பூவிதழ் புன்னகை - Page 20
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
ஆனா இப்ப? ஒரு அடிமை மாதிரி இவனோட காலுக்கு அடியிலதான் முடங்கி கிடக்க வேண்டி இருக்கு. ஒரு பொண்ணான நான், பொண் குழந்தைய வேற பெத்துப் போட்டிருக்கேனே... அவளை வளர்த்து ஆளாக்க வேண்டாமா? என்னை மாதிரி படிக்காத கோழையா இல்லாம... உயர் கல்வி கற்று தலை நிமிர்ந்து நிக்கற பெண்மணியா அவளை உருவாக்க வேண்டாமா? இதுக்கெல்லாம் தனியாளா, நான் என்ன பண்ண முடியும்? அவரோட அன்பான ஆதரவு இல்லாட்டாலும், அவர் சம்பாதிக்கற பணத்தோட பலம் இல்லாம என் குழந்தையை நான் எப்பிடி வளர்க்க முடியும்? அதனால... என்னை எதுவும் பேசத் தூண்டாதே'' தன் இதயத்தின் குரலை தானே அடக்கி வைத்தாள் ராதா.
அன்றைய இரவு முழுவதும் கண்ணீரில் நீராடும் இரவாகவே இருந்தது அவளுக்கு. நெஞ்சில் எழும் உணர்வுகளுடன் போராடும் இரவாகவே இருந்தது. துன்பங்களே வாழ்வாக இருந்தன. வேதனைகள் நிறைந்த நாட்களாகவே நகர்ந்தன.
சுவையான தோசைகளை ஆசையாக ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு, அதன்பின் வறுத்த முந்திரிப்பருப்புடன் விஸ்கியையும் முட்ட முட்டக் குடித்து விட்டு, எந்தக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த திலீப்பைப் பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. வெறுப்பின் எல்லைக்குப் போன அவள், இரவின் எல்லையான விடியலில்தான் தூங்கினாள்.
23
நாட்கள், முட்களாகக் குத்தியபடி நகர்ந்தன ராதாவிற்கு. அவளுடைய மாமியார், மாமனார் இருவரும் அவளது அம்மா வீட்டிற்கு குடி புகுந்தனர். சம்பந்திகள் என்ற மரியாதையும் கொடுக்க முடியாமல் சகஜமாக அவர்களை உபசரிக்கவும் இயலாமல், வேண்டாத விருந்தாளிகளாக உதாசீனப்படுத்தவும் முடியாமல் தவித்தனர் வனஜாவும், சுந்தரபாண்டியும்.
தன் சொந்த வீட்டில் சுகமாக இருப்பது போல அங்கே எந்த வேலையும், உதவியும் செய்யாமல் டி.வி. பார்த்தபடி பொழுதைப் போக்கினாள் திலகா. நாராயணன், 'ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?' என்கிற ரீதியில் சோறு கண்ட இடம் சொர்க்கமாக இருந்தார்.
திலகாவும், நாராயணனும் அங்கு வரும் முன்னர், உடல்நிலை நலமாக இருந்தால் சமைப்பாள் வனஜா. ரத்த அழுத்தம் அவளைப் படுத்தும் பொழுது பக்கத்தில் உள்ள ஓட்டலில் உணவு வகைகளை வாங்கி வரச் செய்து சமாளிப்பாள். அவளது உடல்நிலைக்கு ஏற்றபடி அனுசரித்துக் கொள்வார் சுந்தரபாண்டி.
ஆனால் திலீப்பின் பெற்றோர் அங்கு வந்த பிறகு? ஹோட்டலில் வாங்கினால், திலகா முகம் சுளித்தாள். வெளியிலிருந்து வாங்கும் உணவு வகைகளை சாப்பிடாதவள் போல 'பாவலா' பண்ணினாள். ஹோட்டலில் விலை கொடுத்து வாங்குவதும் சுந்தரபாண்டியின் சொற்ப ஓய்வூதியத் தொகைக்கு கட்டுப்படி ஆகவில்லை. கடன் கட்ட வேண்டிய தொகை ஒரு பக்கம் அழுத்த, திலகா, நாராயணனின் இருவரது வருகை ஒரு பக்கம் அழுத்தி சுந்தரபாண்டிக்கும், வனஜாவிற்கும் அதிக மன அழுத்தம் ஏற்பட்டது.
ஃபோன் மூலம் அவ்வப்போது ராதாவிடம் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஃபோன் பேசுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் சுற்றும், முற்றும் பார்த்தபடியே பேச நேர்ந்தது. அல்லது திலகாவும், நாராயணனும் கோவிலுக்கு போயிருக்கும் பொழுது பேச வேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்தது.
இங்கே நடப்பவை பற்றி ராதாவிடம் கூறும்பொழுது துக்கம் தாளாமல் அவள் கதறி அழுவாள். அவள் அழுவதைக் கேட்டு இவர்களும் மிகுந்த வேதனைப்பட்டனர்.
ஒரு நாள் கூட 'இதோ இந்தப் பணத்தை வச்சுக்கோங்க' என்று ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை திலகா. ஆனால் வெளியே போவாள். வகை வகையான தின்பண்டங்கள் வாங்கி வருவாள். அவள் மட்டுமே தொலைக்காட்சி பார்த்தபடி அத்தனையையும் நொறுக்குவாள். புதிது புதிதாக புடவைகள் வாங்குவாள். ஒரு புடவை கூட வனஜாவிற்கு கொடுக்க மாட்டாள்.
திலகாவினுடைய நடவடிக்கைகள் ஈவு இரக்கம் என்பதே இன்றி கொடூரமானதாக இருந்தன. ஒரு வருட காலம் முடிவதற்குள், வனஜாவின் ஆயுள் முடிவுற்றது. வனஜாவின் பிரிவையும், திலகா போன்ற ஒரு வன்மையான பெண்மணியின் ஆதிக்கத்தினாலும், வனஜா போய் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குள் சுந்தரபாண்டியும் மரணம் அடைந்தார்.
இருவரது மரணமும் ராதாவை உலுக்கி எடுத்தது. இருந்த ஒரே ஆதரவான பெற்றோரையும் அடுத்தடுத்து இழந்துவிட்ட துயரத்தில் துவண்டு போனாள் ராதா.
பிறகென்ன? வீடு ராதாவுடையது. ராதா தங்கள் மருமகள். சம்பந்திகள் இருந்த போதே உரிமை கொண்டாடிய திலகா, அவர்கள் மறைந்த பிறகு தங்கள் மருமகளின் வீடு என்கிற அதிகப்படியான உரிமை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக அங்கே தொடர்ந்து வாழ்ந்தாள்.
அவளது நிழலில் உயிருள்ள பொம்மை போல உலா வந்தார் நாராயணன். நிஜ வாழ்வின் யதார்த்தங்கள், மனித நேயங்கள், உணர்வுகள் இவை பற்றி கவலையே படாமல் ஒரு ஜடம் போல வாழலானார் நாராயணன். மருமகளின் துக்கம் பற்றி அவர்களுக்கென்ன கவலை? யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலம் தன் கடமையை செய்து கொண்டிருந்தது.
24
அம்மாவும், அப்பாவும் அடுத்தடுத்து மறைந்து போன துக்கத்தில் மூழ்கி இருந்த ராதாவை ஏமாற்றி, ஃப்ரெண்ட்சுடன் ரெஸ்ட்டாரண்ட்டுகளுக்கும், டிஸ்கோதேவிற்கும் போய் ஆட்ட பாட்டங்களில் கலந்து கொண்டு, கொண்டாட்டமாக இருந்தாள் ஸ்வாதி. மஞ்சுவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.
மஞ்சுவிற்கு தன் அம்மா பவித்ரா, பீர் குடிப்பது தெரிந்திருந்தபடியால் ரெஸ்ட்டாரண்ட்டில் அவள் பீர் குடிக்கப் பழகி இருந்தாள்.
அன்று பள்ளிக் கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு சில தோழிகளுடன் ஸ்வாதியும், மஞ்சுவும் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டிற்கு சென்றிருந்தனர். அங்கே, வேறு பள்ளிக்கூட மாணவ, மாணவியரும் இவர்களைப் போலவே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து ஜாலியாக ஆட்டம் போட்டனர். அப்போது அங்கே வந்திருந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன தகராறு, பெரிய அடிதடியாகி, ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டனர்.
பயத்தில் ஸ்வாதியும், மஞ்சுவும் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். அப்போது ஒருவன் வீசிய நாற்காலியின் கால் பகுதி, ஸ்வாதியின் தலையில் இடித்தது. கண் பகுதியில் இடித்தபடியால் வலியில் துடித்துப் போய் மயங்கி விழுந்தாள் ஸ்வாதி. இதைப் பார்த்த மஞ்சு, பயத்தில் அலறினாள்.
கலவரம் பற்றி அறிந்த ஹோட்டல் மேனேஜர் அங்கே வந்தார். முதல் வேலையாக மஞ்சுவிடம் தொலைபேசி எண்களை கேட்டு வாங்கி, டயல் செய்தார். மறுமுனையில், செய்தி கேட்ட ராதாவிற்கு தலையிலோ, கண்ணிலோ அடி படாமலே மயக்கம் வந்தது. தன்னை சுதாரித்துக் கொண்டு வெளியே வந்து ஒரு டேக்ஸி பிடித்து மேனேஜர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றாள்.