பூவிதழ் புன்னகை - Page 61
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
என்னோட அம்மா, அப்பாவை சேர்த்து அவங்க வீட்டையும் இழந்தேன். இன்னிக்கு? பெத்தவங்க மாதிரி பாசம் செலுத்தற உங்களையும், நீங்க குடுக்கற வீட்டையும் அடைஞ்சிருக்கேன்...''
''சரிம்மா... மனப்பூர்வமா உங்கம்மா, அப்பா குடுத்தது போல நினைச்சு அந்த வீட்டை ஏத்துக்கிட்டதுக்கு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா...''
அமிர்தத்தின் குரலில், பேச்சில்... உண்மையான அன்பு தென்பட்டது. அந்த அன்பில் கரைந்தாள் ராதா.
''உன்னோட உழைப்புக்காகவோ... நீ எங்களை நல்லபடியா பார்த்துக்கிட்டதுக்கு பிரதியுபகாரமாவோ... வீட்டைக் குடுக்கறதா நினைச்சுராதம்மா. இது எங்களோட அன்பின் அடையாளம்! பாசத்தின் பிரதிபலிப்பு!''
''இதைக் கூட புரிஞ்சுக்க மாட்டேனாப்பா?''
''சரிம்மா...''
''குமரன் ஸில்க்ஸ் போறதுக்கு நீயே ஒரு டைம் சொல்லும்மா.''
''நீங்களே போய் பார்த்து வாங்கிட்டு வாங்கம்மா...''
''அதென்னம்மா அப்பிடி செல்லிட்ட? முதல் முதல்ல அமிர்தம் ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளியில கிளம்பறா. நீ வராமலா? ஏதோ நல்லபடியா வீட்டுக்குள்ள நடந்துக்கறா. அதுக்காக... வெளியில உன்னோட துணை இல்லாம போக முடியாது...''
''அதெல்லாம் அம்மாவால முடியும். பழைய அமிர்தம்மா இல்லப்பா இப்போ. விஷ்ணு பகவான்ட்ட அமிர்தம் வாங்கி குடிச்ச மாதிரி நல்ல தெம்போட இருக்காங்க. அவங்களால முடியாது... முடியாதுன்னு நீங்களே சொல்லாதீங்கப்பா. நாம தைரியம் சொன்னாத்தான் அவங்களுக்கு ஆரோக்கியம் நல்லா இருக்கும்.''
''அது சரிம்மா. நாளைக்கு நீ கூடவா...'' விஜயராகவன் அன்புக் கட்டளை இட்டார்.
''சரிப்பா... நாளைக்கு பதினோரு மணிக்கெல்லாம் சமையலை முடிச்சுட்டு கிளம்பிடலாம்....''
''சரிம்மா. நான் 'குமரன் சில்க்ஸ்' குமாருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன். அவர் மேற்பார்வையில இருந்தார்ன்னா... நிறைய டிசைன்ஸ் எடுத்துக் காட்டுவாங்க. அதனால அவர், கடையில இருக்கற டைம் தெரிஞ்சுக்கலாம். பதினோரு மணிக்கு கடையிலதான் இருப்பார். எதுக்கும் ஃபோன் பண்ணி தெரிஞ்சுக்கறேன். அது... சரி... என்னமோ சமையலெல்லாம் முடிச்சுட்டு போகலாம்னு சொன்னியே ? வீட்ல சமைக்க வேண்டாம். ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம். நீயும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி வெளில வராம இருப்ப? ஒரு நாளைக்கு சமையல் வேலைத் தொல்லை இல்லாம சந்தோஷமா இரேன்..''
''எனக்கு என்னப்பா தொல்லை? ஒருத்தருக்கு மூணு பேர் இருக்காங்க... கூடமாட செஞ்சு குடுக்கறதுக்கு...''
''சும்மா... தூங்கிகிட்டு கிடந்த பையன்களை நல்லபடியா திருத்தி, சுறுசுறுப்பானவங்களா ஆக்கிட்டம்மா.''
''ஆமாம்ப்பா... கொஞ்சநாள்தான் நான் அவங்ககூடவே நின்னு சுத்தம் செய்றதுக்கு சொல்லிக்குடுத்து பழக்கினேன். இப்ப... அவங்களே எல்லா வேலையையும் கரெக்ட்டா செஞ்சுடறாங்க.''
''அதனாலதாம்மா... இப்ப இந்த ஆராதனா... அழகா, அம்சமா, சுத்தமா இருக்கு.''
''சரிப்பா. உங்களுக்கும், அம்மாவுக்கும் பசிக்கும். நான் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன்...''
சமையலறைக்கு போக இருந்த ராதாவை அழைத்தாள் அமிர்தம்மா.
''ராதாம்மா... நான் ஒரு விஷயம் கேட்டா... கோவிச்சுக்க மாட்டியே... நாங்க... உனக்கு வீடு குடுக்கறது பத்தி உனக்கு சந்தோஷம்தானே? ஆனா... நீ... நீ... உன்னோட சந்தோஷத்தை வெளிக்காட்டவே இல்லியேம்மா.... கோவிச்சுக்காதம்மா. என்னமோ... என் மனசுல ஒரு எதிர்பார்ப்பு...''
சட்டென்று, அமிர்தம்மாவின் காலில் விழுந்தாள் ராதா.
''மன்னிச்சுடுங்கம்மா. நான் அதிக துக்கத்துக்கும் அழுது புரண்டு துடிக்கறவளும் இல்லை. அதிக சந்தோஷம் வந்தாலும் ஆகா... ஓகோன்னு வெளிப்படுத்தறவளும் இல்லை. என்னோட இயல்பு அப்பிடி. ஆனா... இவ்ளவு கஷ்டத்துக்கப்புறம்... உங்களோட பாதுகாப்பு கிடைச்சதே பெரிய விஷயம்ன்னு அதை நினைச்சு நினைச்சு கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே இல்லைம்மா. எனக்காக வீடு குடுக்கறேன்னு சொன்னதும் முதல்ல உங்க உறவுக்காரங்களை நினைச்சு பயந்தேன். ஆனா அதுக்கப்புறம் நீங்க வற்புறுத்தி, என்னை சமாதானம் செஞ்சு அந்த வீட்டை என்னை ஏத்துக்க வச்சதும் எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா? இந்த உலகத்தையே என்னோட கைக்குள்ள அடக்கிக்கிட்ட மாதிரி... பெருமை, ஏகப்பட்ட மகிழ்ச்சி இதெல்லாம் என் மனசுக்குள்ள புகுந்து குதியாட்டம் போட்டுச்சு. பளிச்ன்னு என்னோட உணர்வுகளை வெளிப்படுத்த தெரியலம்மா எனக்கு. என்னை மன்னிச்சுடுங்க.''
''சச்ச.... என்னம்மா இது மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு? நீ சொன்ன அந்த பதில், எனக்கு எவ்ளவு சந்தோஷத்தைக் குடுத்திருக்கு தெரியுமா? போம்மா... போய் சாப்பாடு எடுத்துட்டு வா. உன்னோட சந்தோஷத்தைக் கொண்டாட, எனக்கு இன்னிக்கு ரவா கேசரி வேணும். சாய்ங்காலம் டிபனுக்கு கேசரியும், பஜ்ஜியும் பண்ணிக்குடு.''
''அதுக்கென்னம்மா... பண்ணித்தரேன். ஆனா... ''
''ஆனா என்ன? என் உடம்புக்கு ஆகாதும்ப. அதானே ? ''
''சரிம்மா. என்னிக்கோ ஒரு நாள் ஆசையா கேக்கறீங்க. பண்ணித்தரேன்மா... ''
''சரிம்மா ராதா.''
மதிய உணவு எடுத்து வருவதற்காக, ராதா அங்கிருந்து நகர்ந்தாள்.
அன்று அந்த சூழ்நிலை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
63
அலுவலகத்தில் வேலை முடிந்ததும் ரெஸ்ட்டாரண்ட்டிற்கு சென்றாள் பவித்ரா. அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளை ஆர்டர் கொடுத்தாள்.
''இங்கே சாப்பிடப்போறீங்களா மேடம்?'' ரெஸ்டாரண்ட்டின் பணியாளர் கேட்டார்.
''டேக் அவே. அப்பிடியே ஒரு பாட்டில் பியரும் குடுத்துருங்க.'' ஆரம்ப காலத்தில் பவித்ரா பியர் வாங்கும்பொழுது அவளை வித்தியாசமாக பார்த்த பணியாளர்களுக்கு நாளடைவில் அவள் பியர் வாங்குவது பழகிவிட்டது.
உணவு பார்ஸலையும் பியர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு காரில் ஏறி தன் இருப்பிடத்திற்கு சென்றாள் பவித்ரா.
சாப்பிடும் மேஜை மீது அனைத்தையும் எடுத்து வைத்தாள். பியர் குடித்துக் கொண்டே உணவு வகைகளை ரசித்து சாப்பிட்டாள். அதன்பின், முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்றுக்கொண்டாள். கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து சிரித்தாள், பின் அழுதாள். இது போல தொடர்ந்து சிரிப்பதும் அழுவதுமாக கண்ணாடி முன்பாக வெகுநேரம் நின்றாள். சற்று சோர்வு அடைந்ததும் கட்டிலுக்குச் சென்று குப்புற படுத்துக்கொண்டு, தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு மறுபடியும் அழுவதும் சிரிப்பதுமாக இருந்தாள். அதன் பிறகு அவளையும் அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
64
மறுநாள்.
படபடக்கும் மனதுடன் ஆராதனாவிற்கு காரை செலுத்தினான் வினோத். ஆராதனாவில் வழக்கமாக ராதாவை பார்க்கப் போகும்பொழுது, ராதா அவனை வரவேற்பறையில் வைத்துதான் சந்திப்பாள்.
தன்னையும், வினோத்தையும் யாரும் தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துக்கொள்வாள். அன்றும், வினோத் ஏற்கனவே அவளிடம் அவன் அங்கு வருவதாக மொபைலில் சொல்லியிருந்தபடியால், அவனுக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள். வினோத் வந்ததும் அவனிடம் மஞ்சுவின் நலம் விசாரித்தாள்.
''மஞ்சு ஸ்கூலுக்கு போயிட்டாளா? நல்லா இருக்காளா?''
''அவ நல்லா இருக்கா. ஆனா....''
''ஆனா என்ன ஆச்சு....?'' பதறியபடி கேட்டாள் ராதா.
''ஒண்ணுமில்லை. கொஞ்சம் டல்லா இருக்கா....'' வினோத் கூறினான்.
''ஏன்...?'' ராதா கேட்டாள்.