பூவிதழ் புன்னகை - Page 44
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
சில நிமிடங்கள் அமிர்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீநிவாஸ். அவனது கண்களில் கண்ணீர் முத்துக்கள் கோர்த்தது.
இருவரும் வெளியே வந்தனர். அது வரை எந்த பணியாளரும் வந்து காஃபி கூட கொண்டு வந்து கொடுக்கவில்லை. அங்கங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் கெட்ட நேரத்தில்!
'அடப் பாவிகளா! பெரியப்பா பெத்த பிள்ளைங்க கூட இந்த வசதியையும், சுகத்தையும் அனுபவிக்கலை... நீங்க என்னடான்னா... நல்லா தின்னுப்புட்டு இப்பிடி தூங்கறீங்களே' என்று மனதில் நினைத்தான் ஸ்ரீநிவாஸ்.
அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட விஜயராகவன் அவனது முதுகைத் தட்டினார்.
''என்ன ஸ்ரீநி பண்றது? எங்க தலைவிதி!''
''கவலைப்படாதீங்க பெரியப்பா. ராதா அக்காவை எவ்ளவு சீக்கிரம் இங்கே வர வைக்க முடியுமோ... அவ்ளவு சீக்கிரம் வர வைக்கிறேன். இப்ப... நேரா அவங்க வீட்டுக்குப் போய் பேசறேன்.''
''சரிப்பா ஸ்ரீநி. உனக்கு செலவுக்கு பணம் வேணும்னா வாங்கிக்கோ.''
''இப்போதைக்கு தேவை இல்லை பெரியப்பா. தேங்க்ஸ். நான் கிளம்பறேன்'' என்ற ஸ்ரீநிவாஸ், அவருடைய கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டபின் வெளியேறினான்.
50
பள்ளிக் கூடத்தில் இருந்து மஞ்சுவை அழைத்துக் கொண்டு, ராதா கூறியபடி மைதாமாவும், பனீரும் வாங்கிக் கொண்டு ராதாவின் வீட்டிற்குள் காரை செலுத்தினான் வினோத்.
ராதாவைப் பார்க்கப் போகும் குஷியில் இருந்தாள் மஞ்சு.
''அப்பா... ராதா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க இல்லப்பா? எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்ப்பா...''
'எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...' வினோத்தின் மனதில் ஓடிய எண்ணம், அவனுக்குப் பழைய நினைவுகளை எழச் செய்தது.
ராதா ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டபின்பு அவள் மீதிருந்த காதலை, அன்பு மயமாக்கிக் கொண்டவன் வினோத். காதல் என்றாலும் அன்பு என்றாலும் ஒன்றுதான். ஆனால் பேச்சு வழக்கில், ஒரு ஆண், ஒரு பெண் மீது கொள்வதுதான் காதல் என்றாகிப் போனதே.
வினோத்திற்கு ராதாவின் மீதான காதல், ஒருதலை காதல் என்ற போதும், இருதலைக் கொள்ளி எறும்பு போலத் துடித்தான்.
தான் காதலித்த பெண்ணின் வாழ்வு அவனது கணவனால் இப்படி நிலை குலைந்து போனதே என்று வினோத் வேதனைப்பட்டான். அவளைக் காதலித்த சுகமான நாட்களை நினைத்தாலே இனிக்கும்.
அப்படித்தான் அப்போதும் இனித்தது வினோத்திற்கு. ஆனால் அந்த நினைவுகளை மேலும் மறு ஞாபகமூட்டவிடாமல் தடுக்கும்படி தன் மூளையின் செயல்பாட்டு திறனுக்குக் கட்டளையிட்டான். கட்டுப்படுத்தினான். சுகமான அந்தக் காதல், சுமையாகிப் போனது வினோத்தின் இதயத்தில்!
காலம், மனதில் ஏற்பட்ட காயத்தை மாற்றும் மாயம்தான் என்ன? அந்த ஒரு மாய சக்தி இல்லை எனில் மனிதர்க்கு போதனைகளும், துன்பங்களும் பெரும் பாரமாகி, உயிரோடு வாட்டி எடுக்குமன்றோ?
காதலித்தவள் வேறு ஒருவனுக்கு மனைவியாகிவிட, தனக்கு மனைவியாக வந்தவளைக் காதலித்து வாழ்ந்தும், அவள் திசை மாறிய பறவையாகிப் போனது ஏன்?
'என்னால் காதலிக்கப்பட்டவளின் வாழ்வு... அவளது கணவன் எனும் கயவனால்... கண்ணீர் மயமாகிப் போனதே...' சுகத்தையும், துக்கத்தையும் சுமந்தபடி வினோத், காரை ஓட்ட, மஞ்சுவையும், வினோத்தின் உணர்வுகளையும் சுமந்தபடி கார் ஓடிக் கொண்டிருந்தது.
ராதாவின் வீட்டருகே காரை நிறுத்தியதும் படுகுஷியாக காரை விட்டு இறங்கினாள் மஞ்சு. வேகமாக ராதாவின் வீட்டிற்குள் ஓடிச் சென்று, ராதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அவளை அரவணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள் ராதா.
''உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு ஆன்ட்டி...''
''ஆமாண்டா மஞ்சு. நீ எப்பிடி இருக்க? ஸ்வாதி அக்காவுக்கு நாலு மணி வரைக்கும் ஸ்கூல் டைம் வச்சுடறாங்க. அதனால அவ, பஸ்ல வீட்டுக்கு வர்றதுக்கு ஆறு மணியாகிடுது. நீ வந்திருக்கற நேரம் பார்த்து, அவ இல்லை பாரு... அது சரி, பாதாம் பால் குடிக்கறியா அல்லது போர்ன்-விட்டா குடிக்கறியா? உங்கப்பாதான் ஸ்வாதி அக்காவுக்காக போர்ன்விடா, பாதாம்-மிக்ஸ், ஹார்லிக்ஸ்... எல்லாமே வாங்கி குடுத்திருக்கார்... உனக்கு என்ன வேணும் சொல்லு...''
''எனக்கு பாதாம்-மிக்ஸ் போட்டுக் குடுங்க ஆன்ட்டி...''
ராதா, சமையலறைக்குள் நுழைய முற்பட்டாள். இதற்குள் அங்கே வந்து உட்கார்ந்திருந்த வினோத், சிரித்தான்.
''நீ வந்த சந்தோஷத்துல உங்க ஆன்ட்டிக்கு நான் வந்திருக்கறது கூட தெரியல பாரு.'' கேலி செய்தான் வினோத்.
''உனக்கு என்ன வினோத் வேணும்? ஃபில்ட்டர் காஃபிதானே...?''
''நிச்சயமா காஃபிதான். இந்தா ராதா. மைதாவும், பனீரும்...''
அவன் கொடுத்த பையை வாங்கிக் கொண்டு மறுபடியும் சமையலறைக்கு சென்றாள் ராதா. ஒரு தட்டில், இரண்டு கப்களில், ஒன்றில் பாதாம் பாலும், இன்னொன்றில் ஃபில்ட்டர் காஃபியும் கொண்டு வந்து கொடுத்தாள்.
மஞ்சுவும், வினோத்தும் ரசித்து குடித்தனர். மஞ்சு, தன் பள்ளிக் கூட நிகழ்வுகளையும், தன் தோழிகளுடன் பேசியவை பற்றியும் ராதாவிடம் மடை திறந்த வெள்ளம் போல கொட்டினாள்.
அழகிய கண்கள் விரிய, முகபாவங்கள் வினாடிக்கு வினாடி பலவிதங்களில் பிரதிபலிக்க, மஞ்சு பேசியவற்றை மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராதா.
'இவ ஒரு நாள் கூட என்கிட்ட இந்த அளவுக்கு பேசினதே இல்லையே... ராதாட்ட எவ்ளவு ஆசையா... எத்தனை விஷயங்களை... உணர்ச்சி பூர்வமா பேசறா?!!' என்று வியப்படைந்தாள் வினோத்.
'ஒரு வேளை பவித்ரா, எங்க கூட இருந்திருந்தா... என் மஞ்சுவுக்கு நல்ல தாயாக கூட இருந்திருந்தா... அவகிட்ட இப்பிடித்தான் பேசுவாளோ?'
பலவித எண்ணங்கள் அவனது மனதை ஆட்டி வைத்தது. வதைத்தது.
ஆறு மணிக்கு ஸ்வாதி வந்தாள். புத்தகப் பையை எறிந்து விட்டு, மஞ்சுவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அவர்கள் நான்கு பேரும் அரட்டை அடித்து மகிழ்ந்தனர். அதன்பின் இரவு உணவைத் தயாரித்தாள் ராதா. மந்த்ரா கடலை எண்ணெய்யில் பொரிச்ச பரோட்டாவும், பனீர் குருமாவும் செய்து அசத்தினாள்.
இரவு எட்டு மணி வரை அவளது பொழுது குதூகலமாகக் கழிந்தது. அதன்பின் விஜயராகவன் வீட்டில் வேலைக்கு ராதா போவது பற்றி பேச வேண்டும் என்ற ஞாபகம் வந்தது வினோத்திற்கு. அதே சமயம், ராதாவிற்கும் அது விஷயமாக வினோத்திடம் கலந்து பேச வேண்டும் என்ற நினைவு வந்தது.
இருவரும் ஒரே விஷயத்தை ஒரே நேரம் பேச ஆரம்பிக்க, இருவருக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தனர்.
''அந்த விஜயராகவன் ஏற்கெனவே எனக்குத் தெரிஞ்சவர்தான். ஆனா அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியலை. அவரோட ஏரியாவுல இன்னொரு பணக்கார பெரிய புள்ளி தண்டாயுதபாணி. அவர்ட்ட பி.ஏ.வா வேலை பார்க்கறான் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன்.