பூவிதழ் புன்னகை - Page 47
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
என்னோட வாழ்க்கை' அப்பிடின்னு நிகழ்காலத்தை மட்டுமே மனசுல பதிச்சு வாழுங்கம்மா. உடம்பு தன்னால சரியாயிடும்.'' பேச்சு கொடுத்துக் கொண்டே அமிர்தத்திற்கு கை வாகு கொடுத்து உட்கார வைத்தாள்.
அமிர்த்தத்தின் கையில் ஹார்லிக்ஸ் கப்பை கொடுத்தாள். புண்படுத்தப்பட்ட அமிர்தத்தின் மனம் ராதாவின் புன்னகையால் பண்படுத்தப்பட்டது.
'ஒரு நிமிஷத்துல, மாய மந்திரம் போல மனரீதியான விஷயங்களை பேசி, அமிர்தத்தை உட்கார வச்சுட்டாளே இந்தப் பொண்ணு ராதா' என்று பிரமித்தபடி, ராதாவின் சூப்பர் ஸ்பெஷல் காஃபியை ரசித்துக் குடித்தார் விஜயராகவன்.
''வினோத் சொன்னது போல உன்னோட காஃபி சூப்பர்மா ராதா...''
''தேங்க்யூ ஸார்...''
''இதென்ன நியாயம்?! அமிர்த்ததை மட்டும் 'அம்மா'ன்னு சொல்ற. என்னை 'ஸார்'ன்னு கூப்பிடற? 'அப்பா'ன்னு கூப்பிடும்மா. பெத்தாதான் பிள்ளைங்களா ? பெத்த பிள்ளைங்களுக்கு சமமா பாசம் செலுத்தற எல்லாருமே பிள்ளைங்கதான்.''
விஜயராகவன் பேசியதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தாள் ராதா.
''சரி ஸார்... ஸாரி.... சரிப்பா. நான் போய் கொஞ்சம் சமையலறையில சுத்தம் பண்ண வேண்டியதிருக்கு. பண்ணிட்டு வந்துடறேன்...''
''சரிம்மா.''
ராதா சமையலறைக்குள் சென்றாள்.
சமையலறை சரியான பராமரிப்பும், சுத்தமும் இல்லாத நிலை கண்டு, காஃபி போடப் போன போதே தலை சுற்றியது அவளுக்கு. எல்லா அலமாரிகளிலும் எக்கச்சக்கமான தூசி. அழகான, வசதியான ஸ்டவ், தன் அழகை இழந்து பொங்கி வழிந்த பால் கறையுடன் மிகவும் மோசமாக இருந்தது.
ஃப்ரிட்ஜ் முதற்கொண்டு அத்தனை இடங்களிலும் கரப்பான் பூச்சிகள், எவ்விதக் கவலையும் இன்றி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன.
பங்களாவில் உதவிக்கென இருந்த மூன்று நபர்களும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. விஜயராகவனிடம் சொல்லி அவர்களில் இரண்டு பையன்களை வரவழைத்தாள்.
மூன்றாவது பையனை கரப்பான் பூச்சுக்கு அடிக்கும் மருந்தை வாங்கி வரச் சொன்னாள்.
பையன்களை வேலை வாங்கி, சமையலறையை சுத்தம் செய்து முடித்து, கரப்பானுக்கு அடிக்கும் மருந்தை அடித்தாள். ஏற்கெனவே இருந்த மளிகைப் பொருட்கள் அத்தனையும் காலாவதியாகிப் போனது மட்டுமல்லாமல் கெட்டுப் போயிருந்தபடியால் அவற்றை குப்பையில் கொட்டச் செய்தாள்.
சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய அறிவுரைகளையும் மென்மையாக எடுத்துக் கூறினாள்.
''இன்னிக்கு மருந்து வாசனை அடிக்கும். அதனால இங்கே சமைக்க முடியாது. வேற எங்கயாவது இன்னொரு சமையலறை இருக்கா தம்பி?'' அங்கிருந்த பையன்களில் ஒருவனிடம் கேட்டாள்.
''இருக்குக்கா. விருந்தாளிங்க வந்தா விருந்து சாப்பாடு பண்றதுக்காக ஒரு சமையலறை இருக்கு. அது பூட்டியேதான் இருக்கு. அதனால அது... சுத்தமாத்தான்க்கா இருக்கும்.... வாங்க நான் காட்டறேன்...''
''சரி. நான் லிஸ்ட் போட்டுத் தரேன். வாங்கிட்டு வா. ஐய்யாவுக்கும் அம்மாவுக்கும் சமையல் பண்ணணும். சீக்கிரமா வாங்கிட்டு வரணும்'' என்ற ராதா, மளிகை, காய்கறி, இதர ஜாமான்களின் தேவைக்கு லிஸ்ட் எழுதினாள். அவளிடம் கொடுத்தாள்.
''ஐயாட்ட பணம் வாங்கிட்டு போ...''
''சரிக்கா'' என்ற அவன் அங்கிருந்து அகன்றான். மற்ற இருவரை வைத்து ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்தாள். இரண்டு அறைகளைக்கூட முடிக்க முடியவில்லை அத்தனை அழுக்கு! இதற்குள் கடைக்கு சாமான் வாங்க போன ஈஸ்வர் என்ற அந்தப் பையன் ஜாமான்களுடன் வந்தான். மடமடலென சமைத்தாள் ராதா.
வேலை செய்யாமல் எத்தனை பேர் அங்கே சாப்பிடுகிறார்கள் என்பதையும் கேட்டு, அவர்களுக்கும் சேர்த்து சமைத்தாள்.
அமிர்த்தம்மாவிற்கு கோதுமை ரவையில் உப்புமா தயாரித்தாள். பருப்பு, சாம்பார், ரசம், பொரியல், அப்பளம் என அறு சுவையாக சமைத்தாள்.
உதவிக்கென அங்கே பணிபுரியும் மூன்று நபர்கள் ஈஸ்வர், வேலன், விஷ்ணு ஆகியோரிடம் பேசிக் கொண்டே சமைத்தாள். ஈஸ்வர், வெங்காயம் நறுக்குவதில் வல்லவனாக இருந்தான். வேலன் காய்கறிகளை மிக நேர்த்தியாக வெட்டிக் கொடுத்தான். விஷ்ணு, சமையல் வேலை ஒவ்வொன்றாக முடிய, முடிய அவ்வப்போது பாத்திரங்களைக் கழுவி எடுத்தான்.
''மூணு பேரும் நல்லா வேலை செய்யறீங்க. சுத்தமாகவும் செய்யறீங்க. பின்ன ஏன் இத்தனை நாளா இந்த பங்களாவை சரிவர பராமரிக்காம இப்பிடி அழுக்கா வச்சிருக்கீங்க? வயசுப் பசங்க நீங்க... ஓடியாடி உழைக்கற வயசுல... பட்டப்பகல்ல தூங்கிக்கிட்டிருக்கறது உங்களுக்கே தப்புன்னு தோணலியா? மாசம் பிறந்தா வாங்கற சம்பளத்துக்கும், மூணு வேளை வயிறாற சாப்பிடறதுக்கும் அதுக்குரிய வேலைகளை செய்ய வேண்டாமா? உழைக்காம வாங்கற காசும், தங்காது. உழைக்காம சாப்பிடற சாப்பாடும் செரிக்காது.''
''அதில்லக்கா. இங்கே சமையலுக்கு இருக்கறவங்க, இங்கே இருந்து மளிகை ஜாமான், அரிசி, பருப்பு வகைகளைத் திருடிக்கிட்டி போறதுக்காக எங்களை சமையலறைக்குள்ளயே வர விடமாட்டாங்க. பெரியவருக்கும், பெரியம்மாவுக்கும் ஏனோ தானோன்னு எதையோ சமைப்பாங்க. எங்களுக்கு புளிக்குழம்புங்கற பேர்ல மோசமான ஒரு குழம்பு வச்சு, சாப்பாடு போடுவாங்க. அது கூட அரை வயித்துக்குதான் போடுவாங்க...'' ஈஸ்வர் விளக்கம் கூறினான்.
''இதை நீங்க ஐய்யாகிட்ட சொல்லி இருக்கலாமே?...''
''ஐய்யோ.... ஐய்யாட்ட சொல்லிட்டா... எங்க வேலைக்கு உலை வச்சுடுவேன்னு பயமுறுத்தினாங்க...''
''ஓகோ... வீட்ல இருக்கறவங்க, சாப்பிடறதுக்கு உலை வைக்காம... ஐய்யாகிட்ட உங்க வேலைக்கு உலை வைப்பாங்களாமா...?''
''ஆமாக்கா. எங்க ஊர்ல என்னோட சம்பளத்தை நம்பி மூணு ஜீவன் இருக்காங்கக்கா. சாப்பாடு அரை வயித்துக்கு கிடைச்சா கூட பரவாயில்ல... சம்பளப் பணத்தையாவது ஊருக்கு அனுப்பி வைக்கலாமேன்னு... அவங்கக் காட்டிக் குடுக்கறதில்லைக்கா...''
''இனி அவங்க வேலைக்கு வருவாங்களா... மாட்டாங்களா?''
''வருவாங்கக்கா. புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்து வேலை செய்யறாங்க. சேர்ந்து திருடிட்டு போறாங்க. கேக்கறதுக்கு இங்க யாரும் ஆள் இல்லை. அதனால கண்டிப்பா வருவாங்க... அவங்க பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைன்னு லீவு போட்டிருக்காங்க...'' ஈஸ்வரைத் தொடர்ந்து வேலன் பேசினான்.
''சரி, அவங்க வரட்டும். வராம போகட்டும். ஐய்யாகிட்ட நான் பேசறேன். அவங்க திருடறாங்கங்கறதை நிரூபிக்க முடியுமா?...''
''நிச்சயமா முடியும்க்கா. மாசத்துக்கு நாலு தடவை வாங்கின மாளிகை பொருள், காய்கறிகள் பில் எல்லாமே இருக்கு. திரும்ப திரும்ப சமையல்கட்ல இருக்கற சாமான்களையே வாங்கச் சொல்வாங்க. ஏற்கெனவே இருக்கற சாமான்களை புருஷன் மூலமா வீட்டுக்குக் குடுத்தனுப்பிடுவாங்க. அந்த பில்களை பத்திரமா வச்சிருக்கேன். அந்த சமையல்காராம்மா வள்ளியக்காவோட புருஷன் கந்தன், சாமான்களைக் கடத்தறதுக்கு செக்யூரிட்டியும் உடந்தை. அதனால... அந்த ஸெக்யூரிட்டியை ஐய்யா ரெண்டு தட்டு தட்டினார்ன்னா... உண்மையைக் கக்கிடுவான்...'' விஷ்ணு... மிக உஷ்ணமாகப் பேசினான்.
''ரெண்டு தட்டு என்ன... ஒரு தட்டுலயே கீழே சாய்ஞ்சுடுவான் அந்த செக்யூரிட்டி. அந்த அளவுக்கு பகல்லயும் தண்ணி அடிச்சிடுக்கான்...''