பூவிதழ் புன்னகை - Page 22
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
இப்பிடி எதைப் பத்தியும் கவலைப்படாம இருக்கற உங்களுக்கெல்லாம் கல்யாணம் எதுக்கு? குழந்தை எதுக்கு? இஷ்டப்படி... மனம் போன போக்குல வாழ வேண்டியதுதானே? எதுக்காக ஒரு குடும்பம்?...'' இப்பிடியெல்லாம் கேட்க வேண்டிய நீ... கேட்கத் துடிக்கற நீ... வழக்கம் போல வாய் மூடி மௌனியா இருக்கறியே ராதா?'' தன் இதயத்தின் இன்னொரு பக்கம் இடித்துக் காட்டும் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்ட ராதாவால் கண்ணீர் சிந்தத்தான் முடிந்தது.
இரவுப் பணியில் ஈடுபடும் நர்ஸ் வந்து அவளைத் தொட்டுக் கூப்பிட்ட பிறகே தன் சிந்தனைப் படகை நிறுத்தினாள் ராதா.
நர்ஸ், ஸ்வாதிக்கு மாத்திரைகள் கொடுத்தாள்.
''பேஷண்ட் ராத்திரி நல்லா தூங்கிடுவாங்க. வேற ஏதாவது உதவி தேவைப்பட்டா... இந்த அழைப்பு மணியை அடிங்க. நான் உடனே வந்துடுவேன்...'' என்று புன்னகை மாறாத முகத்துடன் ராதாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் நர்ஸ். மனச் சோர்வும், உடல் சோர்வும் ஒருங்கே ராதாவை களைப்படையச் செய்தது. அவளும் அங்கே படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.
25
மறுநாள் காலை. பார்வையாளர்கள் நேரத்தில் மருத்துவமனைக்கு வினோத் வந்தான். ஸ்வாதி, மயக்க மருந்தின் வேகம் முழுவதும் நீங்கியவளாகக் கண் விழித்திருந்தாள். மருத்துவர்களின் முறையான சிகிச்சையில் அடிபட்ட இடத்தின் வலி கூட ஓரளவு குறைந்திருந்தது.
''என்ன ராதா... ஏன் இப்பிடி ஒரேயடியா டல்லடிச்சுப் போய் இருக்க? திலீப் அண்ணன் வந்தாரா? என்ன சொன்னார்...?''
''அவர் வந்தாத்தானே ஏதாவது சொல்றதுக்கு?''
''என்ன? வரவே இல்லையா? அதான் இவ்ளவு சோகமா இருக்கியா?''
''வினோத் அங்க்கிள்... அப்பா வராதது எனக்கும் எவ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?...''
''முதல்ல... உனக்கு வலி குறைஞ்சிருக்கா? சொல்லு...''
''வலி குறைஞ்சிருக்கு. ஆனா... அம்மா என்கிட்ட சரியாவே பேசமாட்டேங்கிறாங்க அங்க்கிள்...''
''நீயும், மஞ்சுவும் செஞ்சது எவ்ளவு பெரிய தப்பு? பின்னே... கோபம் இருக்காதா? சரி... சரி... மஞ்சுவையும் கண்டிச்சு வச்சிருக்கேன். அதைப் பத்தியெல்லாம் நீ வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம்...'' என்று ஸ்வாதியிடம் கூறியவன், ராதாவிடம் திரும்பினான்.
''என்ன ராதா இது? எந்த நேரத்துல உன் கோபத்தைக் காட்டணும்னு கணக்கே இல்லையா? அதெல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம். நீ இப்பிடி ஸ்வாதிக்கிட்ட 'உம்'ன்னு இருந்தா அவளுக்கு அடிபட்ட வலியோட சேர்ந்து மனசும் பாதிக்கும். சின்ன பிள்ளைங்க. சொல்லித்தான் திருத்தணும்...''
''சின்னப் பிள்ளைங்களுக்கு எதுக்கு திருட்டுத்தனமா ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போக வேண்டி இருக்கு...''
அப்போது ஸ்வாதி குறுக்கிட்டு, ''ஸாரிமா. ஸாரிமா'' என்றாள்.
ராதாவை கண்டித்தான் வினோத்.
''இங்க பாரு ராதா. இப்ப நமக்கு ஸ்வாதி, டிஸ்சார்ஜ் ஆகி நல்லபடியா வீட்டுக்கு வரணும். அதுதான் முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்.''
''என்னத்த பேசறது? தினமும் இவகிட்ட அறிவுரை சொல்றேன்னு நான் பேசாததா?...''
''நீ திரும்ப திரும்ப அதைப் பத்தியே பேசாத. ஸ்வாதி அழ ஆரம்பிச்சுட்டா. அவ சீக்கிரமா குணமாகணும்ன்னா... நீ இப்ப எதுவும் பேசாதே...''
அப்போது அங்கே வந்த நர்ஸ், ''ஸ்வாதிக்கு இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு டிஸ்சார்ஜ். மூணு மணிக்கு டாக்டர் வந்து பார்த்து, மாத்திரை எழுதிக் குடுப்பார். தையல் பிரிக்கறதுக்கு என்னிக்கு வரணும்ன்னு சொல்லுவார். மூணு மணிக்குள்ள ஆஸ்பத்திரி பில்லைக் கட்டிடுங்க. கட்டிட்டீங்கன்னா... நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் சம்மரியெல்லாம் ரெடியாயிடும்...'' என்று சொல்லிவிட்டுப் போனாள்.
'கையில பணமே இல்லை. அவர் இன்னும் வரவும் இல்லை. மறுபடி ஃபோன் பண்ணிப் பார்க்கலாம்' என்று எண்ணிய ராதா, ''வினோத்... இவளைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க. இதோ வந்துடறேன்'' என்று கூறிவிட்டு மருத்துவமனையின் வரவேற்பறைக்கு சென்றாள். அங்கிருந்த தொலைபேசியில் திலீப்பின் மொபைல் நம்பர்களை அழுத்தி அழைத்தாள்.
மறுமுனையில் திலீப்பின் குரல் கேட்டது.
''ஹலோ....''
''ஹலோ... நான் ராதா பேசறேன்ங்க. நீங்க ஏன் இன்னும் வரலை?...''
''எனக்கு நிறைய வேலை. எங்கேயும் நகர முடியலை... என்ன விஷயம்?''
''பெத்த பொண்ணு அடிபட்டு ஆஸ்பத்திரியல படுத்திருக்கா... வந்து பார்க்கணும்ன்னு கூட தோணலியா உங்களுக்கு? என்ன விஷயம்னு ரொம்ப சாதாரணமா கேக்கறீங்க?...''
''அதான் நீ பார்த்தக்கறீல்ல? அப்புறமென்ன?''
''ஏங்க... நேத்தே 'என் கையில பணம் இல்லைன்னு சொன்னேன். இன்னிக்கு மதியம் நாலு மணிக்கு டிஸ்சார்ஜ். பணம் கட்டியாகணும்... நான் என்ன பண்ண?''
''நானும் ஒண்ணும் பண்ண முடியாத நிலைமையில... ரொம்ப தூரத்துல இருக்கேன்...''
''என்னது? ரொம்ப தூரத்துலயா? வெளியூர்லயா இருக்கீங்க? சொல்லவே இல்லை?...''
''திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு. போயிட்டேன்...''
''ஸ்வாதியை வந்து பார்க்க முடியாத தூரத்துலயா இருக்கீங்க...?''
''நீ அதைப் பத்தியே திரும்பத் திரும்பக் கேளு... வர முடியற தூரம்தான். ஆனா வரலை. இப்ப என்ன அதுக்கு?...''
''தப்பையெல்லாம் உங்க மேல வச்சுக்கிட்டு, என் மேல ஏன் கோபப்படறீங்க? இப்ப பணத்துக்கு என்ன வழி? சொல்லுங்க... வர முடியற தூரத்துலதானே இருக்கீங்க? பணத்தை எடுத்துக்கிட்டு வாங்க...''
''என்னால வர முடியாது...'' என்று கூறி விட்டு தொலைபேசி தொடர்பைத் துண்டித்தான்.
''ஹலோ... ஹலோ...'' ராதா கூப்பிட கூப்பிட திலீப்பின் அலைபேசி, பிடிவாதமாய் மௌனம் சாதித்தது. மீண்டும் அவனது மொபைலுக்கு தொடர்பு கொள்ள, திலுப் அவனது அலைபேசியை அணைத்து வைத்திருப்பதை, பதிவு செய்த இனிய குரல் அறிவித்தது.
'என்ன ராதா? நீயெல்லாம் ஒரு மனுஷனா?ன்னு கேக்கறதுக்கு மனசு துணிஞ்சாலும்... வாய்ல வார்த்தைகள் வரலைதானே? நீ இப்பிடி கோழையாவே இருந்தா... என்ன பண்ண முடியும்?...'
பேச ஆரம்பித்த தன் இதயத்தின் குரலை அடக்கினாள் ராதா.
'நீ வேற... நேரம், காலம் தெரியாம ஏடாகூடமா பேசிக்கிட்டு? வாயை மூடு...'
ஸ்வாதி படுத்திருந்த அறைக்கு சென்றாள்.
''ஸாரி வினோத். ஆஸ்பத்திரி பில் கட்ட பணம் கேட்டு 'அவரு'க்கு ஃபோன் பண்ணினேன். அவர் எங்கேயோ தூரத்துல இருக்காராம். வர முடியாதாம்.'' சமாளித்து பேசினாள் ராதா.
''திலீப் அண்ணன் வர முடியாட்டி என்ன? ஆஸ்பத்திரி பில் கட்ட பணம் வேணும். அவ்ளவுதானே? அதுக்கு ஏன் இவ்ளவு டென்ஷனாகிற? நான் போய் பில் வாங்கி, பணத்தைக் கட்டிட்டு, அப்பிடியே ஆபீஸ்க்கு போயிடறேன். மூணு அல்லது மூணரை மணிக்கு வரேன். ஸ்வாதியை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போயிடலாம்.''
ராதா... என்ன பேசுவது என்று அறியாமல், கலங்கிய கண்களுடன் மௌனமாக இருந்தாள்.