பூவிதழ் புன்னகை - Page 42
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
'எங்கிருந்தாலும் வாழ்க' ரீதியில் பிள்ளைகளை அவரவர் போக்கில் விட்டபோதும், அவர்கள், பெற்றோரை நலமாக வாழ்கின்றனரா என்று வந்து பார்ப்பது இல்லை. தொலைபேசி தொடர்பைக் கூட விரும்பாமல் ஏதோ கடனுக்கு இ.மெயில் அனுப்பி விட்டு வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.
பங்களாவையும் விற்று விட்டு சிறிய வீடு வாங்கி குடி புகலாம் என்றால் அமிர்தா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 'நீங்கள் ரத்தம் சிந்தி கட்டிய இந்த வீட்டில் நீங்கள் பெற்ற பிள்ளைகள்தான் வாழவில்லை... நீங்கள் தாலி கட்டிய நானாவது என் உயிர் மூச்சு உள்ளவரை வாழ வேண்டும்'' என்று கூறி மறுத்து விட்டதால் வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், காவல்காரங்கள் என பலரை நியமித்து அந்த பங்களாவில் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் வேலைக்கு சேர்ந்த அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாய் நேர்மைக்கு புறம்பானவர்களாக இருந்தனர். மின்சாரக் கட்டணம் கட்ட அனுப்பினால், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது, உரம் வாங்குவதற்கு தோட்டக்காரனிடம் பணம் கொடுத்தால் அவன் அந்தப் பணத்தில் உரமே வாங்காமல் வாங்கியதாக பொய் சொல்வது, சமையல்காரர்கள். மளிகைப் பொருட்களை திருடிக் கொண்டுபோவது, வீட்டு வேலை செய்பவர்கள் வீட்டுப் பொருட்களைத் திருடிக் கொண்டு போவது என்று அனைவரும் கள்ளத்தனம் செய்து கொண்டிருந்தனர். ஆட்களும் நிலைப்பதில்லை. சமையல்காரி மளிகைப் பொருட்களைத் திருடினாலும் பரவாயில்லை, குறித்த நேரத்திற்கு சமைத்துக் கொடுப்பதும் இல்லை. உண்மை என்பதே இல்லாத ஊழியர்களை வைத்துக் கொண்டு அல்லாடினர் விஜயராகவன். பணியாளர்கள் நீங்கலாக வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் உறவுக் கூட்டம், அவரது பங்களாவில் 'டேரா' அடிப்பதும் வழக்கம். வந்து, தங்கி, சாப்பிட்டுவிட்டு போனால் கூட அவர் கவலைப்படமாட்டார். வருபவர்கள், வேலைக்காரர்களிடம் புரணி பேசுவது, அவர்களை திட்டி அதிக வேலை வாங்குவது. உறவினர்களில் சிலரும் கூட பணம், பொருட்கள் இவற்றைத் திருடிக் கொண்டு போகும் வெட்கக் கேடும் நடைபெற்றது.
அங்கே பணிபுரிபவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை மேற்பார்வை செய்வதற்கும், விஜயராகவனையும், அமிர்தாவையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதற்கும் ஏற்ற ஒரு ஆண் அல்லது பெண் பணியாளரைத் தேடிக் கொண்டிருந்தார் விஜயராகவன். தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். அது போல அமிர்தாவின் தங்கை மகனான ஸ்ரீநிவாஸிடமும் சொல்லி வைத்திருந்தார்.
ராதாவின் அறிமுகம் கிடைத்து, அவளது மெஸ்ஸில் சாப்பிட ஆரம்பித்தபின் ராதாவைப் பற்றிய நல்ல, உயர்வான குணநலன்களைப் புரிந்து கொண்டான் ஸ்ரீநிவாஸ். ஆகவேதான் விஜயராகவனின் குடும்ப சூழல் பற்றி அவளிடம் விளக்கி, அவளை விஜயராகவனின் பங்களாவிற்கு வேலைக்கு அழைத்தான் ஸ்ரீநிவாஸ். வினோத்திடம் ஆலோசித்தபின் கூறுவதாக ராதா சொல்லி இருந்தபடியால் அவளது பதிலுக்காகக் காத்திருந்தான் ஸ்ரீநிவாஸ்.
48
வினோத் விசாரித்த வரையில், செல்வந்தர் விஜயராகவன், அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான விஜயராகவன்தான் என்பது தெரிய வந்தது. ஸ்ரீநிவாஸிடமும் பேசினான். உடனே ராதாவின் வீட்டிற்கு சென்றான். முறைப்படி, வீட்டை காலி செய்வதற்கு வீட்டு உரிமையாளரிடம் என்னென்ன தெரிவிக்க வேண்டுமோ... அவற்றைத் தெரிவித்தான்.
ஒண்றாம் தேதி பிறப்பதற்கு ஒரு வாரம் இருந்தது. அதற்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று ராதா கூறினாள். அதன்படி உரிமையாளரிடம் தேதியை சொல்லிவிட்டு வீட்டு ஜாமான்களைக் கட்ட ஆரம்பித்தாள்.
ஸ்ரீநிவாஸ் வந்தான்.
''ராதாக்கா, ரொம்ப தேங்க்ஸ்க்கா. எங்க பெரியமா, பெரியப்பாவுக்கு உதவியா நீங்க அங்கே குடி போகப் போறீங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்ளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உங்களால அவங்களும் நல்லா இருப்பாங்க. அவங்களால நீங்களும் நல்லா இருப்பீங்க...''
''நல்லா இருப்போம்ங்கற நம்பிக்கையிலதான் நானும் கிளம்பறேன். வினோத்துக்கும் தெரிஞ்சவங்க வீட்ல வேலைக்குப் போறதுல எனக்கு நிம்மதி...''
''ஆமா ராதா... அந்த ஃபேமிலி பத்தி எனக்கு நல்லா தெரியும். அவங்களோட துரதிர்ஷ்டம், அவங்க பிள்ளைங்க ரெண்டு பேரும் வெளிநாட்ல செட்டில் ஆகிட்டாங்க. அது கூட பரவாயில்லை. வெளிநாட்டுக்குப் பறந்து போயிட்டா... பெத்தவங்க மேல இருக்கற பாசம் கூடவா பறந்துடும்? தான், தன் சுகம்ன்னு அவங்க போக்குல அவங்க வாழறாங்க. சகல வசதிகளோட வாழ வச்சு, முழுமையான சுதந்திரம் குடுத்து வளர்த்து, பிள்ளைங்களை, அவங்க இஷ்டப்பட்ட படிப்பை படிக்க வச்சு, வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு படிக்கறதுக்கும் அனுப்பி வச்சு... எல்லாம் செஞ்ச பெத்தவங்களுக்கு எதுவுமே செய்யாம இருக்கறது எந்த வகையில நியாயம்? விஜயராகவன் ஸாருக்கு இவ்ளவு பெரிய பங்களா, இன்னும் சில வீடுங்க, நிலம், ஏகப்பட்ட பணம் இதெல்லாம் அவருக்கு பூர்வீக சொத்து மூலமா வந்தது கிடையாது. அவரே உழைச்சு, பாடு பட்டு சம்பாதிச்சது. அவரோட கடுமையான உழைப்பில அதிர்ஷ்ட தேவதையோட அருளும், ஆண்டவன் அருளும் சேர்த்து... அவர் இவ்ளவு சொத்துக்களுக்கு அதிபதியா இருக்கார். என்னதான் கணக்கிலடங்காத சொத்துக்கள் இருந்தாலும் 'நோயற்ற வாழ்வு'ங்கற குறைவற்ற செல்வம்தான் மனுஷங்களுக்கு தேவையானது. அதுமட்டுமல்ல... பெத்த பிள்ளைங்களோட பந்தமும், பாசமும் கூட பெரிய சொத்துதான்...''
''வினோத் அண்ணா... நான் சின்னப் பையன். இருந்தாலும் சொல்றேன். பெத்தாதான் பிள்ளைங்களா? மத்த பிள்ளைங்ககூட அவங்களுக்கு சேவை செய்யலாம். அவங்க மேல பாசம் வைக்கலாம். ஆனா... எங்க பெரியம்மா, பெரியப்பாவுக்கு உறவுக்காரங்க கூட அன்பு செலுத்தலை...''
''அதை நினைச்சாத்தான் எனக்கும் கஷ்டமா இருக்கு. பிள்ளைங்களுக்கு பணத்தோட அருமையும், மதிப்பும் தெரிய வச்சு வளர்க்கணும்ங்கற பாடம் தெரிஞ்சுருக்கு நமக்கு. இஷ்டப்படி செலவு செய்ய பணத்தை அள்ளி விட்டா... மனக் கஷ்டப்பட்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு பெத்தவங்க தள்ளப்படறாங்க. மத்தவங்களோட அனுபவத்துல நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்குது...''
''எனக்கும், எங்க குடும்பத்துக்கும் நிறைய உதவி செஞ்சுருக்கார் பெரியப்பா. தருமம் தலை காக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனா... அது... பெரியப்பா விஷயத்துல நடக்கலியே... ''
''நிச்சயம் தருமம் தலை காக்கும். அது பிள்ளைங்க ரூபத்துலதான் காக்கணுமா என்ன? வேற யார் ரூபத்துலயுமே காக்கலாமே...''
''நீங்க சொல்றதும் சரிதான் வினோத் அண்ணா. நான் கிளம்பறேன். ராதாக்கா, வீடு மாத்தற விஷயமா எந்த ஹெல்ப் வேணும்ன்னாலும் கேளுங்க அக்கா...''
''சரிப்பா.''
ஸ்ரீநிவாஸ் கிளம்பினான்.
ராதா, பெருமூச்சு விட்டாள். ''வீடு விட்டு வீடு... ஓடு... ஓடு...ன்னு கடவுள் விரட்டறார் என்னை...''
''எல்லாமே நன்மைக்கேன்னு நினைக்கணும். நம்பணும். முன்னேற்றப் பாதையை நோக்கி போறதுக்குத்தான் இந்த மாற்றம்ன்னு நம்பு. நல்லதே நடக்கும். அடங்கிக் கிடந்த நீ.... முன்னவிட இப்ப எவ்ளவோ தைரியசாலியாயிட்டில்ல... அதைப்பத்தி உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. உன்னோட வேலைகளோட சேர்த்து ஸ்வாதியோட படிப்பு பத்தியும் அவளுக்கு சொல்லிக்கிட்டே இரு.''