பூவிதழ் புன்னகை - Page 54
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துத்தான், அனுபவிச்சுப் பார்த்துத்தான் அந்தக் காலத்துல 'கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன்'ன்னு பெண்களுக்கு அறிவுரை கூறி வலியுறுத்தி இருக்காங்க. அதுபோல பெண்களும் வாழ்ந்திருக்காங்க. இது என்னோட சொந்த அபிப்ராயம். இந்தக் காலத்து பெண்களை, கல் கூடவும், புல் கூடவும் வாழணும்னு நான் சொல்லல. அது அவரவர் விருப்பம். இப்போ... தலைவிரிச்சு ஆடும் வரதட்சணைக் கொடுமையால அவதிப்படற பெண்கள்... நிச்சயமா அந்தக் கொடுமைகளைத் தாங்கி வாழ முடியாது. ஏன் தெரியுமா? மற்ற பிரச்னைகளாவது கணவன் -மனைவிக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னைகள். ஆனா வரதட்சணைக் கொடுமை... பெண்ணைப் பெத்தவங்க, உடன் பிறந்தவங்கன்னு பல பேரை பாதிக்கற மிகக் கொடுமையான பிரச்சனை. இந்த இக்கட்டான சூழ்நிலையில பிரிஞ்சு வாழறது ஒண்ணுதான் மிகச் சரியான முடிவுன்னா... அந்த முடிவை அந்த மனைவி எடுக்கணும். துணிஞ்சு நிக்கணும். மற்ற பிரச்னைகளைப் பேசி தீர்த்துக்கலாம். என்னோட கணவன் போல வேற பொண்ணு கூட வாழறவங்ககிட்ட, அந்த இன்னொரு வாழ்க்கைக்காக சொந்த மனைவியோட சொத்துக்களை அபகரிக்கறவங்ககிட்ட பேசிப் பார்த்தும் பலன் இல்லைன்னா, துன்பமும், இழப்பும் மனைவிக்கு மட்டும்தான். கணவன் திருந்தி, திரும்பி வரம்போது அவனை ஏத்துக்காம இருக்கறது சில பெண்களோட கோணத்துல வீரமான செயல்! ஆனா... என்னைப் பொறுத்த வரைக்கும், செஞ்ச தவறை உணர்ந்து, வருந்தி, நல்லவனா மாறி வர்ற கணவனை ஏத்துக்கறது அந்த கணவனுக்கு கடுமையான தண்டனை. அவனை கோழையாக்கின நல்ல சந்தர்ப்பம் அதுன்னு சொல்வேன். அவனோட தோல்வி, மனைவியோட வெற்றி! ஈகோ இல்லாம... மறுபடியும் கணவன்கூட சேர்ந்து வாழறதுதான் விவேகமானது. ஆனா... அவன் உண்மையாவே நல்லவனா திருந்தினபட்சத்துல மட்டும்தான் அது நடக்கணும். கருத்துக்கள் மனுஷனுக்கு மனுஷர் மாறுபடலாம். வேறு படலாம். என்னோட தனிப்பட்ட கருத்துக்களை நான் சொல்றேன்...''
ராதா பேசியது அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த விஜயராகவனும், அமிர்தமும் பிரமித்துப் போனார்கள்.
''பெரிய படிப்பு இல்லைன்னாலும் கூட உன்கிட்ட வாழ்வியல் அறிவு நிறைய இருக்குமா. உன்னைப் போல ஒரு நல்ல, தங்கமான பொண்ணுகூட வாழறதுக்கு உன் புருஷனுக்கு குடுத்துவைக்கலை....'' விஜயராகவன், பிரமிப்பு மாறாத குரலில் பேசினார்.
''அவர்தான் தன்னை வேற யார்கிட்டயோ குடுத்து வச்சிருக்காரேப்பா...''
''வருவான்மா. ஒரு நாள் உன்னைத் தேடி அவன் வருவான்...''
''வந்தாலும் இவகிட்ட காசு பிடுங்கத்தான் வருவான்...'' அமிர்தம் கூறினாள்.
''மனுஷங்க எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அமிர்தம். காலம் ஒரு நாள் அவனை மாத்தும்...''
''இப்பத்தான்ங்க இந்த மன வேறுபாடு. அதன் காரணமா பிரிவினை, விவாகரத்து... அது இதெல்லாம். அன்பும், அந்நியோன்யமும் இணைஞ்ச தம்பதிகளை பார்க்கும்போது எவ்ளவு சந்தோஷப்படறோமோ... அந்த அளவுக்கு பிரிஞ்சு இருக்கற கணவன், மனைவியை பார்க்கும்போது வருத்தப்படறோம். பிரிவினை ஏன் வருது? புரிஞ்சு கொள்ளுதல்ங்கற உணர்வு, பரஸ்பரம் ரெண்டு பேர்ட்டயும் இல்லாததுனால தான். விட்டுக் குடுக்கற மனப்பான்மை தம்பதிகள்ல்ல யாராவது ஒருத்தர்ட்ட இருந்தா கூட போதும், ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டுப் போற சந்தர்ப்பமே வாழ்க்கையில ஏற்படாது.''
அமிர்தம் கூறியதை ஆமோதித்து புன்னகை பூத்தாள் ராதா. தொடர்ந்து பேசினாள்.
''அம்மா, என்னோட கல்யாணம் எப்பிடி முடிவாச்சு, எப்பிடி நடந்துச்சுன்னு... சின்னதா ஒரு 'ஃப்ளாஷ் பேக்' சொல்றேன், கேளுங்களேன். என்னோட தாய்மாமா திடீர்னு எங்கம்மா எங்கப்பாவைப் பார்த்து 'ஒரு நல்ல பையன் இருக்கான். நல்ல அழகானவன். கை நிறைய சம்பாதிக்கிறான், கை நீட்டி வரதட்சணை ஒரு பைசா கூட கேட்கமாட்டான். அவனோட பெத்தவங்களும் எதுவும் கேட்க மாட்டாங்க' அப்பிடின்னு சொன்னார். சொன்னதும் எங்கப்பா உடனே 'சரி'ன்னு சொல்லிட்டார்.
வரதட்சணை கேக்கமாட்டோம்னு சொன்ன அவங்க, நிச்சயம் ஆனபுறம் தலைகீழா மாறிட்டாங்க. ஒவ்வொண்ணா நகை அது, இதுன்னு ஆரம்பிச்சு குடி இருக்கற வீடு வரைக்கும் பிடுங்கிட்டு விட்டுட்டாங்க.
என் கணவர் நிறைய படிச்சவர். சரளமா இங்க்லீஷ் பேசக் கூடியவர். நவீன புதுமையான கம்ப்யூட்டர் சாதனங்களை இயக்கற திறமை உள்ளவர். அவருக்கு நேர் மாறா... நான் அதிகம் படிக்காதவ. வெளி உலகமே எனக்கு தெரியாது. அவருக்கு நான் பொருத்தமானவளா இல்லையான்னு என்னைப் பெத்தவங்க யோசிக்கவே இல்லை. அவரோட வீட்லயும் இதைப் பத்தி யோசிக்கலை. 'இதுதான் பொண்ணு... இதுதான் மாப்பிள்ளை'ன்னு அவங்களே முடிவு பண்ணிட்டு, கல்யாணத்தையும் சீக்கிரமா நடத்திட்டாங்க. பொம்மை கல்யாணம் மாதிரிதான் என்னோட கல்யாணம் நடந்துச்சு....''
''அட... நீ என்னம்மா, எங்க காலத்துல மட்டும் என்ன... ஜோடிப் பொருத்தம் பார்த்தா செஞ்சு வச்சாங்க? இப்பிடித்தான் யாராவது உறவுக்காரங்க வரன் பத்தி சொல்லுவாங்க. நல்ல பையன்னு தெரிஞ்சா... பேசி முடிவு பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. கல்யாணத்துக்கு முன்னால இந்தப் பையனுக்கு இந்தப் பொண்ணு பொருத்தம்தானா?... இவனோட இயல்பு இவ்விதமா இருக்கு. பொண்ணோட இயல்பு இதுக்கு ஒத்துப் போகுமான்னெல்லாம் யோசிக்க மாட்டாங்க...''
அப்போது இடைமறித்துப் பேசினாள் ராதா. ''ஜோடிப் பொருத்தம் பார்க்காட்டாலும், கல்யாணத்துக்கப்புறம் நீங்க சொன்ன மாதிரி 'புரிந்து கொள்ளுதல்'ங்கற மனப்பான்மை இருந்துட்டா... திருமண வாழ்க்கை இருமனம் கலந்த வாழ்க்கையா... இன்ப மயமானதா இருக்கும். என்னோட வாழ்க்கையில அந்த 'புரிந்து கொள்ளுதல்'ங்கற இல்லற நேயமே இல்லாம போச்சு.
'நான் இங்கிலீஷ் பேசறேன். நீயும் பேசக் கத்துக்கோ. எனக்கு நவீன வாழ்க்கை முறைகள் அத்தனையும் அத்துபடி. நீயும் அதை படிச்சுக்கோ' அப்பிடின்னு அவர் சொல்லி இருந்தா... நானும் அவருக்கு சமமா எல்லாத்தையும் தெரிஞ்சிருப்பேன். அவர் வாய்விட்டு சொல்லாட்டாலும், நானே அதுக்கு முயற்சி பண்ணினேன். ஆனா அதுக்கு அவர் ஒத்துழைக்கலை. என்னை ஊக்குவிக்காட்டாலும் பரவாயில்லை... மட்டம் தட்டி பேசாமலாவது இருந்திருக்கலாம். 'நீ என்னத்த கிழிக்கப் போற? இதெல்லாம் உன் மண்டையில ஏறாது' அப்பிடின்னு எகத்தாளமா பேசுவாரு. தெரியாத விஷயங்களைப் பத்தி கேட்டாக்கூட ''இது தெரிஞ்சு நீ என்ன மலையாயா புரட்டப்போற? உன்னோட அறிவுக்கு இதெல்லாம் அதிகம்'ன்னு பேசி என் மனசை புண்படுத்துவாரு. எதுக்கெடுத்தாலும் 'அறிவு இருக்கா உனக்கு'ன்னு கேட்டு என் நெஞ்சை ரணகளமாக்கிடுவாரு. அவருக்குப் பொருத்தமானவளா... தகுதிக்கேத்தவளா என்னை மாத்திக்கணும், அதன் மூலமா அவரோட அன்பை அடையணும்னு நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் ஏளனமா பேசி, என்னை வார்த்தைகளாலேயே சாகடிச்சாரு.