பூவிதழ் புன்னகை - Page 57
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
நட்புங்கறது ஒரு பொதுவான நல்லுணர்வு. இதில ஆண் பெண் இன பேதம் தேவையில்லைங்கற பண்பாடை சமூகம் புரிஞ்சுக்க ஆரம்பிச்சாச்சு. சேர்ந்து படிக்கறீங்க, சேர்ந்து வெளியில் போறீங்க, ஒருத்தர் வீட்டுக்கு இன்னொருத்தர் போய் குடும்ப அளவுல பழகறீங்க. மனசுல எந்த விகல்ப்பமும் இல்லாம, நட்பை தூய்மையாக்கறீங்க. இப்பிடி எத்தனையோ மாறுதல்கள் மனசுக்கும் மகிழ்ச்சியைக் குடுக்கும். வாழ்க்கைக்கும் உதவியா இருக்கும். மாறுதல்களை நல்ல முறையில் ஏத்துக்கிட்டு படிக்கணும். படிச்சு முடிக்கணும்.''
''நிச்சயமா அம்மா. நீங்கபட்ட கஷ்டம், படற கஷ்டம் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டவ நான். உங்க இஷ்டப்படி முன்னேற்ற ஏணியில ஏறுவேன்மா...''
''ஏணியில ஏறும்போது ஜாக்ரதையா ஏறணும்மா. இல்லைன்னா ஏறின வேகத்துல கீழே விழுந்துடுவோம்...''
''நீங்க வளர்க்கற பொண்ணும்மா நான். வேகம் மட்டுமில்ல... விவேகமும் எனக்கு இருக்கு...''
ஸ்வாதி பேசுவதையெல்லாம் கவனித்து கேட்டுக் கொண்டிருந்த விஜயராகவனும், அமிர்தமும் திகைத்துப் போனார்கள்.
''இவ்ளவு சின்ன வயசுலயே உனக்கு உலகம் தெரிய ஆரமிச்சுடுச்சு. வெரிகுட் ஸ்வாதிமா.'' விஜயராகவன் பாராட்டினார் ஸ்வாதியை. அவரைத் தொடர்ந்து அமிர்தமும் பேசினாள்.
''ஸ்வாதி கண்ணம்மா, உங்கப்பாவோட நடவடிக்கைகள்தானே உனக்கு இவ்ளவு அறிவை குடுத்திருக்கு? அனுபவங்கள்தான் நமக்கு நிறைய அறிவுரைகளையும், ஆற்றலையும் குடுக்குது.''
''குடுக்கறதை ஒரு நல்ல அப்பாவா... நல்லது செய்யற அப்பாவா... பொறுப்புணர்ச்சியோட குடுத்திருந்தா... நான் எவ்ளவு சந்தோஷப்பட்டிருப்பேன்? அப்பா, அம்மா ரெண்டு பேர் கூடயும் சேர்ந்து போற மத்த ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கும்போது என் மனசுல எவ்ளவு ஏக்கம் வருது தெரியுமா பாட்டி...?''
''தெரியாம தப்பு பண்றவங்க சில பேர். தெரிஞ்சே தப்பு பண்றாங்க பல பேர். அவங்கள்ல்ல உங்க அப்பாவும் ஒருத்தர்....''
''ஆயிரத்துல ஒருத்தரா... அன்பு மயமா வாழ வேண்டிய ஒரு அப்பா... ஒரு குடும்பத்தலைவர்... இப்பிடி அலட்சியமா எங்களை விட்டுட்டாரே பாட்டி ?... ''
''விட்டுப் போனது போனதுதான். இதைப்பத்தியே பேசி பேசி என்ன ஆகப்போகுது ? நடந்ததை மறந்துடு... இனி நடக்கப் போவதைப் பத்திதான் யோசிக்கணும். உன்னோட இந்த சின்ன வயசுக்கு... நீ எவ்வளவோ தெளிவா பேசற. உன்னோட இந்த அறிவு, உன்னோட எதிர்காலத்தை பிரகாசமான ஒளி நிலவா வழி காட்டும்... கலகலப்பா இருடா குழந்தை... ''
''குழந்தையாலே இருந்திருந்தா பிரச்சனைகள் பத்தின கவலையே இருக்காது பாட்டி... ''
நீண்ட நேரமாக ஸ்வாதி... டென்ஷனாகப் பேசிக் கொண்டிருப்பதை திசை திருப்ப நினைத்த அமிர்தம், பேச்சை மாற்றினார்.
''பாட்டிக்கு தோள்பட்டை வலிக்குதுடா ஸ்வாதி. அந்த ட்யூப் மருந்தை எடுத்து லேஸா தடவி விடறயா?''
''இதோ... போய் மருந்து எடுத்துக்கிட்டு வரேன் பாட்டி....'' என்ற ஸ்வாதி, மருந்தை எடுக்கப் போனாள்.
பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து அகன்றாள் ராதா.
59
மறுபடியும் தனக்கு உடம்பு சுகம் இல்லை என்று ஒரு நொண்டிச் சாக்கைக் கூறி, வினோத்திடம் பணம் வாங்கிக் கொண்டாள் பவித்ரா. அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவளது மாய்மாலத்தையும், பொய்யான வேஷம் இட்டு பேசுவதையும் கேட்பதைத் தவிர்க்கும் பொருட்டு, பணத்தைக் கொடுத்தனுப்பினான் வினோத்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராதாவுடனும், ஸ்வாதியுடனும் ஷாப்பிங் காம்ப்ளெக்சுக்கு சென்றிருந்தான் வினோத்.
எங்கேயும் வெளியே வராமல், விஜயராகவனையும், அமிர்தத்தையும் கண்போல காப்பதிலேயே கழித்திருந்த ராதாவிற்கும் சற்று மூச்சாற்றுவதற்கு வெளியில் சென்று வர வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டிருந்தது. எனவே வினோத் அழைத்தவுடன் கிளம்பியிருந்தாள்.
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் பவித்ரா, உடைகள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாள்.
வினோத் அவளருகே சென்றான்.
''இதுதான் உனக்கு ஹாஸ்பிட்டலா?''
''ஆமா. என்னோட நோய்க்கு இங்கேதான் மருந்து கிடைக்குது. இந்த நோய்க்கு பேர் என்ன தெரியுமா? 'அனனியா'. ஷாப்பிங் பண்ணிக்கிட்டே இருக்கற ஒரு வியாதி. இதுக்கு மருந்து இந்த மாதிரி ஷாப்பிங் வளாகத்துலதானே கிடைக்கும்?''
வினோத்துடன் வந்திருந்த ராதாவையும், ஸ்வாதியையும் பார்த்து சம்பிரதாயமாக ஒரு புன்சிரிப்பை மட்டுமே கொடுத்தாள் பவித்ரா.
''ஓ... உங்க மாமா பொண்ணு ராதா... புருஷன் கூட இல்லியாமே? புருஷனை விட்டுட்டு வந்துட்டாங்களாமே...?''
''யார், யாரை விட்டு வந்தா உனக்கென்ன? இதைப்பத்தி பேசறதுக்கு உனக்கென்ன யோக்யதை இருக்கு?''
''யோக்யதையைப் பத்தியெல்லாம் யோசிக்கற வேண்டிய அவசியமே இல்லை எனக்கு, என் மனசுல பட்டதை 'பட்'ன்னு கேக்கற ரகம் நான், எனக்கு தோன்றதை நான் செய்வேன். யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது...''
''கட்டுப்பட்டு இருக்க முடியாத நீ... என்னை ஏன் கட்டிக்கிட்ட?''
''கட்டிக்கிட்ட பிறகுதானே தெரியுது? குடும்பக் கூட்டுக்குள்ள அடங்கிட்டா சுதந்திரமே பறி போயிடும்ன்னு? குழந்தை, குட்டி, குடும்பம், வீடு, வாசல், சமையல், வேலைகள்... இதெல்லாம் எனக்கு ஒத்து வராத விஷயங்கள். பறவை போல சுதந்திரமா இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா பாரம்பர்யமான ஒரு மனைவியா... உங்க குழந்தைக்கு ஒரு உதாரண தாயா... நான் இருக்கணும்ன்னு எதிர்பார்த்தீங்க, வயித்துல வந்துட்ட குழந்தையை... பெத்துப் போட்ட நான்... அதுக்கு சேவை செஞ்சுகிட்டு வீட்டோட கிடக்கணும்ன்னீங்க. வானத்துல ஃப்ரீயா பறந்து திரியற பறவை போன்றவ நான். என்னோட சிறகுகளைக் கட்டிப் போடவும் முடியாது, வெட்டி எறியவும் முடியாது...''
''நீ எறிஞ்சது என்னோட வாழ்க்கையை... என்னோட மன அமைதியை... என்னோட சந்தோஷத்தை. அது மட்டுமா? நம்ப குழந்தையோட சகலத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்ட...''
''போய்ட்டேன்... போய்ட்டேன்ங்கறீங்களே? பிடிக்காத வாழ்க்கையை ஒரே வீட்ல ஒண்ணா இருந்து வாழ முடியாம வெளியே வந்து என்னோட வழியில நிம்மதியா இருக்கேன். என்னோட இயல்புக்கு, முந்தானையை இழுத்து தோள்பட்டையை மூடிக்கிட்டு, புருஷனுக்குப் பிடிச்சதை சமைச்சுப் போட்டுக்கிட்டு, குழந்தையை சீராட்டி, பாராட்டி, தாலாட்டி வளர்த்துக்கிட்டிருக்கறதெல்லாம் வெகு தூரம் தள்ளிப் போன விஷயம். இஷ்டப்படி செலவு செய்யறதுக்கு என்னோட சம்பளப் பணம் பத்தலை. விட்ட குறை... தொட்ட குறைன்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி... என்னோட தேவைக்கு உங்ககிட்ட பணம் கேட்டு வாங்கறேன். நீங்க நல்லவர்... இல்லை இல்லை... ரொம்ப ரொம்ப நல்லவர்... நான் கேட்கும் போதெல்லாம் பணம் குடுக்கறீங்க...''
''குடுக்கறதுக்குக் காரணம்... நீ சொன்னியே விட்ட குறை... தொட்ட குறைன்னு. அந்த தொட்ட குறைக்குதான். ஐ மீன்... உன்னைத் தொட்டுத் தாலி கட்டின குறைக்கு. குடுத்து அழுகிறேன். குறை ஏதும் இல்லாம வாழணும்ன்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா... என்னோட வாழ்க்கையே குறையாகிப் போச்சு...''