கொண்டே தான் இதுவரை வரைந்த எல்லா ஓவியங்களையும் ஒரே நிமிடத்தில் கிழித்து எறிந்தான் வின்சென்ட்.
அறையில் தொங்கிக் கொண்டிருந்த படங்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயற்சித்தான் வின்சென்ட். கரியையும், தண்ணீரையும் தலையில் வைத்துக் கொண்டு, நனைந்து கிடக்கும் வீதியில் நடந்து போகும் வயதான கிழவி. கிழவியின் உருவம் கிட்டத்தட்ட சரியாக வந்துவிட்டது. ஆனால், வீதியும் வீடுகளும் படத்தை இருந்த அளவுக்கு சரியாக வரவில்லை. அவ்வளவுதான் – பேப்பரைச் சுருட்டி கீழே எறிந்தான் வின்சென்ட். மற்றொரு படத்தின் முன்னால் போய் அமர்ந்தான். மேகங்கள் சூழ்ந்திருக்கின்ற ஆகாயத்தை எட்டிப் பிடிக்கும் விதத்தில் உய்ர்ந்து நிற்கும் மரத்தின் படம். டச் ஓவியர் பாஸ்பூம் வரைந்தது. ஒருமுறை பார்த்தபோதே, இந்தப் படத்தை மிக எளிதில் வரைந்து விடலாமே என்று நினைத்தான் வின்சென்ட். ஒருமரம், சிறிய மண், மேகங்கள். ஆனால், வரைந்து பார்த்தபோதுதான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதே அவனுக்குத் தெரிந்தது. பாஸ்பூம் எந்த அளவிற்கு தன் ஆத்மாவை ஓவியத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டபோது ஓவியம் வரைந்தவரின் மகத்துவத்தை அவனால் உணர முடிந்தது. ஆத்ம வெளிப்பாட்டில் எளிமை கலந்திருப்பது எவ்வளவு உன்னதமான விஷயம் என்பதைத் தெரிந்து, ஆச்சரியப்பட்டுப் போனான் வின்சென்ட்.
¤ ¤ ¤
பேப்பரும் அடுப்புக் கரியும் வாங்க பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து மோன்ஸ் நகருக்கு போனான் வின்சென்ட். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் பாதையின் இரு பக்கங்களிலும் இருந்த வயல்கள் பச்சைப் பசேல் என இருந்தன. ‘பச்சை க்ரயான் வாங்கி இதை வரையணும்’- மனதிற்குள் சொல்லிக் கொண்டான் வின்சென்ட். நகரத்தில் கடையில் இருந்த ஓவியங்களையே பார்த்தவாறு சில நிமிடங்கள் சிலை என நின்றிருந்தான். ஒரு ஓவியத்தை வாங்கக் கூட கையில் காசு கிடையாது. வாஸ்மேயை நோக்கி திரும்பவும் நடந்தான். இருண்டு கிடந்த குன்றுகளுக்குப் பின்னால் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. மெதுவாக வானத்தில் நகர்ந்து கொண்டிருந்த மேகம் குங்கும நிறத்தில் காட்சியளித்தது. வரிசையாக இருந்த வீடுகள் ஒரு ஓவியத்தை நினைவுபடுத்தின. மலை அடிவாரம் பசுமையாகக் காட்சியளித்தது. வின்சென்ட்டின் மனதில் இதற்கு முன்பு இருந்திராத அளவிற்கு ஆனந்தம் குடியேறி, அவனை உற்சாகம் கொள்ளச் செய்தது.
¤ ¤ ¤
அதற்குப் பிறகு வின்சென்ட்டின் ஒவ்வொரு நாளுமே படு சுறுசுறுப்பாக நகர்ந்தது. எப்போது பார்த்தாலும் ஓவியம் வரைவதிலேயே அவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். தொழிலாளிகளை, விளையாட்டில் ஈடுபட்டு கவலையை மறந்திருக்கும் அவர்களின் குழந்தைகளை, குனிந்து தீ ஊதிக் கொண்டிருக்கும் பெண்களை, சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்திருக்கும் குடும்பத்தை- இப்படி பல வகைப்பட்ட ஓவியங்களை வரைந்தான் வின்சென்ட். மார்க்காஸின் உயர்ந்த புகைக் குழாய்கள், கறுத்த வயல்கள், பைன் மரக்காடுகள், நிலத்தை உழுது கொண்டிருக்கும் விவசாயி – ஒன்றைக்கூட அவன் விடவில்லை. பகலில் வரைந்த படத்தை இரவில் அமர்ந்து மெருகேற்றுவதை வாடிக்கையாகக் கொண்டான். தனியாக அமர்ந்து நீண்ட நேரம் அதை உற்று உற்று நோக்கி அலசிப் பார்ப்பான். தான் வரைந்ததில் ஒன்று கூட சரியில்லை என்ற முடிவுக்கு வருவான். விளைவு – எல்லாவற்றையும் எடுத்து கிழித்து எறிவான்.
ஒருநாள் சாப்பாட்டு மேஜை முன் தெனி குடும்பம் அமர்ந்திருந்தபோது, வின்சென்ட் அவர்களை ஓவியமாகத் தீட்டினான். அவன் வரைந்த ஓவியத்தைப் பார்த்த தெனியின் மனைவி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்: “நீங்க ஒரு ஓவியரா? பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்தாள்.
வின்சென்ட் இலேசான கூச்சத்துடன் சொன்னான்: “அய்யய்யோ... அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் சும்மா ஏதோ வரைஞ்சேன். அவ்வளவுதான்.”
“ஆனா, இந்தப் படம் நல்லாவே வந்திருக்கு. கிட்டத்தட்ட என்னைப் போலவே இருக்கு.”
“அதுதான்... அதுதான்... அதாவது- கிட்டத்தட்ட. ஆனா, முழுசா உங்க மாதிரி இல்ல...”
சுவரில் தொடங்க விட்ட ஓவியங்களைப் பார்த்து சில வாரங்களிலேயே படங்களை வரைந்துவிட்டான் வின்சென்ட். அவனின் தம்பி கடிதம் எழுதி ஏறக்குறைய ஒரு வருடமாகிவிட்டது. அவன் எழுதாவிட்டால் என்ன, நாம் எழுதினால் என்ன என்று நினைத்த வின்சென்ட் அவனுக்கு கடிதம் எழுதினான்.
‘பிரிய தியோ, மில்லேயின் ‘தோட்டத்தில் வேலை’ உன்னிடம் இருக்கிறது அல்லவா? அதைக் கொஞ்ச நாட்களுக்கு எனக்குத் தர முடியுமா? தபாலில் அனுப்பினால் போதும்.
பாஸ்யூம் மற்றும் பல ஓவியர்களின் கை வண்ணங்களைப் பார்த்து வரையும் வேலையில் நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். நீ இவவ்றைப் பார்த்தால் பரவாயில்லை என்று நிச்சயமாகச் சொல்வாய்.
என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நான் இப்போது செய்துகொண்டு இருக்கிற காரியங்கள் ஒழுங்காக நடந்தால் நிச்சயம் நான் நல்ல நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஓவியம் வரைவதற்கு இடையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஓவியத்தை உடனே அனுப்பி வைப்பாய் அல்லவா?
மனதில் மகிழ்ச்சியுடன் – வின்சென்ட்.’
தான் வரைந்த ஓவியங்களை வின்சென்ட் விமர்சனப் பார்வையுடன் பார்த்து, கருத்து தெரிவிக்கக் கூடிய யாராவது ஒரு மனிதரிடம் தன் கை வண்ணத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான் வின்சென்ட். எல்லா ஓவியங்களுமே கிட்டத்தட்ட மோசம்தான்.