வான்கா - Page 4
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by சுரா
- Hits: 8806
“எனக்காக அந்த ஓவியர் ஏதாவது எழுதி இருக்காரா?”- அவள் கேட்டாள்.
“ம்... நீ கொஞ்சம் விளக்கைக் காட்டினா, பள்ளிக்கூடத்துல இந்த ஓவியத்தை சுவர்ல மாட்டிடலாம்....”
“அதுக்கிடையில அம்மாக்கிட்ட கொஞ்சம் வேலை இருக்கு. அரை மணி நேரத்துல நான் வர்றேன்”- உதடுகளைக் குவித்து மெல்லிய குரலில் சொன்ன ஊர்ஸுலா அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
தன் அறையில் உட்கார்ந்திருந்த வின்சென்ட் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். தன்னுடைய உணவு விஷயத்தைப் பற்றி பொதுவாக அவன் எப்போதும் பெரிதாக நினைத்துப் பார்த்ததில்லை. ஹாலண்டில் அது ஒரு பெரிய பிரச்னையும் இல்லை. இங்கிலீஷ் காரர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது அவனின் தலையும் முகமும் சற்று பெரியதுதான். உயர்ந்த பாறை போன்ற நெற்றி. அழகான கண்கள். உயர்ந்த மூக்கு. சற்று அகலமான நாடி. சதைப்பிடிப்பான குறுகலான கழுத்து. ஹாலண்டைச் சேர்ந்த மனிதன் என்பதைச் சொல்லாமலே பறை சாற்றும் கன்னப்பகுதிகள்.
கண்ணாடியில் இருந்த தன் பார்வையை நீக்கினான் வின்சென்ட். கட்டிலின் ஒரு ஒரத்தில் போய் அமர்ந்தான். மிக மிக அமைதியான சூழ்நிலையில் வளர்ந்தவன் வின்சென்ட். அவன் எந்தப் பெண்ணையும் இதுவரை காதலித்தது இல்லை. சாலையில் நடந்து போகிற ஒரு பெண்ணை காதல் எண்ணத்துடன் நோக்கியது கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன் வயது பையன்கள் யாருடனாவது சேர்ந்து காதல் அது இதுவென்று மன மகிழ்ச்சிக்குக் கூட அவன் பேசி பொழுதைக் கழித்ததில்லை. ஊர்ஸுலா மீதும் உணர்ச்சிவசப்பட்ட ஆவேசம் எதுவும் அவனிடம் உண்டாகவில்லை. ஒரு கனவு காணும் இளைஞனின் முதல் காதல் உணர்வு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.
கடிகாரத்தைப் பார்த்தான். ஊர்ஸுலா போய் ஐந்து நிமிடங்களே ஆகிவிட்டிருந்தன. நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இனியும் அவள் வருவதற்கு இருபத்தைந்து நிமிடங்கள் இருக்கின்றன. அம்மாவின் கடிதத்திற்கு அடியில் இருந்த தம்பி தியோவின் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான். தியோ வின்சென்ட்டை விட நான்கு வயது இளையவன். இப்போது வின்சென்ட் இருக்க வேண்டிய இடத்தில் அவன் திஹேகில் இருக்கிற குபில்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். தியோவும் வின்சென்ட்டும், அவர்களின் தந்தை தியோடரஸும் மாமா வின்சென்ட்டும் எப்படி நெருங்கிய நட்புடன் இருக்கிறார்களோ, அப்படிப் பின்னிப் பிணைந்த உறவு மேலோங்க இருப்பார்கள்.
தான் வரைந்த தேம்ஸ் நதி ஓவியங்கள் சிலவற்றையும், ஜாக்கின் `வாளேந்திய பெண்’ என்ற ஓவியத்தின் புகைப்படத்தையும் கவருக்குள் போட்டு, அவற்றுடன் தியோவிற்கு ஒரு சிறு கடிதத்தையும் வைத்து கவரை அடைத்தான் வின்சென்ட்.
“அய்யோ... ஊர்ஸுலாவை மறந்தே போனேனே...”- வின்சென்ட் கடிகாரத்தைப் பார்த்தான். கால்மணிநேரம் கடந்து விட்டிருந்தது. சீப்பை எடுத்து தலைமுடியைச் சீராக்கினான். ஸெஸார்டிகாக்கின் ஓவியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, கதவைத் திறந்து வெளியே வேகமாக ஓடினான்.
“என்னைச் சுத்தமா மறந்து போயிட்டேன்னு நான் நினைச்சேன்”- வின்சென்டைப் பார்த்ததும் ஊர்ஸுலா சொன்னாள். அவள் பள்ளிக் கூடத்தில் படிக்கும் சிறு குழந்தைகளுக்காக தாளில் விளையாட்டு பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்தாள். “என்னோட ஓவியத்தைக் கொண்டு வந்தியா? எங்கே கொடு... பார்க்கலாம்...”
“மேலே இதைத் தொங்க விட்டு பார்க்கலாம். விளக்கு இருக்கா?”
“அம்மாக்கிட்ட இருக்கு”
சமையல் அறையிலிருந்து விளக்கை எடுத்துக்கொண்டு வின்சென்ட் திரும்பி வந்தபோது, தோளில் இடுவதற்காக ஊர்ஸுலா ஒரு நீல வர்ண துணியைத் தந்தாள். அதைத் தந்தபோது அவளின் கை விரல் இலேசாக அவனைத் தொட்டது. அந்தத் தொடுதலில் அவன் ஒரு நிமிடம் தன்னையே மறந்து போனான். சொல்லப்போனால் அந்த கணத்தை அவன் மனப்பூர்வமாக விரும்பினான். தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரங்களில் இருந்து நல்ல ஒரு வாசனை புறப்பட்டு வியாபித்துக் கொண்டிருந்தது. வழி இருட்டாக இருந்தது. கோட்டின் ஒரு பக்கக் கையை ஊர்ஸுலா பற்றிக் கொண்டிருந்தாள். ஒருமுறை அவள் தவறி கீழே விழாதிருக்கும் வகையில் அவன் கையை இறுகப் பிடித்தாள். தன் செயலை எண்ணிய அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். விழப் போவதாகப் பதறிப் போயிருந்த அவள் குலுங்கி குலுங்கி சிரிப்பதை வியப்புடன் பார்த்தான் வின்சென்ட். அவளை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அவள் உடல் முழுக்க சிரிப்பு படர்வதை மட்டும் அந்த இரவு நேரத்தில் கூட அவனால் உணர முடிந்தது. பள்ளிக்கூடத்தின் வாசல் கதவைத் திறந்ததும், அவளின் அழகான முகம் வின்சென்ட்டின் முகத்தோடு உரசுகிற மாதிரி அவள் உள்ளே சென்றாள். அவனையே அவள் வைத்த கண் எடுக்காது பார்த்தாள். தான் கேட்கப் போகிற கேள்விக்கு பதிலே அவளிடமிருந்து கிடைத்துவிட்ட மாதிரி உணர்ந்தான் அவன்.
விளக்கைக் கீழே வைத்தான். “எங்கே படத்தைத் தொங்க விடலாம்?”
“என் டெஸ்க்குக்கு மேலே இருந்தா எப்படி இருக்கும்?”
அறையில் சில உயரம் குறைவான நாற்காலிகள். ஒரு ஓரத்தில் ஊர்ஸுலாவின் டெஸ்க் இருக்கும் உயரமான இடம். வின்சென்ட்டும் ஊர்ஸுலாவும் உரசின மாதிரி நின்று கொண்டு படத்தை எங்கே தொங்க விடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வின்சென்ட் ஒரே பரபரப்புடன் இருந்தான். ஆணி அடிக்க அவன் ஆரம்பிப்பதற்கு முன்பே ஆணி அவன் கையை விட்டு கீழே விழுந்தது. ஊர்ஸுலா அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.
“இங்கே தா மடையா, நான் அறையிறேன்.”
ஊர்ஸுலா தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஆணி அடிக்க ஆரம்பித்தாள். அவளின் அசைவுகளையே கண் எடுக்காது பார்த்தான் வின்சென்ட். அவளை அப்படியே உடலோடு சேர்த்துப் பிடித்து அணைக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவள் இதுவரை அவனைத் தன் விரலால் தொட்டிருந்தாலும், கட்டிப்பிடிக்கிற அளவிற்கு அவனை அனுமதித்தது இல்லை என்பதே உண்மை. ஓவியத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் படிப்பதற்காக விளக்கை உயர்த்திப் பிடித்துக் காட்டினான் வின்சென்ட். அவளுக்கு அந்த ஓவியத்தை மிகவும் பிடித்திருந்தது. ஓவியத்தின் கீழே எழுதப்பட்டிருந்த வாசகத்தையும்தான். கைகளைத் தட்டியவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடினாள் ஊர்ஸுலா.
“ஓவியம் வரைந்த மனிதர் என்னோட நண்பராயிட்டாரு இல்லியா?”- அவள் சொன்னாள்: “வாழ்க்கையில ஒரு ஓவியனோட நட்பா இருக்கணும்ன்றது என்னோட பல வருட ஆசை.”