பூவிதழ் புன்னகை - Page 13
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
குழந்தை ஸ்வாதி மூலம் தன் கணவன் திலீப்பை அன்பு வழிக்குக் கொண்டு வரலாம் என்று நம்பிய ராதாவின் நம்பிக்கை பலிக்கவில்லை.
ஸ்வாதியிடம், திலீப் பிரியமாக இருந்தானே தவிர ராதாவிடம் மனம் ஒட்டவில்லை. வழக்கம் போல சமைத்துப் போடுவதற்கும், அவனது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் ஓர் இயந்திரமாகத்தான் ராதாவின் வாழ்வு தொடர்ந்தது.
இந்த இடைக்காலத்தில் வினோத்திற்கு திருமணம் நடைபெற்றது. அவனுக்கு படிப்படியாக உத்யோக உயர்வு கிடைத்து, வேகமாக முன்னேறினான். அவனது மனைவி பவித்ரா இஷ்டப்படி பணத்தை செலவு செய்யும் ஊதாரியாக இருந்தாள். சதா சர்வமும் 'ஷாப்பிங் வளாகங்களில் நேரத்தை மட்டுமல்லாமல் ஏராளமான பணத்தையும் செலவு செய்பவள்.
தேவை இருக்கிறதோ... இல்லையோ... கண்ணில் கண்டதையெல்லாம் காசை இறைத்து வாங்கிப் போடுவதில் அவளை மிஞ்ச ஆளில்லை. அவளது குணாதியங்களுக்குத் தடை போடுவதற்கு வீட்டுப் பெரியவர்களின் தலையீடு இல்லாத நிலை ஏற்படும் விதமாக, வினோத்திற்கு உத்யோக உயர்வு கொடுத்து, அவனது பணி இடத்தை பெங்களூருக்கும் மாற்றி இருந்தது அவன் பணிபுரியும் நிர்வாகம்.
திருமணமான ஓர் ஆண்டிற்குள் பெண் குழந்தையும் பிறந்திருந்தது. அதற்கு மஞ்சு என்று பெயரிட்டிருந்தனர்.
பெங்களூரில், நிர்வாகம், அவனுக்கென்று வழங்கிய வீட்டிற்கு சென்று குடியேறுவதற்குள் யாரும் எதிர்பாராத வண்ணம், கமலா திடீரென மாரடைப்பால் மரணமடைந்தாள்.
அப்பாவின் மறைவிற்குப் பிறகு தனி ஆளாக டீச்சர் வேலை செய்து, தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து அளாக்கிய அம்மா கமலாவின் திடீர் மறைவு, வினோத்திற்கு தாங்க முடியாத அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.
கமலாவே உறவினர் பலரிடம் சொல்லி வைத்து, நன்கு படித்து, வேலைக்கும் போய்க் கொண்டிருந்த பவித்ராவை, வினோத்திற்கு திருமணம் செய்து வைத்திருந்தாள். பேத்தி மஞ்சு மீது தன் உயிரையே வைத்திருந்தாள் கமலா.
மனைவி பவித்ராவின் போக்கு பிடிக்காத வினோத், அவளைக் கண்டித்தால் பெரிதாக ரகளை செய்வாள். அவளது சம்பளம் போக, வினோத்திடமும் 'பணம்' 'பணம்' என்று அரித்து எடுத்தாள். பணம் கொடுக்க மறுத்தால், அடுத்த வீட்டுக்காரர்கள் வந்து கவனிக்கும் அளவிற்கு உரத்த குரலில் சண்டையிடுவாள். அந்த அவமானத்திற்கு பயந்து பணத்தை அள்ளி வீசுவான் வினோத்.
மஞ்சுவிற்கு நான்கு வயது ஆகிவிட்டபடியால் குழந்தை முன்னிலையில் சண்டை போட்டால் அது வளரும் குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும் என்பதை மனதில் கருதி எதிர்த்து எதுவும் வாதிடாமல் பணத்தை எடுத்துக் கொடுத்து பவித்ராவின் வாயை அடைப்பான். இந்த அவனது பலவீனத்தைப் புரிந்து கொண்ட பவித்ரா, அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி அவனிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.
மஞ்சுவையும் அவள் சரிவர கவனிப்பது இல்லை. தனக்கு இஷ்டம் இருந்தால் அவளை கவனிப்பாள். வினோத்திற்கு சமைத்துப் போடுவாள். குழந்தைக்கும் உணவு கொடுப்பாள். பெரும்பாலான நேரங்களில் குடும்ப நலனில் அவள் அக்கறை கொள்வதே இல்லை. சில நேரங்களில் பலத்த குரல் எழுப்பாமல் கெஞ்சுவது போலக் கெஞ்சிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொள்வதும் உண்டு.
'தன் மீதும், தன்னுடைய குழந்தையின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு தங்கள் இருவரையும் பேணிப் பாதுகாக்கும் பாசமிக்க தாயாக அவள் நடந்து கொள்ள மாட்டாளா' என்று வினோத் ஏங்குவான்.
அதிர்ஷ்ட வசமாக, பவித்ரா பணிபுரியும் நிறுவனத்தின் கிளை பெங்களூரிலும் இருந்தது. அதுவே வினோத்தின் துரதிர்ஷ்டமாக இருந்தது. அவள் வேலைக்குப் போகவில்லை என்றால் குடும்பத்தின் மீது பற்றுதலும், அக்கறையும் உருவாகி இருந்திருக்கும் என்று வினோத் நினைத்தான்.
15
ஸ்வாதி... வளர்ந்தாள். 'பொண்ணு வளர்த்தியோ புடலங்கா வளர்த்தியோ' என்பார்கள். அது போல ஸ்வாதி... மிக வேகமாக வளர்ந்தாள்.
இரவு நேரங்களில் திலீப் சற்று மட்ட ரகமான திரைப்பட டி.வி.டி.க்களைக் கொண்டு வந்து போட்டுப் பார்ப்பான். வளரும் மகள் இருக்கிறாள் என்றுகூட யோசிக்காமல் அவள் முன்னிலையிலேயே உட்கார்ந்து பார்ப்பான். இதைப் பார்த்த ராதா... கோபம் கொண்டாள்.
''ஸ்வாதி... நீ... உன்னோட ரூமுக்குப் போ...'' என்று அவளை அனுப்பிவிட்டு திலீப்பைக் கண்டித்தாள்.
''ஏங்க... பொண் குழந்தையை வச்சுக்கிட்டு இந்த மாதிரி அசிங்கமான படங்களையெல்லாம் பார்க்கறீங்களே...''
''அவ என்ன குழந்தையா? இதெல்லாம் ஒரு ஜாலிதானே...'' கேவலமாகப் பேசினான் திலீப்.
''உங்களை என்னால ஒண்ணும் பண்ண முடியாது. நான் அவகிட்ட பேசிக்கறேன்...''
''நீதான் பத்தாம்பசலி. பொண்ணையும் அப்பிடி ஆக்கிடாதே...''
''ஒழுக்கமா இருந்தா... ஒழுக்கமா வளர்ந்தா... பத்தாம் பசலித்தனமா? நீங்க என்ன வேண்ணாலும் பண்ணிக்கோங்க. உங்க விஷயத்துல நான் தலையிடலை. வீட்டுக்கு வெளியில உங்களோட இந்த நடவடிக்கைகளை வச்சுக்கோங்க. பொண்ணு முன்னால ஜோக் அடிக்கறதா சொல்லி கண்டபடி பேசாதீங்க...''
தனக்காக எதுவும் பேசியிராத ராதா. தன் மகளது வளர்ப்பு குறித்து, கவலைப்பட்டு அவனிடம் பேசினாள்.
''எல்லாம் எனக்குத் தெரியும். நீ போய் உன்னோட வேலையைப் பார்... எனக்கு பசிக்குது. சூடா தோசையும் காரசட்னியும் போட்டுக் கொண்டு வா...''
பெங்களூர் வந்ததில் இருந்து தினமும் குடிக்க ஆரம்பித்தான் திலீப். சென்னையில் இருந்த வரை ஏதாவது ஆபீஸ் விசேஷ தினங்களில் நடக்கும் விருந்துகளில் மட்டும் குடித்துக் கொண்டிருந்த அவன், தற்போது தினசரி... நாள் தவறாமல் குடித்துக் கொண்டிருந்தான்.
ஸ்வாதியின் அறைக்கு சென்றாள் ராதா. அங்கே எதையோ கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதி, ராதாவை பார்த்ததும் 'டக்' என்று அதை மாற்றினாள். பார்க்கக் கூடாததைப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்ட ராதா அதிர்ந்தாள். ஆத்திரப்பட்டாள்.
'எதையோ பார்த்துக்கிட்டிருந்த நான் வந்ததும் மறைச்சுட்ட. உன்னை நம்பி, உன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சு உனக்கு, உன்னோட ரூம்ல கம்ப்யூட்டர் குடுத்துருக்கோம். அந்த நம்பிக்கையை காப்பாத்து. நான் நிறைய படிக்காதவ... கம்ப்யூட்டர் தெரியாதவள்ன்னு நீயும் என்னை உதாசீனப்படுத்தாதே. கெட்டதை சீக்கிரமா பழகிக்க முடியும். நல்லதை நிதானமாத்தான் கத்துக்க முடியும்.
நீ நல்ல பொண்ணு. சூழ்நிலைகளால தப்பு பண்ற பொண்ணா ஆகிடாதே. இந்த கம்ப்யூட்டர், இ-மெயில், இன்ட்டர்நெட், மொபைல், மேஸேஜ் வசதிகள்... இதெல்லாம் புதுமையான நுட்பங்கள். இதை நல்ல விஷயத்துக்கு மட்டும்தான் பயன்படுத்தணும்.
முறைகேடா பயன்படுத்தினா... அதோட பலன்? உனக்கே கேடு விளையும்படி ஆகிடும். நான் அதிகம் படிக்காதவதான். ஆனா... நல்லது எது கெட்டது எதுன்னு புரிஞ்சுக்கற மாதிரி என்னை எங்கம்மா, அப்பா வளர்த்திருக்காங்க. ஃபிட்ஸ் பிரச்னை இருந்தா... வெளியே அனுப்பக் கூடாது...