முள் மேல் மனசு - Page 18
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8301
“உன்னை இப்ப விட்டுடுவேன். ஆனா உன் பொண்டாட்டியை உயிரோட நடமாட விடமாட்டேன். ஞாபகம் வச்சுக்க! அப்படின்னு கடுமையான மிரட்டினதுக்கப்புறம் மதன் ஸாரை விட்டான்.”
“அதுக்கப்புறம் மதன் போயிட்டாரா?”
“ஆமா ஸார். மதன் காரில் ஏறி போயிட்டாரா?”
“அவன் எந்தப் பக்கம் போனான்னு நான் பார்க்கலை ஸார்.”
“அதுக்கப்புறம் நீ மதனைப் பார்த்தியா?”
“ஆமா. அன்னிக்கே பார்த்தேன். ஸ்டிக்கர் அர்டர் விஷயமா பேசறதுக்காக வரச் சொல்லி இருந்ததுனால அவரோட பிரஸ்க்குப் போனேன்.”
“கணேஷ், மதனை மிரட்டின சம்பவம் பத்தி ஏதாவது அவர் கிட்ட கேட்டியா?”
“யம்மா! மதன் ஸார் எவ்வளவு பெரிய ஆள்? சொஸைட்டியில முக்கியமான புள்ளி. ‘பெரிய பிரிண்ட்டர்’ங்கற இமேஜ் உள்ள வி.ஐ.பி. ஸார் அந்த மதன். அவர்கிட்ட நான் எப்பிடி ஸார் அவரோட பர்ஸனல் மேட்டர் பத்தி பேச முடியும்? அப்பாயிண்மென்ட் இல்லாம அவரை சந்திக்கவே முடியாது.”
“ஓகோ! அதுக்கப்புறம் மதனை நீ சந்திக்கவே இல்லையா?”
“ஸ்டிக்கர் வேலை இருந்தா மட்டும்தான் அவரோட ஆபீஸ்ல இருந்து போன் வரும். ரொம்ப நாளா ஆர்டர் இல்லைன்னா அவரோட அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டுப் போய் பார்ப்பேன். ஆர்டர் கேப்பேன். தொடர்ந்து அவர் குடுக்கற ஆதரவு, தொழிலின் ஆரம்ப நிலையில் இருக்கற எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.”
“தாங்க்ஸ் தம்பி. உன்னைப் போல இளைஞர்கள் ஓடி ஒளியாம, தேடி வந்து தகவல் குடுக்கறது பாராட்டுக்குரியது. உன் அட்ரஸ் குடுத்துட்டுப் போ, தேவைப்படும்போது ஸ்டேஷனுக்குக் கூப்பிடுவோம்.”
“ஓ.கே. ஸார்.” இன்ஸ்பெக்டர் தன்னைப் பாராட்டியதில் மோகனின் தலையில் ஐஸ் வைத்தது போல் இருந்தது. அட்ரஸ் எழுதிக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.
“ஸாரி இன்ஸ்பெக்டர். ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுனால பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சு” பேசியபடியே மதன் வந்தான்.
“பரவாயில்லை மிஸ்டர் மதன்.”
“உள்ளே என் ரூமுக்கு வாங்க இன்ஸ்பெக்டர். ப்ளீஸ்.”
ரகுநாத்தை தன் அறைக்குள் அழைத்துச் சொன்றான். ரகசிய பூட்டறை இருந்த பீரோவைத் திறந்தான். ரகசிய பூட்டறையையும் திறந்து இரண்டு பேப்பர்களை எடுத்து ரகுநாத்திடம் கொடுத்தான்.
ரகுநாத் அந்தப் பேப்பர்களைப் பார்த்தார்.
‘உன் உயிர் உன் மனைவியிடம், உன் மனைவி உயிர் என் கையில்’ கிறுக்கலாக எழுதி இருந்தது. “இந்த ரெண்டு லெட்டருமே உங்க வீட்டு பாக்ஸ்லதான் கிடந்துச்சா?”
“ஆமா ஸார். கவர் இல்லாம பாக்ஸ்ல சொருகி வச்சிருந்துச்சு.”
“சரி. இந்த லெட்டர்ஸ் இரண்டும் என்கிட்ட இருக்கட்டும்.” தன் ஷர்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்ட ரகுநாத், தன் செல்போனை எடுத்தார். அது இயங்கியதும் “யாதவ் ஹியர்” குரல் கேட்டது.
“ரகுநாத் ஸ்பீக்கிங் யாதவ். இப்ப நீங்க அடையார் எம்.டி.பி. பிரஸ்க்கு வரணும். என்ன பக்கத்துலதான் இருக்கீங்களா? வாங்க.”
“மதன், அந்த கணேஷோட அட்ரஸ் வேணுமே?”
“அ... அது... வந்து...”
“என்ன மதன் காதலிக்கும்போது அட்ரஸ் தெரியாமலா காதலிச்சீங்க?”
“அதில்லை ஸார்... அப்போ இருந்த அதே அட்ரஸ் தாானன்னு எனக்குத் தெரியாது...”
“பரவாயில்லை மதன். அதே அட்ரஸைக் குடுங்க.”
மதன் எழுத ஆரம்பித்தான்.
டெலிபோன் ஒலித்தது. மதன் எடுத்தான்.
“என்ன? யாதவ்வா? இன்ஸ்பெக்டரைப் பார்க்கணுமா? உள்ளே அனுப்புங்க.”
ஆறு அடி உயரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் வந்தான்.
சிகப்பாக, ஒல்லியாக இருந்த அவன் ரகுநாத்தின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான்.
“வாங்க யாதவ். இவர் மிஸ்டர் மதன். எம்.டி.பி. பிரஸ்ஸோட மேனேஜிங் டைரக்டர்.”
“மதன், இவர் ஹாண்ட் ரைட்டிங் எக்ஸ்பர்ட் யாதவ்.”
மதன் “ஹலோ” சொல்ல, யாதவ்வும் பிதிலுக்கு “ஹலோ” சொன்னான்.
ரகுநாத், தன் ஷர்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கணேஷின் மிரட்டல் கடிதங்களை யாதவ்விடம் கொடுத்தார்.
“இதை ஸ்டடி பண்ணி ரிப்போர்ட் குடுங்க யாதவ். ரிப்போர்ட் ரெடியானதும், என் செல் நம்பர்ல கூப்பிடுங்க.”
“ஓ.கே.ஸார். நான் கிளம்பட்டுமா?”
“கிளம்புங்க யாதவ்.”
யாதவ், மதனிடம் விடை பெற்று விட்டுக் கிளம்பினான்.
அவன் போனதும் வேறொரு பேப்பரை எடுத்து மதனின் மேஜை மீது போட்டார் ரகுநாத்.
“இதை எடுத்து படிச்சுப் பாருங்க மதன்.”
மதன் படிக்க ஆரம்பித்தான்.
படிக்கப் படிக்க அவனுக்கு வியர்த்தது. அவனால் நம்ப முடியவில்லை. மறுபடியும் படித்தான்.
“தெய்வங்களே, நான் அமைதி இல்லாமல் தவிக்கிறேன். மன நிம்மதி இன்றி துடிக்கிறேன். திரமணத்திற்கு முன் கல்லூரியில் படிக்கும்போது கயவன் ஒருவன் விரித்த வலையில் விழுந்துவிட்டேன். அவன் என்னை ஏமாற்றும் முன்பே அவனது முகத்திரை கிழிந்து விட்டது. நல்லவன் என நினைத்து அவனுடன் நான் பழகிய நாட்களிலும் நான் நேர்மையாகத்தான் இருந்தேன். அவன் சுண்டு விரல் நுனி கூட என் மீது பட விட்டதில்லை. அவனை அடியோடு மறந்தும் விட்டேன். அதன் பின் எனக்கு அமைந்த திருமண வாழ்க்கை அருமையானது. இதை அழிக்கவென்று அந்தக் கயவன் சுந்தர் என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். நான் அவனுக்கு எழுதிய கடிதங்களை என் கணவரிடம் காட்டாமல் இருக்க, கூலியாக பணம் கேட்டு தொல்லைப் படுத்துகிறான். என் கணவரிடம் சொல்லவும் வழி இல்லாமல், அந்தக் கயவனின் மிரட்டலையும் சமாளிக்க இயலாமல் தவிக்கிறேன். தெய்வங்களே, ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெய ஆஞ்சநேயா... அவன் கேட்ட பணத்தைத் தர மறுத்தால் என்னைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறான். தெய்வங்களே. யாரிடமும் சொல்ல இயலாத பேதையாக நான் வணங்கும் தெய்வங்களான உங்களுக்கு எழுதுகறேன். காவல் தெய்வங்களாக இருந்து என்னைக் காக்க வேண்டும். ஸ்ரீராமா, ஜெயராமா...” பேப்பர் முழுக்க ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருந்தன.
“என்ன மதன்? இது உங்க மனைவி எழுதினதுதானே? அவங்க கையெழுத்துதானே?”
“ஆமா ஸார்.”
“அப்போ... உங்க மனைவி... கல்யாணத்துக்கு முன்னால எவனையோ காதலிச்சிருக்காங்கற கோபத்துல, அவளைப் பழி வாங்கணும்ங்கற வெறியில... கொலை செய்ய திட்டம் போட்டிருக்கீங்க. அதுக்காகத்தான் கார் ஸீட்டுக்கு அடியில குண்டுகள் நிரப்பப்பட்ட குழாய்களை அடுக்கி... அவங்க உட்கார்ந்ததும் வெடிக்கற மாதிரி சிஸ்டம் ரெடி பண்ணி இருக்கீங்க....”
“ப்ளீஸ் ஸ்டாப் இட் இன்ஸ்பெக்டர். இந்த பேப்பரை நான் இப்பதான் என் கண்ணால பார்க்கறேன். இதில என் மனைவி எழுதி இருக்கற விஷயங்கள் எனக்கு புதுசு. ஷாக்கிங்காவும் இருக்கு. என் கிட்ட சொல்ல முடியாம அவ எப்படி தவிச்சிருக்கான்னு நினைச்சுப் பார்க்கவே நெஞ்சு வலிக்குது... அது மட்டுமில்ல... காதல் பாவப்பட்ட விஷயம்னு நினைக்கறவனும் நான் இல்ல கோவப்படறதுக்கு.”