பூவிதழ் புன்னகை - Page 73
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
77
மறுநாள், கோர்ட் கூடியது.
திலீப்பிற்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
‘‘ஐயோ... ஆயுள் முழுசும் நான் செஞ்ச கொடுமைகளை நினைச்சு நினைச்சு துடிக்கணுமே... செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவிக்கிற வேதனையை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிச்சுக் கலங்கணுமே... இந்த சித்ரவதையை நான் என்னோட வாழ்நாள் முழுக்க எப்படி தாங்குவேன்...?’’ என்று புலம்பி, பெண் போல வாய்விட்டு அழுதான் திலீப்.
தப்புக்களை மட்டும் தவறாமல் செய்துவந்த அவன், கொலை எனும் உச்சக்கட்டத் தவறை செய்யாத போது, தண்டனை அனுபவித்தான். கானல் நீரை காதல்னு நினைச்சு நம்பினேன். தங்கமான என் ராதாவை தகரம்னு நினைச்சு மிருணாவோட இழிவான மோக வலைக்குள்ள சிக்கி, சின்னா பின்னமாகிட்டேனே... என்னோட ஆபீஸ்ல மிகப் பெரிய பதவியில இருந்த நான், பெண்ணாசையினால இழிந்து போயிருக்கேனே...’’ என்று சதாசர்வ காலமும் புலம்பிக் கொண்டே அவனது வாழ்க்கை ஜெயிலில் கழிந்தது. ஒவ்வொரு வினாடி நேரமும் வேதனைப் புழுக்கள், அவனது இதயத்தை அரித்துக் கொண்டிருக்க, திலீப்பின் வாழ்நாட்கள் நான்கு சுவர்களுக்குள் கழிந்தன. தொடர்ந்தன... என்று முடியும் அவனது உயிர் விடும் தாகம்...?
78
கையில் ஒரு பெரிய கவருடன் ராதாவின் அருகே வந்தார் விஜயராகவன்.
‘‘இந்தாம்மா. இதைப் பிடி...’’
‘‘என்னப்பா? கவர்ல என்ன இருக்கு?’’
‘‘ஸ்வாதி பேர்ல டெபாஸிட் போட்டு வச்சிருக்கேன். அவளோட வெளிநாட்டு படிப்பு செலவு, அதுக்கப்புறம் அவளோட கல்யாண செலவு, உன்னோட ஓல்டேஜ் செக்யூரிட்டி’க்குரிய டெபாஸிட் டிடெயில்ஸ், பாஸ்புக்ஸ் எல்லாம் இதில இருக்கு. பத்திரமா வச்சுக்க...’’
‘‘எதுக்குப்பா இதெல்லாம்? தேவைக்கு மேல நிறைய செஞ்சுருக்கீங்களே...’’
‘‘அப்படியெல்லாம் எதுவும் பெரிசா செஞ்சுடலை. நீ மறுத்து எதுவும் பேசாதே. எனக்கும், அமிர்தத்துக்கும் வயசு கூடிக்கிட்டே போகுது. உன்னோட கவனிப்புனால உடல்நலம் தேறி இருக்கோம்ன்னாலும் ஆயுசு எப்ப முடியும்னு யாருக்குத் தெரியும்? என்னோட ரத்த பந்தங்களுக்கும் சொந்தங்களுக்கும் முறைப்படி என்ன செய்யணுமோ அதையெல்லாம் எழுதி, அது சம்பந்தமா எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணிட்டேன். எங்களுக்குப் பிறகு யாரும், எதுக்கும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க. இந்தா... இதைக் கொண்டு போய் உன் வீட்ல பத்திரமா வச்சுக்க.’’
தயங்கியபடி நின்றாள் ராதா.
‘‘வாங்கிக்கம்மா ராதா... இது உன்னோட அம்மா, அப்பாவா நாங்க செய்யற கடமை. வாங்கிக்க...’’ அமிர்தம்மாவும் வற்புறுத்த, கவரை ராதா பெற்றுக் கொண்டாள்.
‘‘எங்களோட வாழ்க்கை முடிஞ்ச பிறகு, ஸ்வாதியும் வெளிநாட்டுக்கோ அல்லது கல்யாணமாகி போயிட்டாலோ... நீ தனியா என்னம்மா செய்வ...?’’
அமிர்தம்மா பரிதவிப்புடன் கேட்டாள்.
பளிச்சென்று பதில் கூறினாள் ராதா.
‘‘சேவை உணர்வு என் கூடப்பிறந்த இயல்பும்மா. உங்களை மாதிரி, ஆதரவு இல்லாத பெற்றோர், முதியோர் இவங்கள்ல ‘யாராவது அன்பா ரெண்டு வார்த்தை பேச மாட்டாங்களான்னு ஏக்கத்தோட வாழ்க்கையை நடத்திக்கிட்டுருக்காங்க.’ அவங்க எல்லாரையும் என்னைப் பெற்றெடுக்காத பெற்றோரா நினைச்சு, அவங்களுக்கு சேவை செய்றதுல என் மனசு நிறைவு அடையும்மா.’’
‘‘உனக்கு உயர்ந்த மனசும்மா. உனக்கு எந்தக் குறையும் வராது. நீ எப்பவும் நிம்மதியா இருப்பம்மா...’’ அமிர்தம் ஆசிர்வதித்தாள்.
சேவைகள் புரிவதில் ராதாவின் வாழ்நாள் நிம்மதியாகக் கழிந்தது. தொடர்ந்தது. இதுபோன்ற ராதாக்கள், பல்லாயிரம்பேர் உள்ளனர். பல்லாயிரம் திலீப்களும் உள்ளனர். திலீப்கள் திருந்துவார்களா? காலம் பதில் கூறட்டும்.
பூவிதழ் புன்னகை பூக்கும் ராதாவின் வாழ்க்கையில் புண்பட இனி ஏதும் இல்லை.
சேவை மனப்பான்மையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்நிறைவு பெற்று வாழும் மனப்பக்குவத்தை அடைந்த ராதா, பெண்குலத்திற்கு ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டு. அவளது புன்னகை என்றென்றும் பூவிதழ் விரித்து மலரும்.