பூவிதழ் புன்னகை - Page 39
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
''ஃபோன் பண்ணிப் பார்க்கலாம்....''
''அவர்ட்ட பேசறதை நினைச்சாலே வெறுப்பா இருக்கு...''
''இந்த விஷயத்துல நம்ம விருப்பு, வெறுப்பைப் பார்த்தா... நமக்கு ஆக வேண்டிய விஷயம் நடந்தாகணுமில்ல...''
''இப்பிடி அவர்ட்ட பேச வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும்ன்னு நான் நினைக்கவே இல்லைம்மா...''
''நினைக்கறதெல்லாம் நடக்கறதும் இல்லை. நடக்கக் கூடாதுன்னு நாம நினைக்கறதெல்லாம் நடந்து, நம்பளை நிம்மதியா வாழ விடறதும் இல்லை. பிடிக்காட்டாலும் உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி கேக்கறேன்...''
''சரிம்மா...''
''நீ போய் சாப்பிடும்மா...''
ஸ்வாதி நகர்ந்ததும் தனது மொபைலில் இருந்து திலீப்பின் மொபைலுக்கு தொடர்பு கொண்டாள் ராதா. வினோத் அவளுக்கென்று ஒரு மொபைல் ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தான். மறு முனையில் திலீப்பின் மொபைல் கர்ண கடூரமான ஒரு பாடலை இனத்தது. ஆனால் அவன், லைனுக்கு வரவில்லை. அந்தப் பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்து அவளை இம்சித்தது. பலமுறை முயற்சித்தும் அவன் மொபைலை எடுக்கவில்லை. சலிப்பாக இருந்தது ராதாவிற்கு.
மீண்டும்... மீண்டும்... முயற்சி செய்தாள். முற்றிலும் பலன் இல்லாமல் போக, அவனது அலுவலக நம்பர்களுக்கு தொடர்பு கொண்டாள்.
அங்கே டெலிபோன் ஆப்பரேட்டராகப் பணிபுரியும் பெண், குரல் கொடுத்தாள்.
''ஹலோ...''
''ஹலோ... திலீப் இருக்காரா?''
''மிஸ்டர் திலீப் இன்னிக்கு லீவு...''
''அப்பிடியா? அவரோட மொபைல்ல கூப்பிட்டேன். அவர் எடுக்கலை. அவசரமா அவர்ட்ட பேசணுமே...''
''நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா?''
''ம்... நான்... நான் அவரோட வொஃய்ப்...''
''ஓ... அவர் இன்னொரு நம்பர் குடுத்திருக்காரே. அந்த நம்பர் உங்ககிட்ட இல்லையா மேடம். அது ஒரு லேண்ட்-லைன் நம்பர்...''
''இல்லை. என்கிட்ட அவரோட மொபைல் நம்பர் மட்டும்தான் இருக்கு...''
''சரி மேடம். நான் தரேன். எழுதிக்கோங்க...''
அந்தப் பெண் நம்பர்களைக் கூறினார். ராதா எழுதிக் கொண்டாள்.
''தேங்க்யூ மா...''
''வெல்கம் மேடம். ஏதாவது அர்ஜென்ட்டா இருந்தா மட்டும் இந்த நம்பர்ல கூப்பிடலாம்ன்னு சொல்லி திலீப் ஸார் குடுத்தார். நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க...''
''சரிம்மா... தேங்க்ஸ்...''
ராதா அந்தத் தொடர்பைத் துண்டித்துவிட்டு டெலிபோன் ஆப்பரேட்டர் பெண் கொடுத்த நம்பர்களில் தொடர்பு பொண்டாள். மறுமுனையில் டெலிஃபோன் ஒலித்தது.
ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
''ஹலோ...''
பெண்குரல் கேட்டதும் துணுக்குற்றாள் ராதா. மிகவும் தயங்கினாள்.
மறுமுனையில் சற்று உரக்க ''ஹலோ...'' என்ற குரல் மறுபடியும் கேட்டது.
தன்னைத் தானே சமாளித்துக் கொண்ட ராதா பேசினாள்.
''அவர்... திலீப்... இருக்காரா?...''
ஸோஃபாவில் சாய்ந்து கொண்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான் திலீப். அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள் மிருணா.
''நீங்க யார் பேசறது?'' மிருணா கேட்டாள்.
''நான் அவரோட வொய்ஃப் ராதா...''
உடனே மிருணா சற்று கோபமான குரலில் ''அவர் இங்கே இல்லை'' என்று கூறிவிட்டு தொலைபேசி தொடர்பைத் துண்டித்தாள்.
''யார் மிருணா ஃபோன்ல?'' திலீப் கேட்டதும் ''ஏதோ ராங் கால்...'' என்று கூறினாள் மிருணா.
அதன்பின் பெரிய குளியல் துண்டை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு, தலைமுடியைத் தூக்கி கொண்டை போட்டபடியே குளியலறைக்கு நடந்தாள்.
''நான் குளிச்சுட்டு வரேன் டார்லிங்... டின்னருக்கு வெளியே போகலாம்...'' என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் மிருணா.
ஐந்து நிமிடங்கள் கழித்து, மறுபடியும் ராதா அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டாள். அப்போது திலீப் எழுந்து ரிஸீவரை எடுத்தான்.
''ஹலோ...''
''நான் ராதா பேசறேன்...'' அவள் பேசி முடிக்கும் முன் திலீப் கோபப்பட்டான்.
''உனக்கு எப்பிடி இந்த நம்பர் தெரியும்?''
''இப்போ... அது முக்கியம் இல்லைங்க. ஸ்வாதியோட பர்த் ஸர்ட்டிஃபிகேட் உங்ககிட்ட மாட்டிக்கிச்சு. உடனடியா அது வேணும். ஸ்கூல்ல கேக்கறாங்க...''
''அதெல்லாம் என்னால தேட முடியாது...''
''இப்பிடி சொன்னா எப்பிடிங்க? ஸ்கூல்ல கண்டிப்பா வேணும்ன்னு கேட்டிருக்காங்க. உங்களுக்கு வேற எதுக்காவது ஃபோன் போடறேனா? முக்கியமான விஷயம்னுதான் கேக்கறேன். உங்க மொபைலுக்கு போட்டேன். நீங்க எடுக்காததுனால ஆபிஸ்க்கு போட்டேன். நீங்க எடுக்கலை. உங்க ஆபிசுக்கு போட்டேன். நீங்க லீவுன்னு அவங்கதான் இந்த நம்பர் குடுத்தாங்க...''
''இந்த நம்பர்ல இனி கூப்பிட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்...''
''அவசியப்பட்டதுனாலதான் கூப்பிட்டேன். ஸ்வாதியோட ஸர்ட்டிஃபிகேட்டை தயவு செஞ்சு...''
''சரி... சரி... புராணம் பாடாதே. குரியர்ல அனுப்பி வைக்கிறேன்'' என்று கூறி, உடனே தொலைபேசி தொடர்பைத் துண்டித்தான்.
அப்போது குளியலறையிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி, ''யார் டார்லிங் ஃபோன்ல?'' என்று அவசரமாய் கேட்டாள் மிருணா.
''அது... என்... வொய்ஃப்...'' தயக்கமாகக் கூறினான் திலீப்.
'படா'ரென்று குளியலறைக் கதவை அறைந்து சாத்தினாள் மிருணா.
பத்து நிமிடங்களில் வெளியே வந்த அவள் ''எதுக்காக அவ உங்களுக்கு ஃபோன் பண்ணினா?''
''ஸ்வாதியோட பர்த் ஸர்ட்டிஃபிகேட் வேணுமாம். அது என்னோட ஜாமானோட வந்துருச்சு போலிருக்கு. தேடி எடுக்கணும்...''
''அது சரி... அவளுக்கு எப்பிடி இந்த லேண்ட் லைன் நம்பர் கிடைச்சுதாம்?''
''ஆபீஸ்ல எமர்ஜென்ஸின்னா கூப்பிடுங்கன்னு சொல்லி குடுத்திருந்தேன். அவங்க குடுத்துருக்காங்க.''
''ஃபோன்ல கூப்பிட்டது உங்க வொய்ப்ப்ன்னு சொன்னீங்களே... அப்பிடின்னா நான் யாராம்...'' திலீப்பின் தலைமுடியைக் கோதியபடி சிணுங்கலாகக் கேட்டாள் மிருணா. அந்த லாவண்ய லாவகத்தில் லயித்துப் போன திலீப், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கிறக்கமான குரலில், ''நீதான் மிருண் என் வொய்ஃப்'' என்று கிசுகிசுத்தான்.
அங்கே அரங்கேறும் அங்தரங்க அநியாயங்கள் ஏதும் அறியாத ராதா, 'இந்த மட்டிலும் 'குரியராவது அனுப்பறேன்'ன்னு சொன்னாரே என்று நிம்மதி அடைந்தாள்.
'ஆனா... அட்ரஸ் கேக்கலியே...' என்று யோசித்தவள், ஸ்வாதியிடம் சென்றாள்.
''உங்க அப்பா, உன்னோட பர்த் ஸர்ட்டிஃபிகேட்டை குரியர்ல அனுப்பிடறாராம். நம்ப அட்ரஸை கொஞ்சம் அவருக்கு மெஸேஜ் அனுப்பி விட்ருடா ஸ்வாதி... ''
''சரிம்மா. ஆனா... நீங்களும் இனி, எஸ்.எம்.எஸ். அனுப்ப பழகிக்கோங்கம்மா... ரொம்ப ஈ.ஸி. ''
''சரிடா... சீக்கிரமா பழகிக்கறேன்'' என்று சொன்ன ராதா... ஸ்வாதியிடம் தனது மொபைலைக் கொடுத்தாள்.
45
மஞ்சுவை பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு, ராதாவின் வீட்டிற்கு வந்தான் வினோத்.
வீட்டில் இருக்கும் சிறிய ஹாலில் ஒரு ஓரமாக தன் இஷ்ட தெய்வங்களின் படங்களை அடுக்கி வைத்திருந்தாள் ராதா. வெண்கலத்தில் செய்யப்பட சிறிய காமாட்சி விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அவளது அம்மா வனஜாவைப் போல அவளும் விளக்கிற்கு இதயம் நல்லெண்ணெய்தான் ஊற்றி ஏற்றுவாள். நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் மனதில் நல்லெண்ணங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை.