பூவிதழ் புன்னகை - Page 66
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
திலீப்பின் கௌரவமான வாழ்க்கை நிலை மாறிப் போனது. தன் மனைவி, மகள் இருவரையும் உதறிவிட்டு வந்த பதற்றம் ஏதும் இன்றி, மிருணா மீதுள்ள உடல் இச்சையில், தடுமாறி, தடம் புரண்டுக் கொண்டிருந்தான்.
மிருணா ஒரு பணப் பேய் என்பதை மறந்து, அவளது தேகக் கூட்டிற்குள் கட்டுப்பட்டுக் கிடந்தான். அது போன்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, காத்துக் கிடக்கும் சர்ப்பம்தானே மிருணா? படமெடுத்து ஆடி அவனைத் தன் விஷப்பற்களால் கொத்துவதற்குக் காத்திருந்த அவள், சிணுங்கலுடன் பேச்சை ஆரம்பித்தாள்.
''என்ன ஆச்சு டியர்? லோன் வாங்கற விஷயம்? நான் சொன்னபடி உங்க மாஜி மனைவிகிட்ட போய் கேட்டீங்களா...?''
''ம்... கேட்டேன். அவ மறுத்துட்டா...'' இதைக் கேட்டதும் அவனை விட்டு விலகினாள் மிருணா.
மாய வலைக்குள் சிக்கி இருந்த அவன், அவளைத் தன் பக்கம் இழுத்தணைத்தான். அவனது அணைப்பை நாசுக்காய் தவிர்த்த அவள், ''அப்பிடின்னா... பணத்திற்கு என்ன பண்றது டியர்? அடி மேல அடி அடிச்சா அம்மியும் பறக்கும்னு சொல்லுவாங்க. ஒரு தடவை மறுத்துட்டா, மறுபடியும் கேட்கக் கூடாதுன்னு சட்டமா என்ன?''
''ம்கூம். இனிமேல் அவகிட்ட கேக்க முடியாது. அவளுக்கு இளகின மனசுன்னு கணக்கு போட்டு, ஆபீஸ்ல சிக்கல்ல, மாட்டிக்கிட்டேன்னு கூட கேட்டுப் பார்த்துட்டேன். அவ இப்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கா. ஒரு வேளை அந்த வீடு, அவளோடதுன்னு யாரோ சொன்னாங்கன்னு சொன்னியே? அது தவறான செய்தியோ?...''
''நிச்சயமா தவறான செய்தி இல்லை. அந்த ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல வேலை செய்றவர் என்னோட களோஸ் ஃப்ரெண்ட், கலாவோட அண்ணன். அவர், கலாட்ட சொல்லி, அவ சொல்லித்தானே எனக்குத் தெரியும்? ராதா கூட அந்த பிரம்மாண்ட பங்களாக்காரர் ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்க்கு வந்து பத்திரம் பதிஞ்சுக் குடுத்திருக்காரு...''
''அப்படின்னா... ராதா ரொம்ப தைரியசாலியாகிட்டா....''
''ஆமா... அவளோட தைரியத்துக்கு ஒரு மெடல் வாங்கிப் போடுங்க...''
''அதில்ல... டார்லிங். சொந்த அப்பார்ட்மென்ட்டை விட்டு துரத்தினப்ப கூட எதிர்த்து நிக்காம என் காலை பிடிச்சு கெஞ்சினவ அவ. இப்ப என்னடான்னா உறுதியா 'முடியாது'ன்னு மறுத்துப் பேசறா. அதைச் சொன்னா.... கோவிச்சுக்கறியே?.... '' மிருணாவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் திலீப். அவனது கைகளை மெதுவாக விலக்கினாள் மிருணா.
''உங்க ஆஃபீஸ்ல பணப்புழக்கம் உங்க கையிலதானே? அந்தப் பணத்துல இருந்து இன்வெஸ்ட் பண்ணுங்க. நாலு மாசத்துல நிலத்தை லாபத்துக்கு வித்துட்டு பணத்தை வச்சுடலாம்...''
''என்ன?! ஆஃபீஸ் பணத்தையா? என்னம்மா நீ? சும்மா ஒரு சிம்பதிக்காக ராதாட்ட ஆஃபீஸ்ல ஒரு சிக்கல்ன்னு பொத்தாம் பொதுவா பொய் சொல்லி பணம் கேட்டதா சொன்னா... நீ உண்மையிலேயே... என்னை சிக்கல்ல மாட்டிவிட்டுடுவ போலிருக்கே...''
''சச்ச... அப்பிடி இல்லை டியர்... அந்தப் பணத்தை திரும்ப வைக்காட்டினாதானே சிக்கல்? நாமதான் திரும்ப வச்சுடுவோமே... ப்ளீஸ் டியர் நாலு மாசத்துல ரெண்டு லட்சம் லாபம்னா சும்மாவா...?''
''சும்மா... யாரோ உனக்கு தப்பான விபரம் சொல்லி.... உன்னை 'மிஸ்லீட்' பண்றாங்க டார்லிங்...''
''நோ... நோ.... கட்டுக்கதையை கேக்கறதுக்கும், மிஸ்லீட் பண்றதை புரிஞ்சுக்காததுக்கும் நான் என்ன பட்டிக்காட்டுப் பொண்ணா? நம்பகமானவங்க சொன்னதுதான். நீங்க பணத்தை ரெடி பண்ணுங்க. நாலு மாசத்துல ரெண்டு லட்ச ரூபா லாபத்தை நான் ரெடி பண்ணித் தரேன். சேலன்ஞ்!'' சமயம் பார்த்து 'அங்க' அஸ்திரத்தை அவன் மீது பிரயோகப்படுத்தினாள் மிருணா.
மறுத்துப் பேச இயலாத கோழையாகிப் போன திலீப்... சம்மதத்திற்கு அடையாளமாய் தலையை அசைத்தான். ராதாவிடம் பொய்யாக சொல்லிய விஷயம், உண்மையாகவே நிகழப்போகிறது என்பதை அறியாத மூடனாகி இருந்தான் திலீப். மிருணா விரித்த தந்திர வலைக்குள், மந்திரம் போட்டது போல முடங்கிப் போனான். மிருணா தீட்டித்தந்த தகிடுதத்தத் திட்டத்தை ஆஃபீஸில் செயல்படுத்தவும் துணிந்தான். செயல்படுத்தினான்.
69
சைக்யாட்ரிஸ்ட் மாலினியிடம் பவித்ராவை அறிமுகப்படுத்தி வைத்தாள் ராதா. மாலினி, மனநல மருத்துவத்துறையில் பிரபலமானவள் மட்டுமல்ல, மிக்க திறமை உள்ளவள். மிக இள வயதிலேயே இத்துறையில் முன்னணியான இடத்தைப் பெற்றவள். இவளது திறமைமிக்க மருத்துவத்தால் பல ஆண்களும், பெண்களும் பலன் அடைந்துள்ளனர்.
பவித்ராவைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் மாலினியிடம் விளக்கிக் கூறினாள் ராதா. கவனமாகக் கேட்டுக்கொண்ட மாலினி, பேச ஆரம்பித்தாள்.
''நம்ப நாட்டைப் பொறுத்த வரைக்கும் கல்யாணம்ங்கற சம்பிரதாயத்துல புதுசா ஒரு குடும்பத்துக்குள்ள நுழையற பொண்ணு, பிறந்து, வளர்ந்த வீட்டைத் துறந்து, பெத்தவங்க, கூடப் பிறந்தவங்களை மறந்து தன்னை அந்தக் குடும்பத்துக்குள்ள எவ்ளவு சீக்கிரமா... எவ்ளவு ஆத்மார்த்தமா ஐக்கியமாகிடறா?!! 'என் குடும்பம் இதுதான்! இனி என் வாழ்வு இங்கேதான், என் உறவுகள் இவர்கள்தான்' என்கிற அந்த உணர்வுகள் 'பச்'ன்னு அவ மனசுக்குள்ள பதிஞ்சுடுது. பதிஞ்சு போன அந்த புனிதமான உணர்வுகளை அவளோட புருஷன் புரிஞ்சுக்கறானா? மாமியார் வீட்டார் புரிஞ்சுக்கறாங்களா? இந்த கேள்விக்கு பதில், பெரும்பாலான குடும்பங்கள்ல்ல இல்லைங்கறதுதான் ரொம்ப வேதனைக்குரிய விஷயம். வெட்கப்பட வேண்டிய விஷயம்.
என்னமோ 'சாப்பாட்டுக்கு வக்கத்துப் போய் வந்திருக்கறவ'ங்கற மாதிரி ஒரு இளப்பம்! அலட்சியம் ! மருமகளை மகளா மதிக்காட்டாலும், 'அவளும் ஒரு பெண்' அப்பிடின்னு யாரும் நினைக்கறது இல்லை. புருஷன்காரன் 'தனக்கென்ன'ன்னு ஒதுங்கிடறான். இவளே ஒருத்தியா... மாமியாரை சமாளிச்சு, நாத்தனார்களை சமாளிச்சு ஆக்கிப்போட்டு, புருஷன் கூட படுத்து, பிள்ளைங்கள பெத்துப் போட்டு, இதெல்லாம் போக, பொருளாதார பிரச்னைகளுக்காக வெளியில வேலைக்கும் போய், அதனால ஏற்படற பிரச்னைகளையும் எதிர்கொண்டு, வேலைக்குப் போறதுனால ஏற்படற உடல் ரீதியான அலுப்பு, சோர்வு இதையெல்லாம் தாங்கிக்கிட்டு, குடும்ப வண்டியை ஓட்டறா. வண்டியோட அச்சாணி முறிஞ்சு போனா... வண்டி குடை சாய்ஞ்சுடும். அது மாதிரி, குடும்பத்தலைவிங்கற அந்தப் பெண் இல்லைன்னா... குடும்பம் குடை சாய்ஞ்சுடும். ஆனாலும் கூட அவளுக்கு மதிப்போ, மரியாதையோ குடுக்கறது இல்லை. நம்ம இந்தியாவை பொறுத்த வரைக்கும், தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஏகப்பட்ட குடும்பங்கள்ல்ல பெண்களோட நிலைமை இதுதான். ஆனா உன்னோட வாழ்க்கையில நான் இப்ப சொன்ன பிரச்சனைகள் எதுவுமே இல்லை. உன் ஹஸ்பண்ட் ஒரு ராஜா மாதிரி சம்பாதிக்கறார். ஆனா... உன்னை அடிமை மாதிரி நினைச்சு, அதிகாரம் பண்ணாம, அன்பு செலுத்தறார். அவரைப் புரிஞ்சுக்காம... நீ உன் சுதந்திரம், விருப்பம் அப்பிடி.... இப்பிடிங்கற.