பூவிதழ் புன்னகை - Page 36
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8116
''குடுத்துடலாம். ஓனர்ட்ட ஏழெட்டு பேர் சாப்பிட வருவாங்கங்கற விஷயத்தை சொல்லிட்டியா வினோத்...?''
''எல்லா விஷயமும் சொல்லித்தான், அவங்க நமக்கு வீட்டை காண்பிச்சிருக்காங்க.''
''அப்பிடின்னா சரி. ஆனா... அட்வான்சுக்கு என்னோட நகைகளை...''
''அதையெல்லாம் மொத்தமா உன்கிட்ட வசூல் பண்ணிடுவேன். கவலைப்படாதே...''
''நான் எந்தக் காலம் உன்னோட கடனை அடைப்பேன்? எப்பிடி அடைப்பேன்னு புரியலை...''
''என்னை அந்நியனா நினைச்சா அதைக் 'கடன்'னு சொல்லு. உன் அப்பாவோட ரத்த சம்பந்தம் உள்ளவன்னு நினைச்சா... 'கடமை'ன்னு சொல்லு...''
அதற்கு மேல் எதுவும் பேச முடியாத ராதா. அவனது தூய அன்பை நினைத்து மனம் கசிந்தாள். வீட்டு உரிமையாளரிடம் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துவிட்டு இருவரும் புறப்பட்டனர்.
41
பள்ளிக் கூடத்தில் மதிய இடைவேளைக்குரிய மணி அடித்தது. ஸ்வாதியும், மஞ்சுவும் மதிய உணவு இடைவெளியில் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். அன்றும் அவரவர் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு அவர்கள் தினமும் சாப்பிடும் மரத்தடிக்கு வந்தனர்.
ஸ்வாதியின் டிபன் பாக்ஸில் புளியோதரை மணத்தது. மஞ்சுவின் டிபன் பாக்ஸில் கிளறிய தயிர் சாதமும், உருளைக்கிழங்கு சிப்சும் இருந்தன. புளியோதரைக்கு கத்தரிக்காய் கெட்டிக் குழம்பு வைத்து அனுப்பி இருந்தாள் ராதா. பச்சை மிளகாய் மட்டுமே காரத்திற்காகப் போடப்பட்டிருந்த அந்தக் கத்தரிக்காய் குழம்பின் வாசனை நாவில் நீரூறச் செய்தது.
''எங்கப்பா ப்ரெட் ஸாண்ட்விட்ச், அல்லது தயிர் சாதம்ன்னு மாத்தி மாத்தி தினமும் டிபன் பாக்ஸ்ல வச்சு அனுப்பறார். போர் அடிக்குது ஸ்வாதிக்கா. ராதா ஆன்ட்டி சமையல்ன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்...''
''இந்தா... புளியோதரை சாப்பிடு. உனக்கும் சேர்த்துதான் அம்மா குடுத்தனுப்பறாங்க...''
தனது டிபன் பாக்ஸில் இருந்து மஞ்சுவிற்கு உணவு வகைகளை எடுத்துக் கொடுத்தாள் ஸ்வாதி. அதை சுவைத்து சாப்பிட்டாள் மஞ்சு.
'என் அம்மா... தினமும் நிறைய வகை சமையல் பண்ணுவாங்க. இப்ப... அதிகம் செலவு இல்லாத சமையலா பண்றாங்க. ஆனாலும் எவ்ளவு ருசியா பண்ணி இருக்காங்க! பாவம் மஞ்சு. எனக்காவது என்னோட அப்பா எங்ககூட இல்லாட்டாலும் என்னோட அம்மா இருக்காங்க. ஆனா... மஞ்சுவுக்கு அவளோட அம்மா இல்லாம அவ எவ்ளவு கஷ்டப்படறா? பாவம்! எங்க அம்மா நல்லவங்களா இருந்தும் என்னோட அப்பா வீட்டை விட்டுப் போயிட்டாரு. மஞ்சுவுக்கு... அவளோட அப்பா வினோத் அங்கிள் நல்லவரா இருந்தாலும் அவளோட அம்மா அவங்ககூட இல்லை...'
ஸ்வாதியின் யோசனை நீண்டது. அதைக் கலைத்தது மஞ்சுவின் குரல்.
''என்ன ஸ்வாதிக்கா? சாப்பிடாம எதையோ யோசிச்சுக்கிட்டிருக்க? சாப்பிடு. புளியோதரை பிரமாதமா இருக்கு. கத்தரிக்கா குழம்பு அதைவிட சூப்பர்...''
''நல்லா சாப்பிடு. நான் உன்னோட தயிர் சாதத்தை சாப்பிட்டுக்கறேன். நான்தான் காலைலயும், ராத்திரியும் என்னோட அம்மா சமையல் சாப்பிடறேன்ல?... அது சரி, உங்கம்மா உன்னைப் பார்க்க வருவாங்களா?''
''அடிக்கடி வரமாட்டாங்க. எப்பவாச்சும்... வருவாங்க. என் மேல பாசமா இருக்கற மாதிரி நாலு வார்த்தை அப்பாகிட்ட பேசுவாங்க. என்னையும் கொஞ்சுவாங்க. அப்பாட்ட எதையாவது சாக்கு சொல்லி, பணம் வாங்கிட்டு 'டாட்டா' சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. அவங்க வர்றதே பணத்துக்காகத்தான்.... என்னோட அப்பாவுக்கு நிறைய சம்பளம். எக்ஸ்ட்ராவா சில பிஸினஸ்ல ஃப்ரெண்ட்கிட்ட பணம் இன்வெஸ்ட் பண்ணி இருக்காரு. அப்பா ரொம்ப ரிச். அதனாலதான் அம்மா, அப்பாகிட்ட வந்து பணம்... பணம்...ன்னு கேட்டு வாங்கிட்டுப் போறாங்க... ''
''வினோத் அங்கிள் எதுக்காக உன்னோட அம்மா பணம் கேக்கறப்பயெல்லாம் பணம் குடுக்கறாரு? குடுக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? நான் ஏன் இப்பிடி சொல்றேன்னு தெரியுமா? உன்னோட அம்மா உனக்கும் எதுவும் செய்றது இல்லை. வினோத் அங்கிளுக்கும் எதுவும் செய்றது இல்லை. உங்க கூடயும் இல்லை. அதனால சொல்றேன்...''
''என்னோட அப்பா ரொம்ப நல்லவர். இளகிய மனசு உள்ளவர். பணம் நிறைய சம்பாதிச்சாலும் அந்த நல்ல மனசு இருக்கறதுனாலதான் குடுக்க முடியுது. குடுக்கறார். அவருக்கு அம்மா மேல பாசம் உண்டு. அம்மாதான் அதைப் புரிஞ்சுக்காம போயிட்டாங்க. என்ன பண்றது? நான் ஒண்ணு கேக்கறேன். அது சரியா... தப்பா...ன்னு தெரியல... உன் கூட உங்கப்பா இல்லை. என் கூட எங்கம்மா இல்லை. என்னோட அப்பாவும், உன்னோட அம்மாவும்... கல்யாணம் பண்ணிக்கிட்டா... நாம நாலு பேரும் ஒரே ஃபேமிலியா... சந்தோஷமா இருக்கலாமே...?''
''கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கற இந்த விஷயம்... நிஜம்மாவே நடந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா... இதை நாம மட்டுமே பேசி என்ன பிரயோஜனம்?...'' ஏக்கத்துடன் கூறினாள் ஸ்வாதி.
''ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சா... நான் நிச்சயமா இதைப் பத்தி அப்பாகிட்ட பேசுவேன்.''
''உங்கம்மாவாவது பிரிஞ்சு போய் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. எங்கப்பா... எங்கம்மாவை பிரிஞ்சு போறதுக்கே வேற ஒரு லேடிதான் காரணம். ஆனா... அதுக்கு முன்னாடி கூட எங்கப்பா... எங்கம்மா மேல அன்பாவே இருக்கமாட்டார். என்கிட்ட மட்டும் கொஞ்சம் பிரியமா இருந்தார். அதுவும் மாறிப் போச்சு...''
''வீட்டை விட்டே போயிட்டார்ன்னு சொன்னியேக்கா... அதுக்கப்புறம் அவர் வரவே இல்லியா...?''
''வந்தார்... வந்தார்... நாங்க இருந்த வீட்டையும் காலி பண்ணித் தரச் சொல்லி மிரட்டறதுக்காக வந்தார்...'' அந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. மனசு கஷ்டமா இருந்ததுனால உன்கிட்ட சொல்லலை. வினோத் அங்க்கிள் உன்கிட்ட சொல்லலியா...?''
''நிதானமா சொல்லிக்கலாம்ன்னு இருந்திருப்பார். இப்ப நீங்க மாத்திப் போயிருக்கற வீடு நல்லா இருக்காக்கா?''
''சின்னதா இருக்கு. ஆனா மனசுக்கு நல்லா இருக்கு. எங்கப்பா, வீட்டை காலி பண்ணச் சொன்னப்ப... எவ்ளவு கொடூரமா, கடுமையா பேசினார் தெரியுமா? அப்பிடிப்பட்ட அவரோட வீட்ல இருந்தா என்ன இல்லைன்னா என்ன? இந்த வீட்ல அம்மாவுக்கு ஏழெட்டு 'பேயிங் கெஸ்ட்' வந்தாங்க, மூணு வேளையும் எங்க வீட்லதான் சாப்பிடறாங்க. அந்த வருமானத்துலதான் அம்மா சமாளிக்கணும். நான் நல்லா படிச்சு, வேலைக்குப் போய் அல்லது பிஸினஸ் பண்ணி என்னோட அம்மாவைப் பார்த்துப்பேன்.''
''பாவம்க்கா நீ...'' அப்போது இடைவேளை முடிந்த அறிவிப்பை பள்ளிக்கூட மணி அடித்து அறிவித்தது. இருவரும் வகுப்பிற்கு கிளம்பினர்.