பூவிதழ் புன்னகை - Page 32
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
ராதா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே... திடீரென அங்கே திலீப் வந்தான். தன்னையும், ஸ்வாதியையும் தேடி, இனி அவர்களுடன் சேர்ந்து வாழத்தான் திலீப் வந்திருக்கிறான் என்று நினைத்த ராதா முகம் மலர்ந்து அவனை வரவேற்றாள்.
''வாங்க.''
''ம்... ம்...'' என்று அலட்சியமாகப் பேசினான் திலீப்.
ஸ்வாதி அவனருகே சென்று 'அப்பா' என அழைத்தாள். அவளையும் கண்டு கொள்ளவில்லை திலீப்.
''காஃபி போடட்டுமாங்க?'' அன்பாகக் கேட்ட ராதாவை துரும்பாக மதித்தான் திலீப்.
''நான் இங்கே காஃபி சாப்பிட வரலை...'' அவன் இப்படி பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சி அடைந்தாள் ராதா.
இதற்குள் திலீப்பின் மொபைல் ஒலித்தது. மறுமுனையில் மிருணா பேசினாள்.
''என்ன டார்லிங்... விஷயத்தை சொல்லிட்டீங்களா? அல்லது விட்ட குறை... தொட்ட குறைன்னு பட்டும் படாம சும்மா நின்னுக்கிட்டிருக்கீங்களா? வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிட்டு வாங்க... ப்ளீஸ் டார்லிங்...''
''இதோ வரேன்...'' என்று கூறிய திலீப், மொபைலை அடக்கினான். மறுபடி ராதாவிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
''உனக்கு ஒரு மாதம் டைம் தரேன். வீட்டை காலி பண்ணிடு. இன்னிக்கு அக்டோபர் பத்து. நவம்பர் மாதம் பத்தாம் தேதி வீட்டு சாவி எனக்கு வந்தாகணும்...'' வலிய வரவழைத்துக் கொண்ட வறட்டு குரலில் அவளை மிரட்டினான் திலீப்.
'என்னோட வீடு சென்னையில் இருந்ததை தயவு தாட்சண்யம் பார்க்காம வித்து எறிஞ்சுட்டு, கடன் போக, மீதி தொகையையும் சுருட்டிக்கிட்டு இப்ப இங்கே இருந்தும் என்னை விரட்டறாரே...'
'கேளு ராதா கேளு. நியாயத்தைக் கேளு. உன்னோட மன அழுத்தத்துல என்னைப் பேச விடாம என் வாயை அழுத்தி வச்சுட்ட கொஞ்ச நாளா. இப்பவும் நான் பேசலைன்னா... நீயும் பேச மாட்ட. பேச வேண்டிய நேரத்துல பேசித்தான் ஆகணும் ராதா. நாக்கை அடக்க வேண்டிய நேரத்துலதான் அடக்கணும். இப்ப நீ அடக்க வேண்டியதில்லை. அடங்கவும் வேண்டியது இல்லை. உனக்கு உரிமையான வீட்டை விட்டுக் குடுத்துட்ட. அந்த வீட்ல வாழ்ந்துக்கிட்டிருந்த உன்னைப் பெத்தவங்களையும் பறி குடுத்துட்ட இப்ப... நீ குடி இருக்கற வீட்டையும் குடுத்துட்டு எங்கே போவ? என்ன பண்ணுவ? ஒண்ணு... வீட்டை காலி பண்ண மாட்டேன்னு சொல்லு அல்லது உன்னோட வீட்டை வித்த மீதிப் பணத்தைக் கேளு. வட்டிக் கணக்கெல்லாம் பார்த்தா ஏகமான தொகை இருக்கும். அதைக் கேளு...'
இதயக் குரலின் உபதேசத்தை காது கொடுத்து கேட்டாள் ராதா. தனக்குள் தைரியத்தை உருவாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
''நீங்க சொல்றபடி, வீட்டை காலி பண்ணி குடுத்துடறேன். ஆனா... சென்னையில எங்கம்மா வீட்டை வித்த பணத்தை என்கிட்ட குடுத்துடுங்க...''
வில்லன் போல வாய் விட்டு சிரித்தான் திலீப்.
''உங்கப்பன் வச்சுட்டு போன கடனை எப்பிடி அடைச்சேன்? வீட்டை வித்துதான் அடைச்சேன்...''
''நிச்சயமா அவ்ளவு பெரிய தொகைல்லாம் கடன் கிடையாது...''
'என்னடா இது? அழுத்தம் திருத்தமா... தைரியமா வேற பேசறா...' சூடானான் திலீப். எழுத்து மூலம் எதுவுமே இல்லை. இவ என்னை என்ன பண்ணிட முடியும்? திமிரை ஏற்றிக் கொண்டான் திலீப்.
''ஏய்? உன் வீடும் இல்லை. உங்க அப்பன் வீடும் இல்லை. எல்லாம் எவன் கைக்கோ போயாச்சு. மீதி இருந்த பணத்துல, நான் சம்பாதிச்ச பணம் மேல போட்டு சென்னையில் எங்கம்மா அப்பாவுக்கு ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கிக் குடுத்துட்டேன்...''
இதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள் ராதா. ஓரிரு வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
''உங்க அம்மாவுக்கு அப்பார்ட்மென்ட் வாங்கி குடுத்தீங்களா? என்ன நியாயம் இது? கடன் தொகையை அடைச்சுட்டு என்னோட வீட்டை அப்பிடியே வச்சுருந்திருக்கலாமே...?''
''என்னடி? என்னோட வீடு... என்னோட வீடுன்னு பினாத்திக்கிட்டிருக்க? அந்த வீட்டை வித்து தொலைச்சாச்சு. இப்ப என்ன அதுக்கு?''
''அதுக்கு பதிலா இந்த வீட்ல என்னை இருக்க விடுங்க...''
''முடியாது. எனக்கு இந்த வீடு வேணும்... ஒரு மாசம் கழிச்சு வருவேன். சாவியைக் குடுக்கணும்.''
''கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு பொண்ணையும் பெத்துக்கிட்டு இப்பிடி என்னை நடுத்தெருவுல நிறுத்தணும்னு என்ன வந்துருச்சு? என் மேல என்ன தப்பு இருக்கு? வீட்டை விட்டு போய் என்ன செய்வேன்?...''
''நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. இன்னில இருந்து சரியா முப்பது நாள்ல்ல எனக்கு வீடு வேணும்....''
''இவ்ளவு கடுமையா பேசறீங்களே... நான் உங்க மனைவிங்கற எண்ணமே இல்லையா...?''
''நீ யாரோ... நான் யாரோ...'' சவுக்கடி பட்டது போலத் துடித்தாள் ராதா. திலீப் அவ்விதம் பேசியதைக் கேட்டு ஸ்வாதியும் வேதனைப் பட்டாள். மறுகணம், வேதனை மாறி, வெறுப்பு வேறூன்றியது அவளிடத்தில்.
அப்பொழுது திலீப்பின் மொபைல் மறுபடியும் ஒலித்தது.
''என்ன டார்லிங்... பேசி முடிஞ்சுதா?''
''முடிஞ்சுது, முடிச்சாச்சு. இதோ வரேன்...'' என்றவன், மறுபடியும் ராதாவிடம் எச்சரிக்கும் குரலில் அதட்டிப் பேசினாள்.
''ஞாபகம் இருக்கட்டும். வர்ற பத்தாம் தேதி வீட்டு சாவி என் கைக்கு வரணும்...'' மறுபடியும் அவனது மொபைல் ஒலித்ததும், எடுத்து தொடர்பைத் துண்டித்து விட்டு, வேகமாக வெளியேறினான்.
கடுகடுப்பான முகத்துடன் காரின் அருகே வந்தவன், காருக்குள் அமர்ந்திருந்த மிருணாவைப் பார்த்து,
''என்ன மிருணா... நான் பேசப் போனது என்ன சாதாரண விஷயமா? வீட்டை காலி பண்ணச் சொல்லி பேசிட்டு வர்றதுக்குள்ள... எத்தனை ஃபோன் பண்ணிட்ட...?'' என்று சற்று கோபமாகப் பேசினான்.
''ஸாரி டார்லிங்... கார் ஏ.ஸி.யில ஏதோ பிரச்னை. வொர்க் பண்ணலை, ஒரே புழுக்கம். அதனாலதான் கூப்பிட்டேன்...'' சாமர்த்தியமாகப் பேசி, வழக்கம் போல அவனைத் தொட்டு, தடவி அவனது கோபத்தைத் தணித்தாள். வெய்யிலின் கடுமையான உஷ்ணத்தில் குளுமையான பானம் அருந்தியது போல தன்மையான குணத்திற்கு மாறினான் திலீப். அவளது கன்னத்தில் செல்லமாய் இரண்டு தட்டு தட்டி விட்டு, காரைக் கிளம்பினான் திலீப். அவனது மனதில் இருந்த புழுதியைப் போலவே காரும் புழுதியைக் கிளப்பியபடி புறப்பட்டது.
35
அன்று ஞாயிற்றுக்கிழமை. மிருணாவும், திலீப்பும் ஓய்வாக உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். சொந்த மனைவியையும், பெற்ற மகளையும் விட்டுவிட்டு அவர்களது நினைவே இன்றி மிருணாவின் பிடிக்குள் சிக்கி இருந்தான் திலீப். மனநல ஆலோசகர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி ஏற்கெனவே ஆரம்பித்திருந்தது.
மனநல ஆலோசகர் திருமதி லட்சணா பேசிக் கொண்டிருந்தார்.