பூவிதழ் புன்னகை - Page 59
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''ஆனா... இப்ப இந்த லேண்ட் வாங்கணும்னா பணத்துக்கு சிக்கல்தான்...''
''ஒரு சிக்கலும் இல்லை. உங்க பீரோவுல உங்க மனைவியோட நகைகள் இருக்குல? அதை பணமாக்கி, மேல கொஞ்சம் பணம் புரட்டினா வாங்கிடலாமே...''
இதைக் கேட்ட திலீப் திகைத்தான்.
''என்ன?! அந்த நகைகளையா?''
''ஆமா. எல்லாமே நீங்க வாங்கிக் கொடுத்ததுதானே?''
''இ... இல்லை. அது எல்லாமே ராதாவோட அம்மா, அப்பா... அவளுக்காக வாங்கி போட்ட நகைகள்...''
''அதனால..?'' மிருணா சற்று ஓங்கிய குரலில் கேட்டாள். ஆகவே திலீப் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான்.
''அதனால ஒண்ணுமில்ல.....''
திலீப் சற்று தயக்கமாகப் பேசியதும், அவன் மயக்கமாகும் அளவு தன் சாகஸ வலையை அவன் மீது விரித்தாள் மிருணா.
''என்ன டியர்... இவ்ளவு யோசிக்கிறீங்க?'' அவன் தோள் மீது சாய்ந்து அவனது காதோரம் தன் உதடுகள் உரசும்படியாக கிசுகிசுப்பாக பேசி அவனுக்கு கிளுகிளுப்பூட்டினாள் மிருணா.
''இன்னும் கொஞ்ச நாள்தான் டியர். ஒரு வருஷமோ... ரெண்டு வருஷமோ... அந்த நிலத்தை விக்கும்போது நல்ல தொகை நமக்கு லாபமா கிடைக்கும். அந்த தொகையில நகைகள் வாங்கி வெச்சுடலாம். நாளுக்கு நாள் பொன் விலை எப்பிடி ஏறுதோ அது போல மண்ணோட விலையும் ஏறுது டியர். அதனால நகைகளை திரும்ப குடுக்கத்தானே போறோம்...?''
அவளது மையல் உண்டாக்கிய மாய வலைக்குள் சிக்குண்ட திலீப், மறுத்துப் பேசும் திராணி இன்றி பலவீனப் பட்டுப் போனான்.
''திரும்ப குடுத்துடலாம்ங்கிறியா?''
''நிச்சயமா...''
''அப்ப சரி...''
''உங்களோட சம்மதம் இல்லாம ஏதாவது செய்வேனா நான்? நீங்க சரின்னு சொல்லிட்டீங்கள்ல? அந்த ஒரு வார்த்தை போதும். இனி நான் பார்த்துக்கறேன். அந்த நகைகளை என்கிட்ட குடுத்துடுங்க. நல்ல விலைக்கு எடுத்துக்கற ஒரு நகைக்கடைக்காரரை எனக்குத் தெரியும். அதனால அந்த வேலையை நான் பார்த்துக்கறேன்.'' நைச்சியமாக பேசிய மிருணாவின் மோகப் பிடிக்குள் தன் தேகத்தின் உணர்ச்சிகளை பலி கொடுத்துக் கொண்டிருந்த திலீப் அவள் கேட்டதற்கெல்லாம் தலை அசைத்தான். மனம் இசைந்தான்.
தன் உணவிற்காகக் கிடைத்த விலங்கை, மலைப்பாம்பு எவ்விதம் வளைத்து சுற்றிக்கொள்ளுமோ... அதுபோல திலீப்பை, தன் உடல் எனும் அஸ்திரத்தால் வளைத்து சுற்றிக் கொண்டாள் மிருணா. மோகம் மூட்டிய தீயில், தன் சுய அறிவை இழந்த திலீப், தன்னை அவளிடம் இழந்தான்.
61
மஞ்சுவை அவளுடைய பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த வினோத், அவளுக்கு ரொட்டித் துண்டுகள் மீது ஜாம்மை தடவிக் கொடுத்தான்.
''போங்கப்பா எப்பப் பார்த்தாலும் ரொட்டிதானா? ஒரே போர்ப்பா.... ராதா ஆன்ட்டி தினமும் வேற வேற டிபன் செய்யறாங்க. ஸ்வாதி அக்கா தினமும் வகை வகையா லஞ்ச் கொண்டு வரா. எனக்கும் அக்கா கொடுப்பா.... ஆனா அவங்களே இன்னொருத்தர் வீட்ல அவங்களோட தயவுல இருக்கறவங்க. அதனால எனக்கும் சேர்த்து சமைச்சுக் கொடுத்தனுப்ப யோசிப்பாங்கள்லப்பா?''
''ஆமாண்டா... ராதா எதிலயும் நியாயம், நேர்மையை கடைபிடிக்கறவ.''
''ராதா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்கப்பா. அவங்க எனக்கு அம்மாவா இருந்திருக்கலாம். எனக்கு அம்மான்னு கூப்பிட யாருமில்லை. அம்மா மடியில படுத்துக்கணும்னு தோணும்போது எனக்கு அந்த சுகம் இல்லை. நீங்க என்னை எவ்ளவு நல்லா பார்த்துக்கிட்டாலும் ராதா ஆன்ட்டி மாதிரி ஒரு அம்மா இருந்தா அதுதான்ப்பா சந்தோஷம். ராதா ஆன்ட்டி வீட்டுக்குப் போனப்ப அவங்க என்னை எவ்ளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க.... அப்பிடி ஒரு அம்மா எனக்கு வேணும்ப்பா'' என்ற மஞ்சு, ஒரு வினாடி கண்மூடி கண் திறந்து, பின் பளிச் என்று பேச ஆரம்பித்தாள்.
''ஏம்ப்பா... நான் ஒண்ணு கேக்கறேன்... ராதா ஆன்ட்டியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?''
மஞ்சு இவ்விதம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தான் வினோத். சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். ''சின்ன பொண்ணு நீ. இப்பிடியெல்லாம் பேசலாமா?''
''சின்னப் பொண்ணுக்குதான்ப்பா... அம்மா வேணும். நான் கேட்டதுல என்ன தப்பு? ராதா ஆன்ட்டியும் நீங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க எனக்கு அம்மா ஆகிடுவாங்க. ஸ்வாதி அக்காவோட அப்பா அவங்க கூட இல்லை. எனக்கு என் அம்மா என் கூட இல்லை. உங்களுக்கும் ராதா ஆன்ட்டிக்கும் கல்யாணம் நடந்தா... ஸ்வாதி அக்காவுக்கும் அப்பா கிடைச்சுடும். நாம ஒரே குடும்பமா ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம்.''
சின்னக் குழந்தை எனினும், பெரிதாக யோசித்து மஞ்சு பேசியதை கேட்ட வினோத்தின் எண்ண அலைகள் பரவலாய் விரிந்தன.
'சின்ன வயசுல நான் நேசிச்ச என் ராதா... அவளோட என் வாழ்க்கை இணைஞ்சா... மஞ்சு சொல்ற மாதிரி எங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்குமோ? சின்ன பொண்ணு பேசறதை கேட்டு, நானும் இப்பிடி கற்பனையில மிதக்கலாமா? அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம்ன்னு முடிவானதும் அவள் மீதான என் காதலுக்கு நான் ஒரு முடிவு கொடுத்தேனே. அந்த முற்றுப்புள்ளி நீங்கி... இப்ப அது தொடர் கதையா ஆகப்போகுதா? இதுக்கு ராதா சம்மதிப்பாளா? அப்படி சம்மதிச்சா... என்னைப் போல அதிர்ஷ்டக்காரன் வேற யாரும் இல்லை. என்றைக்கோ என் இதயத்தில சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த ராதா, மறுபடியும் அங்கே உட்காரப் போறாளா? இதுவரைக்கும் நான் ராதாவை இப்பிடியொரு எண்ணத்துல நினைச்சுப் பார்த்ததே இல்லையே? மஞ்சு இப்பிடி கேட்டதும் என் மனசு ஏன் அலைபாயுது? இப்ப மஞ்சுக் கேட்ட உடனே... அடுத்த நிமிஷமே 'ராதா இதுக்கு சம்மதிச்சா என்னைப்போல அதிர்ஷ்டக்காரன் இல்லைன்னு நான் ஏன் நினைக்கனும்? ஒரு வேளை என் மனசுல ஏற்கனவே ராதா மேல இருந்த காதல்தான் இப்ப மறுபடியும் அவளை நினைக்க வைக்குதா? நான் அவளுக்காக செஞ்ச உதவியெல்லாம் அவளை ஒரு காலத்துல நேசிச்ச அன்புக்காகத்தானே தவிர வேற எந்த எண்ணமும் இல்லையே? இப்ப ஏன் மஞ்சு இப்படி கேட்டதும் என் மனசு மாறுது? தடுமாறுது? தடம் புரளுது? இது தப்பா? தப்பு இல்லையா? ஒருவேளை ராதா சம்மதிச்சா... அது சரியா? புருஷன் கைவிட்ட ஒரு பெண்ணும், மனைவி விட்டுட்டு போன ஒரு ஆணும் இதயம் தொட்டு, மனம்விட்டு பேசி மறுமணம் செஞ்சுக்கறது தப்பான விஷயமா என்ன? இல்லையே? இதில என்ன தப்பு இருக்கு? ராதா சம்மதிச்சு என்னை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டா பாலைவனமா இருக்கற எங்க எல்லோரோட வாழ்க்கையும் பூஞ்சோலையா இருக்கும். நிச்சயம் அப்படித்தான்...'