பூவிதழ் புன்னகை - Page 6
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
'பிள்ளை உண்டானா... மசக்கை வரும். மசக்கைன்னா வாந்தி வரும். வாந்தி எடுத்தா உடல் மெலியத்தான் செய்யும். இதையெல்லாம் பெரிசு படுத்தி பேசாதீங்க சம்பந்தியம்மா...''
'நான் என்ன அப்பிடி தப்பா கேட்டுட்டேன்னு இந்தம்மா இப்பிடி குதிக்கறாங்க!' என்று நினைத்த வனஜா, மகளின் தலையை வருடிக் கொடுத்தாள்.
''பலகாரம் சாப்பிடும்மா'' அன்போடு அம்மா கொடுத்த பலகாரத்தை ஆசையோடு சாப்பிட்டாள் ராதா.
'' 'வாந்தி எடுக்குது... வாந்தி எடுக்குது'ங்கற. பின்ன எதுக்கு எண்ணெய் பலகாரத்தை சாப்பிடறே...'' கண்டித்தாள் திலகா.
ராதாவின் இதயத்தின் ஒரு பக்கம் அவளுடன் பேசியது. 'என்ன ராதா... உன் பெற்றோர் கொண்டு வந்த பலகாரத்தை சாப்பிட உனக்கு உரிமை இல்லையா? நீ மசக்கையா அல்லது உன் மாமியார் மசக்கையா?' துடுக்காகக் கேட்ட இதயத்தின் அந்த ஒரு பக்கத்தை வலிமையோடு அடக்கி வைத்தாள் ராதா.
மகளுடன் எதுவும் அரவணைப்பாகவும், அந்தரங்கமாகவும் பேச இயலாதவாறு, திலகா அங்கேயே 'திம்'மென்று உட்கார்ந்திருந்தாள்.
பொதுவான சில விஷயங்களை 'மொக்கை' போட்ட பின்னர் தயக்கமாய் ஆரம்பித்தாள் வனஜா.
''சம்பந்தியம்மா... ராதா உண்டாகி இருக்கற இந்த நேரத்துல... பிறந்த வீட்டுக்கு வந்தா அவளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்... அதனால கொஞ்ச நாள் ராதா எங்க வீட்ல வந்து இருக்கட்டும்....''
''அதென்ன நீங்க பேசறது? எங்க வீட்ல என்ன ஓய்வு இல்லாமயா இருக்கா உங்க பொண்ணு...?'' வாயில் திணித்துக் கொண்ட பலகாரத்தை மென்றுக் கொண்டே விதண்டாவிதமாகப் பேசினாள் திலகா.
''ஐய்யோ... நாங்க அப்பிடி சொல்லலைங்க சம்பந்தியம்மா. கர்ப்பமா இருக்கற இந்த நேரத்துல தாய் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறது நம்ம வழக்கம்தானேங்க...'' வனஜா கெஞ்சினாள்.
அப்போது ராதாவின் இதயத்தின் ஒரு பக்கம் அவளுடன் கிசுகிசுத்தது.
'பெத்த பொண்ணு நீ... உன்னை உன்னோட பிறந்த வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதுக்கு உங்கம்மா, சம்பந்திகிட்ட கெஞ்சறாங்க. 'நான் அப்பிடித்தான் போவேன்' அப்பிடின்னு நீ சொல்ல வேண்டியதுதானே' என்றது.
'என்னால வாய் விட்டு சொல்ல முடிஞ்சா... நான் ஏன் உன்னைப் பேச விடறேன். கொஞ்சம் அடங்கி இரு' என்று மீண்டும் அதை அடக்கி வைத்தாள் ராதா.
அவளுடைய எல்லையற்ற, தேவையற்ற பொறுமை கண்டு கோபித்துக் கொண்ட அவளது இதயத்தின் ஒரு பக்கத்திற்கு, தன் பூவிதழ் புன்னகை ஒன்றை பதிலாகக் கொடுத்து சாந்தப்படுத்தினாள்.
ராதாவை தங்களுடன் அனுப்புவதற்கு திலகா மறுத்தபடியால் ஓரளவு ரோஷத்தோடு அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்தார் சுந்தரபாண்டி. அவர் எழுந்ததும் வனஜாவும் எழுந்தாள்.
அதைப் பார்த்து பதறிப் போனாள் ராதா.
''அம்மா... அப்பா... வந்ததும் கிளம்பறீங்க. மதியம் இங்க சாப்பிட்டுட்டு போங்க...''
''இல்லைம்மா? வயிறும், மனசும் நிறைஞ்சாச்சு. போதும். நாங்க கிளம்பறோம்'' என்றவர் திலகாவிடம் திரும்பினார்.
''சம்பந்தியம்மா... நாங்க கிளம்பறோம். மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு கேக்கறோம். அவர் சம்மதிச்சா... ராதாவை எங்க வீட்டுக்கு ஒரு வாரமாவது அனுப்பி வைங்க...''
''நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல. பிறகென்ன திலீப்ட்ட கேட்கறது...? இவ இல்லாம திலீப் சிரமப்படுவான்...''
''சரிங்க. நாங்க கிளம்பறோம்...'' அப்பாவும், அம்மாவும் சோர்ந்து போன முகத்துடன்... வருத்தப்பட்ட மனத்துடன் கிளம்புவதைப் பார்த்த ராதாவின் கண்கள் கலங்கின.
'கடன்பட்டு... உடன்பட்டு... மாப்பிள்ளை வீட்டாருக்கு பைசா செலவின்றி மகளையும் தாரை வார்த்துக் கொடுத்த பெற்றோருக்கு தலைவாழை இலை போட்டு விருந்து வைக்காவிட்டாலும், தலைகுனிஞ்சு போய் கிளம்பற மாதிரி அவமானப்படுத்தாமலாவது இருக்கக் கூடாதா? பெத்தவங்ககிட்ட நாலு வார்த்தை மனசுவிட்டு பேசக் கூட விடாம... கூடவே உட்கார்ந்துக்கிட்டு...' என்று மாமியாரின் அராஜகம் பற்றி யோசித்த ராதா பெற்றோரை வழி அனுப்பி வைத்தாள் விழிகள் நிறைந்த கண்ணீருடன்.
6
ராதாவின் வயிற்றில் ஏழு மாதக் கருக்குழந்தையாக வளர்ந்திருந்தது. கர்ப்பக்கால ஓய்வு என்பது சிறிதும் இன்றி பம்பரமாய் சுழன்று வேலைகளை செய்தாள் ராதா.
மாமியாரின் பரிவும் இன்றி, கணவனின் அன்பான அரவணைப்பும் இன்றி, தாய்மடிக்கு ஏங்கி, தனக்குள் அழுதுக் கொண்டிருந்தாள். 'எப்போதுடா... பிரசவத்திற்கு அம்மா வீடு செல்வோம்?' என்று துடித்துக் கொண்டிருந்தாள்.
பொண்ணைக் கொடுத்தவர்கள், தலை குனிந்துதான் ஆக வேண்டும்; அடி பணிந்துதான் போக வேண்டும் என்கிற இழிவான கலாச்சாரத்தில் சிக்கிக் கொண்டனர் அவளது பெற்றோர்.
எனவே வேறு வழியின்றி திலகாவின் அவமரியாதையை பொருட்படுத்தாமல் தங்கள் மகளுக்குப் பிடித்தமானதை சமைத்து, அவ்வப்போது கொண்டு வந்து கொடுத்தனர். புளிசாதம், மாங்காய், ஊறுகாய், புளிக்குழம்பு, வற்றல், வடகம் போன்ற பல தினுசு வகைகளை வீட்டிலேயே செய்து கொண்டு வந்து கொடுத்தனர். சமையல் வேலைகள், வீட்டு வேலைகள் இவற்றை முடித்த பிறகு அம்மாவின் கைப்பக்குவத்தை ருசித்து சாப்பிட உட்கார்வாள். அச்சமயம் பார்த்து திலகா, கூப்பிடுவாள்.
'குடிக்க தண்ணி கொண்டு வா. தலைக்குத் தேய்க்க எண்ணெய் எடுத்துட்டு வா...' இப்படி வேலை வாங்கி நிம்மதியாக சாப்பிட விடமாட்டாள். ராதா அந்த வீட்டுக்கு மருமகளாக வந்தபின் திலகா, ஸோஃபா கொள்ளாமல் எடை கூடி இருந்தாள்.
அன்றும் ராதா சாப்பிட உட்கார்ந்த உடனே கூப்பிட்டாள் திலகா. அப்போது அவளது இதயத்தின் ஒரு பக்கம் பேசியது.
'சாப்பிட்டுட்டு வரேன் அத்தை'ன்னு சொல்ல முடியாம 'உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு? அதான் இன்னும் ஒரு வாய் கூட போட்டுக்கலியே... இங்கே இருந்தே சொல்லேன்.' இதயத்தின் ஓசையை அடக்குவதற்குள் மறுபடியும் உரக்கக் கத்தி அழைத்தாள் திலகா. சாப்பிடாமலே எழுந்து சென்று, திலகா ஏவிய வேலைகளை செய்து முடித்த பின்னரே சாப்பிட உட்கார்ந்தாள் ராதா.
'என் இதயத்தின் ஒரு பக்கம் பேசுவதை என் வாய் வழியாக நான் பேசினால்? எனக்கு ஆதரவு இல்லாத கணவரின் ஏச்சுக்கு ஆளாக நேரிடும். மாமியாரின் கடுமையான சொல் வீச்சுக்கு ஆளாகி என் மன நிம்மதி கெடுவது மட்டுமின்றி என் அம்மா, அப்பாவின் கவலைகளும் கூடிடும்.' யோசித்தபடியே சாப்பிட்டாள் ராதா.
மாலை நேரம். திலீப் வந்தபின் அவனுக்கு காஃபி போட்டுக் கொடுத்து, மறுபடியும் இரண்டாவது காஃபி கேட்கும் மாமனாருக்கும் போட்டுக் கொடுத்து அதன்பிறகு இரவு நேர டிபன் தயாரிக்கும் வேலைகளில் மூழ்கி, மறுநாளைக்குரிய முன் வேலைகளை முடித்து வைப்பாள். இரவு பதினோரு மணி வரை அனைவரும் தொலைக்காட்சியை பார்த்து முடித்த பின்னரே சாப்பிட உட்காருவார்கள். சாப்பிட்டு முடித்து, சமையலறையை சுத்தம் செய்து முடித்து, படுக்கையறைக்கு போவதற்குள் பன்னிரண்டு மணியாகிவிடும். தினமும் இப்படித்தான்.