பூவிதழ் புன்னகை - Page 65
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
பவித்ரா மௌனம் காத்தாள்.
''மனநல ஆலோசகர்ன்னா... விபரீதமா கற்பனை பண்ணிக்காத. நம்ப உடம்புக்கு ஒரு வியாதி வந்துட்டா டாக்டர்ட்ட போறோம்ல. அது மாதிரி நம்ப மனசுக்கு ஒரு பாதிப்புன்னா மனநல ஆலோசகர்ட்ட போகணும். அவங்ககிட்ட மனம் விட்டு பேசணும். அவங்க குடுக்கற 'கௌன்ஸிலிங்'கை காது குடுத்து கேட்கணும்.''
''கேக்கறேன் ராதா. நீங்க சொல்றபடி நான் சைக்யாட்ரிஸ்ட் கிட்ட வர்றேன்.''
''உன்னோட படிப்பறிவு, உத்யோக அனுபவம் இதையெல்லாம் வச்சு... நீ இன்னும் முன்னேறலாம். அதுக்காக குடும்பத்தை கவனிக்காம இருக்கணும்னு கிடையாது. உன்னோட திறமைகளுக்கு ஏணியா வினோத் இருப்பான்...''
''நீங்க குடுக்கற கௌன்ஸிலிங் போதும் போலிருக்கே ? ரொம்ப அழகா, தெளிவா பேசறீங்க... '' பவித்ரா கூறினாள்.
''ம்கூம்... நான் பேசற பேச்சு மட்டும் போதாது. மனநல ஆலோசகரை கண்டிப்பா பார்த்து பேசணும். பேசற பேச்சு மட்டும் போதாது, சைக்யாட்ரிஸ்ட் குடுக்கற மாத்திரைகளையும் ஒழுங்கா சாப்பிட்டா தான் பூரண குணமாகும். அதுமட்டுமில்ல இன்னும் உன்னோட ஆழ் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு அவங்களாலதான் வெளிக் கொண்டு வர முடியும்...''
''சரி...''
''என்ன ? சத்தம் உள்ளே ஸ்ருதி இறங்குது?''
''எனக்கு சைக்யாட்ரிஸ்ட் யாரையும் தெரியாது ராதா ...''
''எனக்கு தெரியும். விசாரிச்சு வச்சிருக்கேன். அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டு உனக்கு சொல்றேன். நான் உன்னைப் பார்க்க வந்த விஷயம் வினோத்துக்கு கூட தெரியாது. நான் வேலை பார்க்கற வீட்டுல என்னோட அம்மா, அப்பா மாதிரி பெரியவங்க இருக்காங்க. அந்த அப்பாதான் சைக்யாட்ரிஸ்ட் அட்ரஸ், ஃபோன் நம்பர் குடுத்திருக்கார்...''
''சரி ராதா... நீங்க... உங்க... நீங்க ஏன் தனியா... ?''
''உனக்கு ஆயிரம் அறிவுரை சொன்ன நான்... புருஷனைப் பிரிஞ்சு இருக்கேனேன்னு நினைக்கற. இங்க பாரு பவித்ரா. 'புரிந்து கொள்ளுதல்'ங்கற ஒரு உணர்வும், பரஸ்பர பரிமாற்றமும் இருந்துட்டா... குறைகள் பெரிசா தெரியாது. என்னோட புருஷன், என்னை ஒரு துரும்பத்தான் மதிச்சாரு. அவர் என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. புரிஞ்சுக்கணும்னு நினைக்கவும் இல்லை. அவரோட அம்மா, அப்பா. சொன்னதைத் தட்டாம என்னைக் கட்டிக்கிட்டாரு.... இன்னொரு விஷயம்.... அவ்வளவு கஷ்டத்திலயும் நான் அவரை பிரியலை. அவர்தான் என்னை விட்டு பிரிஞ்சுப் போயிட்டாரு'' என்று ஆரமித்து தன் வாழ்க்கையில் கணவனால் நேரிட்ட கொடுமைகள் பற்றி விளக்கமாகக் கூறினாள்.
அனைத்தையும் கேட்ட பவித்ரா ஆடிப் போனாள். கதி கலங்கினாள்.
''ஒவ்வொரு தம்பதிகள் வாழ்க்கையிலயும் அவங்க சேர்ந்து வாழறதுக்கு புரிந்து கொள்ளுதல் எப்பிடி முதலிடமா இருக்கோ... அது போல பிரிஞ்சு வாழறதுக்கும் ஒரு இயந்திர கதியான வாழ்க்கைதான் முதலிடமா இருக்கு. நீ வினோத்தை புரிஞ்சுக்காததுக்கு உன்னோட மன நல பாதிப்பு கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா... வினோத்... உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டதுனாலதான் இத்தனை நாள் அவன் தனியாவே வாழ்ந்துகிட்டிருக்கான். ஆனா இது எத்தனை நாளைக்கு தொடரும்னு சொல்ல முடியாது. மனுஷ மனசுதானே அவனுக்கும்? அது மாறலாமே? 'மனசு மாறி, நீ... வினோத்தை புரிஞ்சிக்கிடாததுக்குக் காரணமான உன் மன நல பாதிப்புக்கு வைத்தியம் இருக்கு. மருந்து இருக்கு. கௌன்ஸிலிங் இருக்கு. ஆனா... என்னோட புருஷன், என்னைப் புரிஞ்சுக்காததுக்கு எந்த வைத்தியமும் கிடையாது. மருந்தும் கிடையாது. அவருக்கு மனசுன்னு ஒண்ணு இருந்தாத்தானே அது பாதிக்கறதுக்கு?...''
'' ஸாரி ராதா.... உங்களோட வாழ்க்கையில நீங்க பட்ட கஷ்டங்கள் பத்தி தெரிஞ்சு... வேதனையா இருக்கு...''
''வேதனைகளெல்லாம் வேண்டாத தடைகளா நினைச்சு எப்பவோ தூங்கிப் போட்டாச்சு. இப்ப என்னோட இதயம் க்ளியரா இருக்கு. எதையோ நினைச்சு புருஷனையும், குழந்தையையும் விட்டுட்டுப் போன உன்னோட வாழ்க்கையை நிறைவாக்கணும். அதுதான் இப்ப என்னோட சிந்தனை, செயல் எல்லாமே. உன்னோட மொபைல் நம்பர் குடு. டாக்டர்ட்ட பேசிட்டு உன்னைக் கூப்பிடறேன்....''
தெளிவாக ராதா பேசியதைக் கேட்டு பவித்ராவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது. அவளது சந்தோஷத்தைப் பார்த்த ராதாவிற்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இறுக்கமான அந்த சூழ்நிலை இளக்கமானது. ராதா கிளம்பினாள்.
68
டென்ஷன் உணர்வுகளோடு குறுக்கும், நெடுக்கும் நடந்துக்கொண்டே இருந்தான் திலீப். பணத் தேவையால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவன் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தான். மன உளைச்சல் அவனுக்கு தாங்க முடியாத தலைவலியையும் உண்டாக்கியது.
புதிதாக விற்பனைக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலத்தை வாங்கிப் போடுவதிலேயே குறியாக இருந்த மிருணாவின் மீது ஆத்திரமாக வந்தது திலீப்பிற்கு. என்றாலும் அவனால் அவளைத் தட்டிக் கேட்கவும் முடியவில்லை. 'பணம் புரட்ட முடியவில்லை' என்று சொல்லவும் முடியவில்லை. முற்றிலுமாக அவளிடத்தில் தன்வசம் இழந்தது மட்டுமல்ல... அவனது தைரியம், மனதிடம், நெஞ்சுறுதி... அத்தனையையும் இழந்து, ஓர் கம்பீரமான ஆண்மகனாக வாழும் சக்தியையும் இழந்திருந்தான்.
அவனுக்கு அவன் மீதே வெறுப்பு தோன்றியது. தனிமையில் இருக்கும் பொழுது தன்னைப் பற்றியும், தனது அந்த நிலை பற்றியும் சிந்திக்கும் அவன், மிருணாவுடன் சேர்ந்திருக்கும் பொழுது சிந்தனையை அவளிடத்தில் சிதற விட்டவனாக சிக்கிக் கொள்வதே அவனது இயல்பாகிவிட்டது.
மனதிற்குள் இருக்கும் திடம், அவனது உடம்பின் ஹார்மோன்களில் இல்லாதபடி மிருணா மீது அவனுக்கு ஏற்பட்டிருந்த மோகம் அவனை ஆட்டி வைத்தது.
அவள் அவனது அருகே இல்லாதபோது ஏற்படும் வீறாப்பு, முற்றிலுமாக வீழ்ந்து போகும்படி அவளது தேக ஸ்பரிஸம் அவனை வீழ்த்தியது. மிருணாவின் மோக வலையில், தன் தேகத்தை மட்டுமின்றி, அவனது தன்மானம், தரம்மிக்க வாழ்க்கை... அத்தனையையும் பறி கொடுத்திருந்தான்.
சொத்து, சுகம், சேமிப்புப் பணம், வீடு, வாசல்... என முழுவதையும் பறி கொடுத்திருந்தான்.
'இன்னும்'... 'இன்னும்' என்று பேராசைப்படும் மிருணாவின் துர்க்குணத்தைத் தூர் எடுத்து சுத்தம் செய்யும் திராணியின்றி, பலவீனப்பட்டவனாகிப் போனான்.
ஏதேதோ சிந்தனை வயப்பட்டிருந்த திலீப்பின் அருகே வந்த மிருணா, தன் அங்கங்களை திலீப்பின் உடலில் அங்கங்கே ஸ்பரிஸிக்க வைத்து ஒட்டிக் கொண்டாள்.
''ஹாய் டார்லிங்'' என்று வழக்கமான கொஞ்சல், வார்த்தைகள் தானாவே திலீப்பின் வாயிலிருந்து வெளிப்பட்டன.
''ஹாய் டியர்... என்ன யோசனை? கிச்சனில் என் கூட வந்து நிக்காம... ஸோஃபாவுல வந்து சாய்ஞ்சுக்கிட்டு... அப்பிடி என்ன யோசனை?.... ம்...?...'' கேட்டபடியே... அவனது காது மடல்களை சுகமாக வருடிக் கொடுத்தாள். அவனைக் கண் மயங்க வைத்த மிருணா, பெண்மையின் புனிதத்தை மாசுபடுத்தினாள். உண்மைகள் அங்கே உறக்கம் கொண்டன. நேர்மை அங்கே ஏறுமாறாகவும், தாறுமாறாகவும் உருமாறிப் போனது.