பூவிதழ் புன்னகை - Page 9
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
10
வளைகாப்பு அன்று ராதாவைப் பார்த்த வினோத், பத்து நாட்களுக்குப் பிறகு தன் அம்மாவுடன் சுந்தரபாண்டியின் வீட்டிற்கு வந்திருந்தான்.
வயிற்றுப் பிள்ளையால் மெருகு ஏறி, புதிய சோபையுடன் காட்சி அளித்த ராதா, அவனைப் பார்த்ததும் தனக்கே உரித்தான பூவிதழ் புன்னகையை உதிர்க்க, உள்ளத்தில் உதயமான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிக்க சிரமப்பட்டான் வினோத்.
அவனது அம்மா கமலாவின் குரல், அவனுடைய கவனத்தை நிதானத்திற்குக் கொண்டு வந்தது.
''என்னடா ராதா... நீ பூசி மொழுகி உடம்பு ஏறி இருக்கறதைப் பார்த்தா... பெண் குழந்தைதான் பிறக்கும் போல இருக்கு?!''
மறுபடியும் அந்தப் பூவிதழ் புன்னகையோடு சிணுங்கலாகப் பேசினாள் ராதா.
''எனக்கு பொண்ணுதான் வேணும்'' என்றவள் வினோத்தைப் பார்த்துப் பேசினாள்.
''உங்க வேலை பெர்மெனென்ட் ஆயிடுச்சா வினோத்?''
மற்றவர்கள் 'வினோத்', வினோத்' என்று கூப்பிடுவதைப் பார்த்து சிறு வயதில் இருந்தே அவனை பெயரிட்டு அழைத்தே பழகி இருந்தாள் ராதா. 'நீ'... 'நான்' என ஒருமையில்தான் பேசுவது அவளது வழக்கமாக இருந்தது.
''எப்பவும் போல என்னை 'நீ'... 'வா'... 'போ'ன்னே பேசு. என்ன இது புதுசா?! நீங்க... நாங்கன்னுக்கிட்டு...?'' என்று கேட்ட வினோத்திற்கு தன் பூவிதழ் புன்னகையையே பதிலாகக் கொடுத்தாள் ராதா.
''பொண்ணுங்க அப்பிடித்தாண்டா வினோத். ஒருத்தன் கையால, கழுத்துல தாலி வாங்கிட்டா... நிறைய விஷயத்துல மாறிடுவாங்க...'' கமலா கூறினாள்.
''என்ன மாறிடுவாங்க? யார் மாறிடுவாங்க?'' என்று கேட்டபடியே அங்கே வந்தாள் வனஜா.
''பொதுவா... பொண்ணுகளோட இயல்பைப் பத்தி பேசினேன் வனஜா. அது சரி, ராதாவுக்கு பிரசவ தேதி சொல்லிட்டாங்களா?''
''டிசம்பர் ஆறுன்னு டாக்டரம்மா சொன்னாங்க...''
''இந்தா வனஜா... நம்ம ராதா, நல்லபடியா பெத்துப் பிழைக்கணும்ன்னு பெருமாள் கோவில்ல வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்...''
துளசி பிரசாதத்தை வனஜாவிடம் கொடுத்து விட்டு, ராதாவிற்கும் கொடுத்தாள்.
''புகுந்த வீட்ல நல்லபடியா சந்தோஷமா இருக்காளா நம்ம ராதா?''
''அவளுக்கென்ன? சந்தோஷமா... சௌகரியமா இருக்கா...'' உள்ளுக்குள் ஒரு எரிச்சலோடு பதில் கூறினாள் வனஜா.
வனஜாவின் அத்தகைய பதிலால் மனம் சங்கடப்பட்டாள் கமலா. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராதாவிற்கென தயாரித்துக் கொண்டு வந்த வெங்காயப் புளிக்குழம்பு, ரவா பணியாரம் ஆகியவற்றை அவளிடம் கொடுத்து விட்டு கிளம்பினாள்.
''என்ன அத்தை... அதுக்குள்ள கிளம்பறீங்க? இருந்து சாப்பிட்டுட்டு போங்களேன். உங்களையெல்லாம் பார்த்து எவ்ளவு நாளாச்சு? கொஞ்ச நேரம் என் கூட இருந்துட்டு போங்க அத்தை...''
''ஏம்மா... ராதா... ஆசைப்படறாள்ல்ல.... கொஞ்ச நேரம் இருந்துட்டுதான் போவோமே? ஏன் இப்பிடி வந்ததும், வராததுமா அவசரப்படறீங்க?....'' என்ற வினோத்திடம் என்ன பதில் சொல்ல முடியும் அந்த சூழ்நிலையில்?
'தான் விரும்பிய பெண் இவள். இவளது ஆசையும், சந்தோஷமுமே எனக்கு முக்கியம்' என்கிற ஆத்மார்த்தமான அன்பில், அம்மாவிற்கு கட்டளையிட்டு அங்கே அவளை இருக்க வைத்து, தானும் உடன் இருந்தான் வினோத்.
பொதுவான பல கதைகளைப் பேசி மகிழ்ந்த அவர்களுடன் சுந்தரபாண்டியும் கலந்து கொண்டார்.
'கலகல'வெனப் பேசும் இயல்பு இல்லாத ராதா, அன்றும் அளவாக... ஆனால் அழகாகப் பேசுவதைத் தன்னை அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் வினோத்.
'தன் மகள் ராதா, புகுந்த வீட்டில் சந்தோஷமாக இல்லை என்பதை கமலா தெரிந்துக் கொண்டுவிடக் கூடாது' என்று தவித்தாள் வனஜா. ராதாவை, வினோத்திற்குக் கட்டிக் கொடுக்கவில்லை என்பதால் ஒருவித குற்ற உணர்வோடும், தாழ்வு மனப்பான்மையிலும் துவண்டு போயிருந்தாள் வனஜா. எனவே 'கமலாவும், வினோத்தும் எப்போதடா கிளம்புவார்கள்' எனக் காத்திருந்தாள்.
'ராதாவின் மாமியார் பற்றிய புகார்களுக்கே இப்படி என்றால், ராதாவின் கணவன் பற்றி வனஜா அறிந்து கொள்ள நேரிட்டால்...?' விதி, வனஜாவைப் பார்த்துக் கை கொட்டி சிரித்தது.
இரவு உணவிற்காக சப்பாத்தியும், தக்காளி குருமாவும் தயாரித்துக் கொண்டிருந்த வனஜாவின் மனதில், எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருந்தன.
சப்பாத்திகளைத் தயாரித்து முடித்ததும், அனைவரையும் சாப்பிட அழைத்தாள் வனஜா.
''அம்மா, எனக்கு சப்பாத்தி வேணாம்மா. இட்லி அல்லது தோசைதான்மா வேணும். அத்தை கொண்டு வந்திருக்கற புளிக்குழம்பு இருக்குல்ல? அதனால எனக்கு இட்லி, தோசைதான்மா வேணும்... புளிசாதத்தை நாளைக்கு மதியம் சாப்பிட்டுக்குவேன்...''
''அடடா... மாவு இல்லியேம்மா. இன்னிக்குத்தான் ஊறப்போட்டு ஆட்டி வச்சிருக்கேன்...''
இதைக் கேட்டுக் கொண்டிருந்த வினோத், உடனே எழுந்தான்.
''இதோ... ஒரு நிமிஷம் அத்தை. நான் போய் மாவு வாங்கிட்டு வந்துடறேன்'' என்றவன் வனஜாவின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் வெளியேறினான்.
தான் விரும்பிய பெண் ராதா. அவள் விரும்புவதை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பில் ஓடிச் சென்று மாவு பாக்கெட் வாங்கி வந்தான். வனஜாவிடம் கொடுத்தான்.
மென்மையான தோசைகள்தான் ராதாவிற்கு விருப்பம். எனவே மிக மென்மையான தோசைகளை வார்த்து, அவற்றுடன் புளி குழம்பு ஊற்றிக் கொடுத்தாள் வனஜா. அவற்றை ஆசையாக, ருசித்து சாப்பிட்டாள் ராதா. அவள் சாப்பிடுவதை ரசித்தான் வினோத்.
சாப்பிட்டு முடித்த ராதா, தன் பூவிதழ் புன்னகை மின்ன, வினோத்திடம் நன்றி கூறினாள்.
''தேங்க்ஸ் வினோத்...''
''இதென்ன பெரிய விஷயம்ன்னு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு? இதோ... பக்கத்துல இருக்கற கடைக்குப் போய் மாவு வாங்கிட்டு வந்தேன்...''
''சரி... சரி... நீ சாப்பிடு...''
பின்னானில் இதைவிட மிகப் பெரிய உதவிகளை வினோத் செய்துத் தரும்படியான சூழ்நிலைகள் தன் வாழ்வில் உருவாகும் என்று, அன்று ராதா நினைத்தாளா?
கமலாவும், வினோத்தும் சாப்பிட்டு முடித்ததும் கிளம்பினார்கள்.
'வரேண்டா ராதா. உனக்கு வேற என்ன வேணும்ன்னாலும் கேளு. செஞ்சு எடுத்துட்டு வரேன்... அல்லது வினோத்ட்ட குடுத்து அனுப்பறேன்...''
''சரி அத்தை... வேணும்னு தோணுச்சுன்னா... ஃபோன் பண்றேன்...''
''சரிடாம்மா ராதா...'' கமலாவும் வினோத்தும் வெளியேறினார்கள்.
11
தாய் வீட்டிற்கு வந்து மூன்று வாரங்களில் ராதாவிற்கு பிரசவ வலி கண்டது. ஆண் பிள்ளை இல்லாத வீட்டில்... வினோத் ஆண் பிள்ளையாக ஆஸ்பத்திரி, வீடு என்று உதவிகள் செய்தான். அந்த சமயம் பார்த்து, கேசவனுக்கு அவனது அலுவலகத்தில் வெளியூர் வேலைகளைக் கொடுத்துவிட்டபடியால் அவனால் உதவிக்கு வரமுடியவில்லை.
டாக்டரம்மா சொன்னபடி டிசம்பர் ஆறாம் தேதி ராதா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை, அவளது அப்பாவைப் போன்ற ஜாடையில் மிக அழகாக இருந்தது.
குழந்தை பிறந்த சேதி கேட்டு திலகாவும், திலீப்பும் அவர்களுடன் நடமாடும் பொம்மையாக திலீப்பின் அப்பா நாராயணனும் மருத்துவமனைக்கு வந்தனர்.
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான் திலீப். தன்னைப் போலவே அச்சு அசல் முகத்தோடு இருந்த குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தான். அவனது இறுகிய இரும்பு முகம் கூட இளம் தளிரான குழந்தையைப் பார்த்து இனிமையான சிரிப்பை உதிர்க்கும் முகமாக மாறியது.