பூவிதழ் புன்னகை - Page 58
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''குறையா? அதென்ன? மனைவி பிரிஞ்ச பிறகு வாழ்வே ஊனமாகிடுமா என்ன? நீங்க உங்க வழியில போங்க. நான் என் வழியில போறேன். இதோ... உங்க மாமா பொண்ணு மிஸஸ் ராதா... புருஷனைப் பிரிஞ்சவங்கதான். அவங்க நல்லாத்தானே இருக்காங்க? அதை விடுங்க. உங்க ஸென்டிமென்ட் டைலாக்ஸ் எல்லாம் என்னை கொஞ்சம் கூட அசைக்காது. வாழ்க்கை வாழறதுக்குத்தான். எந்த கெடுபிடியும் இல்லாம, எந்த நிர்ப்பந்தமும் இல்லாம... ஃப்ரீயா வாழணும். விதம் விதமா உடுத்திக்கிட்டு... நினைச்ச நேரம் ஷாப்பிங் பண்ணிக்கிட்டு... இஷ்டப்பட்டதை சாப்பிட்டுக்கிட்டு... சுகம்மா வாழறது... இதுதான் இந்த பவித்ராவோட குணச்சித்திரம்...''
''ஹூம்... உன்னோட குணச்சித்திரம் என்ன... பெண் குலம் பின்பற்ற வேண்டிய மாபெரும் விஷயமா என்ன? 'பெத்துப் போட்ட குழந்தை எப்பிடி இருக்கா? அவளைக் கூட்டிட்டு வரலியா'ன்னு ஒரு வார்த்தை கேக்கறதுக்கு உனக்கு மனசு இல்லை... நீயெல்லாம் பேச வந்துட்ட... போ... உன்னோட ஷாப்பிங் வியாதிக்கு மருந்து சாப்பிடு... போ...''
''தேங்க்ஸ் டியர்...'' எதைப் பற்றியும் கடுகளவு கூட கவலைப்படாமல் போகும் பவித்ராவை பார்த்து தலையில அடித்துக் கொண்டான் வினோத். பவித்ரா ஒரு தினுசாகப் பேசுவதைக் கேட்ட ஸ்வாதி, அங்கிருக்கப் பிடிக்காமல் கடையின் வேறு பகுதிக்கு சென்றிருந்தாள். பவித்ரா அங்கிருந்து போனதைப் பார்த்த பின், ஸ்வாதி அங்கே வந்தாள்.
பவித்ராவும், வினோத்தும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ராதாவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. 'இவள் என்ன பெண்? கிடைத்த அருமையான, அன்பான கணவனை அலட்சியப்படுத்தி, மனம் போன போக்கில வாழ்க்கையைப் போக்கிக்கிட்டு... எதைப் பற்றியும் அலட்டிக்காம... தன்னோட இயல்புகள் மிகவும் பெருமைக்குரியதா நினைச்சு பெருமைப்பட்டுக்கிறாளே...' சிந்தித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது வினோத்தின் குரல்.
''வா ராதா. போகலாம். உன்னோட முகம் ஏன் மாறிப் போச்சு? பவித்ரா அப்படி பேசினது உனக்கு கஷ்டமாத்தான் இருந்திருக்கும். அவ அப்பிடித்தான். எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு. விலகிப் போனப்புறம் 'விடாது கருப்பு'ன்னு அப்பப்ப ஏதாவது பொய் சொல்லி பணம் வாங்கிக்குவா. ஊதாரித்தனமா செலவு பண்ணிக்கிட்டு ஊர் சுத்தறதுதான் அவளுக்கு வாழ்க்கை. அவளைப் பொறுத்த வரைக்கும் அதுதான் அவளோட வாழ்வின் அர்த்தம். ஒரு விளையாட்டாவே வாழ்க்கையை நினைக்கறவ அவ. வாழறவ அவ. விளையாட்டு மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. கல்யாண வாழ்க்கை அலுத்துப்போனதும் குடும்பக் கூட்டை விட்டு பறந்துப் போயிட்டா. அவ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா? ஏன் விட்டுட்டுப் போனா? அவ சொல்ற காரணமெல்லாம் ஒரு காரணமா? எனக்கென்னமோ அவ மேல கோபம் வரலை. பரிதாபம்தான் வருது. தாலி கட்டின நிமிஷத்துல இருந்து உண்மையா அவளை நேசிச்சேன். என்னோட வாழ்க்கையில நான் நேசிச்ச பொண்ணும் எனக்குக் கிடைக்கல. என்னை நேசிக்கும் பொண்ணும் மனைவியா அமையலை...'' தன்னை அறியாமலே கடந்த கால கசப்பான உண்மைகளை வெளியிட்டான் வினோத். அதிர்ஷ்டவசமாக அவன் பேசிய கடைசி விஷயம் ராதாவிற்குக் கேட்காதபடி, அவர்கள் அருகே நின்றிருந்த ஒரு பெரியவர், உரத்த குரலில் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.
'தான் பேசியது ராதாவிற்கு கேட்கவில்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வினோத்துடன் ராதாவும், ஸ்வாதியும் நகர்ந்தனர்.
ஸ்வாதி 'வேண்டாம்' என்று சொல்ல சொல்ல பல பொருட்களை அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் வினோத்.
மூச்சாற்றலாம் என்றெண்ணி நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த ராதா, மூச்சுத் திணறும்படி பேசிவிட்டுப் போன பவித்ரா பற்றி நினைத்தபடியே நெஞ்சில் சுமையுடன் நடந்தாள்.
60
பாம்பே டோஸ்ட் நெய்யில் வறுக்கப்படும் வாசனையில் லயித்திருந்தான் திலீப். தகதகவென்று நெய்யில் மின்னும் பாம்பே டோஸ்ட்டை திலீப்பிடம் கொடுத்தாள் மிருணா. ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தான் திலீப்.
இதுதான் சமயம் என்று, தான் மனதில் நினைத்ததை பேசத் துவங்கினாள் மிருணா.
''புதுசா ஒரு ப்ளாட் போட்டிருக்காங்க டியர். அதுல ஒண்ணு வாங்கிப்போட்டா ஒரு வருஷத்துக்குள்ள விலை ஏறிடும். அதுக்கப்புறம் வித்தோம்னா நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்....''
மிருணா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான் திலீப். வாயில் சுவைத்துக் கொண்டிருந்த பாம்பே டோஸ்ட் இப்பொழுது ருசிக்கவில்லை.
''லேண்ட் வாங்கணும்னு இப்ப என்ன அவசியம்? குடியிருக்க இந்த அப்பார்ட்மெண்ட் இருக்கு. லேண்ட் வாங்கி என்ன செய்யப்போறோம்...?''
''அதான் சொன்னேனே டியர், இப்ப அந்த லேண்டை வாங்கினா இன்னும் ஒண்ணு, ரெண்டு வருஷத்துல அதோட விலை டபுளாயிடும். அப்ப அதை வித்தா நமக்கு நல்ல லாபம்தானே?''
''லாபம்ன்னு நீ சொல்றது சரிதான். ஆனா அதுக்கு இப்ப நாம இன்வெஸ்ட் பண்றதுக்கு பணம் வேணுமே?''
''இப்பதான் என்னோட வீட்டு வாடகை இல்லையே...? அதுக்கு பதிலா அந்தப் பணத்தை மாசா மாசம் கட்றமாதிரி லோன் வாங்கிக்கலாம்....''
''இந்த அப்பார்ட்மென்ட்டை நமக்காக காலி பண்ணச் சொல்லும்போதும் 'உன்னோட வீட்டு வாடகை மிச்சம்'னு சொன்ன. இப்ப லேண்ட் வாங்கறதுக்கும் அதையே சொல்ற...?''
''ஆமா டியர். இப்ப நாம ஓடியாடி உழைக்கிற வயசுலயும், தெம்புலயும் இருக்கோம். இப்ப சேத்து வைச்சாதான் பிற்காலத்துல ஸேஃப்டிய இருக்கும். நம்ம நல்லதுக்குத்தானே டியர் சொல்றேன்...?''
''இந்த அப்பார்ட்மென்ட்டை உன்னோட பேருக்கு மாத்திக்கிட்ட. லேண்ட் வாங்கினா யார் பேருக்கு வாங்குவ?''
''என்னோட பேருக்குத்தான் வாங்கணும். ஆடிட்டர்ட்டக்கூட கேட்டுட்டேன். அவர் அதுல ஒண்ணும் பிரச்சனை இருக்காதுன்னு சொல்லிட்டார்... யார் பேர்ல வாங்கினா என்ன டியர்? என்னைக்கும் நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கப்போறோம். பொருளாதார ரீதியா எந்தக் கஷ்டமும் இல்லாம சந்தோஷமா வாழணும்னா அதுக்கு நிறைய பணம் சேர்த்து வச்சுக்கணும். நீங்க வேற, நான் வேறன்னு நான் எப்பவும் நினைச்சதே இல்லை. நாம... நமக்குன்னுதான் நினைக்கிறேன். அதனால பணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.''
பணத் தேவைக்கு என்ன செய்வதென்று திலீப் யோசித்தான். யோசிக்க, யோசிக்க அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. திடீரென ஒரு எண்ணம் அவனுக்கு பளிச்சிட்டது.
''நாம இந்த அப்பார்ட்மென்ட்க்கு வந்தப்புறம் உன்னோட வீட்டு வாடகைப் பணம் மிச்சம்தானே? அந்தப் பணத்தை லேண்ட் வாங்கறதுக்கு குடேன்...''
''என்ன டியர் நீங்க...? கையில வச்சுக்கிட்டா குடுக்கமாட்டேங்கறேன்? நகைக் கடையில மாசா மாசம் அந்த தொகைக்கு சீட்டு கட்டிட்டிருக்கேன்ல... மறந்து போயிட்டீங்களா? தங்கத்துல பணத்தை இன்வெஸ்ட் பண்றது நல்ல விஷயம்தானே?''