பூவிதழ் புன்னகை - Page 27
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
இதைப் பார்த்த ராதா அதிர்ச்சி அடைந்தாள். சந்தடியின்றி நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதியோ... மேலும் நடுங்கினாள். கூடவே திலீப்பின் மனிதத் தன்மையற்ற செயல்கள், அவளுக்கு அளவற்ற கோபத்தையும் உண்டாக்கியது. செய்வதறியாது திகைத்துப் போய் நடப்பதைப் பார்த்துக் கொண்டு அழுதபடி இருந்தாள்.
''எதுக்கு இப்ப பெட்டியில துணிமணிகளை எடுக்கறீங்க?...''
''உனக்கு ஒரேயடியா தலை முழுக்கு போடறதுக்குத்தான்...'' பீரோவைத் திறந்து, தனது உடைமைகள் அத்தனையையும் எடுத்துக் கொண்டிருந்த அவனிடம் கெஞ்சினாள் ராதா.
''என்னங்க... நான் அப்பிடி என்ன சொல்லிட்டேன்... செஞ்சுட்டேன்னு வீட்டை விட்டு கிளம்பறீங்க? நீங்க என்ன செஞ்சாலும் பொறுமையா, இருக்கேன். வேற எவ கூடயோ தொடர்பு வச்சிருக்கறது தெரிஞ்சும் கூட எதுவுமே ஒரு வார்த்தை கூட கேட்காம பொறுமையா இருக்கேனே. கட்டாயத் தேவைக்கான பணத்தைத் 'தரமாட்டேன்'னு நீங்க சொன்னப்புறம்தான் அதைப் பத்திக் கேட்டேன். அதைக் கேட்கக் கூட எனக்கு உரிமை இல்லையா? நான் படிக்காதவள்ன்னு தெரிஞ்சுதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எப்பப் பார்த்தாலும் பட்டிக்காடு பட்டிக்காடுன்னு திட்டறீங்க. அதுக்கு கூட நான், என் வாயைத் திறந்ததே இல்லை. தயவு செஞ்சு போகாதீங்க. உங்களை நம்பி நானும், நம்ம ஸ்வாதியும் இருக்கோம். இத்தனை நாள் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம பண்ணிடாதீங்க...''
''ஆமா. அர்த்தம் இல்லாத வாழ்க்கைதான் உன்னோட நான் வாழற வாழ்க்கை. போதும். இதுக்கு ஒரு முடிவு வேணும்....''
''முடிவா? அப்பிடி என்னங்க நான் தப்பு செஞ்சுட்டேன்?''
''அதைப்பத்தியெல்லாம் உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக்கு...''
''சரிங்க... என்னை விடுங்க. நம்ம பொண்ணு ஸ்வாதி? அவளை விட்டுட்டா போகப் போறீங்க?''
''ஆமா. எனக்கு நீங்க யாருமே தேவை இல்லை...''
''உங்களுக்கு நாங்க தேவை இல்லைங்க. எங்களுக்கு நீங்க தேவை. குடும்பம் பிரியறதை எப்பிடிங்க ஏத்துக்க முடியும்?...''
''முடியணும். பிரிய வேண்டிய நேரம் வந்தாச்சு. இதுக்கு மேல ஒரு வார்த்தை... என்கிட்ட பேசாதே...''
''பேச வேண்டிய நேரங்கள்ல்ல பேசாம விட்டுத்தான் என்னோட வாழ்க்கை இந்தக் கதியில நிக்குது. பரவாயில்லைங்க. தயவு செஞ்சு வீட்டை விட்டு போறேன்னு மட்டும் கிளம்பாதீங்க. எனக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம். ஸ்வாதிக்காக நீங்க செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு. அதுக்காக இருங்க... ப்ளீஸ்...''
''இருக்க முடியாது. உனக்காகவும் இருக்க முடியாது. உன் பொண்ணுக்காகவும் இருக்க முடியாது. இனிமேல் உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...'' இதைக் கேட்ட ராதா... துடித்தாள். துவண்டாள்.
''சம்பந்தம் இல்லாமலா ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டோம். தாலி கட்டின சம்பந்தம் இல்லையா? இன்பமோ துன்பமோ... ஒரு வேலைக்காரி மாதிரி நீங்க நடத்தினதைக் கூட பொருட்படுத்தாம வாழ்ந்துக்கிட்டிருக்கேனே... உங்களுக்கும் எனக்குமா சம்பந்தம் இல்லை? கல்யாணக் கடனுக்காக எங்க அப்பா செத்தப்புறம் கடன் குடுத்தவங்க நெருக்கறாங்கன்னு என் பேர்ல இருந்த வீட்டை வித்து கடனை அடைச்சோம். அதில மீதி இருந்த லட்சக்கணக்கான பணத்தையும் நீங்களே வாங்கிக்கிட்டிங்க. சம்பந்தம் இல்லாமலா அந்தப் பணத்தை வாங்கி வச்சுக்கிட்டீங்க? நிம்மதியா குடி இருந்த எங்கம்மா, அப்பாவோட நிம்மதியைக் கெடுக்கற மாதிரி உங்க பெற்றோர் வந்து எங்க வீட்ல குடி புகுந்தாங்களே... எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாமலா வந்தாங்க? உங்களோட சேர்ந்து வாழ்ந்த மண வாழ்க்கைக்கு அடையாளமாத்தானே ஸ்வாதி பிறந்திருக்கா? உங்களுக்கும் எனக்குமா சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க? உங்களைக் கை பிடிச்ச நாள்ல இருந்து உங்களோட மனப்போக்குக்கு ஏத்த மாதிரி என்னை நான் மாத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கேனே? சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டு போகக் கிளம்பறீங்களே... ப்ளீஸ்... போகாதீங்க...''
''நான் ஒண்ணு நினைச்சா... சொல்லிட்டா சொன்னதுதான். என்னைத் தடுக்க முடியாது.'' பெட்டியையும் இதர சாமான்களையும் எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டான் திலீப்.
தடாலென அவனது கால்களில் விழுந்தாள் ராதா.
''வீட்டை விட்டு போய்டாதீங்கங்க ப்ளீஸ். எங்களை நிர்க்கதியா விட்டுட்டு போய்டாதீங்க. இனிமேல் நான் வேற எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் பேசவே மாட்டேன்ங்க. நீங்க எங்க கூட இருந்தா... அது போதும். வாரத்துல நாலு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அந்த நாலு நாள் போதும்ங்க. ப்ளீஸ்... ''
''நாலு நாள் என்ன... நாலு நிமிஷம் கூட இருக்கப் பிடிக்கல...''
''ஐய்யோ... அப்பிடில்லாம் சொல்லாதீங்கங்க'' என்று கூறிய ராதா, அவனைப் பிடித்திருந்த கால்களை மேலும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவளது கால்களை உதறினான் திலீப். முரட்டுத்தனமாக அவன் உதறியதில் ராதா உருண்டு விழுந்தாள்.
அப்போது எழுந்து வந்து ராதாவைத் தூக்கி நிறுத்தினாள் ஸ்வாதி. அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் ராதா.
''நீங்க இப்பிடி விட்டுட்டு போய்ட்டா... நாங்க எந்த வருமானமும் இல்லாம எப்பிடி சாப்பிடுவோம்? இவ எப்பிடி படிப்பா? யோசிச்சுப் பாருங்கங்க ப்ளீஸ்.''
''வருமானம் இல்லைன்னா... அதான் வெகுமானம் குடுக்கறதுக்கு உன்னோட அத்தை மகன் வினோத் இருக்கான்ல...''
''ஐய்யோ... இக்கட்டான நிலைமையில ஒரு உறவுக்காரனா உதவி செய்யற வினோத்தை இவ்ளவு மட்டமா பேசறீங்களே. நீங்க அவனை மட்டமா பேசறதுனால என்னையும் சேர்த்து அவமானப்படுத்தறீங்க...''
''எது எப்பிடியோ? என்னமோ செஞ்சுக்கோ...'' என்றவன் அவனது பொருட்களோடு அங்கிருந்து கிளம்பினான்.
நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதி, பயத்தில் அழுதாள். வேதனையில் கரைந்தாள். ராதாவின் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள் ராதா. அவர்களது இருவரது இரவும் அப்படியே கழிந்தது. விடிவு?
தற்காலிகமாக அவளது இதயமும் குரல் கொடுப்பதை நிறுத்தி இருந்தது.
30
காலையில் கண் விழித்த ஸ்வாதி, இன்னமும் ராதா அப்படியே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து திகைத்தாள்.
''அம்மா...''
''என்னம்மா?''
''இனி நாம என்னம்மா செய்யப் போறோம்? அப்பா வீட்டை விட்டு போயிட்டாரே...''
''என்ன செய்ய முடியும்? யோசிக்கணும். என்ன யோசிச்சாலும் கண் பார்வை இல்லாதவங்களோட உலகம் மாதிரி எனக்கு இருட்டு மட்டும்தான் தோணுது. முதல் வேலையா உன்னோட புத்தகங்களுக்கு பணம் கட்டறதுக்கு ஏற்பாடு பண்ணனும். என்னோட நகைங்க கொஞ்சம் இருக்கு. அதுல எதையாவது வித்து, செலவு பண்ணனும். ஆனா அதுக்குமே வினோத் அங்க்கிள் உதவி இல்லாம முடியாது. எனக்கு நகையை எங்க வைக்கறது அல்லது விக்கறதுன்னு எதுவுமே தெரியாது'' என்றவள், தொலைபேசியில் வினோத்தை அழைத்தாள். மறுமுனையில் வினோத்தின் குரல்.