பூவிதழ் புன்னகை - Page 40
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
வனஜாவும் விளக்கேற்றுவதற்கு 'இதயம் நல்லெண்ணெய் விலை அதிகமே' என்பதை பொருட்படுத்தாமல் இதயம் மட்டுமே வாங்குவாள். அது போலவே ராதாவும் இதயம் நல்லெண்ணெய் வாங்குவதற்குத் தயங்க மாட்டாள். சிறு தீபம், சுடர் விட்டு எரிந்துக் கொண்டிருக்க, அவளது மனதில் எரிந்துக் கொண்டிருக்கும் வேதனைகளை தன் இஷ்ட தெய்வங்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் ராதா.
திலீப், அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போனபோது அவளது தெய்வ நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது. தனக்குக் கீழே பெரும் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரைப் பார்த்து, அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டபடியால் தன்னுடைய கஷ்டங்கள் அவற்றைவிட சிறியவைதான் என்று தோன்றியதால்... மீண்டும் தெய்வ நம்பிக்கையை தன்னுள் வளர்த்துக் கொண்டாள் ராதா.
பிரார்த்தனையை முடித்துவிட்டு வரட்டும் என காத்திருந்தான் வினோத். கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டிருந்த ராதா, கண்களைத் திறந்ததும் வினோத்தைப் பார்த்தாள்.
''வா வினோத். கடவுளை நினைச்சு என்னோட கஷ்டங்களை சொல்லிட்டு, கண்ணைத் திறக்கறப்ப... நீ... என் முன்னால நிக்கற...!''
''ஆஹா... இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல...?! சரி... சரி... ஒரு கப் காஃபி... போட்டு நல்லா சூடா குடேன். தலை வலிக்குது. தலைவலி அதிகமாகறதுக்குள்ள காஃபி குடிச்சாகணும்...''
''இதோ... ஒரு நிமிஷத்துல போட்டுத்தரேன்...'' கடகடவென்று சூடாக ஃபில்ட்டர் காஃபி போட்டுக் கொடுத்தாள்.
ரசித்துக் குடித்தான் வினோத்.
''அது எப்பிடி உனக்கு மட்டும் காஃபி இவ்ளவு சூப்பரா வருது? நானும், நீ சொல்லிக் குடுத்த மாதிரி போட்டு பார்த்தேன். சரியாவே வரமாட்டேங்குது.... சமையல், வீட்டு நிர்வாகம்ன்னு எவ்ளவோ டேலன்ட்டடா இருக்க... திலீப் அண்ணனுக்கு உன்கூட வாழக் குடுத்து வைக்கலை...''
''அதைப் பத்தி நினைச்சோ... பேசியோ... என்ன ஆகப் போகுது? 'நேத்து நடந்ததை, நேத்தோட போகட்டும். காத்தோட கரையட்டும். நாளைக்கு நடக்கப் போறதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது. இன்னிக்கு என்னமோ அதை மட்டும் பாரு...' அப்பிடின்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் நாளைய நாளுக்கு நான் யோசிச்சே ஆகணும். என்னை நம்பி ஒரு ஜீவன் இருக்காளே...''
''புரியுது ராதா. உன்னோட உலகமே ஸ்வாதியாத்தான் இருக்குன்னு எனக்குப் புரியுது...''
''புரிய வேண்டியவருக்கு புரியலியே... அவர்கிட்ட நான் என்ன எதிர்பார்த்தேன்? வெளிப்படுத்தற அன்பைத் தவிர? என் மேல அன்பை செலுத்தாட்டி கூட பரவாயில்லை... அவரோட பொண்ணுதானே ஸ்வாதி? அவளுக்காகவாவது வீட்டை பறிச்சுக்காம விட்டு வச்சிருக்கலாமே... மகளோட படிப்பு பத்தி அக்கறை இல்லை...''
''இல்லாத ஒண்ணைப் பத்தி பேசாத ராதா...''
''அது சரிதான். இனி இருக்கற வரைக்கும் மானம், மரியாதையோட இருந்து, ஸ்வாதிக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிடணும். நிறைய பேர் சாப்பிட வர்றதுனால இடம் பத்தலை, ஜாமான்கள் வாங்கினாலும் ஏகப்பட்ட பணம் செலவாகுதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்ல... இங்கே சாப்பிட வர்ற ஸ்ரீநிவாஸை உனக்குத் தெரியும்ல... அவனோட சொந்தக்காரங்களுக்கு, அவங்களை கவனிச்சுக்க நல்ல ஆள் வேணுமாம். பெரிய பணக்காரங்களாம்.'' என்று ஆரம்பித்து, ஸ்ரீநிவாஸ் கூறிய அனைத்து விபரங்களையும் வினோத்திடம் விளக்கமாக எடுத்துக் கூறினாள் ராதா.
''நீ சொல்ற அந்த விஜயராகவனும், எனக்குத் தெரிஞ்ச ஒரு விஜயராகவனும் ஒரே நபர்தான்னு நான் நினைக்கறேன். ஸ்ரீநிவாஸ் குடுத்த அட்ரஸைக்குடு. நான் போய் விசாரிக்கிறேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால அவங்க என் ஏரியாவுல இருந்தாங்க... ஸ்ரீநிவாஸ் குடுத்த அட்ரஸ் வேறயா இருக்கு. ஒரு வேளை அவங்க, வீடு மாறி இருக்கலாம். நான் சொல்ற விஜயராகவன்னா... பிரச்னையே இல்லை. ஸ்ரீநிவாஸ் சொன்ன மாதிரி அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களோட காரை முன்ன நான்தான் வாங்கினேன். அவங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வச்சவர் என்னோட ஆஃபீஸ் ஃப்ரெண்ட். கார் வாங்கறப்ப, அந்த விஜயராகவன் பெருந்தன்மையா நடந்துக்கிட்டார். இவர்... அதே விஜயராகவன்னா நீ தாராளமா அங்கே வேலைக்கு போகலாம்.''
''சரி வினோத். நாளைக்கு சொல்லு. அது பத்தி முடிவு பண்ணிட்டு, இந்த வீட்டு ஓனர்ட்ட நான் இடம் மாத்தப் போற விஷயத்தை முன் கூட்டியே சொல்லணும்.''
''சரி ராதா. எல்லா ஏற்பாடும் நான் பண்றேன். கவலைப்படாதே...''
''சரி வினோத். இந்த விஷயம் பேசினதுல... மஞ்சு எப்பிடி இருக்காள்ன்னே கேக்காம விட்டுட்டேன். அவளுக்காக சர்க்கரை பொங்கல் எடுத்து வச்சிருக்கேன். எடுத்துக்கிட்டு போ. இதோ வரேன்.'' ராதா, சமையலறைக்கு சென்று சிறிய டப்பா ஒன்றை எடுத்து வந்து வினோத்திடம் கொடுத்தாள்.
''மஞ்சுவுக்கு சர்க்கரை பொங்கல்ன்னா ரொம்ப இஷ்டம்... மஞ்சுவும் உன்னைப் பார்க்கணும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கா. நாளைக்கு அவளைக் கூட்டிட்டு வரேன். அவளுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். 'ராதா ஆன்ட்டின்னா எனக்கு உயிர்'ன்னு சொன்னா.''
''பாவம்! தாய் இல்லாம தவிக்கற பொண்ணு...''
''என்ன பண்றது? தலைவிதி! சரி. ராதா நான் கிளம்பறேன்...'' விடை பெற்றுக் கொண்ட வினோத் காரைக் கிளம்பினான்.
46
வீட்டில், தனக்கென இருந்த பீரோவில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டான் திலீப்.
ஆபீஸ் சம்பந்தப்பட்ட முக்கியமான ஃபைல் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தான் அவன். பல முறை ஆபீஸில் இருந்து அவனது மொபைலில் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது.
''இதோ... எடுத்துக்கிட்டு வந்துடறேன்...''
''இதோ எடுத்துக்கிட்டு வந்துடறேன்'' என்று திரும்பத் திரும்ப சொல்லி, நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான் திலீப்.
'ஃபைலைக் காணவில்லையோ' என்ற எண்ணத்தில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
எடுத்து கீழே போட்டவற்றை மறுபடியும் பீரோவினுள் வைத்தான். வைத்தவற்றை மீண்டும் எடுத்து கீழே போட்டான். குறிப்பிட்ட அந்த ஃபைல் மட்டும் கண்ணில் தெரியவில்லை.
நீண்ட நேரம் தேடியதில் களைப்படைந்தான். சலிப்புற்றான். அவன் ஒரு மேல் அதிகாரியாக, அவனுக்குக் கீழே பணிபுரிபவர்களை இது போன்ற விஷயங்களுக்கு மிரட்டி, உருட்டிக் கொண்டிருக்க... இப்போது... அவனையே அவனுக்கும் மேலே உள்ள அதிகாரிகள் மிரட்டிக் கொண்டிருந்தனர். அந்த ஃபைலில் சில வேலைகள் இருந்தபடியால், வீட்டிற்குக் கொண்டு சென்று முடிப்பதற்காகக் கொண்டு வந்திருந்தான்.
ராதாவுடன் வாழ்ந்த போது கொண்டு வந்த ஃபைல் அது. 'ஒரு வேளை ராதாவின் ஜாமான்களுடன் கலந்து போயிருக்குமோ' என்ற எண்ணம் தலை தூக்கியது. 'ஒரு வேளை அவளிடத்தில் அது இருந்தால் அவளிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்' என்ற எண்ணம் அவனை சற்று அமைதிப்படுத்தியது.