பூவிதழ் புன்னகை - Page 17
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''அம்மா, நான் என்ன பேசினாலும் அவர் ஏதாவது குதர்க்கமா கேள்வி கேக்கறார்மா. சாதாரணமா எது பேசினாலும் அதில குற்றம் கண்டு பிடிக்கிறார். என்னோட பெயரை சொல்லிக் கூட கூப்பிடமாட்டார். மொட்டை மொட்டையாத்தான் பேசுவார். நான் படிக்காதவள்ன்னு ரொம்ப இளப்பமா மதிப்பிடறார்மா... என்னோட மாமியாரைப் பத்தி ஒரு வார்த்தை யதார்த்தமா கூட பேசிட முடியாது. அதிலயும் தப்பு கண்டுபிடிச்சு கண்டபடி திட்டுவார். மகனுக்கு ஃபோன் போட்டு 'அது வேணும்', 'இது வேணும்'னு கேட்டு பிடுங்குவாங்க. நான் அவசியமானது கேட்டா கூட கத்துவார். நிறைய சம்பாதிக்கற மாப்பிள்ளைன்னு கட்டி வச்சிங்க. சம்பாதிக்கறதையெல்லாம் என்ன பண்றார்ன்னு தெரியலை.
பெங்களூர் போன பிறகும்கூட வெளி உலகமே தெரிஞ்சுக்க முடியாம என்னை வீட்டுப் பறவையா உட்கார வச்சிருக்கார். ஆபீஸ் ஃபைலை வீட்டுக்குக் கொண்டு வந்து, எங்கேயாவது வச்சுட்டு என்னைத் தேடித்தரச் சொல்லி தொல்லை பண்ணுவார். சென்னையில இருந்த வரைக்கும் குடிப்பழக்கம் இருந்துச்சோ என்னமோ தெரியாது. நீங்கதான், என்னமோ எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்ன்னு அவரோட அம்மா கேட்டதையெல்லாம் செஞ்சு கடன்காரங்களா நிக்கறீங்க.
தினமும் குடிக்கறார். இன்னும் என்னென்னமோ வீட்டுக்குள்ளயே நடக்குது. ஸ்வாதியை கண்ணும், கருத்துமா வளர்த்து அவளை நல்லபடியா ஆளாக்கணும்னு நான் நினைக்கறேன். பாடு படறேன். அவர் என்னடான்னா மகள் மேல பாசமா இருக்கறதா சொல்லி இப்பவே கம்ப்யூட்டரை வாங்கிக் குடுத்திருக்காரு. ஸ்வாதியை ஒழுக்கமா வளர்க்கற பொறுப்பை நான் தனி ஆளா... நான் ஒருத்தியா சுமந்துக்கிட்டிருக்கேன்.
அவருக்கு அதைப் பத்தின அக்கறையே இல்லை. பொண்டாட்டி படிக்காதவ. அதனால பிடிக்கல. பெத்த பொண்ணை நல்லபடியா படிக்கவச்சு, நல்ல பழக்க வழக்கங்களைக் கத்துக் கொடுக்கறதுக்காவது மனசு வேணும். அதுவும் இல்லை.
எனக்காக, என்னோட ஆசைக்காகன்னு நான் எதுவும் செய்ய முடியாது. நான் ஆசைப்படறதே தப்புங்கற மாதிரி பேசுவார். அவர் எடுத்துக்கிட்டு வர்ற புடவைகளைத்தான் நான் கட்டிக்கணும். வருஷத்துக்கு ஒரு தடவை மொத்தமா ஏழெட்டு புடவைகளை வாங்கிப் போடுவார். அவர் பார்த்து ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போனாத்தான் உண்டு. என்னிக்காவது ஹோட்டலுக்கு போலாம்ன்னு நான் கேட்டா 'ஏன்... வீட்ல சமைக்கலையா?' அப்பிடின்னு கேட்பார். கேட்டுக்கிட்டே வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுடுவார். அவருக்கு இஷ்டம் இருக்கறப்ப மட்டும்தான் ஹோட்டலுக்கு போணும். மொத்தத்துல என்னை அவர் ஒரு மனுஷியாக்கூட மதிக்கறதில்லை. நானும் இங்கே வர்றப்பயெல்லாம் திரும்ப திரும்ப அவரோட மோசமான நடவடிக்கைகளைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன். உங்களுக்கும் இதைக் கேட்டு கஷ்டமா இருக்கும். கவலையா இருக்கும்...''
''என் மேலதான்மா எல்லா தப்பும். அப்பா சொல்ல சொல்ல கேக்காம அவனுக்கு உன்னைக் கட்டிவச்சது என்னோட தப்பு...''
''நடந்தது நடந்துருச்சும்மா. இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்லை. நான்தான் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன். என்னோட ஸ்வாதி சந்தோஷமா வாழணும். அவளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையணும். இதுக்காக நான் எந்தக் கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பேன்.''
அதுவரை மௌனமாக இருந்த சுந்தரபாண்டி, வருத்தம் தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்.
''மகளுக்காக எவ்ளவு வேணும்னாலும் கஷ்டப்படலாம்மா. பணம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா... அதுக்கு சரிசமமா... மாமியாரும், மாப்பிள்ளையும் நல்லபடியா... தொந்தரவு குடுக்காம இருந்தாங்கன்னா நல்லா இருக்கும். போற இடத்துல மகள் திவ்யமா வாழ்வா... சந்தோஷமா வாழ்வாங்கற ஆசையிலயும், நம்பிக்கைலயும் பணத்தை கணக்கு பார்க்காம அவங்க கேட்டதையெல்லாம் செய்யறோம். செஞ்சோம். அதுக்கு பிரதிபலனா... மருமகளை... தங்களோட மகளா நினைச்சு சீராட்டி, பாராட்டாட்டா கூட பரவாயில்லை. ஒரு பொண்ணா மதிச்சு... பிரச்னை குடுக்காம இருந்தா பொண்ணைப் பெத்தவங்களுக்கு நிம்மதியா இருக்கும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களோட பொண்ணு, புகுந்த வீட்ல நிம்மதியா வாழணும்னு எவ்ளவு துடிக்கறாங்க... போன இடத்துல பொண்ணு என்ன பண்றாளோ... எப்பிடி இருக்காளோ... சந்தோஷமா இருக்கறாளா இல்லையாங்கற நினைப்புதான் எல்லா அம்மா அப்பாவுக்கும் எப்பவும். ஹூம்... என்னம்மா செய்றது? உன்னோட தலையெழுத்து இப்பிடி ஆயிடுச்சு...''
''கவலைப்படாதீங்கப்பா. அதான் சொல்லிட்டீங்களே தலையெழுத்துன்னு... மாத்தி எழுத யாரால முடியும்? அது சரி... என்னோட கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாம் முடிஞ்சுதா? ஸ்வாதி பிறந்தப்ப வாங்கின கடன் முடிஞ்சுதா? ரொம்ப வருஷமா வட்டி மட்டுமே கட்டிக்கிட்டிருந்தீங்க?''
''அதெல்லாம் இப்ப எதுக்கும்மா? இங்கே இருக்கற வரைக்கும் நீ எதைப்பத்தியும் யோசிக்காம சந்தோஷமா.... நிம்மதியா இரு...''
அப்போது அங்கே ஸ்வாதி ஓடிவந்து சுந்தரபாண்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
''தாத்தா... க்ராக்கடைல் பார்க்குக்கு கூட்டிட்டுப் போறீங்களா தாத்தா...?''
''அதுக்கென்னடா கண்ணம்மா... போலாமே.''
''ஏ... ஸ்வாதி... தாத்தாவுக்கு வயசு என்ன கொஞ்சமாவா ஆகுது? அவரைப் போய் க்ராக்கடைல் பார்க்குக்கு கூட்டிட்டு போகச் சொல்றியே...?'' ராதா கண்டித்தாள் ஸ்வாதியை.
''அட... நீ என்னம்மா ராதா... கால் டேக்ஸி சொன்னா வரப் போகுது... நாங்க பாட்டுக்கு போகப் போறோம். வரப் போறோம்... இதில என்ன கஷ்டம்?''
''அதில்லப்பா... கால் டேக்ஸின்னா கூட ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆகிடுமே...''
''பரவாயில்லைம்மா. வருஷத்துக்கு ஒரு தடவைதான் வர்றீங்க. குழந்தை ஆசையா கேக்கறா. எப்பிடிம்மா மறுக்க முடியும்?! அது சரி... அம்மா, சமையலை முடிச்சுட்டாங்களான்னு பாரு. சாப்பிடலாம்...''
''அப்பா, நாம எல்லாரும் சேர்ந்து நம்ம வீட்டு முற்றத்துல உட்கார்ந்து சாப்பிடலாம்ப்பா. ரொம்ப நாளாச்சு அப்பிடி சாப்பிட்டு. இங்கே இருக்கற வரைக்கும் அந்த சுகத்தை ஆசை தீர அனுபவிக்கணும்ப்பா. ''
'ஆசை தீர' என்ற அந்த வார்த்தைகள் மிக விரைவில் உண்மையாகப் போவதை நினைத்தாளா? யதேச்சையாக அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் எதிர்பாராத விதமாக பலிக்கப் போகிறதா?
சமையலறையில் இருந்து வந்த மணம், பசியைத் தூண்டியது. வனஜாவின் கைப்பக்குவத்தில் சுவையாக சமைத்த உணவை சாப்பிட ஆவலுடன் காத்திருந்தாள் ராதா.
அவள் ஆசைப்பட்டபடியே வீட்டின் முற்றத்தில் உணவு வகைகளை எடுத்துக் கொண்டு ஆசையாக, அரட்டை அடித்தபடியே அனுபவித்து சாப்பிட்டனர் அனைவரும்.
20
பணத்தை எண்ணி, தன் ஹேண்ட்-பேக்கில் போட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா.
''மேடம், வினோத் ஸார் பேரைச் சொன்னீங்கன்னுதான் உங்களுக்கு இந்தப் பணத்தைக் குடுக்கறேன். திரும்பக் குடுக்கறதா சொன்ன தேதியில கொண்டு வந்து குடுத்துடுங்க. வட்டிப் பணத்தை இப்பவே எடுத்துக்கிட்டேன். அதனால அசலை சொன்ன டைமுக்கு கொண்டு வந்து குடுத்துடுங்க...''
''சரி மேத்தா ஸார்.''