முள் மேல் மனசு - Page 15
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8301
காருக்குள் பல இரும்புக் குழாய்கள் கிடந்தன. அதாவது ஆக்ஸிஜன் சிலிண்டர் அளவுள்ள குழாய்கள் இருந்தன. அங்கங்கே குண்டுகள் ஈயப்பூக்களாய் பரவி இருந்தன. மறுபடியும் காரைச் சுற்றி அரை கிலோ மீட்டர் தூரம் வரை பார்த்தார். வெளியிலும் ஆங்காங்கே சில குழாய்கள் கிடந்தன. ஏகப்பட்ட ஈயக் குண்டுகளும் சிதறக் கிடந்தன. சில குண்டுகள், குழாய்களுக்குள்ளும் இருந்தன.
ஃபோட்டோகிராபர் திலீப்பை அழைத்தார்.
“இந்தக் குழாய்களையும் காருக்குள்ள இருக்கற குழாய்களையும் போட்டோ எடுத்துங்க திலீப்.”
“ஓ.கே. ஸார்.”
சுறுசுறுப்பாக செயலாற்றினார் திலீப். அங்கே இருந்த சிலரை பொதுவாகப் பார்த்து கேள்விகளை ஆரம்பித்தார் ரகுநாத்.
“இந்தக் கார் யாரோடது?”
யாருமே வாய் திறக்காததால் ரகுநாத்தின் மூக்கு நுனி கோபத்தால் சிவந்தது.
“யாராவது பதில் சொல்லப் போறீங்களா?... இல்லை மொத்தமா எல்லோரையும் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போகட்டுமா?” உறுமினார்.
பால் பாக்கெட் போடும் சிறுவன் முன் வந்தான். “ஸார் இந்தக் கார் அச்சாபீஸ் ஓனரோடது. நான் அவங்க வீட்டுக்கு பால் போடறவன்.”
“உன் பேர்?”
“கிருஷ்ணன்.”
“அந்த வீட்டை வந்து காட்டு.”
“அதோ அங்கே டிஷ் ஆன்ட்டெனா பொருத்தி இருக்காங்க பாருங்க மாயில. அந்த பங்களாதான் ஸார். இந்த ஏராயாவுல அவங்க வீட்டில மட்டும்தான் ஸார் டிஷ் ஆன்ட்டெனா இருக்கும்.”
“சரி, என் கூடவா” ரகுநாத், மதனின் வீட்டை நோக்கி நடந்தார். கிருஷ்ணன் பின் தொடர்ந்தான்.
செக்யூரிட்டி மூர்த்தி வந்தான். ரகுநாத்தைப் பார்த்து ஸல்யூட் அடித்தான்.
“யார் மேன் நீ?”
“நான் மதன் ஐயாவோட பங்களா செக்யூரிட்டி மூர்த்திங்க.”
“செக்யூரிட்டிங்கற! யூனிஃபார்ம்ல இல்லையே?”
“நான் ஒரு வாரம் லீவுல ஊருக்கு போயிருந்தேங்க. போன வேலை சீக்கிரமாவே முடிஞ்சுட்டுதுங்க. அதனால முன்னாடியே வந்துட்டேங்க. பஸ் ஸ்டேண்டுல இருந்து நேரா இங்கதாங்க வரேன். யூனிஃபார்ம் கார் ஷெட்லதான் வச்சிருக்கேன். ஐயாவோட கார் இந்தக் கதியில இருக்கறதைப் பார்த்தீங்களாய்யா?” அவனுடைய குரலில் பதற்றம் தென் பட்டது.
‘பதற்றமா இருக்கற மாதிரி நடிக்கிறானோ?’ ரகுநாத்தின் போலீஸ் மூளை சந்தேகப்பட்டது.
“சரி, சரி... நீயும் வா.”
பங்களாவின் கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லாதபடியால் போலீஸார் உள்ளே நுழையவில்லை.
“டூ நாட் ஃபோர், நீ ஹாஸ்பிடல் போய், அந்த மதனை இங்கே கூட்டிட்டு வா. அவரோட வீட்டுக்குள்ள சோதனை போடணும்.”
“டூ நாட் ஃபோர் போனதும் மூர்த்தியிடம் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தார்.”
“இந்த பங்களாக்காரர் பிரிண்டிங் பிரஸ்ஸா வச்சிருக்கார்?”
“ஆமா ஸார். பெரிய பிரஸ். எம்.டி.பி. பிரஸ்னு பேரு.”
“அந்த மதன் எப்படிப்பட்ட ஆள்?”
“கொஞ்சம் முன் கோபக்காரருங்க. மத்தபடி நல்லவர்தான்.”
“அவருக்கும். அவரோட மனைவிக்கும் தகராறு வருமா?”
“அப்பிடியெல்லாம் எதுவும் கிடையாதுங்க. என்னைப் பொறுத்தவரையிலும் அவங்க ரெண்டு பேரும் ஒற்றமையாத்தான் குடும்பம் நடத்தினாங்க.”
“எப்பவும் வெளியிலயே இருக்கற உன்னைப் பொறுத்தவரைக்கும், உள்ளுக்குள்ள நடக்கறது உனக்குத் தெரியாது. அப்படித்தானே?”
“........அ... ஆமாங்க.”
“சரி, அந்த மதன் கோபக்காரர்னு சொன்னியே, எதை வச்சு அப்படிச் சொன்ன?”
“அது... அது.. வந்துங்க...?”
“ஏன் தயங்கற? சும்மா பயப்படாம தைரியமா சொல்லு. நீ வேலை செய்ற வீட்டு அம்மாவை யாரோ கொலை பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க. உனக்குத் தெரிஞ்ச தகவல்களை சொன்னாத்தான் எங்களுக்கு குற்றவாளி யார்னு கண்டு பிடிக்க முடியும்.”
“அது வந்துங்க? பக்கத்து பங்களாவுல பாலுன்னு ஒருத்தர் இருக்கார்... அ... அவருக்கும் மதன் ஐயாவுக்கும் ஆகாதுங்க...”
“ஆகாதுன்னா?”
“ரெண்டு பேருக்கும் விரோதம் இருந்துச்சுங்க. பாலுவும் பிரிண்டிங் பிரஸ் வச்சிருக்காருங்க. தொழில் போட்டி ரெண்டு பேருக்கும் கடுமையாவே இருந்துச்சுங்க. என்னோட பார்ட்டியை நீ கலைச்சு விடறேன்னு மதன் ஐயா கோபமா கத்துவாருங்க. நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதின்னு அவரும் சொல்றதை நான் நேர்ல இருந்து கேட்டிருக்கேங்க.”
“ஓகோ... அந்த பாலு வீட்டுல யார் யார் இருக்கா?”
“அவரோட குடும்பம் மதுரையில இருக்குதாம்ங்க. பொண்ணு பிளஸ் டூ முடிச்சதும் குடும்பத்தை இங்கே கூட்டிக்கிட்டு வரணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்ங்க. அது கூட இங்கே வந்த புதுசுல பேச்சுக் குடுத்தப்ப சொன்னதுதாங்க. அதிகமா யார் கிட்டயும் பேச மாட்டார்ங்க.”
“என்னைக்காவது அந்த பாலு சந்தேகப்படும்படியா இந்த பங்களாவுக்குள்ள நடமாடுறதைப் பார்த்திருக்கியா?”
“இல்லை ஸார்... பத்மினியம்மாவோட கார், ஷெட்ல இருந்தா, மதன் ஐயாவோட கார் வெளியில நிக்கும். ‘என் காம்பவுண்ட் கிட்ட நீ எப்படி உன் காரை நிறுத்தலாம்’ன்னு பாலு சண்டைக்கு வருவாரு. கத்துவாரு. இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்குங்க.”
“தொழில் போட்டியினால ரெண்டு பேருக்கும் கடுமையான விரோதம் இருந்திருக்கு...”
ரகுநாத் பேசி முடிப்பதற்குள் டூ நாட் ஃபோர், மதனை அழைத்து வந்திருந்தான்.
“மிஸ்டர் மதன், உங்க மனைவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டாங்களா? டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” கலைந்து கிடந்த தலைமுடி, சிவந்திருந்த கண்கள், கசங்கிய உடைகள் இவற்றுடன் காணப்பட்ட மதன், சோகம் கப்பிய குரலில் சொல்ல ஆரம்பித்தான்.
“ஐ.சி. யூனிட்ல இருக்கா. டாக்டர்ஸ் நம்பிக்கை இல்லைன்னு சொல்றாங்க. ஆனா அவளைக் காப்பாத்தறதுக்கு ஒரு மருத்துவக் குழுவே முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க” தளர்ந்த குரலில் பதில் சொன்னான்.
“உங்களோட இந்த மனநிலையில விசாரணை பண்றதுக்கு ஸாரி. ஆனா நான் என்னோட ட்யூட்டியை பண்ணியே ஆகணும். ப்ளீஸ் ஒத்துழைப்பு குடுங்க.”
“யூ கே புரொஸீட் இன்ஸ்பெக்டர்.”
போலீஸார் மதனின் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
ரகுநாத்தும் வீடு முழுவதையும் பார்வையிட்டார். மதனின் அறையில் ஃப்ரெஞ்சுத் தயாரிப்பான மர அலமாரிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றிற்குப் பூட்டுகள் கிடையாது. அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தார் ரகுநாத். ஒரு அலமாரியில் புத்தகங்கள், லெட்டர் பேட், பேனா போன்றவை இருந்தன.
மற்றதில் பத்மினியின் புடவைகள் சூடிதார்கள். ஜாக்கெட்டுகள், மிகவும் நேர்த்தியாகவும் சீராகவும் அடுக்கப்பட்டிருந்தன.
மற்றொரு சிறிய அலமாரியைத் திறந்தார்.
பாக்கெட் சைஸில் லேமினேஷன் செய்யப்பட்ட அம்மன், ஆஞ்சநேயர், பாண்டிச்சேரி அன்னை படங்கள் ஏகப்பட்டவை இருந்தன.
பேப்பரில் மடிக்கப்பட்ட கோயில் பிரசாதங்கள் மஞ்சள் குங்குமம் வாசனையுடன் காணப்பட்டன.
அவற்றின் நடுவே கடிதம் போல ஒரு பேப்பர் இருந்தது. அதை எடுத்து, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
எல்லா அறைகளிலும் சோதனையிடப்பட்டபின் மதனிடம் வந்தார் ரகுநாத்.