முள் மேல் மனசு - Page 20
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8301
“எங்க அம்மா வழியில அவர் ரொம்ப பெரியவர். அவர் கூப்பிட்டு நான் போகாம இருக்க முடியுமா?... சேலம் என்ன வெளிநாடா? கார்ல அஞ்சு மணி நேரத்துல போயிடுவேன். மாமாகிட்ட என்ன ஏதுன்னு பேசிட்டு உடனே கிளம்பி வரப்போறேன். அவ்வளவுதானே?”
“நிஜம்மா, ஒரே நாள்ல வந்துருவீங்கள்ல?” படபடக்கும் பட்டாம் பூச்சிகள் போல் கண்ணில் இமைகள் படபடக்க, அம்ருதா கேட்ட விதம், மதனைக் கிறங்கடித்தது.
“சத்தியம் பண்ணட்டுமா?” கேட்டபடியே அவளது கைகளைப் பிடிக்க முயற்சித்தான்.
“இதானே வேணாங்கறது? சத்தியம் பண்ற சாக்குல தொட்டுப் பாக்கலாம்னு ஐடியா பண்றீங்களா?” செல்லமாகக் கோபித்தாள் அம்ருதா.
“தொட்டுப் பார்க்காட்டி விட்டுப் போயிடுச்சுன்னா?” மதன் குறும்பாகக் கேட்டாலும் அந்தக் கேள்விக்கு அம்ருதாவின் நெஞ்சம் குறுகுறுத்தது.
“மதன்! விளையாட்டாகக் கூட இப்பிடி எல்லாம் நெகட்டிவ்வா பேசாதீங்க. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும்... நம்ப உறவு.”
“தமாஷா பேசறதுக்குக் கூட இப்பிடி பயந்துக்கற? உங்க அண்ணன் உன்னை நல்ல பயந்தாங்கோழியா வளர்த்திருக்கான்...”
“மதன் எங்க அண்ணனைப் பத்தி ஏதாவது பேசினீங்க..? உங்களை சும்மா விட மாட்டேன். அவன்தான் நம்ப காதலுக்குப் பச்சைக் கொடி காமிச்சுட்டான்ல?”
“யப்பா... அண்ணனைப் பத்தி பேசினா கோபம் பொத்துக்கிட்டு வர்றதைப் பாரேன்...”
“என் அண்ணன் உங்க மேல நல்ல அபிப்ராயம் வச்சிருக்கான் மதன். நம்ப காதலைப் பத்தி ஆரம்பத்துல அவன்கிட்ட சொன்னப்ப ‘பணக்காரனோட நட்பு, ஒரு உயிர் கொல்லும் வியாதி போன்றது. அந்த வர்க்கம் இனிப்பு தடவின மாத்திரை மாதிரி. உதடுகள் இனிப்பான வார்த்தையைப் பேசினாலும் உள்ளுக்குள்ள இழிவான எண்ணங்கள் நிறைஞ்ச கூட்டம், அந்த பணக்காரக் கூட்டம். நம்ப தகுதிக்கு மேல நீ ஆசைப்பட்டுட்டியே’ன்னு அண்ணன் புலம்பினான். உங்களைப் பத்தி நல்ல எண்ணங்களை அவன் மனசுல பதிய வைக்கிறதுக்கு ரொம்ப பாடு பட்டிருக்கேன். அந்த நல்ல எண்ணங்களை நீங்க காப்பாத்தணும். நீங்க எனக்குக் குடுத்த நம்பிக்கையை நான் அவனுக்குக் குடுத்திருக்கேன். நம்பியவங்களை கை விட்டுடாதீங்க மதன். தன்னோட பன்னிரண்டாவது வயசுல இருந்து... தனக்குன்னு எந்த சுகமும் தேடாம, நாடாம, என்னோட முகமலர்ச்சி மட்டுமே முக்கயம்னு என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தான் என் அண்ணன். அவன் மனம் வாடாம பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. செருப்பா தெஞ்சு உழைச்ச அவனுக்குப் பொறுப்பான தங்கச்சியா நான் இருக்கணும். எனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு... நான் சந்தோஷமா வாழறதுதான் அவனோட லட்சியம். அந்த உயர்ந்த லட்சியத்தை, லட்சாதிபதியான நீங்க அலட்சியப்படுத்திடாதீங்க.”
“அம்ரு. பணக்காரனா இருக்கறது ஒரு மைனஸ் பாயிண்ட்டா? உங்க அண்ணன் மனதளவில பாதிச்சதுனால பணத்தைப் பார்த்ததும், பணக்காரனைப் பார்த்ததும் அலர்ஜி ஆகறார். எங்க அப்பா பிறக்கும்போது பணக்காரராத்தான் பிறந்தார். வளர்ந்தார். வாழ்ந்த்தார். தன்னோட வாழ்நாள்ல அவர் பணம் குடுத்து உதவி செஞ்சு... முன்னுக்கு வந்தவங்க நிறைய பேர், ஆனா நான் வளர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டிய சரியான சந்தர்ப்பத்துல வர்கூடப் பிறந்தவங்களே வட இருந்து குழி தோண்டிட்டாங்க. அதனால வியாபாரத்துல நஷ்டம் சிகரத்தோட உச்சிக்குப் போன என் அப்பா, அதல பாதாளத்துல விழற மாதிரி கம்பெனி, பள்ளத்துல விழுந்துடுச்சு. மறுபடியும் அவரால எழுந்திருக்க முடியலை. அதிர்ச்சியில அகால மரணம் அடைஞ்சுட்டாரு. அவரால பெரிய ஆளானவங்கள்ல ஒருத்தர்.... தாமோதர் ஸார். அவர் எனக்கு பண உதவி செஞ்சதுனால நான் சின்னதா பிரிண்ட்டிங் பிரஸ் ஆரம்பிச்சேன். படிப்படியா அடி எடுத்து வச்சு முன்னேறினேன். பணம்! அது மனுஷனோட குணத்தை மாத்தக் கூடியதுதான். ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லை. உன் அண்ணன் மனசுல எனக்கு நீ ஏத்தி வச்சிருக்கற இமேஜை நான் காப்பாத்துவேன். இப்ப என்னை சிரிச்சுக்கிட்டே வழி அனுப்பும்மா?”
தன் நிலைமை சந்தி சிரிக்கப் போவதை அப்போது அறியாத அம்ருதா, மதனை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தாள். தன் இதயத்தை விட்டு, தன் வாழ்க்கையை விட்டு, தன் எதிர்காலத்தை விட்டு, அவனை வழி அனுப்பி வைக்கிறோம் என்று அறியாத பேதையாய் ஆகிப் போனாள் அந்தப் பூவிழி. அன்று அவளிடம் வாக்குக் கொடுத்துப் புறப்பட்டவன் திரும்பி வரும் பொழுது பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்ளும் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் பத்மினியை மணந்து கொண்ட மணாளனாய் திரும்பி வந்தான்.
14
“கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்ட நீங்க, சேற்றில் கிடக்கும் புழுவை விடக் கேவலமானவர்” மதனைத் திட்டினாள்.
“அம்ரு..... நான்...”
“நோ. அப்படிக் கூப்பிடாதீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முக்கியமான விஷயம் பேசறதுக்காக மாமா கூப்பிட்டார்னு பொய் சொல்லிட்டுப் போனீங்க. எவளையோ கல்யாணம் பண்ணிக்கத்தான் போறீங்கன்னு சொல்லிட்டுப் போயிருந்தா... என் அண்ணனை விட்டு உங்களுக்கு மொய் எழுத வச்சு அனுப்பி இருப்பேன்.”
“ஐயோ அம்ருதா. இது பிளான் பண்ணி நடந்த கல்யாணம் இல்லை. மாமாவுக்கு அவரோட மனைவி வழியில இந்தப் பொண்ணு சொந்தம். ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்த பொண்ணோட அம்மா, அப்பா இறந்துட்டாங்க. அநாதரவா நிக்கற இந்தப் பொண்ணுக்கு ஆதரவா நான் இருக்கணும்னு... மாமா இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டார். எ... என்னால எதுவுமே எதிர்த்துப் பேச முடியாத நிலைமை உருவாயிருச்சு. ஐ ஆம் ஸாரி...”
“ஸாரி கட்டின பொம்பளைன்னால.... வெறும் ஸாரி சொல்லி சரி பண்ணிடலாம்னு நினைக்கறீங்க. சரி பண்றதுக்கு இது உங்க வாட்ச்சோ, காரோ இல்லை. என்னோட வாழ்க்கை. நீங்க சேலத்துக்குப் போறதுக்கு முன்னால என் நம்பிக்கையைப் பத்தியும், என் அண்ணனோட லட்சியத்தைப் பத்தியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்... எள்ளளவு கூட அக்கறை இல்லாம இப்பிடி புது மாப்பிள்ளையா வந்து நிக்கறீங்களே? ஒரே நாள்ல வந்துடறதா சொல்லிட்டுப் போன நீங்க... ஒரே ஒரு தடவையாச்சும் என்னை, என் காதல், அதைப்பத்தின என் கனவு இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தீங்களா? போய் ரெண்டு வாரத்துக்கு மேல உங்களைக் காணாம நான் தவிச்ச தவிப்பு?...”
“அம்ருதா... உன்னை ஏமாத்தணும்ங்கற எண்ணம் எனக்கு இல்லை. மாமா எடுத்த முடிவை மறுக்க முடியாத சூழ்நிலை எனக்கு. சொந்தக்காரங்கள்ளாம் ஒண்ணா கூட என்னை எதுவுமே பேச விடாம பண்ணி... இந்தக் கல்யாணத்தை நடத்திட்டாங்க.”