பூவிதழ் புன்னகை - Page 4
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
ஆனா... நாங்க சொன்ன கண்டிஷனுக்கு நீங்க ஒத்துக்கணும். பொண்ணுக்கு படிப்பும் கம்மி. வேற எதுவும் நாங்க வற்புறுத்தி கேட்கலை. பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இனி... நீங்கதான் சொல்லணும். அவசரம் இல்லை. கேசவன்ட்ட சொல்லி அனுப்புங்க. கல்யாண தேதி விபரங்களை அதுக்கப்புறம் பேசிக்கலாம்.''
மிகவும் உறுதியான குரலில் தன் முடிவைக் கூறிய திலகா எழுந்தாள். அவள் எழுந்ததும் திலீப்பின் அப்பா நாராயணனனும், திலீப்பும் எழுந்து கொண்டனர். அந்தக் குடும்பத்தில் மீனாட்சி ஆட்சி என்று புரிந்து போயிற்று சுந்தரபாண்டிக்கு.
அவர்கள் விடை பெற்று கிளம்பினர்.
''கேசவன்... மாப்பிள்ளை பையன் பார்க்கறதுக்கு நல்லா இருக்கான். நிறையவும் சம்பாதிக்கிறான். அதெல்லாம் சரிதான். ஆனா... வீட்டை இப்பவே எழுதிக் குடுங்கன்னு கேக்கறது சரியா தோணலை. ராதா எங்களோட ஒரே பொண்ணு. எங்களுக்கப்பறம் அவளுக்குத்தான் இந்த வீடு. இதை சொன்னாலும் அந்த அம்மா கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டை எழுதிக் குடுங்கன்னு கேக்கறாங்க. அதனால நான் நிறைய யோசிக்கணும்....''
''அவங்க இப்பிடி கேட்பாங்கன்னு நானே எதிர்பார்க்கலை. நீங்க யோசிச்சு சொல்லுங்க மச்சான்.''
கேசவன் கிளம்பினான்.
உள் அறையில் இருந்து திலகா கூறிய நிபந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ராதா, வெளியே வந்தாள்.
''இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா எனக்கு...''
''ஆமாம்மா... எனக்கும் பிடிக்கலை. பையன் பார்க்க நல்ல இருக்கான். நிறைய சம்பாதிக்கிறான். அதுக்காக குடி இருக்கற வீட்டை இப்பவே எழுதிக் குடுக்க முடியுமா? அவங்க அப்பிடி கேட்டதுமே, நான் முடிவு பண்ணிட்டேன் 'இந்த சம்பந்தம் வேண்டாம்'ன்னு...''
அவர் பேசி முடிப்பதற்குள் வனஜா குறுக்கிட்டாள்.
''அவதான் சின்னப்பொண்ணு... சிறு பிள்ளைத்தனமா பேசறாள்ன்னா... நீங்களும் இப்பிடி பேசறீங்க?!..''
''பின்ன? எக்ஸ்ட்ரா பத்து பவுன் நகையும் இந்த வீட்டையும் எழுதிக் குடுக்கணும்ங்கறியா?'' லேசான கடுமை தொனிக்கக் கேட்டார் சுந்தரபாண்டி.
''நம்ம ராதா... நமக்கு ஒரே பொண்ணு. மாப்பிள்ளை பையன் நிறைய படிச்சு... நிறைய சம்பாதிக்கறான். நம்ப ராதாவுக்கு படிப்பும் இல்லை. இவ்ளவு பெரிய இடம் நமக்கு சம்பந்தமா கிடைக்கறது என்ன லேசான விஷயமா...?''
''அதுக்காக...?''
''அதுக்காக, அவங்க கேக்கற பத்து பவுனையும் மேற்கொண்டு குடுத்து, இந்த வீட்டையும் எழுதிக் குடுத்துடலாம்ங்க. கேசவன் என்ன சொன்னான் தெரியுமா? மாப்பிள்ளை பையனுக்கு பெங்களுரூக்கு மாற்றலாகுமாம். அதனால அங்க ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் 'புக்' பண்ணி அட்வான்ஸ் குடுத்து வச்சிருக்கானாம். யோசிச்சுப் பாருங்க. நம்ம பொண்ணு, வீடு, கார், கை நிறைய பணம்ன்னு செல்வச் சீமாட்டியா வாழப் போறா. அவளோட எதிர்கால வாழ்க்கைக்காக நாம இதை செய்யக் கூடாதா...?''
''நம்ம பொண்ணுக்காக நாம எதை வேண்ணாலும் செய்யலாம். ஆனா... நம்பளோட வயோதிகப் பாதுகாப்புக்குரிய பொருளாதாரத்துக்கு ஆதாரமா இருக்கற இந்த வீட்டை இப்பவே எழுதிக் குடுக்கறது சரி இல்லைன்னுதான் சொல்றேன்...''
''எழுதி மட்டும்தான் குடுக்கச் சொல்றாங்க. வீட்டை இப்பவேவா கேட்கறாங்க?...''
''ஐய்யோ... வனஜா... உனக்கு புரியலை. நாம இப்ப எழுதிக் குடுக்கறதும், இப்பவே காலி பண்ணிக் குடுக்கறதும் ஒண்ணுதான்...''
''அது எப்பிடிங்க ஒண்ணாகும்? நாம என்ன அவங்க பேரிலயா எழுதிக் குடுக்கப் போறோம்? நம்ம ராதா பேர்லதானே எழுதிக் குடுப்போம்...?''
அப்போது வனஜாவின் அருகில் வந்து ராதா பேசினாள்.
''அம்மா... அப்பா சொல்றது ரொம்ப சரியான விஷயம்மா. எல்லா விஷயத்துலயும் பிடிவாதம் பிடிக்கற மாதிரி இந்த விஷயத்துலயும் பிடிவாதம் பிடிக்காதீங்கம்மா ப்ளீஸ்...''
''நீ சின்னப் பொண்ணு. உனக்கு ஒண்ணும் தெரியாது. அம்மா செஞ்சா... எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான் செய்வேன்... நீ போய் சமையல்கட்ல எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி சுத்தம் செஞ்சு வை... நான் வரேன்...'' ராதாவை அங்கிருந்து கிளப்பினாள் வனஜா.
ராதா நகர்ந்தாள்.
மௌனமாக இருந்த சுந்தரபாண்டியிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் வனஜா.
''இந்த வரனை விட்டுட எனக்கு மனசு இல்லைங்க. தயவு செஞ்சு... நான் சொல்றதைக் கேளுங்க. மேற்கொண்டு அவங்க கேக்கற பத்து பவுன் நகைக்குரிய தங்கத்துக்கு என்னோட நகைகள்ல்ல இருந்து குடுக்கறேன்ங்க. வீடு உங்க பேர்ல இருக்கு. அதுக்கு நீங்க மனசு வச்சாத்தான் முடியும். ப்ளீஸ்ங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்ங்க. ராதா, திவ்யமா வாழ்வா. அது இப்ப உங்க கையிலதான் இருக்கு. உங்க கால்ல விழுந்து கேக்கறேன்ங்க... இந்த வரனை முடிச்சு வைங்க ப்ளீஸ்...''
''என்ன வனஜா இது? ராதா... நம்ப பொண்ணு. அவ அமோகமா வாழறதுல எனக்கும்தான் ஆசை... ஆனா...''
''மறுபடி மறுபடி ஆனா... ஆவன்னான்னு இழுக்காதீங்க... உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்...''
''இவ்ளவு தூரம் நீ கெஞ்சும் போது எனக்கு வேற இதுக்கு மேல மறுத்துப் பேச முடியலை. ஒண்ணு மட்டும் சொல்லாம இருக்க முடியலை. இதோட பின் விளைவுகள் பிரச்னையாகத்தான் இருக்கும்...''
''அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க...''
''சரி... இந்த அளவுக்கு நீ தைரியமா இருக்க. நீயே மாப்பிள்ளையோட அம்மாகிட்ட பேசிடு...''
''யப்பாடா. இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு. நாளைக்கு நல்ல நேரம் பார்த்துட்டு அவங்களைக் கூப்பிட்டு பேசிடறேன்...''
'இந்த விஷயத்துல எனக்கு முழு மனசா உடன்பாடு இல்லைங்கறதுக்காக... இவளையே பேசிடுன்னு நான் மறைமுகமா சொல்றதைக் கூட புரிஞ்சுக்காம... மகள் மேல கண்மூடித்தனமான பாசம் வச்சிருக்கா இந்த வனஜா. இவளைப் பார்த்து கோபப்படறதை விட பரிதாபப்படத்தான் முடியுது என்னால. விதி இவளோட குருட்டுப் பாசத்தோட விளையாடும் போது நான் என்ன செய்ய முடியும்...' மனதிற்குள் நினைத்துக் கொண்டார் சுந்தரபாண்டி. சந்தோஷ முகத்துடன் ராதாவை நாடி சமையலறைக்குள் சென்றாள் வனஜா.
3
இரண்டு மாத காலங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. கையில் தேறிய பணம், தேறாத பணத்திற்கு வட்டிக்கு வாங்கிய பணம், வனஜாவின் நகைகள், ராதாவின் பெயருக்கு மாற்றி எழுதப்பட்ட பத்திரம் இவற்றோடு ராதா- திலீப் இவர்களது திருமணம் நடந்தேறியது.
ஆரம்பத்தில் எதுவும் பேசாத திலீப்பின் பெற்றோர், திருமணத்திற்கு சில நாட்கள் முன்னால், கல்யாண செலவுகள் அத்தனையையும் சுந்தரபாண்டியின் தலையில் கட்டினார்கள். சமாளித்து, திருமணத்தை நடத்துவதற்குள் சுந்தரபாண்டி கடனாளியாகிப் போனார்.
ராதா, புகுந்த வீடு சென்றாள். மாமியார் பணம்... பணம்... என்று பறப்பவள் என்பதைப் புரிந்து கொண்டாள்.