பூவிதழ் புன்னகை - Page 52
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
எங்கிருந்தோ வந்த ராதாவிற்கு, அந்த 'ஆராதனா' பங்களாவில்... இத்தனை மரியாதையும், ஆதரவும் கிடைப்பது குறித்து உள்ளம் பொருமினாள். தன்னுடன் வந்திருந்த மகள் ராஜியிடம் தன் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.
''எங்கேயோ இருந்து இங்கே வந்து சேர்ந்திருக்கா இந்த ராதா. கழுத்துல தாலி, கையில ஒரு மகள். புருஷன்ங்கறவன் என்ன ஆனானோ? இங்கே வந்து இருந்து ராஜாங்கம் நடத்திக்கிட்டிருக்கா. பெரிசு என்னடான்னா எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டியை கூப்பிடற மாதிரி 'ராதா... ராதா....'ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிடறாரு. இவளும் 'அப்பா... அப்பா....'ன்னு உருகறா. நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கா. இந்த மாதிரி தகிடுதத்த வித்தையெல்லாம் இவளை மாதிரி புருஷனை விட்டுட்டு வந்தவங்களுக்கு நல்லாவே தெரியும் போல. என்னமோடியம்மா... இந்த ஆள் மயக்கி, பெரிசுகிட்ட இருந்து சொத்துக்களை எழுதி வாங்காம இருந்தா சரி....''
கல்யாணி பேசியதைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்த ராதாவிற்கு துக்கம், இதயத்தை நிரப்பியது. 'புருஷனைப் பிரிஞ்சு வாழறதே... பெரிய கொடுமை... இது வேறயா? புருஷனைப் பிரிஞ்சு வாழற பெண்களை இப்பிடி ஒரு அசிங்கமான கோணத்துலயும் நினைப்பாங்களா? பேசுவாங்களா? புருஷனைப் பிரிஞ்சு வாழற பெண்களெல்லாம் நெறி கெட்டுப் போவாங்கன்னு நினைக்கறது சரியா? ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணைப் பார்த்து இப்பிடி அவதூறா பேசறது எவ்வளவு வேதனையான விஷயம்? துன்புறுத்தற ஆண்களைவிட இப்பிடிப்பட்ட பெண்கள் எவ்வளவு மோசமானவங்க? சேர்ந்து வாழ முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகி, அவர்களோட சொந்தக் கால்களில் நின்னாக்கூட இப்பிடி ஒரு பேச்சா? உழைச்சு பிழைச்சா கூட இப்பிடி ஒரு நிந்தனையா? ஊர் பேசும், உலகம் பேசும்னு புருஷனோட கொடுமைகளைத் தாங்கிக்கிட்டு வாழ்ந்தாத்தான் இப்படிப்பட்ட அவதூறுகளில் இருந்து தப்பிக்க முடியுமா?
புருஷனோடு சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை இல்லாத... என்னைப் போன்ற பெண்ணால் இப்படிப்பட்ட அவமானங்களை சந்திச்சுதான் வாழணுமா? கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழும்போது பிரச்னை. வேறு வழி இல்லாம பிரிஞ்சு வாழும் போதும் பிரச்னை. பெண் பிறவியே பிரச்னைக்குரிய பிறவிதானா?
புருஷன் கூட சேர்ந்து வாழற எல்லா பெண்களுமே நல்லவங்களா ? 'புருஷன்' அப்பிடிங்கற ஒரு பாதுகாப்பு போர்வையை போர்த்திக்கிட்டு, முறை தவறி நடந்துக்கற பெண்களுக்கெல்லாம், அவங்க புருஷனோட சேர்ந்து வாழறாங்கற ஒரே காரணத்துனால பத்தினிகள்ன்னு மதிக்கிற இந்த சமூகம், அதே சமூகம் கணவன் கூட வாழ முடியாத சிக்கலான நிலைமையில இருந்து வெளியே வந்து, இக்கட்டான இடர்ப்பாடுகளுக்கு நடுவே இடையூறுகளை இடிதாங்கி போல தாங்கிக்கிட்டு வாழற, உண்மையான நல்ல பெண்களை இழிவா பேசுது. என்னை இந்த மாதிரி அவமானத்துக்கும், அவலத்துக்கும் ஆளாக்கின என்னோட புருஷன் என்னடான்னா இன்னொருத்தி கூட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்காரு, பிறந்த வீட்ல செல்வ சுகபோகம் பெரிய அளவுல இல்லைன்னாலும், அங்கே இருந்த வரைக்கும் செல்ல மகளா... சந்தோஷமா இருந்தேன். 'கல்யாணம்'ங்கற சாஸ்திரமும், சம்பிராதயமும் என்னை ஒரு சிறை வாழ்க்கையில சிக்க வச்சுடுச்சு. சிறையை விட்டு வெளியே வந்த பறவையை, வேடன் துரத்திக்கிட்டே வர்ற மாதிரி, என்னை இந்த சமூகமும், சமுதாயமும் வார்த்தை அம்புகளால வேட்டையாடுது...' மன அழுத்தம், ராதாவின் இதயத்தை வருத்த, சிந்தனை வலைக்குள் சிக்கிக் கொண்ட ராதா வேதனையின் உச்சத்தில் தவித்தாள்.
அந்தத் தவிப்பின் தாபத்தால் தன் பெற்றோரை வணங்கி துதித்தாள். 'அம்மா.... அப்பா... என்னை இப்பிடி ஒரு சூறாவளிப் புயல் சூறையாடிட்டு போற மாதிரி பண்ணிட்டு... நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா போய் சேர்ந்துட்டிங்களே... என்னைக் காப்பாத்துங்க என்னைப் பெத்த தெய்வங்களே' என்று வாய்விட்டு பேசினாள் அவர்களோடு.
'கண்ணே ராதா... நிறைய சம்பாதிக்கறவன், சினிமா நடிகன் மாதிரி அழகா இருக்கான், நல்லபடியா உன்னைப் பார்த்துப்பான், நம்ம வீட்ல விட அவனோட வீட்ல, நல்ல வசதியான வாழ்க்கை நீ வாழ்வன்னு ஆசைப்பட்டு, உன்னை அந்த திலீப்புக்கு கட்டிக் குடுத்தோம். எங்க ஆசை நிராசையாயிடுச்சு. நம்பிக்கை நாசமாயிடுச்சு. கவலைப்படாதேம்மா. இந்த ஊரும், உலகமும் பேசறதையெல்லாம் ஒரு தூசியை தட்டற மாதிரி தட்டிட்டு போயிடணும். எவளோ ஒருத்தி என்னவோ பேசினாள்ங்கறதுக்காக இப்பிடியா மனசைப் போட்டு வருத்திப்பாங்க? உன் கடமைகளை நீ செய். கடந்த காலத்தை மறந்துடு. யார் என்ன பேசினாலும் பேசிட்டு போகட்டும். உன்னோட மனசு புனிதமான கங்கை நதி மாதிரி. இது உனக்கு தெரியும். எங்களுக்கு தெரியும். மத்தவங்க எல்லாருக்கும் 'நீ நல்லவ'ன்னு நிரூபிச்சுதான் ஆகணும்னு அவசியம் இல்லை, ஒரு பெண்ணுக்கு அவளோட மனசுதான் காவல். அந்த மனசால நீ நினைச்சாத்தான் உன்னால கெட்டுப் போக முடியும்... தப்பு பண்ண முடியும். வேற யாரும் உன்னை நிர்ப்பந்தப்படுத்தி, தவறான பாதைக்கு கூட்டிச்செல்ல முடியாது. எவளோ ஒருத்தி மட்டமா பேசினாள்ங்கறதுக்காக உன்னோட புனிதம் பொய்யானதாகிடுமா? உன் மனசுக்கு எது சரின்னு படுதோ... அதைச் செய். உன்னை பெத்த நாங்க உன்னை நம்பறோம். நீ பெத்த பொண்ணு உன்னை நம்பறா. இது போதும். உன்னோட உடல் உழைப்புலதான் உன்னோட வாழ்க்கையே அடங்கி இருக்கு. உடல்நலம் நல்லா இருந்தாத்தான் உழைக்க முடியும். பிழைக்க முடியும், உன் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். கண்டவங்களும் கண்டபடி கடுமையா விமர்சனம் பண்றதை கடவுள் கண்காணிச்சுக்கிட்டே இருப்பார். அவரோட கண்கள்ல்ல இருந்து தப்பிக்க முடியாது. உன் கண் கண்ட தெய்வத்தை பூஜித்து பிரார்த்தனை பண்ணு. தெய்வம் கண் திறக்கும். உன் வாழ்வு சிறக்கும். அமைதியா தூங்கும்மா. தேவையற்ற யோசனைகளை தூக்கி எறிஞ்சுட்டு, சாமி நாமங்களை சொல்லிக்கிட்டே இரு. மனசை அலைபாய விடாம, ஒரு நிலைப்படுத்தி கடமைகளை கருத்தோடு செய். உனக்கு புது வாழ்வு மலரும்.'
ராதா, தன் பெற்றோரை நினைத்து கலங்கியபடி இருக்க, மகளின் துயரம் பொறுக்க முடியாத அவளது தாய், ராதாவிடம் மானசீகமாகப் பேசி ஆறுதல் கூறுவது போல ராதாவிற்கு கனவு வந்தது. கனவில் வந்த தாயின் உருவம் மறைந்ததும், அவள் கண் விழித்தாள்.
''அம்மா... என் அம்மா... நேரில் வந்து சொல்ல முடியாத தொலை தூரத்துக்குப் போயிட்ட நீங்க... என்னோட கனவுல வந்து எனக்கு ஒரு தெளிவை குடுத்துட்டீங்க. என்னோட இதயத்துல இப்ப சுமையே இல்லைம்மா. உங்க ஆசிகள் இருக்கற வரைக்கும் எனக்கு ஏற்படற ஏச்சுக்கள் வெறும் தூசிகள்ன்னு புரிஞ்சு போச்சும்மா.