பூவிதழ் புன்னகை - Page 72
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
மிருணாவின் கழுத்தை திலீப் நெறித்ததையும், அவள் அவனைக் கோபமாக முறைத்ததையும் ஜன்னல் வழியாகக் கவனித்துக் கொண்டிருந்த பிரசாத்திற்கு, அந்நிகழ்ச்சிகள் சாதகமாக இருந்தன. எனவே தன் திட்டப்படி மிருணாவைக் கொலை செய்திருந்தான் பிரசாத்.
தன் கைரேகை, காலடி தடங்கள் போன்ற எந்த அடையாளங்களும் இல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து கொண்டான். மிருணாவின் கழுத்தில் திலீப்பின் கைரேகையும், வீட்டில் அவனது கால் தடயங்களும் இருந்தபடியால் திலீப் குற்றவாளியானான்.
அவனது அப்பார்ட்மென்டின் அருகே குடி இருந்த மற்ற அப்பார்ட்மென்ட்காரர்கள், மிருணா பற்றியும், திலீப் பற்றியும் கூறிய தகவல்கள் அவனது குற்றத்தை நிரூபணம் செய்வதற்கு வலுவான காரணங்களாக இருந்தன.
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மிருணாவின் கொலை செய்தி மற்றும் அவளைக் கொலை செய்த திலீப் போலீஸாரால் தேடப்பட்டு வருவதையும் அறிந்து கொண்ட திலீப் அதிர்ந்தான்.
‘ஐயோ.. மிருணா கொலையாகிட்டாளா?! அவளை நான் கொலை செஞ்சேன்னு போலீஸ் என்னைத் தேடறாங்களா? கோபத்துல அவ கழுத்தை நான் அழுத்தினப்ப அவ என்னை முறைச்சுப் பார்த்தாளே? அவளைக் கொலை செய்யணும்கிற எண்ணமே எனக்கு இல்லையே? மிருணாவை யாரோ கொலை செய்யற அளவுக்கு அவளுக்கு என்ன ஆச்சு?
அவள பண ஆசை பிடிச்சவ... பேராசை படறவதான். ஆனா.. இப்பிடி கொலையாகற அளவுக்கு அவளோட வாழ்க்கையில ஏதோ... மர்மங்கள் நிறைஞ்சிருக்கு? எதுவுமே தெரிஞ்சுக்க முடியாம... அவ மேல பைத்தியா இருந்திருக்கேனா? கடவுளே... நான் இப்ப என்ன செய்வேன்? போலீஸ் என்னைத் தேடுதாமே...?!’
போலீஸ் என்னைத் தேடி வந்து பிடிச்சுடுவாங்களே?! நோ...! நான் மாட்டிக்கக் கூடாது. மிருணாவை நான் கொலை செய்யலை. நான் எதுக்கு போலீஸ்ல மாட்டிக்கணும்? தண்டனை அனுபவிக்கணும்? என்று பலவாறாக யோசித்த திலீப், ஓடி ஒளிந்தான். ஓடினான்... ஓடினான்... ஓடிக் கொண்டே இருந்தான். ஒளிந்து, மறைந்து வாழ்ந்தான்.
கையில் இருந்த பணம் தீர்ந்த பிறகு பிச்சைக்காரன் போல நடுத்தெருவில் நின்றான். ‘கணவனின் வீடு எனும் உரிமையோடு என்னுடன் வாழ்ந்த, ராதாவை ‘வீட்டை உடனே காலி பண்ணிக் குடுன்னு கொடுமை செஞ்சேனே?!
என் கால்கள்ல விழுந்து கெஞ்சின ராதாவை உதறிவிட்டு மகள் ஒருத்தி இருக்கிறாள் என்கிற பொறுப்பும், உணர்வும் இன்றி நிர்க்கதியாக அவர்களைத் தவிக்க விட்டு வீட்டைப் பிடுங்கிக் கொண்டேனே? வீட்டை காலி செய்து கொடுக்க, கெடு கொடுத்து கொடுமை செஞ்சேனே?! அன்னிக்கு ராதாவுக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்? படிப்பறிவு அதிகம் இல்லாத அவளை படி தாண்டிப் போக வச்ச பாவியாகிப் போனேனே?!’
தனக்குள் புலம்பிக் கொண்டிருந்த திலீப் கையில் காசு ஏதும் இன்றி, தெருவோரம் கிடக்கும் இரும்புக் குழாய்களுக்குள் படுத்துத் தூங்கினான். கோவில்களில் கிடைக்கும் அன்னதானத்தில் தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்ட அவனால், தன் வயிற்றைப் பிறாண்டும் போலீஸ் பயத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் தவித்தான். கொலைப் பழி சுமத்தப்பட்டபடியால் எந்த நண்பர்களையும் சந்தித்து உதவி கேட்க இயலாத நிலையில் தெருக்களில் குடி இருந்தான். பயத்தில் பதுங்கி வாழ்ந்தான்.
பணபலமும், ஆள்பலமும் இல்லாத நிலையில்... எத்தனை நாளுக்கு போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவ முடியும்? ஓடி ஒளிய முடியும்? தப்பித்து வாழ முடியும்? எனவே போலீஸாரிடம் மாட்டிக் கொண்டான்.
‘நான் மிருணாவைக் கொலை செய்யலை... நான் கொலை செய்யலை’ என்று திரும்பத் திரும்பக் கதறிய திலீப்பை இழுத்துச் சென்றது போலீஸ்.
76
ஜெயில் காவலில் வைக்கப்பட்ட திலீப்பிடம் உண்மைகளை வரவழைப்பதற்காக ப்ரேம்குமார், தனது திறமைகள் அனைத்தையும் பிரயோகித்தார். மீண்டும்... மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்த திலீப்பிற்கு, போலீஸாரின் வழக்கமான உபசாரம் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், தன் ஷர்ட்டைக் கழற்றி விட்டு, திலீப்பை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சித்தார்.
அடியும், உதையும் தாங்க முடியாத திலீப், தன் திருமண வாழ்க்கை முதற்கொண்டு, அதன்பின் மிருணாவுடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் ஆபீஸில் பணம் கையாடல் செய்தது வரை விளக்கமாகக் கூறினான். அவன் கூறியவற்றை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டிருந்தனர் காவல்துறையினர்.
மிருணாவை கொலை செய்தது தான் அல்ல என்பதை உடம்பில் ஏற்பட்ட வலியுடனும் மனதில் ஏற்பட்ட வலியுடனும் கதறியபடி சொன்னான் திலீப்.
குற்றவாளியின் வாக்குமூலம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த ப்ரேம்குமார் இறுதியில் திலீப், தான் கொலை செய்யவில்லை என்று கூறியதைக் கேட்டு சற்று தளர்ந்தார்.
அதன்பின் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேஸ் நடந்தது. திலீப்பிற்கு எதிராக வழக்காடிய வக்கீல் ஒரு பெண். அவரது பெயர் வித்யா. திலீப்பின் வாக்குமூலம் பற்றி அறிந்து கொண்ட அந்தப் பெண் வக்கீல் வித்யா, எரிமலையாகப் பொங்கினார்.
“யுவர் ஆனர்... குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டு இதோ... குற்றவாளிக் கூண்டில் நிற்கும் திலீப், அவரோட மனைவியைக் கொடுமைப் படுத்தியவர். இவரது மாமனார், மாமியார் இருவரது மரணத்திற்கும் காரணமாகும் அளவிற்கு அவர்களையும் கொடுமைப் படுத்தியுள்ளார். அவர்களது வீட்டை அபகரித்துள்ளார். வரதட்சணை என்ற பெயரில் நகைகள், பணம் இவற்றைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு, தாலி கட்டிய மனைவியையும் மகளையும் கைவிட்டுவிட்டு, வீடு, பணம், நகைகளை காதலிக்கு குடுத்துட்டு அவளுக்காக ஆபீஸில் பணம் கையாடல் செய்யவும் துணிஞ்சிருக்கார்.
தாலி கட்டிய பெண்ணை விரட்டி விட்டுவிட்டு, கூட சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும் கொலை செஞ்சிருக்கார்.
இவரோட கைரேகை, கால் தடயங்கள், அக்கம் பக்கம் வாழும் சிலர் சொன்ன தகவல்கள் எல்லாமே இவரைக் குற்றவாளி என நிரூபணம் செய்கின்றன. எனவே இவருக்கு ஆயுள் தண்டனை எனும் தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்... ஆயுள் தண்டனைன்னு குறிப்பிட்டு சொல்றதுக்கு காரணம் இருக்கு யுவர் ஆனர். மனைவிக்கு இவர் செஞ்ச கொடுமைக்கும், துரோகத்துக்கும் தூக்கு தண்டனை குடுத்து... சில நிமிஷங்கள்ல உயிர்போறது கடுமையான தண்டனை இல்லை. சுலபமான விடுதலை யுவர் ஆனர்.
இதைக் கேட்ட திலீப், கத்தினான். ‘‘நோ.. எனக்கு ஆயுள் தண்டனை வேண்டாம். தூக்கு தண்டனை குடுத்து என்னோட வாழ்க்கையை சீக்கிரமா முடிச்சுடுங்க. மிருணாவை நான் கொலை செய்யலை. ஆனா... என் குடும்பத்தை தவிக்க விட்ட பாவத்துக்கு எனக்கு தூக்கு தண்டனை குடுத்துடுங்க. நான் உயிரோட இருக்கக் கூடாது. நான் சாகணும்...’’ கதறினான் திலீப்.
‘‘இவ்வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும்.’’ என்று ஜட்ஜ் அறிவித்ததும் கோர்ட் கலைந்தது.