பூவிதழ் புன்னகை - Page 67
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
மாமியார் கொடுமைங்கற துயரக் கடல்ல தத்தளிக்கற பொண்ணுகளோட வாழ்க்கை ஒரு நரகம். இதைவிட அந்த மாமியார்ங்கற பெண்மணியைத் தட்டிக் கேட்காத புருஷனோட வாழறது அதைவிட நரகம். உன்னோட குடும்ப சூழ்நிலை எந்தக் கஷ்டமும் இல்லாம சந்தோஷமா வாழற சூழ்நிலையாத்தான் இருக்கு. பெரிய பிரச்சனை எதுவுமே இல்லை. ஆனா நீ ஏன் இப்பிடி வித்தியாசமா நடந்துக்கறன்னு கண்டு பிடிக்கணும். இதுக்கு உன்னோட முழு ஒத்துழைப்பும் எனக்கு வேணும்.....'' என்ற மாலினி, ராதாவை சற்று நேரம் வெளியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டாள். பவித்ராவிடம் பல கேள்விகளை மாலினி கேட்டாள்.
''ரெண்டு... மூணு தடவை உன்னோட ஆழ்மனசை பேச வைக்கிற சிகிச்சை உனக்கு குடுக்கணும். பத்து நாளைக்கு ஆபீஸ் போக முடியாது. நான் குடுக்கற மாத்திரைகளையும் தவறாம நீ சாப்பிடணும். இன்னிக்கே ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாமா?'' என்ற மாலினிக்கு உடனே சம்மதம் தெரிவித்தாள் பவித்ரா.
தொடர்ந்து மூன்று முறைகள் பவித்ராவை அங்கே வரவழைத்து, சிகிச்சை கொடுத்து அவளது ஆழ்மனதிற்குள் புதைந்திருக்கும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்தாள் மாலினி.
மூன்று முறைகள் சிகிச்சை கொடுத்த பிறகு பவித்ரா, தன் மனதிற்குள் இருந்த விஷயங்கள் பற்றி என்ன சொன்னாள் என்று ராதாவிடம் தெரிவித்தாள் மாலினி. பவித்ரா பேசிய விஷயங்களை ரெக்கார்ட் செய்து அதை ராதாவிடம் போட்டுக் காண்பித்தாள். அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் ராதா.
''எங்க அப்பா பணக்காரர். எங்க அம்மா என்னோட சின்ன வயசிலேயே செத்துட்டாங்க. அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி, பிறந்த வீட்ல வறுமைக்கோட்டுல இருந்தாங்க. இங்க இருந்த செல்வ சூழ்நிலையில அவங்களுக்கு பணத்தாசை அதிகமாயிடுச்சு. எனக்கு அப்பா விதம் விதமா டிரஸ் வாங்கிட்டு வர்றதை பார்த்து பொறாமைப்பட்டாங்க. கொஞ்ச கொஞ்சமா அப்பாவைத் தன் வசப்படுத்தி, அவங்களே வீட்டில நிதி நிலைமையை தன் கைக்குள் போட்டு, அவங்களுக்கு மட்டும் எல்லாமே ஸ்பெஷலா வாங்குவாங்க. எனக்கு பழைய டிரஸ்தான் இருக்கும். பொம்மைகள் வாங்கித் தரமாட்டாங்க. பழைய டிரஸ்லதான் ஸ்கூல், காலேஜ் போனேன். அங்கேயும் எல்லாரும் இளக்காரமாக நினைச்சாங்க. மற்ற பிள்ளைகள் மேட்ச்சாக ஸ்லிப் முதல் ஷல்வார், செருப்பு வரை வகை வகையாய் உடுத்திக் கொண்டு வரும்போது நான் மிக ஏழ்மையானவ போல காணப்படுவேன். இதனால எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுச்சு. சித்தி, என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போக மாட்டாங்க. சித்திக்கு ஒரு பொண்ணு பிறந்தா. அவளுக்கு மட்டும் மிக உசத்தியான டிரஸ், நகையெல்லாம் வாங்குவாங்க. 'எனக்கும் வேணும்னு' கேட்டா திட்டுவாங்க. அப்பாகிட்ட இதைச் சொன்னா... இல்லாதது பொல்லாததுமா கோள் மூட்டிக் குடுப்பாங்க. அப்பாகிட்ட என்னை நெருங்க விட மாட்டாங்க. அதனால என்னோட நிலைமைப்பத்தி அப்பாவுக்கு தெரியாம போச்சு. அப்பா நிறைய சம்பாதிச்சார். ஆனா அதில எதையுமே நான் அனுபவிக்கல. தினமும் நிறைய பணம் எடுத்துக்கிட்டு சித்தியும், அவங்க பொண்ணும் ஷாப்பிங் போவாங்க. எனக்கு ஏக்கமா இருக்கும். கெஞ்சிக் கேட்டா கூட கூட்டிகிட்டுப் போகமாட்டாங்க. என்னோட இளம் பிராயம் முழுசும் இப்பிடியேதான் போச்சு. பாரபட்சமா சித்தி, என்னை நடத்தினதுனால எனக்கு மனசு வெறுத்துப்போச்சு. ஒரே குடும்பத்துல, ஒரே வீட்ல என்னை மட்டும் தாழ்வா நடத்தினாங்க. நிறைய பைகள் முழுக்க எக்கச்சக்கமான துணிமணிகளையும், பொருள்களையும் வாங்கி குவிக்கிற அவங்கள பார்க்கவே எனக்கு பிடிக்கல. ராத்திரி முழுசும் இதை நினைச்சு நான் அழுவேன். அப்பதான் நான் தீவிரமா நினைச்சேன். 'நல்லா படிச்சாகணும். உயர்ந்த உத்யோகத்துக்கு போகணும். கை நிறைய சம்பாதிச்சு ஆசை தீர, வேணுங்கற எல்லாத்தையும் வாங்கிக் குவிக்கணும்'னு. அதுக்காக ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு படிச்சேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தேன். காலேஜ்லயும் படிப்புல கில்லாடியா இருந்தேன். நான் நினைச்சபடி என்னோட படிப்புக்கு அஞ்சு இலக்கத்துல... பெருவாரியான சம்பளத்துல வேலை கிடைச்சுது. கடுமையா உழைச்சேன். மாசம் பிறந்தா வர்ற சம்பளப் பணத்துல... பார்க்கறதையெல்லாம் வாங்கிக்குவிக்க ஆரம்பிச்சேன். ஹாஸ்டல்ல தங்கி வேலை செஞ்ச நான், வீட்டுக்கு அடிக்கடி போகாம ஹாஸ்டல்லயே இருந்தேன். வீட்டுக்குப் போனா... புது புது உடைகளா போட்டுக்கிட்டு போவேன். சித்தி கிட்டயும். சித்திக்கு பிறந்த பொண்ணுகிட்டயும் என்னோட டிரஸ், ஹேண்ட் பேக், நகைகள் எல்லாத்தையும் காட்டுவேன். சித்தியோட முகம் போற போக்கைப் பார்க்கணுமே. 'என்னடா இது நம்பள விட ஜோரா உடுத்திக்கிட்டு வர்றா' அப்பிடின்னு அவங்களோட எண்ணங்கள் போகும். எனக்கு அவங்களோட முகபாவம் போற போக்கைப் பார்த்து ரஸிக்கிற ஆர்வம் பெருகுச்சு. வேணும்னே அவங்க முன்னாடி போய் நிப்பேன். பொறாமை தீயில வெந்துபோற சித்தியை பார்க்க எனக்கு ஏகப்பட்ட சந்தோஷமா இருக்கும். இதல ஆரம்பிச்சதுதான் என்னோட ஷாப்பிங் பழக்கம். பாரபட்சமா நடத்தப்பட்டதுனாலயும், என் அப்பாவோட அக்கறை என் மேல இல்லாததுனாலயும் என் இஷ்டப்படி வாழ ஆரம்பிச்சேன். திடீர்னு என் அப்பாவுக்கு என் மேல அக்கறை வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சார். வினோத்தை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணினார். ஏனோ நான் மறுத்து பேசலை. வினோத்துடன் என்னோட கல்யாணம் நடந்துச்சு. குழந்தையும் பிறந்துச்சு. சுதந்திரமா வேலை பார்த்து, சுதந்திரமா செலவு செஞ்சி, வீட்டு வேலை எதுவும் செய்யாம இஷ்டப்படி இருந்த எனக்கு கல்யாணம், குடும்பம், குழந்தை இதெல்லாம் ஒரு பாரமா இருந்துச்சு. என்னோட விடுதலை உணர்வை யாரோ பறிச்சுக்கிட்ட மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வினோத் என் மேல ரொம்ப அன்பாத்தான் இருந்தார். ஆனாலும் என்னால அந்த குடும்பக் கூட்டுக்குள்ள சிக்கி வாழ முடியல. வாழப்பிடிக்கல. அதனால தனியா ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்து வினோத்தை பிரிஞ்சு வாழ்ந்தேன். எக்கச்சக்கமா செலவு பண்றதுனால ஏகப்பட்ட சம்பளம் வாங்கினாலும் எனக்கு அது போதலை. ஆதனால, வினோத் கிட்ட எதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி பணம் வாங்கினேன். சின்ன வயசில எனக்கு ஏற்பட்ட பாரபட்சமான விஷயங்கள், என் குழந்தை மேல பாசம் வைக்க விடலை. குழந்தையை கூட உதாசீனப்படுத்தற அளவுக்கு என்னோட மனசு மாறிப் போச்சு. எப்பவும் என்னோட உள் உணர்வு 'அத வாங்கு, இத வாங்கு'ன்னு என்னை தூண்டிக்கிட்டே இருக்கும். 'ஏன் இப்பிடி கண்டபடி செலவு பண்றே'ன்னு வினோத் அப்பப்ப என்னைக் கேட்டது எனக்குப் பிடிக்கலை.