
'எங்க ஊர் ராஜா' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் சிவாஜி போல 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...' என்று பாட ஆரம்பித்தாள். அங்கு வந்த விஜயராகவனும் அந்தப் பாடலில் கலந்து கொள்ள, அங்கே மனித நேய உணர்வுகளின் பிரதிபலிப்பு சந்தோஷமாக பரிமளித்தது.
''என்னம்மா ராதா... ஒரு ஸைக்யாட்ரிஸ்ட் மாதிரி அமிர்தத்தை இவ்ளவு சீக்கிரம் இந்த அளவுக்கு நல்லபடியா மாத்திட்டியே... இந்த நிமிஷம் முதல்... நீ... என் மகள்...''
உணர்ச்சி வசப்பட்டு பேசினார் விஜயராகவன். அடுத்து அவர் செய்த காரியம், ராதாவைத் திடுக்கிட வைத்தது. பணம், நகைகள் வைத்துப் புழங்கும் பீரோவின் சாவியை ராதாவிடம் கொடுக்க முற்பட்டார்.
''இனி நீயே எல்லா வரவு, செலவையும் பார்த்துக்க. பீரோவுல ஒரு ஃபைல் இருக்கு. அதில வாடகைக்கு நான் விட்டிருக்கற பில்டிங்கோட டீட்டெய்ல்ஸ் இருக்கு. எத்தனை பில்டிங், எவ்ளவு பணம் வரணும்ங்கற எல்லா லிஸ்ட்டும் அதில இருக்கு. பார்த்து வச்சுக்க. அஞ்சாந் தேதி ஆச்சுன்னா டெனன்ட்ஸ் அத்தனை பேருக்கும் ஃபோன் பண்ணி கேளு. வாடகையை கேட்க நீங்க யார்ன்னு, யாராவது கேட்டா, 'நான் விஜயராகவனோட பொண்ணு'ன்னு சொல்லு... சம்பளப் பட்டுவாடா கூட நீயே பண்ணிடு...''
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடை மறித்துப் பேச ஆரம்பித்தாள் ராதா.
''அப்பா... அப்பா...! கொஞ்சம் நிதானம்ப்பா. நான் உங்க மகள்தான். அதை நீங்களும், அம்மாவும் சொல்றப்ப எனக்கு ஏற்படற சந்தோஷம்... இப்ப நீங்க இந்த சாவியைக் குடுக்கறதுலயோ... அதை நான் வாங்கிக்கறதுலயோ இல்லை. இது எனக்கு வேண்டாம்ப்பா. ப்ளீஸ். உண்மையிலேயே நீங்க என்னை உங்க மகளா நினைக்கறதா இருந்தா... இந்த சாவி, பணப்புழக்கம் இதையெல்லாம் என் மேல திணிக்காதீங்க. எனக்கு நீங்க எவ்ளவோ செய்யறீங்க. கணக்கு பார்க்காம சம்பளப் பணம்னு ஒரு பெரிய தொகையை மாசாமாசம் பேங்க்ல போடறீங்க. ஏகப்பட்ட துணிமணிங்க எடுத்துக் குடுக்கறீங்க. ஸ்வாதியோட படிப்பு செலவு முழுசும் நீங்கதான் பார்த்துக்கறீங்க. இஷ்டப்பட்டதை சாப்பிட்டுக்கறோம். இதுக்கு மேல ஒரு மகளுக்கு வேற என்னப்பா வேணும்? மண்ணுக்குள்ள மறைஞ்சு போன எங்கம்மா, அப்பாவா இப்ப என்னை உங்க கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்தறீங்க. இந்த அன்பு நிலைச்சிருந்தா அது போதும்ப்பா...'' என்று நா தழுதழுக்கப் பேசிய ராதா, அவரது கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். அவளது தலையை அன்புடன் வருடிய பெரியவர் விஜயராகவன் உள்ளம் நெகிழ்ந்தார். அன்புப் பரிணாமத்தினால் உணர்ச்சிப் பிரவாகம் அங்கே ஒரு நதியைப் போல பெருக்கெடுத்தது.
பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும், தங்கள் அறையில் 'ஸ்கூல் பேகை'யும், பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்'-ல் டிபன் பாக்ஸ் பையையும் போட்டுவிட்டு, முதல் வேலையாக அமிர்தத்தையும், விஜயராகவனையும் பார்ப்பதற்காக அவர்களது அறைக்கு ஓடி வருவது ஸ்வாதியின் வழக்கமாக இருந்தது.
'பாட்டி, தாத்தா...' என்று வாய்விட்டு அழைத்தபடி அவர்களின் கழுத்தைக் கட்டிக் கொள்வாள். அவர்களும் ஸ்வாதி வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ரத்த உறவு இல்லை என்னும், புத்தம் புதிய அந்த உறவில் உள்ளம் கனிந்து, மகிழ்ந்தனர் அவர்கள் இருவரும், கிட்ட வந்து ஒட்டி உறவாடும் ஸ்வாதியின் உரையாடல்களில் தங்களை மறந்து லயித்தனர்.
அன்றைய தினம் பள்ளிக் கூடத்தில் நிகழ்ந்தவை பற்றி அவர்களிடம் மூச்சு விடாமல் பேசுவாள் ஸ்வாதி. அதன் பின்னரே, ராதாவைப் போய்ப் பார்ப்பாள்.
''போடா கண்ணு, போய் அம்மாகிட்ட கேட்டு டிஃபன் சாப்பிட்டுட்டு வா. அப்புறம் பேசலாம்'' என்று அமிர்தம் சொன்னாலும் கேட்க மாட்டாள் ஸ்வாதி.
சொந்த பேத்தி மீது எத்தனை அன்பு வைப்பார்களோ அது போல பல மடங்கு அன்பை அவள் மீது கொட்டினார்கள் அமிர்தமும், விஜயராகவனும். உரிமை கொண்டு பேசும் அளவிற்கு ஸ்வாதியிடம் தங்கள் உயிரையே வைத்து நேசித்தனர்.
வெளியூரில் இருந்து வேலைக்கான இன்ட்டர்வ்யூ, மருத்துவம் மற்றும் திருமண விழாக்களில் கலந்து கொள்வது போன்ற காரணங்களுக்காக 'ஆராதனா'வில் வந்து இறங்கி, தங்கும் உறவினர்கள் அவ்வப்போது வந்து போவதும் வழக்கமாக இருந்தது.
அவர்களுக்கும் இன்முகத்துடன் சமைத்து, அவர்களுக்கு வேண்டியது அனைத்தும் செய்து கொடுப்பாள் ராதா. ஷர்ட் பட்டன் தைப்பது, ஜாக்கெட்டின் தையல் பிரித்துக் கொடுப்பது, தலை அலங்காரம் செய்து விடுவது, நேர்த்தியாகப் புடவை உடுத்தி விடுவது போன்ற உதவிகளையும் அவர்களுக்கு செய்வாள் ராதா. மகிழ்ச்சி அடையும் அவர்கள், ஊருக்குக் கிளம்பும் பொழுது பணம் கொடுப்பார்கள், ராதா அதை மறுத்து விடுவாள்.
''அப்பா... எனக்கு ஒரு குறையும் வைக்கலை. அவரோட உறவுகள் வரும் போது அவங்களை நல்லா கவனிக்க வேண்டியது என்னோட கடமை...'' என்று கூறி அவர்களை சமாதானப்படுத்துவாள்.
உறவினர்களில் பலர் இவ்விதம் எனில், சிலர் ராதாவிடம் 'இவள் வேலைக்காரிதானே' என்ற இளக்காரமான எண்ணத்தில் உதாசீனம் செய்வார்கள்.
வேலூரில் இருந்து அமிர்தம்மாவின் மாமா பேத்தி, தன் குடும்பத்தினருடன் ஆராதனாவிற்கு வந்திருந்தாள். அவளது உறவினர் வீட்டின் திருமண விழா விற்கென்று வந்திருந்தாள். அவளது பெயர் கல்யாணி.
அமிர்தம்மா செல்வச் சீமாட்டியாக வாழ்வதைப் பார்த்து ஆரம்பம் முதலே கல்யாணிக்கு பொறாமை உண்டு. அவளது பிறவிக் குணமே பொறாமை எனும் தேவையற்ற குணம்தான். யார் நன்றாக இருந்தாலும் அவளுக்கு பொறுக்காது. 'ஆராதனா'விற்கு வரும் பொழுதெல்லாம் அமிர்தம்மாவிற்கும் விஜயராகவனுக்கும் ஏதாவது மனஸ்தாபத்தை ஏற்படுத்தி அவர்களது தகராறில் குளிர் காயும் கொடூரமான இயல்பு கொண்டவள். அமிர்தம்மா நோய்வாய்ப்பட்டு படுத்த பிறகுதான் அவளது பொறாமை சற்று அடங்கியது.
மீண்டும் உடல் நலம் பெற்று, நல்லபடியாக நடமாடிக் கொண்டிருக்கும் அமிர்தத்தை இப்பொழுது பார்க்க நேர்ந்தபோது, பழைய பொறாமை அவளிடம் தலை தூக்கியது.
அந்தப் பொறாமையும், புகைச்சலும் அங்கே குடும்பத்தில் ஒருத்தியாக ஐக்கியமாகிவிட்ட ராதாவின் மீது தாக்கியது. ராதா எத்தனை சேவை செய்தாலும், எவ்வளவு நன்றாக சமைத்தாலும் குறை கூறினாள். குற்றம் கண்டுபிடித்தாள் கல்யாணி.
'சில மனிதர்கள் இப்படித்தான்' என்று ராதாவும் அதை பொருட்படுத்தாமல் தனது கடமைகளை செய்து வந்தாள்.
தன் வீட்டு வேலைக்காரியை மிரட்டுவது போல ராதாவை மிரட்டினாள்.
''ஏ ராதா. காஃபி குடு. காஃபி நல்லா போடு. ஏனோ தானோன்னு போடாதே. நாங்களும் ஹைக்ளாஸ் காஃபி பொடியிலதான் டிகாஷன் போட்டு குடிப்போம்...'' இவ்விதம்தான் காஃபி கேட்பாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook