Lekha Books

A+ A A-

பூவிதழ் புன்னகை - Page 41

poovithal punnagai

'அன்னிக்கு ஒரு நாள் ராதா என்னோட மொபைலில் கூப்பிட்டாளே... அது அவளோட நம்பரா இருக்குமா? அல்லது பூத்ல இருந்து பேசி இருப்பாளா?' என்று யோசித்தவனுக்கு திடீரென ஒரு யோசனை பொறி தட்டியது.

'ராதாவின் அட்ரஸை, ஸ்வாதி என்னோட மொபைலுக்கு மெஸேஜ் அனுப்பி இருந்தாளே... அந்த நம்பரும்... ராதா கூப்பிட்ட நம்பரும் ஒரே நம்பரா இருந்தா... அது ராதாவோட நம்பராகத்தான் இருக்கும். எதுக்கும் அந்த நம்பரில் கூப்பிட்டுப் பார்ப்போம்' என்று யோசித்தவன், உடனே அதை செயலாற்றினான்.

மறுமுனையில் ராதாவின் மொபைல் 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வைக்கப்பட்டிருந்தது.

'இவளுக்கெல்லாம் எதுக்கு மொபைல்' என்று கோபம் தலைக்கேறியது திலீப்பிற்கு.

மறுநிமிடம் தன் கோபத்தைத் தணித்துக் கொண்டான்.

'நான் பாட்டுக்குக் கோபமாகப் பேச... அவளும் என்னைப் பழி வாங்கறதுக்காக ஃபைலைத் தர மறுத்துட்டாள்ன்னா... அல்லது 'இல்லை'ன்னு சொல்லிட்டாள்ன்னா... ' என்ற பயத்தில் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

'அவ கேட்டபடி ஸ்வாதியோட பர்த் ஸர்ட்டிஃபிகேட்டை நான் அவளுக்கு குரியர்ல அனுப்பினேன்ல... அதனால அவளும் குடுத்துடுவா...' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

அப்போது அங்கே கையில் 'டீ' கப்புடன் மிருணா வந்தாள். பீரோவின் முன்னால் அனைத்துப் பொருட்களும் கலைத்துப் போட்டிருப்பதை பார்த்து கடுப்பானாள்.

''என்ன டார்லிங் இது... இப்பிடி கலைச்சுப் போட்டிருக்கீங்க ? 'டீ'யை குடிச்சுட்டு முதல் வேலையா இதையெல்லாம் 'நீட்'டா அடுக்குங்க.''

''நான் ஒரு முக்கியமான ஃபைலை தேடினேன். மென்ட்டல்லி ஐ அம் டையர்ட். நீயே அடுக்கிடேன்...''

''ம்கூம். முடியாது. இப்பவே... நீங்க அடுக்கியாகணும்.'' கட்டளை இட்டாள் மிருணா.

திலீப்பின் வீட்டிற்கு குடியேறிய பிறகு மிருணாவின் கை ஓங்கி இருந்தது. திலீப்பை மயக்கி, அந்த வீட்டை அவள் தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டாள். திலீப் ஆபீஸில் லோன் போட்டு வாங்கிய கார், பைக் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

மகுடிக்கு மயங்கின பாம்பு போல மிருணாவின் மோக வலைக்குள் மயங்கி சிக்குண்ட திலீப், தன்னை சுற்றி நடைபெறும் சதி வேலைகளைப் பற்றி புரிவதும், புரியாமலும், அறிவதும் அறியாமலும் அசட்டையாக இருந்தான்.

மிருணா 'இப்போதே அடுக்கியாக வேண்டும்' என்று கட்டளை இட்டதும் அடி பணிந்தான். அடுக்க ஆரம்பித்தான். ராதாவிடம் ஆதிக்கம் செலுத்திய அவன், மிருணாவிடம் அவளது அதிகாரத்திற்கு அடங்கி ஒடுங்கினான்.

இது விதியின் விளையாட்டா? திலீப்பின் மதி கெட்ட தன்மையின் விளைவா? சுயமரியாதையை இழக்கும் அளவிற்கு அவனை அலைக்கழித்தது அந்நியப் பெண்ணின் மீது அவன் கொண்ட அடங்காத மோகம்! தணியாத தாகம்!

47

மிகப் பெரிய பங்களா! பற்பல கற்பனைகளே கருத்தில் கொண்டு, 'கட்டும் வீடு இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும்' என்று சிந்தித்து கட்டிய கனவு இல்லம் 'ஆராதனா' எனும் பெயரிடப்பட்ட அந்த பங்களா!

பங்களாவின் உரிமையாளர் விஜயராகவன். அவரது இளம் வயதிலேயே பெரும் பணம் ஈட்டு, தன் உழைப்பின் உருவகமாய், தனது உயர்வின் அடையாளச் சின்னமாய் பார்த்து... பார்த்து... உருவாக்கிய... பங்களா அது!

மகளுக்கென்று தனி அறை, மகனுக்கென்று தனி அறை, தனக்கும் தன் மனைவிக்குமான அறை, விருந்தினர் தங்குவதற்கென இரண்டு அறைகள், டி.வி., வீடியோ, திரைப்படம் பார்ப்பதற்கென 'ஹோம் தியேட்டர்' என்றழைக்கப்படும் தனி அறை, 'ஜிம்'மில் இருக்கக் கூடிய அனைத்து உடல் பயிற்சி இயந்திரங்களும் வைக்கக் கூடிய அறை, வீட்டிலேயே நடத்தப்படும் 'கெட் டு கெதர்' எனும் விருந்து நடைபெறுவதற்காக தனி அறை, பூஜை அறை, மனைவி அமிர்தா அவருடைய தோழிகளுடன் கலந்துரையாடுவதற்கென தனி அறை, வீட்டினர் மட்டும் சாப்பிடுவதற்கென்று ஓர் உணவு சாப்பிடும் அறை,  விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதற்கென மேலும் ஓர் சாப்பிடும் அறை என்று ஏகப்பட்ட அறைகள்! அவை அனைத்தும் மிக மிக விசாலமானதாக, நவீன வசதிமிக்க சாதனங்கள் கொண்டதாக, பிரம்மாண்டமானதாக பிரமிப்பூட்டுவதாக அமைத்திருந்தார் விஜயராகவன்.

மகள், மகனது அறையில் உடை உடுத்துவதற்கு ஓர் உள் அறை, முக ஒப்பனை செய்து கொள்வதற்கென ஒரு உள் அறை, மிகப் பெரிய 'பாத் டப்' பொருத்தப்பட்ட அழகிய குளியலறையை அமைத்திருந்தார்.

மகன் அரவிந்த் மீதும், மகள் அட்சயா மீதும் தன் உயிரையே வைத்திருந்தார் விஜயராகவன். அவரது அன்பை எல்லாம் கொட்டி அவர்களை அபிஷேகம் செய்யும் விதமாக அந்த அழகிய இல்லத்தைக் கட்டி இருந்தார். மகன், மகள் இருவரும் அங்கே உள்ள சகல வசதிகளையும் அனுபவித்து வளர்ந்து, எதிர்காலத்தில் அந்த பங்களாவை அவர்களே பராமரித்து, பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து அவர்கள் அங்கே வாழ்வார்கள். பேரன், பேத்திகள் என குடும்பம் பெருகும் பொழுது அவர்களுக்கும் அறைகள் கட்ட வேண்டும் என்கிற வரை கற்பனையில் மிதந்து, மனக் கோட்டை கட்டி இருந்தார்.

ஆனால்... நாளடைவில் அவரது அந்த மனக்கோட்டை... மண்கோட்டையாக சரிந்தது. காரணம்? அவரது மகள் அட்சயாவும், அரவிந்தும் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்னரே காதலில் விழுந்து படிப்பை முடித்தபின் கல்யாணமும் செய்து கொண்டனர். அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட அட்சயாவின் கணவனும், அரவிந்தின் மனைவியும் வெளிநாட்டுக் குடி உரிமை பெற்றவர்கள். தங்கள் வாழ்வை வெளிநாட்டில் நடத்த வேண்டியவர்கள். எனவே... விஜயராகவனின் கனவு கலைந்தது. கற்பனை வளம் சரிந்தது. இதன் காரணமாக எழுந்த மன உளைச்சலால் அவரது உடல்நலம் குன்றியது. ஒரு ஆணான அவருக்கே இந்நிலை எனில், ஒரு பெண்ணான அமிர்தா?

துடித்தாள்... துவண்டாள்... துயரக்கடலில் நீந்தினாள். விஜயராகவனைவிட அமிர்தாவின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆகவே நாளடைவில் படுத்த படுக்கையில் விழுந்தாள்.

விஜயராகவன் தன் மனைவி அமிர்தா மீது உயிரையே வைத்திருந்தார். பிள்ளைகளுக்கு அமிர்தா என்கிற பெயரில் முதல் எழுத்தைக் கொண்டு பெயரிட்டதற்கு அதுவே காரணம். அமிர்தா படுத்த படுக்கையில் விழுந்திருக்க, விஜயராகவன் ஓரளவு நலம் பெற்று, கையில் தடியுடன் நடக்கும் அளவு முன்னேற்றம் அடைந்தார். எனினும் சாதாரணமாக அவரால் இயங்க முடியவில்லை.

எனவே, அவரது தொழில் நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்றார். மகளும், மகனும் தனது நிறுவனங்களை பொறுப்புடன் எடுத்து, தொடர்ந்து நடத்தி, தான் பாடுப்பட்டு உருவாக்கிய அவற்றை மேம்படுத்துவார்கள் என்ற அவரது நம்பிக்கை தகர்ந்தது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel