பூவிதழ் புன்னகை - Page 38
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8116
பெரியமாவுக்கும் அப்பிடித்தான். அவங்களை டாக்டர் சில உணவுகள்ல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். அதெல்லாம் பார்த்து பார்த்து செய்யணும். கேக்கற சம்பளத்தைக் குடுத்து வேலைக்கு ஆள் வச்சாங்க. ஆனா... அவங்கள்ல்லாம் ஏனோ தானோன்னு பார்த்துக்கிட்டாங்களே தவிர உண்மையான அக்கறையோட பார்த்துக்கலை. மனசளவுல ரொம்ப ஏங்கிப் போய் இருக்கற அவங்க ரெண்டு பேரையும் உள்ளன்போட கவனிச்சுக்க யாருமே இல்லை. பெரிய பங்களா! அது... தூசு பிடிச்சுப் போய் கிடக்கு. பெரிய தொட்டம்! செடிகள்ல்லாம் வாடிப் போய் சருகா மாறி இருக்கு. சமையலுக்கு ஆள் இருக்காங்க. ஆனா... சமயம் பார்த்து சமைச்சுக் குடுக்கறதில்லை.
நர்ஸ் ஒருத்திக்கு நிறைய சம்பளம் குடுத்து வச்சிருந்தாங்க. அவ எப்பப் பார்த்தாலும் மொபைல்ல பேசறதும், மீதி நேரம் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு குறட்டை விட்டு தூங்கிக்கிட்டிருந்தா. அவளை அனுப்பிட்டாங்க. சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஆள் இருக்கு. ஆனா அவங்க சரியான ஆட்கள் இல்லை. பெரியம்மா, பெரியப்பாவை நல்லபடியா, நேர்மையான மனசோட கவனிச்சுக்க ஒரு நல்ல வேலையாள் தேவைப்படுது. வேலையாள்ன்னு சொல்றதை விட, நல்ல துணை தேவைப்படுதுன்னு சொல்லலாம்.
என் அம்மாவோட பெரியம்மா பொண்ணுதான் நான் சொல்ற பெரியம்மா. என்னோட அம்மா கல்யாணமாகி மும்பையில குடியேறிட்டதுனாலயும், எங்க குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பெரியமாவுக்கு உதவி செய்ய முடியலை... என்ன சூழ்நிலைன்னு யோசிக்கறீங்களா? எங்க அப்பா, என் அண்ணன் தங்கச்சிக்கெல்லாம் எங்க அம்மா இல்லாம எதுவும் முடியாது. நம்ப குடும்பத்தை விட்டுட்டு இன்னொரு குடும்பத்தைப் போய் கவனிச்சுக்க முடியாதில்ல... அதனால எங்களால ஹெல்ப் பண்ண முடியலை. என்னைப் படிக்க வைக்க பெரியம்மா, பெரியப்பா நிறைய பணம் குடுத்து உதவி பண்ணி இருக்காங்க.
எங்க அப்பாவுக்கு திடீர்னு தொண்டையில ஒரு பெரிய ஆப்ரேஷன் பண்ண வேண்டியதாயிடுச்சு. லட்சக்கணக்குல செலவு ஆகும்ன்னு டாக்டர்ஸ் சொன்னப்ப, பெரியம்மா, பெரியப்பாதான் பணம் குடுத்து அந்த ஆபரேஷனை பண்ணிக்க வச்சாங்க. அவங்களுக்கு நன்றிக் கடனா இதுவரைக்கும் எதுவுமே செய்யலியே... செய்ய முடியலியேன்னு எங்கம்மா அடிக்கடி புலம்பிக்கிட்டே இருக்காங்க. நான் இங்கே பெங்களூருக்கு படிப்புக்காக வந்தப்புறம் அவங்க வீட்லதான் தங்கி இருந்து காலேஜ் போய்கிட்டிருந்தேன். ஆனா... அந்த பங்களாவுல நடக்கற அநியாயங்களைப் பார்த்துக்கிட்டு என்னால அங்கே இருக்க முடியலை. அங்கே வேலை செய்றாங்க எனக்கும் சரிவர சாப்பாடு குடுக்க மாட்டாங்க. முகத்தைத் தூக்குவாங்க. அப்பிடியெல்லாம் முகத்தை 'உர்'ன்னு வச்சுக்கிட்டு சாப்பாடு குடுத்தா என்னால சாப்பிட முடியாது. எனக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால 'காலேஜ் ரொம்ப தூரமா இருக்கு'ன்னு ஒரு சாக்கு சொல்லிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சின்னதா ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்து தங்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா... சாப்பாடுதான் எனக்கு பிரச்னையா இருந்துச்சு. இப்ப... உங்க கிட்ட சாப்பிட வந்தப்புறம் என்னோட வாய்க்கும் ருசியா இருக்கு. வயித்துக்கும் பிரச்னை இல்லாம சுகமா இருக்கு. எங்க பெரியம்மா, பெரியப்பாவுக்கு ஏதாவது வழியில ஹெல்ப் பண்ணனுமேன்னு யோசிச்சப்ப... ''
கதை கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்த ராதா, தடைப்பட்டுப்போன ஸ்ரீநிவாஸின் பேச்சைத் தொடரும்படி கேட்டாள்.
''என்ன ஸ்ரீநிவாஸ்? ஏன் நிறுத்திட்ட? மேலே சொல்லு...''
''அது... அது... வந்துக்கா... நீங்க தப்பா நினைக்கலைன்னா... பெரியம்மாவோட பங்களாவுல..... வே... வேலைக்கு... சேர்ந்துக்கறீங்களா?... பெரியம்மா, பெரியப்பா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அவங்களை உங்களால நல்லபடியா கவனிச்சுக்க முடியும். சாப்பிட வர்ற எங்களை எவ்ளவு அன்பா நடத்தறீங்க? காசுக்காக சமைச்சுப் போட்டாலும், பாசத்தோட நீங்க கவனிச்சுக்கற அந்த பரிவு... என் மனசைத் தொட்டுடுச்சு. பெரியமா, பெரியப்பாவை உங்களைவிட வேற யாரும் நல்லா பார்த்துக்க முடியாது... நிறைய பேர் சாப்பிட வந்தா... இந்த வீடும் பத்தாது... மெஸ்ஸை பெரிசா விரிவாக்க... பணமும் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க.... நீங்க... பெரியமாவோட பங்களாவுல வசதியா தங்கிக்கலாம். இப்ப நீங்க இந்த மெஸ்ல சம்பாதிக்கறதைவிட அதிகமா சம்பளம் தருவாங்க. இதைப்பத்தி உங்ககிட்ட கேக்கறதுக்குதான் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்... நீங்க சம்மதிச்சா... நான் இந்த ஞாயித்துக்கிழமை பெரியமா, பெரியப்பாவைப் பார்த்து பேசிட்டு வரேன்....''
''இதுக்கு என்னால உடனே சம்மதம் சொல்ல முடியலை ஸ்ரீநி. வினோத்ட்ட இதைப்பத்தி கலந்து பேசணும். அதுக்கப்புறம் உனக்கு பதில் சொல்றேன். நீ சொல்ற மாதிரி எனக்கு சாதகமாகத்தான் இருக்கு. ஆனாலும் இன்னொரு குடும்பத்துக்குள்ள போய்... அங்கே உள்ள நிலைமைகளை புரிஞ்சுக்கிட்டு அங்கே வேலை செய்ய முடியுமான்னு நிறைய யோசிக்கணும். நானும், ஸ்வாதியும் இங்கே சுதந்திரமா இருந்து பழகிட்டோம். போற இடத்துல வேலை பளு இருந்தா கூட தாங்கிக்கலாம். ஆனா திரும்பத் திரும்ப பிரச்னைகளை சுமக்க நேரிந்தா... கஷ்டமாயிடும். வினோத்ட்ட பேசிட்டு ஒரு முடிவு எடுத்துடறேன். அதுக்கப்புறம் உனக்கு சொல்றேன். உண்மையான அன்பு கிடைக்காம தவிக்கறவங்களுக்கு... அன்பைக் குடுக்க தான் தயாரா இருக்கேன். அது கூட நீ அவங்களை பத்தி சொன்னதுனாலதான். பார்க்கலாம். வினோத் வரட்டும். சரியா?...''
''சரிக்கா. உங்க பதில் 'சரி'ன்னு சொல்ற பதிலா இருந்தா... எனக்கும், எங்க அம்மாவுக்கும் எங்க பெரியம்மா, பெரியப்பாவுக்கு எங்களால முடிஞ்ச ஒரு பெரிய உதவி செஞ்ச திருப்தி இருக்கும். இப்ப நான் கிளம்பறேன்க்கா.''
''சரிப்பா ஸ்ரீநி. ''
தோளில், தன் பையைப் போட்டுக் கொண்டு கிளம்பினான் ஸ்ரீநிவாஸ்.
44
பள்ளிக் கூடத்தில் இருந்து திரும்பி வந்த ஸ்வாதி, கையில் இருந்த புத்தகப் பையையும், மதிய உணவு கொண்டு போன டிபன் பாக்ஸ் இருந்த பையையும் 'தொப்' என்று போட்டாள்.
தினமும் வீட்டிற்கு வந்ததும் 'சாப்பிடறதுக்கு என்னம்மா வச்சிருக்கீங்க' என்று கேட்கும் ஸ்வாதி அன்று வழக்கத்திற்கு மாறாக கால்கள் இரண்டையும் மடக்கி, முழுங்கால்களைக் கைகளால் கட்டிக் கொண்டு தலையை கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டு மௌனமாக இருந்தாள்.
இதைப் பார்த்த ராதா அவளருகே சென்றாள். ''என்னம்மா ஸ்வாதி, உடம்புக்கு ஏதும் பண்ணுதா? என்ன ஆச்சு?'' ராதா கேட்டதும் கண் கலங்கினாள் ஸ்வாதி. ஆனால் முகத்தில் கோப ரேகைகளும் தென்பட்டன.
''என்னோட 'பர்த் ஸர்ட்டிஃபிகேட்' கண்டிப்பா வேணும்னு ஸ்கூல்ல சொல்லிட்டாங்க. அப்பாவோட ஜாமான்களோட என்னோட பர்த் ஸர்ட்டிபிகேட் இருந்த கவரும் போயிடுச்சுன்னு சொன்னீங்க. இன்னும் ரெண்டு நாள்ல்ல கண்டிப்பா எனக்கு வேணும்மா... எப்பிடிம்மா... அவர்ட்ட கேட்டு வாங்கப் போறோம்...?''