பூவிதழ் புன்னகை - Page 3
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
''ஹலோ... என்ன கேசவா?''
''மச்சான்... நம்ப ராதாவுக்கு ஒரு வரன் சொல்லி இருந்தேன். அக்கா சொன்னாங்களா?''
''சொன்னா கேசவன். இதோ... உங்க அக்காகிட்ட பேசு...'' அலைபேசியை வனஜாவிடம் கொடுத்தார்.
''தம்பி, மச்சான்கிட்ட நீ சொன்ன வரன் விஷயமாத்தான் பேசிக்கிட்டிருக்கேன். பொண்ணு பார்க்கறதுக்கு நல்ல நாள் அவங்க பார்த்து சொல்றாங்களா? அல்லது நாம பார்த்து சொல்லலாமா?''
''வர்ற வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருக்காங்க அக்கா. சரின்னு சொல்லிடட்டுமா?''
''சரி தம்பி. சொல்லிடு. நீயும் வந்துடு.''
''நான் வராமயாக்கா... நீ சொல்லணுமா? சரி சரி... மச்சான்ட்ட குடுக்கா...''
வனஜா, அலைபேசியை சுந்தரபாண்டியிடம் கொடுத்தாள்.
''வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருக்காங்க மச்சான். அக்கா சரின்னு சொல்லிட்டாங்க...!''
''சொல்லிட்டாள்ல்ல... நடக்கட்டும்.''
''சரி மச்சான். வெள்ளிக்கிழமைக்கு தேவையான ஜாமானெல்லாம் நானே வாங்கிட்டு வந்துடறேன். அக்காவை லிஸ்ட் எழுதி வைக்கச் சொல்லுங்க...''
''சரி கேசவா...'' மொபைலை மௌனமாக்கினார் சுந்தரபாண்டி.
மொபைல் தன் பணியை முடித்துக் கொண்டது.
2
வெள்ளிக்கிழமை. மாலை நேரம். வீட்டில் ரவா கேசரியில் ஊற்றிய நெய்யின் மணமும், வடை, சாம்பாரின் மணமும் அந்த மணங்களுடன் போட்டி போடும் விதமாக ஊதுபத்தியின் மணமும் வீசிக் கொண்டிருந்தது.
காஃபி ஃபில்ட்டர் பரணிலிருந்து இறக்கி வைக்கப்பட்டு புதிய டிகாஷன் போடப்பட்டு, பாலில் கலப்பதற்காகக் காத்திருந்தது.
ஆபீஸ் விஷயமாக, சுந்தரபாண்டி டில்லி போயிருந்தபோது வாங்கி வந்திருந்த வெள்ளி ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட சந்தனக் கலர் பட்டுப்புடவை உடுத்தி, அதே வண்ணத்தில் ரவிக்கை அணிந்திருந்த ராதா, நிறைய நகைகள் அணிந்து கொள்ளாமல், மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை மட்டும் கழுத்திற்கு போட்டுக் கொண்டு, சிறிய ஜிமிக்கியுடன் கூடிய தங்கக் கம்மலும், கைகளில் பட்டையான ஒற்றை வளையலையும் அணிந்திருந்தாள்.
கேசவன் முன் தினமே வந்து உதவி செய்திருந்தான். மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்காக, வாசலில் காத்திருந்தான். வனஜா, மகிழ்ச்சியாக மகளைப் பார்த்து ரசி த்துக் கொண்டிருந்தாள். பலகாரங்களைப் பார்த்து பார்த்து மிகுந்த சிரத்தை எடுத்து தயாரித்திருந்தாள்.
வாசலிலேயே காத்திருந்த கேசவன், மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான். சுந்தரபாண்டியனும், வனஜாவும் அவர்களைக் கை கூப்பி வணங்கியபடி வரவேற்றனர்.
மாப்பிள்ளை பையனின் அப்பா, அம்மா, அவர்களுடன் மாப்பிள்ளையும் வந்திருந்தான். கூட்டமாக வராமல் பெற்றோர் மட்டுமே மாப்பிள்ளையுடன் வந்திருந்தது விரும்பக் கூடிய ஒன்றுதானே.
கேசவன், முதலில் மாப்பிள்ளையின் பெற்றோரை அறிமுகம் செய்து வைத்தான்.
''மச்சான்... இவர்தான் மாப்பிள்ளை. பேர் திலீப்...'' என்று மாப்பிள்ளை பையனை அறிமுகம் செய்து வைத்தான் கேசவன்.
மாப்பிள்ளை திலீப், வாட்டசாட்டமான ஆண் மகனாக இருந்தான். நல்ல நிறம். சுருண்ட, அடர்த்தியான தலைமுடி அவனுக்கு வசீகரமானத் தோற்றத்தைக் கொடுத்திருந்தது. உயரமான உருவம்! அடர்ந்த புருவங்களும், எடுப்பான மூக்கும், பெண்மை படர்ந்திருந்த உதடுகளுமாக மிக அழகிய இளைஞனாக இருந்தான் திலீப்.
பரஸ்பர மரியாதைகளுக்குப் பிறகு மாப்பிள்ளையின் பெற்றோரும், திலீப்பும் சோஃபாவில் உட்கார்ந்தனர்.
சிறு கிண்ணங்களில் கேசரியையும், வடையையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் வனஜா. எல்லோரும் ரசித்து சாப்பிட்டனர். காஃபி கொடுப்பதற்கு ராதாவை அழைத்தாள் வனஜா.
காஃபி கோப்பைகளை ஒரு ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் ராதா. அங்கிருந்த அனைவருக்கும் காஃபி கொடுத்தாள். திலீப்பிடம் கொடுக்கும் பொழுது அவனது முகத்தை பார்த்துக் கொண்டாள்.
ஆடம்பரம் இல்லாத அடக்கமான அழகோடு, அளவான உடல்வாகோடு, வெள்ளை வெளேர் நிறமில்லாத போதும் மாநிறமான முகத்தில் ஒரு தெய்வீக அழகு ஜொலிக்கக் காணப்பட்ட ராதாவை, திலீப்பும் பார்த்தான். அவனது பெற்றோரும் பார்த்தனர்.
திலீப்பின் அம்மா திலகா, பேச ஆரம்பித்தாள்.
''உன் பேர் என்னம்மா?'' ராதாவிடம் கேட்டாள்.
''ராதா'' என்று பதில் கூறிய ராதா, அங்கிருந்து போக முயன்றாள்.
''இரும்மா. நீ டிகிரி படிப்பு எதுவும் படிக்கலைன்னு உங்க மாமா சொன்னார். சமையல், வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்வியா?''
''எல்லாமே சமைக்கத் தெரியும். நான் நல்லா சமைக்கறதா... சாப்பிட்டவங்க சொல்லி இருக்காங்க...''
குறுக்கிட்டுப் பேசினான் கேசவன்.
''எங்க ராதா சமையல்ல கெட்டிக்காரி. எங்க அக்காவோட கைப்பக்குவம் அவளுக்கு வந்திருக்கு. வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்வா. ரொம்ப ஸ்மார்ட். தெய்வ பக்தி அதிகம்...''
''பொண்ணு, பார்க்கறதுக்கும் லட்சணமா இருக்கா. மற்ற விஷயங்கள்ல்லயும் கெட்டிக்காரியா இருக்கா. படிப்புதான்... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு. அதைப் பத்தி பரவாயில்ல... வேலைக்கு போய்த்தான் ஆகணும்ங்கற அவசியம் இல்லை. ஆனா...''
திலகா, ஜவ்வாக பேச்சை இழுத்துக் கொண்டு போனதால் சற்று படபடப்புடன் 'அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாளோ' என்று கலக்கமான உள்ளத்துடன் முகம் மாறிப் போனாள் வனஜா.
எந்த சலனமும் இன்றி, சாதாரணமாக உட்கார்ந்திருந்தார் சுந்தரபாண்டி. திலகா, மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
''நாப்பது பவுன் போடறதா கேசவன் சொன்னார். கூட ஒரு பத்து பவுன் போட்டு அம்பது பவுனா போட்டுருங்க. உங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணுதானே... இந்த வீடு உங்க பூர்வீக வீடுன்னு கேசவன் சொன்னார். இதை அவ பேருக்கு எழுதிக் குடுத்துடுங்க...''
திகைத்துப் போன சுந்தரபாண்டி பதில் கூறினார். ''வீடு எங்களுக்குப் பிறகு ராதாவுக்குத்தான் சொந்தம். சட்டப்படி அவளுக்கு இது கிடைச்சுடும். அதனால இப்பவே எழுதி குடுக்கணும்ங்கறது அவசியமும் இல்லை. அதில எனக்கு உடன்பாடும் இல்லை...''
''அதென்னங்க இப்பிடி சொல்றீங்க. ராதாவுக்கு எழுதிக் குடுத்தாலும் நீங்க இந்த வீட்லயே இருந்துக்கலாம். உங்களுக்கு பின்னாடி அவளுக்குதான்னு எனக்கும் தெரியும். ஆனா... கல்யாணத்துக்கு முன்னால அவ பேருக்கு எழுதிக் குடுத்துடுங்க...'' என்று கூறிய திலகா, மேலும் தொடர்ந்தாள்.
''எங்க மகன் திலீப் ஏகமா சம்பாதிக்கறான். உங்க மகள் ராதா கடுகளவு கூட கஷ்டம் இல்லாம நல்லபடியா இருப்பா. நாங்க ஒண்ணும் நூறு பவுன் இருநூறு பவுனுன்னு கேட்கலியே... யோசிச்சு சொல்லுங்க. அவனுக்கு இருநூறு பவுன் போட்டு, பொண்ணு குடுக்கத் தயாரா இருக்காங்க. கார் கூட வாங்கித் தர்றதா சொல்றாங்க. ஆனா... உங்க குடும்பத்தைப் பத்தி கேசவன், நல்ல விதமா சொல்லி இருக்காரு. அதனால உங்க குடும்பத்துல சம்பந்தம் பண்ணிக்கணும்ன்னு நாங்க விரும்பறோம்.