பூவிதழ் புன்னகை - Page 10
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
பத்து மாதம் சுமந்து, உடல் நோக அவனது குழந்தையைப் பெற்றெடுத்த, ராதாவை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்ததோடு சரி. அவளை நெருங்கி, ஒரு அன்பான வார்த்தைகூட பேசவில்லை திலீப்.
திலகாதான் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தாள். மருத்துவமனை என்பது ஒரு பொது இடம் என்றுகூட பார்க்காமல் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
''சாயங்காலம் நாலு மணியாச்சுன்னா... எனக்கு காஃபி குடிச்சாகணும். இல்லைன்னா தலைவலி வந்துடும்.'' அப்போது அங்கே இருந்த வினோத், உடனே ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு காஃபி வாங்குவதற்காக கிளம்பினான்.
''இந்தப் பையன் யாரு? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...'' என்றாள் திலகா.
''அவன் வினோத். என்னோட நாத்தனார் மகன்'' வனஜா பதில் கூறினாள்.
''ஆமாமா. இப்ப ஞாபகம் வந்துடுச்சு. கல்யாண வீட்ல கூட ஓடியாடி வேலை செஞ்சுக்கிட்டிருந்தான்...''
''ஆமா சம்பந்தியம்மா. உதவி செய்யற மனப்பான்மை உள்ளவன் என்னோட அக்கா பையன் வினோத்.'' சுந்தரபாண்டி பெருமிதத்துடன் கூறினார்.
''அது சரி சம்பந்தி... குழந்தைக்கு குறைஞ்சபட்சம் பத்து பவுன்ல நகை போட்டுடுங்க. வெள்ளி டம்ளர், வட்டில், சங்கு, கிலுகிலுப்பை, கொலுசு, தண்டை வாங்கிப் போட்டுடுங்க. எங்க வீட்டுக்கு நாங்க அழைச்சுக்கறப்ப... ராதாவுக்கு பட்டுப் புடவை வாங்கி குடுத்துடுங்க. முப்பதாவது நாள் குழந்தைக்கு கயிறு கட்டிடறோம். அன்னிக்கு நான் கேட்ட நகை, புடவை, வெள்ளி சாமான்களை வாங்கிக் குடுத்துடுங்க. பொட்டையா பிறந்துடுச்சே. இப்பவே நகை சேர்க்க ஆரம்பிச்சாத்தான் கரை சேர்க்க முடியும்...''
திலகா கொடுத்த பட்டியல், சுந்தரபாண்டியைத் திடுக்கிட வைத்தது. புதுப் பூவாய் பிறந்துள்ள குழந்தையைப் பார்த்து ரசிக்காமல், தூக்கிக் கொஞ்சி மகிழாமல், இப்பொழுதே அக்குழந்தையைக் கரை சேர்ப்பது பற்றி ஆர்ப்பாட்டமாக பேசும் திலகாவிடம் சிறிதளவு கூட நாகரீகம் இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. 'பொட்டை' என்று பெண் குழந்தையைக் குறிப்பிடும் அவளும் ஒரு பெண்தானே?
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திலீப் கூட திலகாவை அடக்கவில்லை. கட்டுப்படுத்தவில்லை.
காஃபி வாங்கிக் கொண்டு வந்த வினோத், டிஸ்போஸபிள் டம்ளர்களில் ஊற்றி அனைவருக்கும் வழங்கினான். வனஜாவின் முகமும், சுந்தரபாண்டியின் முகமும் வாடிப் போயிருந்தது கண்டு 'ஏதோ நடந்திருக்கு' என்பதைப் புரிந்துக் கொண்டான். அச்சூழ்நிலையை சுமுகமாக மாற்ற முயற்சித்தான்.
''திலீப் அண்ணா... குழந்தையை பாத்தீங்களா? உங்களை அப்பிடியே உரிச்சு வச்சிருக்கு. தூக்கிப் பாருங்க அண்ணா. பஞ்சுப் பொதி மாதிரி மெத்... மெத்ன்னு கையும், காலும் எவ்ளவு அழகு பார்த்தீங்களா? சின்னூன்டு முகத்துல மொச்சைக் கொட்டை கண்ணைப் பார்த்தீங்களா...?'' என்று கலகலப்பாகப் பேசினான்.
லேஸான சிரிப்பு ஒன்றையே பதிலாக அளித்தான் திலீப்.
''ஆஸ்பத்திரி கேன்ட்டீன்ல சூடா... வடை, பஜ்ஜி, போண்டா போடுவாங்களே...'' திலகா பேசி முடிப்பதற்குள் வினோத் கிளம்பினான்.
சூடான பஜ்ஜி, போண்டா, வடையுடன் சட்னி வைத்து வாங்கி வந்து கொடுத்தான். காணாததைக் கண்டது போல திலகாவும் நாராயணனும் அவற்றை சாப்பிட்டனர். திலீப்பிற்கும் கொடுத்தாள் திலகா.
''சரி... நாம... கிளம்பலாம்'' என்று திலகா கூற, வாத்தியாருக்குக் கீழ்ப்படியும் மாணவன் போல நாராயணனும் திலீப்பும் எழுந்தனர்.
''நாங்க கிளம்பறோம். குழந்தைக்கு சீர் விஷயமா நான் சொன்னபடி செஞ்சுடுங்க...'' என்று கட்டளை இட்டுவிட்டு வெளியேறிய திலகாவைப் பின் தொடர்ந்தனர் திலிப்பும், நாராயணனும்.
12
குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்ததோடு சரி. அதன்பின் திலீப், குழந்தையைப் பார்க்கவோ, ராதாவைப் பார்க்கவோ சுந்தரபாண்டியின் வீட்டிற்கு வரவே இல்லை. திலகாவும், நாராயணனும் இரண்டு முறை வந்து போனார்கள்.
ஒவ்வொரு முறையும் நகை பற்றிய எச்சரிக்கை மணியை அடித்து விட்டுப் போனாள் திலகா. அவள் மணி அடிக்க... அடிக்க... சுந்தரபாண்டியின் நெஞ்சில் இடி இடித்தது போலிருந்தது.
'என்ன செய்வது?' 'என்ன செய்வது?' என்ற எண்ணச் சூழலில் சிக்கித் தவித்தார் சுந்தரபாண்டி.
வனஜாவோ... பொருளாதாரச் சிக்கல் தவிர 'மகள் ராதாவின் வாழ்வில் சிக்கல் இருக்கிறதே' என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்துக் கவலைப்பட்டாள்.
பெண்மனம் எதையும் எளிதில் புரிந்துக் கொள்ளும். அதிலும் ஒரு தாயின் மனம்? திருமணமாகி ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் குழந்தை பெற்றெடுத்துள்ள இளம் மனைவியை மறுமுறை பார்க்கக் கூட வராத மருமகன் திலீப்பின் நடவடிக்கை பற்றி யோசித்தாள். 'ஏதோ... தப்பு இருக்கு மருமகனிடம்' என்று அவளது உள்மனம் வெளியிட்டது. அவளது இதயத்தில் திகில் உணர்வு முளைவிட்டது.
சுந்தரபாண்டி, மேலும் கடன் வாங்குவதற்காக ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியேறினார். அவர் போனதும் ராதாவின் அருகே சென்றாள் வனஜா.
ராதாவின் தலை கோதி வருடிக் கொடுத்தாள். நெஞ்சை அடைத்த துக்கம், மடை திறந்த வெள்ளமென கண்ணீராகப் பெருக்கெடுக்க, அதைப் பார்த்த ராதா திடுக்கிட்டாள்.
''என்னம்மா? ஏன் அழறீங்க?'' வனஜாவின் கண்ணீரைத் துடைத்தபடியே கேட்டாள்.
''நீ கேள்வி கேட்க வேணாம்மா. நான் கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லு. உன்னோட மாமியார் பொல்லாதவ. புரிஞ்சுக்கிட்டோம். ஆனா... உன்னோட புருஷன்? நீ ஆஸ்பத்திரியில இருந்து வந்தப்புறம் ஒரு நாள் கூட உன்னைப் பார்க்க வரலியே அவர்? ஏன்...?''
''அ... அ... அது வந்தும்மா... இப்போன்னு பார்த்து அவருக்கு ஆபீஸ்ல நிறைய வேலையாம்...'' ராதா பேசி முடிக்கும் முன் வனஜா அவளது வாயைத் தன் விரல்களால் மூடினாள்.
''போதும்மா. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தா... அது உண்மையாயிடுமா? தாய் அறியாத சூல் இல்லை. உன் புருஷன் நல்ல மனுஷன் இல்லை. அதனால உன் மனசு புண்பட்டுப் போய்க் கிடக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். உன் மாமியாரோட கைப்பாவையா இருக்கார் உன் புருஷன். ஆஸ்பத்திரியில உன்கிட்ட வந்து ஒரு வார்த்தை கூட பேசலை. குழந்தை பெத்துருக்கற ஒரு இளம் தாய், தன் கணவனோட ஆசை வார்த்தைகளுக்கும் அன்பான பேச்சுக்காகவும் எவ்ளவு ஏங்குவாள்ன்னு எனக்குத் தெரியாதா? இந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி வந்தவதானே நான்? நான்... உன்னைப் பெத்தெடுத்தப்ப... ஆஸ்பத்திரிக்கு அவங்கம்மா, அப்பா, அக்காவோடத்தான் வந்தாரு உங்கப்பா. அந்தக் காலத்துல பெற்றோர் முன்னால பொண்டாட்டிகிட்ட பேசறதுக்குக் கூச்சப்படுவாங்க ஆம்பளைங்க. உங்கப்பாவும் அப்பிடித்தான். அவர் என்ன பண்ணினார் தெரியுமா? அவர் கூட வந்த அவங்கம்மா, அப்பா, அக்கா கூடவே கிளம்பிப் போய் அவங்களை வீட்ல விட்டுட்டு, ஃப்ரண்ட்ஸைப் பார்க்கப் போறதா அவங்ககிட்ட பொய் சொல்லிட்டு நேரா நான் இருந்த ஆஸ்பத்திரிக்கே வந்துட்டார்.