பூவிதழ் புன்னகை - Page 7
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
அன்றும் பன்னிரண்டு மணியளவில் மாடியறைக்கு சென்ற ராதா, குளியலறைக்குள் சென்று உடை மாற்றினாள். மாற்றும் பொழுது மேடிட்ட தன் வயிறை கைகளால் தடவினாள். நைட்டி அணிந்த பிறகு படுப்பதற்காக கட்டிலுக்கு சென்றவள், அங்கே படுத்திருந்த திலீப்பின் கைகளை எடுத்து, தன் வயிற்றின் மீது வைத்தாள்.
''என்ன இது... தூங்கற நேரத்துல... தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்க...'' எரிந்து விழுந்தான். கூனிக் குறுகிப் போனாள் ராதா. குலுங்கி குலுங்கி அழுதாள். அப்போதும் அவள் அழுவதைப் பார்த்து மனம் இரங்கவில்லை திலீப்பிற்கு.
''இப்ப என்ன ஆயிட்டுதுன்னு ஒப்பாரி வைச்சுட்டிருக்க? குழந்தை இருக்கற வயிறு இப்பிடித்தான் இருக்கும். இதில என்ன புதுமை இருக்கு...?''
வெந்த புண்ணில் வேலைக் குத்தியது போல உள்ளம் நொந்து போனாள்.
அப்போதும் அவளது இதயம் பேசியது.
'என் உடலோடு கலந்து உறவாடிய அடையாளமா உன்னோட குழந்தை கருவாகி இருக்கற என்னோட வயிற்றைப் பார்க்கறது உனக்கு புதுமை இல்லைன்னா... எதுக்காக உனக்கு கல்யாணம்...? குழந்தை...? எதுவுமே புதுமை இல்லைன்னு சும்மா இருந்திருக்க வேண்டியதுதானே...? கர்ப்பமாகி இருக்கற பெண்களோட கணவன் எவ்ளவு ஆசையா, அன்பா தோளை அணைச்சுக்கிட்டு, கையைப் பிடிச்சுக்கிட்டு போறதை பார்த்திருக்கேன். பெண்மையின் அடுத்த கட்டமான தாய்மை தெய்வீகமானது. அதுகூட புரியாம என்னை உதாசீனப்படுத்தறியே... அப்பிடின்னு இப்ப கூட உன்னால கேட்க முடியலியா?'
இதயத்தின் ஒரு பக்கம் அவளை இடித்துக் காட்டிப் பேசியதைக் கேட்க விரும்பாமல் தன் இரு பக்க செவிகளையும் அடைத்துக் கொண்டாள் ராதா.
எந்த விதமான உணர்வும் இன்றி, மூக்கு முட்ட இரவு டிபன் சாப்பிட்ட நிறைவில் கும்பகர்ணனாய் தூங்கிப் போயிருந்தான் திலீப்.
7
ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து, பேறுகாலத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வனஜாவும், சுந்தரபாண்டியும் சம்பந்தி வீட்டிற்கு சென்று பேசினார்கள்.
வழக்கம் போல 'உர்'ரென்ற முகத்துடன் கறாராகப் பேசி அனுப்பினாள் திலகா. அங்கே சகல முடிவு எடுப்பதும் அவள்தான். அவளது கைப்பாவையாக இருந்தனர் அவளது கணவர் நாராயணனும், மகன் திலீப்பும்.
''எங்க குடும்பத்துல ஒம்பதாம் மாசம்தான் பேறு காலத்துக்கு அனுப்பறது வழக்கம். அதனால ஒம்பதாம் மாசம் நல்ல நாள் பாருங்க. சீமந்தம் பண்ணுங்க. வளைகாப்புக்கு வெறும் கண்ணாடி வளையல்களை வாங்கிட்டு வந்து அடுக்கிடலாம்ன்னு நினைச்சுடாதீங்க. அஞ்சு பவுன்ல பட்டையா தங்க வளையல் வாங்கிட்டு வந்து போடுங்க.''
இதைக் கேட்ட சுந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்தார்.
''சம்பந்தியம்மா... கல்யாண செலவுக்கு வாங்கின கடனே இன்னும் அடையல. இப்ப... வளைகாப்புக்கு தங்க வளையல் போடச் சொன்னா... ரொம்ப சிரமம்ங்க... ராதாவுக்கு பட்டுப்புடவை வாங்கிடறோம். சீர் பலகாரம் செஞ்சுடறோம்...''
''தங்க வளையல் வாங்கிப் போட முடியலைன்னா விட்டுடுங்க. ஆனா சீமந்தத்தை சிறப்பா நடத்தணும். எங்க சொந்தக்காரங்க குறைஞ்சபட்சம் இருநூறு பேர் வருவாங்க. விருந்து போடணும். மண்டபம் பிடிக்கணும். இந்த செலவை நீங்க ஏத்துக்கோங்க. தங்க வளையல் போட வேண்டாம்னு பெருந்தன்மையா விட்டுக் குடுத்துடறேன்...''
'ஆகா... பெருந்தன்மையா விட்டுக்குடுக்கறாளாம். எப்பப் பார்த்தாலும் திங்கறதுலயே இருக்கியே... அல்லது சொந்தக்காரங்களுக்கு விருந்து படைக்கணும்ங்கற... எங்கம்மா அப்பா என்ன... பணம் காய்ச்சி மரங்களா? இப்பிடி நீ கேக்கமாட்டியா ராதா?' என்று ராதாவின் இதயம் பேசியது.
'நீ வேற நேரம் கெட்ட நேரத்துல... பேசிக்கிட்டு? அவங்கதான் தங்க வளையல் வேணாம்ங்கறாங்கள்ல்ல? அது வரைக்கும் புண்ணியம். பெருமளவுல செலவு குறையும். சும்மா இரு' என்று கூறி, இதயக்குரலின் ஓசையை அடக்கினாள் ராதா.
ஒரு வழியாகப் பேசி முடித்து, வளைகாப்பிற்கு நாளும் குறிக்கப்பட்டு வளைகாப்பு விழாவை விமரிசையாக நடத்தினார்கள் வனஜாவும், சுந்தரபாண்டியும். உறவுக் கூட்டம் தின்று தீர்த்தது. அவர்களுக்கு விருந்து போடுவதற்காக வாங்கிய கடன் சுமை, சுந்தரபாண்டியைத் தின்றுக் கொண்டிருந்தது.
எதிர்பாராதபடிக்கு, ராதாவின் புகுந்த வீட்டினரின் போக்கு பற்றி சுந்தரபாண்டி கூறியதும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தான் கேசவன்.
'நல்ல குடும்பம், அழகான மாப்பிள்ளைன்னு அக்கா மகளுக்கு ஆசை ஆசையாய் இந்த வரன் பற்றி சொன்னேனே? இப்பிடி ஒரு கண்ணியம் இல்லாத குடும்பமா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலியே... 'ஆளைப் பார்த்தா அழகு... வேலையைப் பார்த்தா இழவு'ன்னு நம்ம முன்னோர்களோட பேச்சு வழக்கு ! அதை நிரூபிச்சுட்டானே இந்த திலீப் ?! ' என்று மனதிற்குள் குமைந்தபடியே வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொண்டு, சுந்தரபாண்டிக்கு உதவிகள் செய்தான் கேசவன்.
சுந்தரபாண்டி மூலமாக ராதாவின் புகுந்த வீட்டினரின் அராஜக நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்ட கேசவன், துக்கத்தால் துவண்டு போனான்.
'கடையில் வாங்கின புடவையை மாத்தலாம். நகையை மாத்தலாம். ஆனா... கல்யாண சம்பிரதாயத்துல இணைஞ்ச புருஷனையோ... புகுந்த வீட்டு குடும்பத்தையோ மாத்த முடியுமா ?' செய்வதறியாது, திகைப்பு நிறைந்த மனதுடன் செயல்பட்டான் கேசவன்.
8
வளைகாப்பு விழா முடிந்து, ராதா தன் பெற்றோருடன் கிளம்பினாள். விடைபெறும் பொழுது, 'தன் பிரிவு திலீப்பை வாட்டுமோ... அதன் எதிரொலியாக ஏதாவது பேசமாட்டானா' என்று எதிர்பார்த்த ராதா, ஏமாந்தாள்.
ஒரு புன்சிரிப்பு கூட சிரிக்க மனமின்றி வழக்கம் போல இறுகிய முகத்துடன் இருந்தான். ஒரு வருடகாலம் அவனுக்கு சேவகம் செய்து, சுவையான உணவு சமைத்துக் கொடுத்து, அவன் விரும்பிய போது படுத்து... அவனது வாரிசை வயிற்றில் ஏந்தி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளில் கஷ்டப்பட்டபோது எவ்வித ஆறுதலும் அரவணைப்பும் தராவிட்டாலும், பேறு காலத்திற்காக கிளம்பும் சமயமாவது, அன்பான ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தையாவது பேச மாட்டானா என்று தவித்தாள் பேதை.
காத்திருந்த கால் டேக்ஸியில் பெற்றோருடன் கிளம்பிய ராதா, வயிற்றில் பிள்ளை சுமையுடன், மனதில் துன்பச் சுமையையும் சேர்த்து சுமந்தாள். காரில் ஏறி உட்கார்ந்த அடுத்த விநாடியே வனஜாவின் மடியில் படுத்து முகம் புதைத்துக் கொண்டாள். தாயின் தலை வருடலில், தன் மன நெருடல்களையும் நெருஞ்சி முள்ளாய் குத்தும் வேதனைகளையும் மறந்தாள். கார் விரைந்தது.