பூவிதழ் புன்னகை - Page 56
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
சம்பளப் பணம் அப்பிடியே சேமிப்பா பேங்க்ல சேர்ந்துக்கிட்டிருக்கு. இந்த அளவுக்கு முன்னேத்திவிட்டது நீங்களும், அம்மாவும்தான். உங்களோட அறிமுகம் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். இந்த அதிர்ஷ்டத்தை அந்த ஏழுமலை வாசன் ஸ்ரீநிவாஸ பெருமாள்தான் ஸ்ரீநிவாஸ் மூலமா கிடைக்க வச்சிருக்காரு...''
''என்னம்மா இது... உண்மையான ஊழியம் செய்யற உனக்கு... அடைக்கலம் குடுத்ததைப் போய் பெரிசா பேசிக்கிட்டு?! நீ இன்னும் சாப்பிடலை. போய் சாப்பிடு. உன்னோட ஆரோக்கியம் நல்லா இருந்தாத்தான் உன் மகள் ஸ்வாதியை நீ நல்லபடியா பார்த்து வளர்க்க முடியும்...''
அப்போது பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பிய ஸ்வாதி, அங்கே வந்தாள்.
''என்ன தாத்தா? என்னோட பேர் அடிபடுது? என்ன விஷயம்?''
''வேலை... வேலைன்னு உன் அம்மா நேரத்துக்கு சாப்பிட மாட்டேங்கறா. உன்னை நல்லவிதமா வளர்த்து உனக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணுமேங்கற கவலை ராதாவுக்கு, கவலைப்படறதுனால என்ன ஆகப்போது? வேளா வேளைக்கு சாப்பிட்டாத்தான் உடல் நலம் நல்லா இருக்கும்ன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டிருந்தேன்.''
''என்னோட அப்பாவாலதானே எங்கம்மாவுக்கு இவ்ளவு கஷ்டம்?'' ஸ்வாதி சூடாகப் பொரிந்தாள்.
''என்னடா ஸ்வாதி... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்வாங்க. அது மாதிரி சின்னப் பொண்ணு... நீ... வார்த்தைகளை பொரிச்சு எடுக்கற?'' கேட்ட அமிர்த்தம் மேலும் தொடர்ந்தாள்.
''உங்கம்மாவுக்கு வந்த கஷ்டமெல்லாம் உன்னோட அப்பாவாலன்னு சொல்ற. கஷ்டம், நஷ்டமெல்லாம் அவரவர் விதிப்படிதாண்டா நடக்கும்...''
''விதியா... அவரோட மதிகெட்டத்தனம்தான் எங்க கஷ்டத்துக்குக் காரணம். எனக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்கார்ங்கறதே மறந்து போச்சு பாட்டி. எப்பப் பார்த்தாலும் அம்மாவை திட்டிக்கிட்டே இருந்தாலும் என் மேல கொஞ்சம் பாசமாத்தான் இருந்தார். நாளாக ஆக இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் போயிடுச்சு. உடம்பு சரி இல்லாதப்ப என்னை வந்து எட்டிக்கூட பார்க்கலை. அன்னில இருந்து அவரை வெறுத்துட்டேன்...''
''வெறுப்பு, விருப்பு, இன்பம், துன்பம் கலந்ததுதான்மா குடும்பம். பிரச்னை இல்லாத மனிதர்களும் கிடையாது. குடும்பமும் கிடையாது. இன்னிக்கு தகராறை நாளைக்கு வரைக்கும் தொடர்கதை போல தொடரக் கூடாது. அன்னிக்கு நடந்ததை அன்னிக்கே மறக்கணும்...''
''நீங்க சொல்றது குடும்பத்தில உள்ள எல்லாருக்கும்தானே பாட்டி? எங்க அப்பா ஒட்டு மொத்தமா ஒட்டுமில்ல... உறவுமில்லன்னு விட்டுட்டு போயிட்டாரே... இனிமேல எனக்கு எங்கம்மாதான் எல்லாமே...''
''உனக்கு உங்கம்மா... உங்கம்மாவுக்கும், உனக்கும் நாங்க இருக்கோம். நீ எதைப் பத்தியும் கவலைப்படாம... சந்தோஷமா இரு. நல்லா படி. உன்னை நாங்க படிக்க வைக்கிறோம். நீ படிச்சு முன்னேறி... உன்னோட எதிர்காலம் சந்தோஷமானதா இருக்கணும். உங்கம்மாவும் நீயும் முன்னேறி, உங்கப்பாவுக்கு வாழ்ந்து காட்டுங்க. 'நான் செஞ்சது தப்பு'ன்னு அவர் உணரணும். வருந்தணும். திருந்தணும்....''
''இனிமேல் அவர் வருந்தினா என்ன? திருந்தினா என்ன பாட்டி? எங்களோட அந்த நாட்களெல்லாம் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா? அவரால திரும்ப கொண்டு வந்து தர முடியுமா? யாருக்காகவோ... பெத்த பொண்ணான என்னைத் தூக்கி ஏறிஞ்ட்டாரு. பாசத்துல பழகறதும், திடீர்னு விலகறதும் அவருக்கு வேணும்ன்னா சகஜமா இருக்கலாம்... ஆனா... என்னால அப்பிடி முடியாது...''
''முடியாத விஷயத்தைப் பத்தி இப்ப எதுக்கு ஸ்வாதி பேசிக்கிட்டு?'' கோபமாக பேசிக் கொண்டிருந்த ஸ்வாதியை திசை திரும்ப முயற்சித்தாள் ராதா.
''பேசாம இருந்துதான்மா இப்பிடி தனிமரமா நிக்கறீங்க..''
''நிக்கற நான் இனி... நிலைச்சு நிப்பேன்மா. உன்னையும் நிக்க வைப்பேன். மௌனமா இருந்தா... பிரச்சனைகள் பெரிசா ஆகாது, அப்பிடியே சரியாயிடும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். படிச்சிருக்கேன். அதையே கடைப்பிடிச்சேன். என்னோட மௌனம் உங்கப்பாவுக்கு சாதகமாயிடுச்சு. அதுவே எனக்கு பாதகமாயிடுச்சு. அவர் நினைச்சதை சாதிச்சுட்டாரு...''
''சாதிச்சுட்டாரா? நம்பியவளை நடுத்தெருவுல விட்டுட்டு ஓடிப்போனதுக்கு பேர் சாதனையா?...''
''இதெல்லாம் பேசறதுக்கு உனக்கு வயசு பத்தாதும்மா...''
''பத்தாதது என்னோட வயசு இல்லம்மா. அப்பாவோட மனசுல நமக்கு இருக்கற இடம் பத்தாது. நிலை நடுமாறிப் போற புத்தி அவருக்கு எதுக்கும்மா கல்யாணம், குடும்பம், குழந்தை?''
''குழந்தைம்மா நீ... பெரிய பேச்செல்லாம் பேசக்கூடாது.''
''பேசாம இருந்து நீங்க பட்டது போதும். உங்களை ஒரு மனைவியா மதிக்காத அவர், ஒரு மனுஷியாவது மதிச்சாரா உங்க கணவர்?''
''என் கணவர்... உன்னோட அப்பா...''
''அப்பாவா? அவரா? ஊர் உலகத்துக்கு அப்பாவா இருந்தா போதுமா? நான் அடிபட்டு கிடந்தப்ப, அப்பாங்கற துடிப்போட ஓடி வந்தாரா?...''
''அவர் வந்ததும்... போனதும்... கடந்து போன காலம் மட்டுமில்லடா ஸ்வாதி... கலைஞ்சு போன மேகமும் கூட... ''
''மேகம், மழைகள் அப்பிடின்னெல்லாம் என்னால உங்களைப் போல பேச முடியாதும்மா. உங்களைப் போல பொறுமையாவும் என்னால இருக்க முடியாதுமா... ''
''முடியணும்டா... பெண்களுக்கு பொறுமைதான் ஆயுதம்.''
''பொறுமை, பெண்ணின் பெருமைன்னு பேசிப் பேசி... நம்பளை நாமே ஏம்மா ஏமாத்திக்கணும்?''
''ஏமாந்து போறதும், ஜெயிச்சு நிக்கறதும் என்னோட கையில இல்லைம்மா. இப்ப காலம் மாறிப் போச்சு. அடுத்த தலைமுறையான உனக்கு துணிஞ்சு நிக்கற தைரியம் வந்துருச்சு. துணிச்சல் இருந்தா மட்டும் போதாது. சொந்தக் கால்ல நிக்கறதுக்கு தேவையான உயர் கல்வி கத்துக்கணும். அதே சமயம்... சுயமா சிந்திக்கத் தெரிஞ்சு, 'யாரையும் சார்ந்திருக்காம வாழறோம்'ங்கற எண்ணத்துல தலைகனமும் ஏறிடக் கூடாது... தவறான பாதைக்கும் போயிடக் கூடாது. இப்ப... இளையதலைமுறை நீங்க, படிக்கறதுக்கும், முன்னேறுவதற்கும் எத்தனையோ வசதிகள் வந்திருக்கு. உதாரணமா... மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதி, படிக்க வேண்டிய அவசியம் இல்லாம... கம்ப்யூட்டர்லயே படிச்சுக்கறீங்க. புதுசா எதைப்பத்தியாவது தெரிஞ்சுக்கணும்ன்னா... இன்ட்டர்நெட் பார்த்து தெரிஞ்சுக்கறீங்க. பக்கம் பக்கமா எழுத வேண்டிய லெட்டரை 'படபட'ன்னு கம்ப்யூட்டரைத் தட்டி இ.மெயில் அனுப்பிக்கறீங்க. அதை விட்டா எஸ்.எம்.எஸ்.ல தகவல் பரிமாறிக்கறீங்க. ஆனா இந்த வசதிகள் எல்லாம் நல்ல விதமா தேவைப்படற விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தணும். அநாவசியமா, முறைகேடான விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. வசதிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும் பொழுது, வெற்றிக் கொடியை எட்டிப் பிடிக்க உழைக்கணுமே தவிர வெட்டிப் பொழுது போக்கி, வாழ்க்கையை வீணாக்கிக்கக் கூடாது. முன்னயெல்லாம் ஒரு பையன் கூட சும்மா... சாதாரணமா ஒரு பொண்ணு ரெண்டு வார்த்தை பேசினா கூட அது பெரிய தப்புன்னு கெட்ட பெயர் குடுத்துடுவாங்க. ஆனா இப்ப? பையன்ங்க கூட சேர்ந்து படிக்கறீங்க. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணு கூடத்தான் ஃப்ரெண்ட்டிஷிப் வச்சுக்கணும்ங்கற நிலைமை மாறி பெண்ணுக்கு ஆண் சிநேகிதமாவும், ஆணுக்கு பெண் சிநேகிதமாகவும் பழகற சூழ்நிலை வந்திருக்கு.