பூவிதழ் புன்னகை - Page 49
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
ஏற்கெனவே வேலைக்கு இருந்த சமையல்கார வள்ளியையும், அவ புருஷன் கந்தனையும் வேலையை விட்டு ஐய்யா நிறுத்திட்டாரு. அவங்க மேல இருந்த திருட்டுப்பழி நிரூபணமாயிடுச்சு. சமையலுக்கு வேற ஆள் போட்டுக்கோ'ன்னு ஐய்யா சொன்னாரு. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். மிஞ்சிப்போன ரெண்டு மணி நேரம் சமையல் பண்ணுவேன். இதுக்கு எதுக்கு இன்னொரு ஆள்? பங்களாவுல எனக்கு எல்லா சுதந்திரமும் குடுத்திருக்காரு ஐய்யா. சமையல் நேரம் போக வீட்டை சுத்தம் பண்ற வேலையை சூப்பர்வைஸ் பண்றேன்.
தோட்டக்காரனை வேலை வாங்கி, தோட்டத்தை பராமரிச்சு, பூச்செடிகளை நிறைய நட்டு வச்சிருக்கேன். அமிர்த்தம்மா கூட உட்கார்ந்து பேசறதுக்காக நிறைய நேரம் ஒதுக்கி இருக்கேன். அவங்க ரூமுக்குள்ள போயிட்டா என்னை சீக்கிரத்துக்குள்ள விடவே மாட்டாங்க. அன்பான பேச்சுப் பரிமாற்றம்தான் அவங்களுக்குத் தேவைப்படுது. அதுக்காகத்தான் அவங்க ஏங்கறாங்க. அன்பான பேச்சு, ஆதரவான பாதுகாப்பு உணர்வு, ருசியான உணவு இதெல்லாம் இல்லாமத்தான் அவங்க உடம்பு நலிஞ்சு போயிருக்கு. அவங்க பெத்த பிள்ளைங்க வெளிநாட்டுல ஸெட்டில் ஆகிட்ட அதிர்ச்சிதான் ரொம்ப தாக்கி இருக்கு. அதைப்பத்தி நிறைய பேசறாங்க. நடந்தது போகட்டும்மா. இனி நடக்கறதைப் பார்ப்போம்னு ஆறுதலா நான் பேசறேன். இப்ப அவங்க படுத்தே இருக்கறதில்லை. நான் போய் பேச உட்கார்ந்தா... எழுந்து உட்கார்ந்துடறாங்க. தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லாம... தானாவே எழுந்துடறாங்க. உட்கார்ந்துடறாங்க. டாக்டர்ட்ட கேட்டுட்டு அவங்களுக்கு பழம், பால், சத்துணவெல்லாம் ருசியா சமைச்சுக் குடுக்கறேன். விரும்பி சாப்பிடறாங்க. அவங்க உடம்புக்கு எந்த நோயும் இல்லை. மனசு காயப்பட்டு போய் உடம்பு நோய்வாய் பட்டுடுச்சு. இப்ப நிறைய முன்னேற்றம் தெரியுது. அவங்க தேறி வர்றதைப் பார்த்து ஐய்யாவும் சந்தோஷமாகி, இப்ப அவரும் முன்னைவிட நல்லா இருக்கார். அவங்களுக்கு செய்யற சேவையில என் மனசு தெளிவா இருக்கு. ரிலாக்ஸ்டா இருக்கு. இங்கே வேலை பார்க்கறது... நல்லா இருக்கு. வேலைக்கு வந்திருக்கற உணர்வே இல்லை. சேவை செய்யற புனிதமான இடத்துக்கு வந்த மாதிரிதான் இருக்கு. ஸ்ரீநிவாஸ் தம்பிக்குத்தான் நிறைய தேங்க்ஸ் சொல்லணும்.''
''உனக்கு திருப்தின்னா... எனக்கு சந்தோஷம். கௌரவமான ஒரு இடத்துல நீ இருக்கற, பாதுகாப்பா இருக்கறங்கறது... எனக்கு நிம்மதியா இருக்கு. அது சரி... ஸ்வாதிக்கு ஸ்கூல் வேன் கரெக்ட்டா வருதா?''
''அது ஒண்ணும் பிரச்னை இல்லை.''
''சரி ராதா. ஏதாவது பிரச்னைன்னா எனக்கு உடனே சொல்லு. நீ பாட்டுக்கு சொல்லாம இருந்துடாத.''
''நிச்சயமா உன்கிட்ட சொல்லுவேன். ஆனா... இங்க இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை. சந்தோஷமா இருக்கேன்.''
''வெரி குட். இனி நாளைக்குக் கூப்பிடறேன்...''
''பேச்சு போனதுல... மஞ்சுவைப் பத்தியே கேக்கலை. மஞ்சு எப்பிடி இருக்கா...?''
''அவ உன்னோட புகழ் பாடிட்டிருக்கா. அவளுக்கு உன்னைப் பார்த்துல இருந்து அவளோட அம்மாவைப் பத்தி பேசிக்கிட்டிருந்தா. ஹூம்... எப்பிடியோ பொழுது போகுது. பிள்ளையும் எப்பிடியோ வளருது. ஏக்கங்களோட அவ பேசறதைப் பார்க்க எனக்கு பாவமா இருக்கு.''
''இந்த பிஞ்சு வயசுல... பெத்த தாயோட பாசம் இல்லாம வளர்றது கொடுமையான விஷயம். ஒரு நாள் இங்கே கொண்டு வந்து விடு அவளை. அவளுக்கு சந்தோஷமாக இருக்கும்.''
''சரி, ராதா.''
இருவரது உரையாடலும் முடிந்தது.
56
''ராதா... கொஞ்சம் இங்கே வாம்மா. நேத்து என்னோட ஸாக்ஸை கழற்றிப் போட்டேன்...''
'' உங்க ஸாக்ஸை துவைக்கறதுக்காக ஊற வச்சிருக்கேன். இருங்கப்பா... வேற ஸாக்ஸ் எடுத்துத்தரேன்.''
அலமாரியைத் திறந்து வேறு ஸாக்ஸை எடுத்துக் கொடுத்தாள் ராதா.
''என்னோட 'ரீடிங்' கண்ணாடியை எங்கேயோ வச்சுட்டேம்மா. அதையும் எடுத்துக் குடுத்துடேன்...'
''இதோ... டி.விக்கு பக்கத்துலயே வச்சிருக்கேன்ப்பா. இந்தாங்க...'' கண்ணாடியை அவரிடம் கொடுப்பதற்குள், அமிர்தம் ராதாவை அழைத்தாள்.
''ராதாம்மா ஒரு க்ளாஸ் சுடு தண்ணி குடும்மா...''
''இதோ கொண்டு வரேன்மா...''
'மைக்ரோ அவனி'ல் தண்ணீரை சுட வைத்து அமிர்தத்திற்குக் கொடுத்தாள் ராதா.
''நீ சொன்ன மாதிரி அப்பப்ப சூடுதண்ணி குடிச்சா... நல்லா இருக்குமா. வயித்துல வாய்வு பிரச்னை இல்லாம இருக்கு...''
''நீங்க இப்ப நடக்க ஆரம்பிச்சுட்டீங்கள்ல்ல? இனிமேல் வாய்வு தொந்தரவு குறைஞ்சுடும்...''
''நீதான் என்னை நடக்க வச்ச...''
''நடத்தறது எல்லாமே அந்த ஆண்டவன்தான்மா. எனக்குத் தெரிஞ்சு, உங்களுக்கு உடம்புக்கு எதுவுமே இல்லை. பிள்ளைகளைப் பிரிஞ்சு வாழற ஏக்கம், மனசுல... பெரிய தாக்கம்! அந்தத் தாக்கம் உங்களுக்கு மனச் சோர்வைக் குடுத்திருக்கு. மனச் சோர்வினால நீங்க படுத்தே இருக்க ஆரம்பிச்சு, அதுவே பழக்கமாயிடுச்சு. வாழ்க்கையில நாம எதிர்பார்க்கறது எல்லாமே நடந்துடுதா என்ன? நாம ஒண்ணு நினைக்க, தெய்வம் வேற ஒண்ணை நடத்துது. என்னோட வாழ்க்கையில ஏற்பட்ட அனுபவத்துல சொல்றேன். ஆள் நல்ல அழகன், கை நிறைய சம்பாதிக்கறார்ன்னு... என்னை ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. கைநிறைய சம்பாதிக்கற அவர், மனைவியோட மனசு நிறைய அன்பு செலுத்தலை. கடன்பட்டு... உடன்பட்டு... எங்கப்பா, அம்மா என்னோட கல்யாணத்தை நடத்தி வச்சாங்க. அவங்க குடி இருக்கற வீட்டையே வித்துத்தான் அந்தக் கடனை அடைக்க முடிஞ்சது. கடன் தொகை போக, மீதி தொகையையும் என்கிட்ட குடுக்கலை. என் பேர்ல பேங்க்லயும் போடலை. அப்பிடியே சுருட்டிக்கிட்டாரு. எதை எதிர்பார்த்து எத்தனை கஷ்டப்பட்டு என்னோட கல்யாணத்தை நடத்தினாங்களோ... அந்த எதிர்பார்ப்புகள் எதுவுமே நடக்கலை. ஏமாற்றங்கள்தான் மிச்சமாச்சு. என் மேல உயிரையே வச்சிருந்த என்னோட பெற்றோர் உயிரை விட்டப்புறம் நான் கதி கலங்கிப் போயிட்டேன். தட்டிக் கேட்க ஆள் இருக்கும்போதே... ஆட்டம் போட்ட என்னோட கணவர், எங்கம்மா, அப்பா, இறந்து போன பிறகு கொண்டாட்டம் போட ஆரம்பிச்சுட்டாரு. வேற ஒரு பொண்ணோட பழகி, என்னை திண்டாடவிட்டு விலகி வாழறாரு. என் மேல அவருக்கு அன்பே கிடையாது...'' திலீப் பற்றி பேச ஆரம்பித்த ராதா... தனது கடந்த காலம் பற்றியும், அதன் அனைத்து சோக நிகழ்வுகள் பற்றியும் விலாவாரியாக கூறினாள். பெருமூச்சுடன் தன் சோகத்தைப் பகிர்ந்து கொண்ட ராதா, தொடர்ந்து பேசினாள்.
''இவ்ளவு கஷ்டப்பட்ட நான், அதையே நினைச்சுட்டு இடிந்து போய் உட்கார்ந்துட்டா... என் மக ஸ்வாதியோட நிலைமை? சோகத்துல முடங்கிப் போய் நான் படுத்த படுக்கையாகிட்டா என்னை யார் கவனிப்பா? என் மகளை யார் கவனிப்பா ? ஆசைப்பட்டு அவர் கூட நான் எதையும் அனுபவிக்கலை.