பூவிதழ் புன்னகை - Page 63
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
இப்ப... வினோத் என்கிட்ட கல்யாண விஷயம் பேசினப்புறம்தானே... நானே... பவித்ராவைப் பத்தி யோசிக்கிறேன் ?! பவித்ராவோட அலட்சியப் போக்கு பத்தியும், அவ இப்பிடி பிரிஞ்சு இருக்கறதைப் பத்தியும் வினோத்ட்ட இப்ப நான் பேசினா... நான் அவனை மறுக்கறதுக்கு காரணம் தேடறதாத்தான் தப்பா நினைப்பான். அதனால... இப்ப அவன்கிட்ட இதைப்பத்தி பேசறது சரி இல்லை. அமிர்த்தம்மாகிட்டயும், அப்பாகிட்டயும் கலந்து பேசினா... இதுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அன்னிக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல, பவித்ரா ஏடாகூடமா பேசின மாதிரி தெரிஞ்சாலும் அந்தப் பேச்சுல ஒரு குழந்தைத்தனமான பிடிவாதம்தான் வெளிப்பட்டது. ஒரு வேளை அவளுக்கு மனக்குறை ஏதாவது இருக்குமோ? மனநலம் பாதிச்சவங்க கூட இந்த மாதிரி பேசுவாங்க... நடந்துக்குவாங்கன்னு பத்திரிகையில படிச்சிருக்கேன். அவளோட இந்தப் போக்குக்கு அதுதான் காரணம்ன்னு எப்பிடி தெரிஞ்சுக்கறது? அமிர்தம்மாகிட்டயாவது... அப்பாகிட்டயாவது நல்ல ஒரு மனநல டாக்டர் யார்ன்னு கேட்டு, பவித்ராவை கூட்டிகிட்டு போகணும். அவ இதுக்கு லேசுக்குள்ள சம்மதிப்பாளா ? சம்மதிக்க வைக்கணும். முயற்சி செஞ்சா முடியும். இங்கே என்னோட கடமைகளையும் தவறாம செஞ்சு, அதே சமயம் பவித்ரா விஷயத்துக்கும் செய்ய வேண்டியதை செஞ்சு... மஞ்சுவோட தாய்மை ஏக்கத்தை மாத்தி அவளுக்கு பவித்ராவோட தாயன்பு கிடைக்க வழி செய்யணும். வினோத்கிட்ட கேட்டிருக்கிற அவகாசம் அப்படியே இருக்கட்டும். அவன்கிட்ட இதைப்பத்தி எதுவும் சொல்லாம, பவித்ராவுக்கு மனநல சிகிச்சை எடுக்கற விஷயத்துல எந்த தொய்வும் இல்லாம பார்த்துக்கறதுல ஜாக்கிரதையா இருக்கணும். நாளைக்கே இதைப்பத்தி அமிர்த்தம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசிடறேன்... கடவுள் அருள் எனக்கு துணையா வந்து நல்லது நடக்கணும்.' தீர்மானமான முடிவுக்கு வரும் வரை தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்த ராதா, முடிவு எடுத்தபின் யோசனைக்கு ஒரு தடை போட்டு, தூங்க முயற்சித்தாள்.
66
காஃபியை தன்னிடம் கொடுத்துவிட்டு, உடனே மற்ற வேலைகளை கவனிக்க வேகமாக சமையலறைக்கு சென்றுவிடும் ராதா, ஒரு நாளும் இல்லாத வழக்கமாய் அன்று, தயங்கியபடி நின்றுக் கொண்டு இருந்ததைப் பார்த்தார் விஜயராகவன்.
''என்னம்மா ? ஏதோ கேக்கணும்னு யோசிக்கற. ஆனா கேட்க மாட்டேங்கற. என்ன தயக்கம் ? சொல்லும்மா. ஏதாவது பிரச்னையா ? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா...''
''பிரச்னைதான்ப்பா... ஆனா... எனக்கு இல்லை. வினோத்துக்குத்தான்...''
''ஏன் ? வினோத்துக்கு என்ன ஆச்சு ? '' சற்று பதற்றத்துடன் கேட்டார் விஜயராகவன்.
''வினோத்துக்கு ஒண்ணும் ஆகலைப்பா...'' என்று ஆரம்பித்து, வினோத்... அவளை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா?'ன்று கேட்டது வரை எதையும் மறைக்காமல் அனைத்து விஷயங்களையும் அவரிடம் விளக்கினாள் ராதா. அவர் கேட்பதற்கு முன்பே... தனக்கு வினோத்தை மறுமணம் செய்து கொள்வதில் உடன்பாடு இல்லை என்கிற விஷயத்தையும் அவரிடம் சொன்னாள்.
சில நிமிட நேரங்கள் அங்கே மௌனத்தில் கழிந்தது. அதன்பின் விஜயராகவன் பேச ஆரம்பித்தார்.
''உன்னோட மனசு தெளிஞ்ச நீரோடை மாதிரி இருக்கு. இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. அந்த பவித்ராகிட்ட நீ போய் பேசு. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்ங்கற மாதிரி, அவ போக்குல நீ போற மாதிரியே பேசு. எடுத்த எடுப்பிலயே சைக்யாட்ரிஸ்ட்... அது... இதுன்னு பேசாம, கொஞ்சம் கொஞ்சமா அவளோட நிலைமை, அவளுக்கு புரியற மாதிரி பேசு. உனக்கு அதிகமா நான் சொல்ல வேண்டியது இல்லை. பார்த்து, பக்குவமா பேசு. அவளை சம்மதிக்க வச்சுட்டா, சென்னையிலேயே மிகப் பிரபலமான பெண் சைக்யாட்ரிஸ்ட் மாலினிகிட்ட சொல்லி பவித்ராவுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க, நான் ஏற்பாடு பண்றேன். இது ஒரு சின்ன விஷயம். இதுக்குப் போய் ஏன் கலங்கி நிக்கற ? கவலையே படாத. காலையில சமைச்சு வச்சுட்டுப் போ. மத்ததை இந்தப் பையன்களை வச்சு நான் சமாளிச்சுக்கறேன்...''
''ஈஸ்வர்க்கு எல்லா வேலைகளும், சமையலும் பழக்கி இருக்கேன்ப்பா. ஆனா... நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன்...''
''இப்பிடித்தான் அவசரப்படாதேன்னு சொல்றேன். நிதானமா பேசு.''
''சரிப்பா. தேங்க்ஸ்ப்பா...''
''தேங்க்ஸ் சொல்லி என்னை அந்நியனாக்கிடாதேம்மா... நீ கிளம்பு.. ''
''சரிப்பா. அம்மா இன்னும் எழுந்திருக்கலை. தூக்க மாத்திரை போட்டிருக்கறதுனால அசந்து தூங்கறாங்க. அம்மாவுக்கு கோதுமை கஞ்சி போட்டு வச்சுட்டுப் போறேன். ஈஸ்வர் பார்த்து குடுத்துடுவான்.''
''சரிம்மா. நீ கிளம்பற வழியைப் பாரு.''
''சரிப்பா.''
சமையலறையில் சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு பவித்ராவின் அபார்ட்மென்டிற்கு கிளம்பினாள் ராதா. தற்செயலாக ஏதோ பேச்சு வாக்கில் பவித்ரா எங்கே தங்கி இருக்கிறாள் என்று வினோத்திடம் கேட்டபோது அவன் சொல்லியிருந்தான். பவித்ராவின் அபார்ட்மென்ட் இருப்பது பிரபலமான விலாசம் என்பதால் ராதாவிற்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அது இப்போது மிகவும் உதவியாக இருந்தது.
67
பவித்ரா குடி இருந்த ஏரியாவில் கார் நின்றது. ராதாவை காரில் போகச் சொல்லி அன்புக் கட்டளையிட்டிருந்தார் விஜயராகவன். பவித்ராவின் அப்பார்ட்மென்ட் இருந்த காம்ப்ளெக்ஸ் கேட்டின் அருகே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் பவித்ராவின் பெயரைச் சொல்லி பவித்ராவின் அப்பார்ட்மென்ட் நம்பரைக் கேட்டாள் ராதா. செக்யூரிட்டி நம்பர் சொன்னதும் குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றாள். வெளியில் இருந்த அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தாள். பலமுறை அழைப்பு மணி ஒலித்த பிறகே பவித்ரா வந்து கதவை திறந்தாள். அவளது கண்களில் தூக்கக் கலக்கம் மாறவில்லை.
''என்ன பவித்ரா... சூரியன் வந்த பிறகு கூட உனக்கு முழிப்பு வரலியா?''
ராதாவை அடையாளம் கண்டு கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது பவித்ராவிற்கு.
ராதாவை வீட்டிற்குள் அழைக்காமல் வாசலிலேயே வைத்து பேச ஆரம்பித்தாள் பவித்ரா.
''என் ஹஸ்பண்ட் வினோத் கூட சேர்ந்து வாழச் சொல்லித்தானே தூது வந்திருக்கீங்க? உங்ககிட்ட... இதைப்பத்தி பேச விரும்பலை. உங்ககிட்ட மட்டும் இல்லை. வேற யார்ட்டயுமே இதை பத்தி பேசத் தயாரா இல்லை...''
''நீயாவே கற்பனை பண்ணிக்கிட்டு பேசிக்கிட்டே போனா எப்பிடி...? உன் புருஷன் கூட சேர்ந்து வாழச் சொல்லி ஒண்ணும் பேச நான் இங்கே வரலை. நீ வினோத் கூட சேர்ந்து வாழவே வேண்டாம். உன் இஷ்டப்படி நீ உன்னோட ஆஃபீஸ் வேலையப் பாரு. வேலை முடிஞ்சுதா? கையில காசு இருக்கா? ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு போ. உன் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடு. பணம் இல்லையா? வினோத் எதுக்கு இருக்கார்? அவர்ட்ட கேட்டா வாரி வாரி வழங்குவாரு. நீயும் கண்ல கண்டதையெல்லாம் கையில வாங்கி வீட்ல கொண்டு வந்து போடு. அழகு பாரு. பூதம் புதையலைக் காக்கற மாதிரி அதையெல்லாம் காவல் காத்துக்கிட்டு வாழ்க்கையை ஓட்டு. இப்பிடி ஒரு சுதந்திரமான வாழ்க்கை யாருக்குக் கிடைக்கும்?''