பூவிதழ் புன்னகை - Page 45
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
அவன் மூலமா விசாரிச்சேன். ஸ்ரீநிவாஸ் சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு சரியான விஷயம்தான். அதனால நீ தைரியமா அங்க வேலைக்குப் போகலாம் ராதா. பிடிச்சா தொடர்ந்து செய்யப் போ. பிடிக்கலைன்னா நின்னுடப் போற. அவ்ளவுதானே. எந்த ஒரு திட்டத்தையும் ஒரு நம்பிக்கையோட அணுகினா... நல்லவிதமா இருக்கும். அதையும் மீறி நமக்கு சரிப்படலைன்னா... விட்டுட்டு வேற வழியைப் பார்க்கணும். நீ அங்கே வேலைக்குப் போகலாம்ன்னு எனக்கு தோணுது. உன்னோட முடிவு என்ன?''
''நீ நல்ல மாதிரியா சிபாரிசு பண்றப்ப அங்கே வேலைக்கு போய் அங்கேயே செட்டில் ஆவறது எனக்கும் சரின்னுதான் தோணுது. குழப்பமான மனநிலையிலயும், சூழ்நிலையிலயும் இருக்கறப்ப நமக்கு வேண்டியவங்க, நமக்கு நல்லதே நடக்கணும்னு நினைக்கறவங்க ஒரு முடிவு சொன்னா... அந்த முடிவுக்குக் கட்டுப்படறதுதான் நியாயம். நான் அந்த விஜயராகவன் ஸார் வீட்டு வேலைக்குப் போகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன். எல்லாமே நல்லதுக்குத்தான்னு நம்புவோம்.''
ராதாவும் வினோத்தும் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள் மஞ்சு.
''ஆன்ட்டி... உங்க கூட இவ்ளவு நேரம் இருந்ததுல எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு... நீங்க பண்ணிக் குடுத்த பரோட்டாவும், பனீரும் செம டேஸ்ட்!''
''உனக்கு எப்போ... என்ன... வேணுமோ... சொல்லு... நான் சமைச்சுத் தரேன்.''
''சரி ஆன்ட்டி... இப்ப எனக்கு கதை சொல்றீங்களா?''
''ஓ... அதுக்கென்ன? சொல்றேனே...'' என்ற ராதா, கதை சொல்ல ஆரம்பித்தாள். விநாயகர் கதையும், விவேகானந்தர் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறினாள் ராதா...''
கண் இமைக்காமல், மிகக் கூர்மையாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மஞ்சு. கதை முடிந்தது.
''ஹய்யோ... சூப்பரா ஸ்டோரி சொல்றீங்க ஆன்ட்டி...''
''தேங்க்ஸ்மா...''
''மஞ்சு, ரொம்ப லேட்டாச்சுல்ல... கிளம்பலாமா?...''
''சரிப்பா'' அரை மனதுடன் சொன்னாள் மஞ்சு.
அவளது ஸ்கூல் பேகை வினோத் எடுத்துக் கொண்டான்.
வினோத் கிளம்பினான். மஞ்சுவிற்கு அங்கிருந்து கிளம்பவே மனம் இல்லை.
''போய்ட்டு வரேன் ஆன்ட்டி... போய்ட்டு வரேன் ஆன்ட்டி'' என்று பல முறை கூறினாள். வாசல் வரை வழி அனுப்பச் சென்ற ராதாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உங்களை நான் 'அம்மா'ன்னு கூப்பிடட்டுமா ஆன்ட்டி'' என்று கேட்டாள். இதைக் கேட்ட வினோத்தும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மஞ்சுவின் அந்தக் கேள்வியில், கனமான ஒரு மௌனம் அங்கே நிலவியது.
''வா... மஞ்சு... வீட்டுக்கு போகலாம்...'' என்று மஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு காருக்குள் ஏறிக் கொண்டான் வினோத்.
கண்களில் ஒரு சோகம் நிழலாட தன் கைகளை அசைத்து 'டாட்டா' காட்டினாள் மஞ்சு. கார் கிளம்பியது.
51
காரை ஓட்டியபடியே மஞ்சுவிடம் பேசினான் வினோத்.
''என்னடா மஞ்சு, ராதா ஆன்ட்டியை பார்க்கணும், பார்க்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தியே... இன்னிக்கு பார்த்தாச்சா? ஹாப்பிதானே?...''
''இல்லைப்பா... ரொம்ப வருத்தமா இருக்கு...''
''என்ன? ஹாப்பி இல்லையா? ஏன்...?''
''ராதா ஆன்ட்டி மாதிரி என்னோட அம்மா இல்லியேன்னு வருத்தம்தான்ப்பா. ராதா ஆன்ட்டி எவ்ளவு அன்பானவங்களா இருக்காங்க?! நிறைய பேசறாங்க. கதை சொல்றாங்க. டேஸ்ட்டா சமைச்சுக் குடுக்கறாங்க. ரொம்ப பிரியமா பேசறாங்க. அம்மான்னா அப்பிடித்தானே இருக்கணும்? ஏன்ப்பா என்னோட அம்மா மட்டும் என் மேல அன்பே இல்லாம... என்கூட இல்லாம... இப்பிடி இருக்காங்க...?''
''உன் அம்மாவும் நல்ல அம்மாதாண்டா மஞ்சு. அவளை நல்லபடியா வளர்க்கறதுக்கு அவங்க அம்மா, அப்பா உயிரோட இல்லாம போயிட்டாங்க....'' என்று சமாளித்தபடி பேசி, அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான். ம்கூம்... மஞ்சு அவனை விடுவதாக இல்லை.
''அம்மாவோட பேரன்ட்ஸ் இல்லாததுனால அம்மா நல்ல அம்மாவா வளரலைன்னு சொல்றீங்கப்பா... அப்பிடின்னா... எனக்கும் என்னோட அம்மா என்கூட இல்லையே? சொல்லுங்கப்பா. அம்மா என் கூடவே இருந்து என்னை நல்லபடியா வளர்க்க வேண்டாமா...?''
''மஞ்சுக் கண்ணம்மா... கெட்ட பையன்ங்க இருக்கலாம். கெட்ட பொண்ணுக இருக்கலாம். ஆனா... கெட்ட அம்மாவே இந்த உலகம் முழுக்க இருக்க மாட்டாங்க. உன்னோட அம்மாவும் நல்லவதான். சீக்கிரமா வருவா. உன்னை சீராட்டி, பாராட்டி வளர்ப்பா...''
''கனவுலதான்ப்பா அம்மா வருவாங்க... என்னை வளர்ப்பாங்க...''
''அப்பா... நான் உன்னை வளர்க்கறதுல என்னடா குறை வச்சிருக்கேன்?...''
''உங்களை குறை சொல்லலைப்பா. என்னோட மனசுல இருக்கற குறைகளை உங்ககிட்ட சொல்றேன்ப்பா. அப்பா இல்லாம வளர்றதை விட அம்மா இல்லாம வளர்றதுதான்ப்பா ரொம்ப கொடுமையான விஷயம்... நீங்க என்னை நல்லா பார்த்துக்கறீங்க. ஆனா... எனக்கு அம்மா வேணும்ப்பா. ராதா ஆன்ட்டி மாதிரி ஒரு நல்ல அம்மா எனக்கு வேணும்ப்பா. ஸ்வாதி அக்கா ரொம்ப லக்கிப்பா...''
''நான்... உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா. உன் கூடவே நான் இருக்கேன். நீ என்னடான்னா... உன்னோட அம்மாவையே நினைச்சுகிட்டிருக்க...''
குரல் தழுதழுக்கப் பேசிய வினோத்தின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப் பார்ப்பதைக் கண்டுவிட்ட மஞ்சு, மனம் பதறினாள்.
''அப்பா... நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனாப்பா? ஸாரிப்பா... நான் இனி அம்மாவைப் பத்தி பேசவே மாட்டேன்ப்பா. எனக்கு அம்மா வேணாம்ப்பா. நீங்க போதும்ப்பா'' என்று கூறி, வினோத்தின் தோளில் சாய்ந்து கொண்டாள் மஞ்சு.
மகளின் பாசத்தில் மனம் கரைந்து போனான் வினோத்.
பூமாலையாய் தன் தோளில் சாய்ந்து கொண்ட மஞ்சுவை ஒரு கையால் அணைத்துக் கொண்டான். மறு கையில் காரை ஓட்டினான். அவர்களது வீட்டை நெருங்கியது கார்.
இருவரும் காரை விட்டு இறங்கினார்கள். காரைப் பூட்டும் வரை வினோத்துடன் காத்திருந்து, அவனுடன் வீட்டிற்குள் சென்றாள் மஞ்சு. தூக்கம், அவளது கண்களை அசத்த, அப்படியே ஓடிச் சென்று படுக்கையில் படுத்தாள். மறு வினாடி தூங்கிவிட்டாள்.
தூங்கிவிட்ட மஞ்சுவையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்.
'பூ போல பொண்ணு. புயல் போல எவ்ளவு பேசிட்டா? இவளோட மனசுல எத்தனை சோகம், எத்தனை ஏக்கம்?! அம்மாதான் எல்லாம்ன்னு நினைச்சு ஏங்கற பொண்ணை, எப்பிடித்தான் விட்டுட்டுப் போக பவித்ராவுக்கு மனசு வந்துச்சோ. இவளுக்காக வேலையைக்கூட விட்டுட்டு ஓடி வர்ற என்னோட அன்பைவிட, தன்னோட அம்மாவோட அன்புதான் பெரிசுன்னு நினைக்கிறா மஞ்சு. இவளோட ஏக்கம் தீருமா? அப்படி, ஒரு நாள் வருமா? பெரிய கேள்விக்குறிதான்...' சிந்தனை ஓட்டங்கள், வினோத்தின் தூக்கத்தைக் கெடுத்தது. சிறிது நேரம் டி.வி.யைப் பார்க்கலாம் என்று ஸோஃபாவில் உட்கார்ந்தவன், நீண்ட நேரத்திற்குப் பிறகு ஸோஃபாவிலேயே படுத்துக் கண் அயர்ந்தான்.