பூவிதழ் புன்னகை - Page 37
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8116
42
காலண்டரைப் பார்த்த மேத்தா முகத்தில் சிந்தனை முடிச்சுக்கள் தோன்றின. 'வினோத் ஸாரோட வைஃப், பணம் வாங்கிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆகுது! அந்தம்மா... 'இதோ... சம்பளம் வாங்கினதும் வந்து திரும்பிக் குடுத்துடறேன்'னு சொல்லி வாங்கிட்டுப் போனாங்க. வரவே இல்லியே? வினோத் ஸார் நல்லவர். எவ்ளவோ பேருக்கு பணம், கடன் வாங்கிக் குடுத்திருக்கார். அவங்கள்ல்லாம் சொன்னா... சொன்ன தேதிக்கு திரும்பிக் கொண்டு வந்து குடுத்துடுவாங்க. ஆனா... இந்தம்மா... இப்பிடி பண்ணுதே... அவங்க மொபைல் நம்பர் வாங்காம விட்டுட்டேன். சரி... வினோத் ஸாருக்கே ஃபோன் பண்ணிப் பார்க்கலாம்...'' என்று எண்ணிய மேத்தா, வினோத்தின் கைபேசி நம்பர்களை அழுத்தினார். மறுமுனையில் வினோத்தின் குரல் கேட்டது.
''ஹலோ...''
''ஹலோ.... வினோத் ஸார். நான் மேத்தா பேசறேன். ஸாரி ஸார். உங்க வைஃப் பணம் வாங்கிட்டுப் போனாங்க. ரெண்டு மாசமாச்சு ஸார். பணம் கொண்டு வந்து குடுக்கலை. தப்பா நினைக்காதீங்க ஸார். நான், குடும்பத்தோட வடக்குப் பக்கம் கோயில் யாத்திரை போறேன். பணம் குடுக்கல், வாங்கலை சரி பண்ணிட்டுப் போகணும்...''
தொடர்ந்து மேத்தா பேசிக் கொண்டே இருக்க, பவித்ரா, மேத்தாவிடம் பணம் வாங்கிய விஷயம் வினோத்தின் மனதைக் குடைந்துக் கொண்டிருந்தது. சட்டென்று சமாளித்துக் கொண்டவன், பேச ஆரம்பித்தான்.
''ஸாரி ஸார். அவங்க ஊர்ல இல்லை. இதோ இப்பவே நான் பணத்தைக் கொண்டு வரேன்...''
''ஐய்யோ... அவ்ளவு அவசரமா வேண்டாம் ஸார்...''
''பரவாயில்லை... எனக்கு இப்ப வேலை எதுவும் இல்லை. உடனே கிளம்பி வரேன். தொகை எவ்ளவு? வட்டி எவ்ளவு?...''
மேத்தா ஒரு தொகையைக் குறிப்பிட்டுக் கூறியதும் 'அடிப்பாவி' என அதிர்ந்தான் வினோத்.
'இந்த பவித்ராவுக்கு எவ்ளவு பணம் குடுத்தாலும் கடலில கரைச்ச பெருங்காயம்தான்...'
மேத்தாவிடம் பேசி முடித்தபின் மொபைலை அணைத்து விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
தனக்குத் தெரியாமல், அறிவிக்காமல் மேத்தாவிடம் பணம் வாங்கியதை அவர் மூலமே அறிந்து கொள்ள நேரிட்ட போதும், பவித்ராவை வெளி மனிதரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசிய அவனைப் போன்ற ஒரு கௌரவமான, நல்ல மனிதனுடன் வாழக் குடுத்து வைக்காத அளவிற்கு பவித்ராவின் மனோபாவம் இருந்தது.
கணவனின் கொடுமை, அதிகாரம், அடக்கு முறை இவை போன்ற குணக் கேடுகளால் தங்கள் வாழ்வில் துயரங்களையே அனுபவிக்க நேரிடும் பெண்களின் அவல நிலை பற்றி பவித்ரா அறிந்து கொள்ளவில்லையா? அல்லது அறிந்தும் 'நான் இப்படித்தான்' என்று அலட்சியமாக இருக்கிறாளா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பெண்மையை மதிக்கும், பெண்களின் பெருமையை உணர்ந்து மரியாதை அளிக்கும் உயர்ந்த மனிதனான வினோத்திற்கு பவித்ராவைப் போன்ற பெண், மனைவியாக அமைந்தது, இறைவன் கொடுத்த வரமா? அல்லது அதே இறைவன் இட்ட சாபமா?
தன் திருமண வாழ்வு இவ்விதம் திசை மாறிப் போனதையும், இல்லற வாழ்வில் இல்லாள் என்பவள் இணையாக, துணையாக இல்லாமல் போனதையும் எண்ணியபடியே காரை ஓட்டினான் வினோத்.
அவனது மனநிலைக்கு ஏற்ப, காரை மிகவும் மெதுவாக ஓட்டினான். மேத்தா ஸாரை சந்தித்து வட்டியோடு பணத்தைக் கொடுத்தான்.
'மறுபடியும் பவித்ரா வந்து பணம் கேட்டால் கொடுக்காதீங்க' என்று மூன்றாம் மனிதரிடம் எப்படி சொல்வது என்று யோசித்த வினோத் 'இது பற்றி பவித்ராவிடமே பேசிக் கொள்ளலாம்' என்று முடிவிற்கு வந்தான். சிந்தனைகளைத் தடை செய்துவிட்டு, சீராக காரை ஓட்டி அலுவலகம் போய் சேர்ந்தான்.
43
ஏழெட்டு நபர்கள் ராதாவின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெகு சீக்கிரமே வேறு சிலரும் அங்கே சாப்பிடுவதற்காக அவளிடம் வந்து விசாரித்தனர். மேற்கொண்டு இரண்டு பேர்களுக்கு மேல் சமைப்பதற்குரிய பாத்திரங்களும் அவளிடம் இல்லை. அவர்கள் சாப்பிடுவதற்குரிய இடமும் அவளது வீட்டில் போதவில்லை.
முன்னேறுவதற்குரிய வாய்ப்புகள் வருகிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய ராதா... அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த இயலவில்லையே என்ற சங்கடப்பட்டாள்.
வருமானத்திற்கும், செலவினத்திற்கும் சரிக்கு சரியாக இருக்கும் பட்சத்தில், பெரிய பாத்திரங்கள் வாங்குவதற்கோ, வாடகைக்கு பெரிய வீடு பார்ப்பதற்கோ பணத்திற்கு என்ன செய்வாள்?
ஏற்கெனவே ஏகப்பட்ட பணம் வினோத் கொடுத்து உதவி இருந்தான். எனவே அவனிடம் இது பற்றி விசாரிக்க விரும்பாத ராதா 'ஏதாவது ஒரு வழி பிறக்கும்' என்று அவளுக்கே உரிய இயல்பான தன்னம்பிக்கையுடன் காத்திருந்தாள். அவளுடைய காத்திருப்பு வீணாகவில்லை.
ஆரம்ப நாள் முதல் அவளிடத்தில் சாப்பிடுவதற்காக வருபவர்களில் ஒருவனான ஸ்ரீநிவாஸ் ரூபத்தில் அதிர்ஷ்ட தேவதை அவளது கதவைத் தட்டினாள். ஆனால் அது அதிர்ஷ்டம்தானா என்பதில் அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
ஏனென்றால் ஸ்ரீநிவாஸ் அவளிடம் கேட்டிருந்த விஷயம் அப்படி. முன்தினம் மதிய உணவு உண்டபின் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் ஸ்ரீநிவாஸ். 'எப்பவும் சாப்பிட்டுட்டு கையைக் கழுவின ஈரம் காயறதுக்குள்ள ஆபீஸ்க்கு ஓடிடுவானே... இன்னிக்கு என்ன இவன் இவ்ளவு நேரம் உட்கார்ந்திருக்கான்' என்று நினைத்த ராதா, அவனிடம் கேட்டாள்.
''என்ன ஸ்ரீநி... இவ்ளவு நேரம் சாவகாசமா உட்கார்ந்திருக்க...?''
''இன்னிக்கு ஆபிஸ் லீவுக்கா. வெய்யில் வேற கொளுத்துதா... எங்கயும் போகப் பிடிக்கலை. அது மட்டுமில்லக்கா... உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்... அதை எப்பிடி உங்ககிட்ட கேக்கறதுன்னு தயக்கமா இருக்கு... ''
''பரவாயில்லை கேளுப்பா...''
''அது... அது வந்துக்கா... எங்க பெரியமா ஒருத்தங்க... இருக்காங்க. அவங்களுக்கு அறுபது வயசாகுது. பெரியப்பாவும் இருக்கார். அவருக்கு அறுபத்து ஏழு வயசாகுது. அவங்களோட மகன், மகள், அவங்க குடும்பம் எல்லாரும் வெளிநாட்ல செட்டில் ஆகிட்டாங்க.
ஏராளமான சொத்து. சுகம். ஏகப்பட்ட நிலங்கள் ! வீடுகள்! எக்கச்சக்கமான பேங்க் பேலன்ஸ். ஆனா அவங்ககிட்ட இல்லாத ஒரு செல்வம் 'நோயற்ற வாழ்வு'ங்கற செல்வம்தான்.
பெரியம்மாவால நார்மலா எழுந்திருச்சு நடமாடி, எந்த வேலையும் செய்ய முடியாது. பாத்ரூம் போக... வர மட்டும் முடியும். அது கூட கையில கைத்தடியை வச்சுக்கிட்டுதான் முடியும். பெரியப்பா பரவாயில்லை. கைத்தடி துணையோட நடப்பார். ஆனா... அதிகமா நடந்தா... முட்டி வலி வந்துடும்.
வயித்துல அல்ஸர் பிரச்னை வேற. அவருக்கு காரம் இல்லாத சாப்பாடு குடுக்கணும். ரொம்ப நேர இடைவெளி விடாம கொஞ்சம் கொஞ்சமா ஏதாவது லைட்டா சாப்பிடக் குடுக்கணும்.