Lekha Books

A+ A A-

பூவிதழ் புன்னகை - Page 5

poovithal punnagai

மனைவிக்கு பயந்து, தன் வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்பவர் மாமனார் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆனால் தாலி கட்டிய கணவனின் போக்கையும், மனோபாவத்தையும் மட்டும் புரிந்து கொள்ளாமல் தவித்தாள்.

ராதாவைப் பார்த்து ஒரு சாதாரண சிரிப்பு கூட சிரிக்க மாட்டான் திலீப். பதவிசாய் சமைத்துப் போடுவதற்கும், படுக்கையில் சுகம் கொடுப்பதற்கும் மட்டுமே மனைவி என்கிற ரீதியில் மட்டும் அவளுடன் பழகி வந்தான். ஆபிஸிற்கு திலீப் கிளம்பும் வரை அவனது தேவைகளை கவனிக்க வேண்டும். பார்த்து பார்த்து எல்லாம் செய்தாலும் அவனிடமிருந்து ஒரு பாராட்டு வராது. பரஸ்பர சிரிப்பு வராது. திருப்தியை வெளிக்காட்டும் முகபாவம் கூட இருக்காது. இறுகிப் போன மனதுடன் இரும்பு மனிதனாக அவன் இருந்தான்.

நாளடைவில் சரியாவான், மாறுவான் என்று காத்திருந்த ராதாவிற்கு நாட்கள் காத்திருக்காமல் படு வேகமாய் நகர்ந்தன.

இரவு வாழ்க்கையின் இன்பத்தை அவளிடம் அனுபவித்ததன் அடையாளமாய் அவனது வாரிசு ராதாவின் வயிற்றில் உருவாகியது. அதன் விளைவாய் ஏற்பட்ட மசக்கையின்போது கூட அவளை தாய் வீட்டிற்கு அனுப்ப மறுத்தாள் திலகா.

''என்னமோ... அதிசயமா நீ ஒருத்திதான் பிள்ளை உண்டாகி இருக்கற மாதிரி 'அம்மா வீடு போணும்', 'அம்மா வீடு போணும்'ன்னு சொல்லிக்கிட்டிருக்கியே... பிரசவத்துக்கு மட்டும் போனா போதும்'' என்று ஆணையிட்டாள் திலகா.

திலகா கூறியதை திலீப்பிடம் இரவின் தனிமையில் கூறியபோது அவன், திலகாவைவிட கடுமையாகப் பேசினான்.

''அதான் அம்மா சொல்லிட்டாங்கள்ல்ல... அப்புறம் எதுக்கு என்கிட்ட வேற கேட்டுக்கிட்டு?''

''இல்லைங்க... வாந்தியும், மயக்கமுமா ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ஒரு பத்து நாள் அம்மா வீட்டுக்குப் போய் இருந்துட்டு வந்தா உடம்புக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்...''

''ஒரு தடவை நான் மறுத்துப் பேசினா... மறுதடவை அதைப் பத்தி கேட்கக் கூடாது. கேட்டா எனக்குப் பிடிக்காது. வா... வந்து... படு...'' என்று கூறி, அவளைப் படுக்க வைத்து, அவள் மீது படர்ந்தான். மனதையும், அதன் உணர்வுகளையும் கொன்றுவிட்டு அவனது உடலுடன் ஒன்று பட்டாள் ராதா. அவளது இதயத்தில் ரத்தம் கசிந்தது. அவளது இல்லற வாழ்வு கசந்தது.

4

ன் கையில் இருந்த டைரியைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான் வினோத். ஆயிரமாயிரம் தடவைகளுக்கு மேல் படித்திருப்பான் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் எழுதப்பட்டிருப்பதை.

'பூவிதழ் புன்னகை உதிர்க்கும் பூமகள் ராதா...  உனக்கென நான், எனக்கென நீ என பிறந்திருப்பதாக நினைக்கிறேன். உன்னிடம் என் காதலை சொல்ல ஏன் இந்தத் தயக்கம்? எனக்கு ஏன் இந்த மயக்கம்? எப்போது உன்னை சந்தித்தாலும், என் கண்கள்... உன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாலும் ஓர் பூவிதழ் புன்னகையைப் பூக்கின்றன. உன்னிடம் நான் பேசும் பொழுதும் உன் இதழ்கள் ஒரு பூ போன்ற புன்னகையை சிந்துகின்றன. தனிமையில் உன்னைப் பற்றி சிந்திக்கிறேன். ஆனால் உன்னை நேரில் சந்திக்கும் பொழுதோ... உன் மேல் உள்ள காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை. வாய் மொழி வரவும் இல்லை. என் நெஞ்சுக்குள்ளே நீதான் என்று நான் சொன்னால்தானே தெரியும்?! என்னால் சொல்ல முடியவில்லையே. நான் என்ன செய்வேன்?

'உன் பூவிதழ் புன்னகைக்கு 'மோனாலிஸா' என்று பெயரிடலாமா என்று யோசிப்பதிலேயே காலம் ஓடுகின்றதே. நகரும் நாட்கள், முட்களாகக் குத்துகின்றனவே என் மனதை... அதிகம் பேசாத உன்னிடம்... என்ன சொல்லி நான் எழுத என் மௌன தேவதையின் மனம் குளிர?

பிரமிக்க வைக்கும் பேரழகு இல்லை என்றாலும் அடக்கமான உன் அழகு... என்னை மயங்க வைக்கும் விந்தை என்னவோ?

எனக்காகவே... என் மாமன் மகளாய் பிறந்துள்ளாயோ... என்று மனம் உருகுகின்றேன். உள்ளத்தால் நெருங்குகிறேன். உதடுகளால் என்னை உன்னிடம் பிரதிபலிக்க முடியாமல் தயங்குகிறேன். யாரும் சொல்லாமலே... இயற்கையில் பூ பூக்கும். நான் சொல்லாமலே என் இதயத்தில் காதல் பூ பூக்க வைக்கும் பூவையே... புராண ராதையின் நெஞ்சம் கண்ணனுக்கு சொந்தம்... இந்த வினோத்தின் நெஞ்சம் ராதாவுக்கு சொந்தம்...! என் பூவிதழ் புன்னகை அரசியே...!' கொஞ்சம் சொல் என்று கெஞ்சுகிறேன்

என்றோ.... எழுதியது. எழுதியதை ராதாவிடம் கொடுக்கத் தயங்கியது... தவறியது... அனைத்தையும் நினைத்துப் பார்த்து இதயம் கனத்துப் போனான் வினோத். 'மாற்றானுக்கு மனைவியாகிப் போன மாமன் மகள் பற்றி இப்ப நினைப்பது தவறு. நான் உண்மையாக நேசித்த ராதா, உயிருக்குயிராக நேசித்த என் ராதா என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும்.

வெள்ளித் திரைப்படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' போல என் இதயத் திரையின் உள்ளுக்குள்ளே ராதாவின் மீதான காதலும் அது போல ஆகிவிட்டதே' திரும்பத் திரும்பத் தோன்றிய எண்ணங்களை பெருமளவு முயற்சி செய்து அடக்கி வைத்தான். பெருமூச்சுடன் வீட்டை விட்டு வெளியே காலாற நடந்து, தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள முயற்சித்தான்.

5

களுக்கு மசக்கை என்ற மகிழ்ச்சியில் கூடை கூடையாய் பழங்களும், பலகாரங்களையும் எடுத்துக் கொண்டு சம்பந்தி வீட்டிற்கு சென்றனர் சுந்தரபாண்டியும், வனஜாவும்.

அவர்களை வரவேற்று உட்கார வைத்தாள் திலகா.

''ராதா... ஏ... ராதா... உங்கம்மா, அப்பா வந்திருக்காங்க பாரு. கையோட அவங்களுக்கு காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வா.''

'சம்பந்தியம்மாவின் பேச்சு என்ன இப்பிடி கண்டிப்பான டீச்சர் போடற கட்டளை மாதிரி இருக்கு?' சுந்தரபாண்டி, வனஜா இருவரும் ஒரு சேர ஒரே எண்ணத்தில் லேசாய் கவலைப்பட்டனர்.

''இதென்ன... பலகாரமும், பழங்களுமா? எண்ணெய் பலகாரங்கள் எங்க வீட்ல யாருமே சாப்பிடறதில்லை. பரவாயில்லை. ஏதோ ஆசையா கொண்டு வந்திருக்கீங்க. இருக்கட்டும்...''

அலட்டலாய் இருந்தது திலகாவின் பேச்சு.

எண்ணெய் பலகாரங்களை மொசுக்குவதே அவள்தான்.

நெற்றியில் பொடித்திருந்த வியர்வைத்துளிகள்! கண்களில் புதிதாக தோன்றி இருந்த கருவளையங்கள்! வாந்தி எடுத்ததால் மெலிந்து போன தேகம், புன்னகை மறந்து போன முகம்! இவற்றோடு கையில் காஃபியோடு அங்கே வந்தாள் ராதா.

பெற்றோரைக் கண்டதும் ஆனந்தமும், அழுகையும் சேர்ந்து உருவாகியது. அழுகையை அடக்கிக் கொண்டு ''நல்லா இருக்கீங்களாம்மா... நல்லா இருக்கீங்களாப்பா?'' என்று குசலம் விசாரித்தாள்.

''என்னம்மா ராதா... வாந்தி அதிகமா இருக்கா? இளைச்சுப் போயிருக்கியே...'' கரிசனத்துடன் வனஜா கேட்டதும் திலகா 'வெடுக்' என்று பேசினாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel