பூவிதழ் புன்னகை - Page 2
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
'' 'பணம் பந்தியில... குணம் குப்பையில'ன்னு சொல்லுவாங்க...''
''அதுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா? தெரியாததைப் பத்தி மேம்போக்கா எதையும் பேசக் கூடாது.''
''தேவை இல்லாததைப் பத்தி பேசிக்கிட்டிருக்கறதைவிட ஆகற வேலையைப் பார்த்தா நல்லா இருக்கும்ங்க. எங்க தம்பியோட ஆபீஸ்ல வேலை செய்றவரோட பையன் ஒருத்தனுக்கு பொண்ணு பார்க்கறாங்களாம். பையன் என்ஜினியர். பெரிய வேலையில இருக்கானாம். ஏகப்பட்ட சம்பளம். கார்கூட இருக்காம். அவனே ஆபீஸ்ல லோன் போட்டு கார் வாங்கி இருக்கானாம். பார்க்கறதுக்கும் ஆள் நல்லா இருப்பானாம்... என்னோட தம்பி சொன்னா சரியாத்தான்ங்க இருக்கும். பொண்ணு பார்க்க வர்றதுக்கு கேக்கறாங்களாம். சரின்னு சொல்லட்டுமா?''
''நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டில்ல? இதுக்கு மட்டும் ஏன் என்னைக் கேட்பானேன்?''
''இப்பிடி விட்டேத்தியாப் பேசினா நல்லாவா இருக்கு? பொண்ணு பார்க்க வர்றதுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க...''
''அதெல்லாம் சொல்றேன்... ஒரு விஷயம். நம்ப ராதாவுக்கு சின்ன வயசுல வலிப்பு வந்துததுனால அவளை பத்தாம் கிளாஸோட நிறுத்திட்டோம். ஸ்கூல்ல வலிப்பு வந்து மயங்கி விழுந்துடறாள்ன்னு அவளை ஸ்கூலுக்கு அனுப்பாம விட்டுட்டோம். ஆரம்பத்துலயே சரியான வைத்தியம் பார்க்காம விட்டதுனால அவளோட படிப்பு கெட்டுப் போச்சு. அவளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டரம்மா என்ன சொன்னாங்க ஞாபகம் இருக்கா? முதல் தடவை வலிப்பு வந்தப்பவே வைத்தியம் பார்த்திருந்தா... சீக்கிரமா குணப்படுத்தி இருக்கலாம். இப்பிடி ரெண்டு வருஷம் அலட்சியமா இருந்து, அவளோட படிப்பைக் கெடுத்துட்டீங்களே'ன்னு சொன்னாங்கள்ல்ல... அதுக்கப்புறம்... வைத்தியம் பார்த்துக்கிட்டே படிக்கலாம்னு சொன்னப்ப நீ கேட்கலை.''
''நடந்ததைப் பத்தி பேசி இப்ப என்ன ஆகப் போகுது?! அதான் டாக்டரம்மா எல்லா செக்கப்பும் பண்ணிட்டு 'இனி உங்க மகளுக்கு வலிப்பு வராது. முழுசா குணமாயிட்டாள்'ன்னு சொன்னாங்கள்ல்ல? கல்யாணம் பண்றதுக்கு இந்த வலிப்பு நோய் ஒரு தடை இல்லைன்னும் சொன்னாங்களே?''
''அதே டாக்டரம்மா நம்ம மகளைப் பத்தின உண்மையையும் மறைக்காம சொல்லிடுங்கன்னு சொன்னதை மறந்துட்டியா?''
''நம்ப ராதாவுக்குதான் அந்த நோய் குணமாயிடுச்சேங்க? பின்ன எதுக்கு நாமளே குட்டையைக் குழப்பணும்? டாக்டரம்மா சொன்னது போல அவளுக்கு மூணு வருஷமா வலிப்பு வர்றதே இல்லை. அதனால நாம அந்த விஷயத்தை எதுக்கு சொல்லிக்கிட்டு?''
''சொன்னா... பொண்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்கன்னுதானே யோசிக்கற?...''
''யோசனைக்கே இடமில்லைங்க. உறுதியா சொல்றேன். இதை சொல்ல வேண்டாம்ன்னு...''
''உனக்கு தைரியம் இருந்தா சரிதான்...''
''டாக்டரம்மாட்ட எல்லாமே தெளிவா பேசிட்டேன்ங்க. அவங்களோட வைத்தியத்துனால அவ பரிபூரணமா குணமாயிட்டா. என்னென்ன பரிசோதனை செய்யணுமோ... எல்லாம் செஞ்சாச்சு. ராதாவோட கல்யாண முயற்சியை நாம எந்தத் தயக்கமும் இல்லாம செய்யலாம்ங்க.''
''சரி. நீ உன் தம்பிகிட்ட சொல்லி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பொண்ணு பார்க்க வர்றதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு.''
''சரிங்க.''
''நகை, வரதட்சணை பத்தியெல்லாம் பேசிட்டியா?''
''முதல்ல பொண்ணைப் பார்க்கட்டும்ங்க. பிடிச்சிருந்தா அதுக்கப்புறம் அதைப் பத்தியெல்லாம் அவங்களே பேசுவாங்க.''
''நம்ப சக்திக்கு மீறிடாம பார்த்துக்கணும். அதுக்குதான் சொல்றேன்.''
''நல்ல இடம்... நல்ல பையன்னா... முன்ன பின்ன போட்டு முடிச்சுட்டா நல்லதுதானே?''
''முடியணும்ல வனஜா...''
''உங்களால முடியலைன்னா... என்னோட நகைகளை நான் தரேன்ங்க...''
''வயசான காலத்துல நம்ம கையில நகை, பணம்ன்னு இருந்தாத்தான் வனஜா... மரியாதை. வயசான பிறகு நம்ம கையில ஒண்ணுமில்லாம இருந்தா... நமக்கு மரியாதை இருக்காது...''
''நம்ப ராதா... நம்ம மேல உயிரையே வச்சிருக்கா. அவ நம்பளை கை விட்ருவாளா என்ன?''
'' 'தாயும், பிள்ளையும்ன்னாலும் வாயும், வயிறும் வேற?'ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. மறந்துடாத...''
''ஏங்க... நல்ல விஷயம் பத்தி பேசும்போது இப்பிடி பேசறீங்க?''
''நான் எதையும் நடைமுறையா சிந்திச்சுத்தான் பேசுவேன். முடிவு எடுப்பேன்...''
''நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளுக்கு இல்லாத சொத்தும், நகையும், பணமும் நமக்கு எதுக்கு? நம்ம பொண்ணுக்கு நாம செய்யாம வேற யார் செய்வாங்க? அவ செல்வ சுக போகமா வாழறதைப் பார்க்கற சந்தோஷம் நமக்கு போதாதா?''
''போதாது வனஜா. நம்ம நாலு காசு பணம் வச்சிருந்தாத்தான் நல்லபடியா வாழ முடியும். ராதா நம்ம மேல உயிரையே வச்சிருக்கா. இன்னிக்கு நிலைமை அவ நம்ப பொண்ணு. நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு இன்னொருத்தனோட மனைவி. அவனோட அனுமதிக்காக காத்திருக்கணும். சம்மதம் வந்தா சந்தோஷப்படுவா. எதிர்ப்பு வந்தா?... திக்கு முக்காடிப் போவா. பெத்தவங்களுக்கும், புருஷனுக்கும் நடுவுல அவ பாடுதான் திண்டாட்டம்.''
''அந்தப் பையனோட குடும்பத்தைப் பத்தி தம்பி சொன்னதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது எனக்கென்னமோ நீங்க சொல்ற மாதிரியான பிரச்னைகள் எதுவும் வராதுன்னு தோணுது...''
''பிரச்னை வரும்ன்னு நானும் சொல்லலைம்மா. யதார்த்தமான வாழ்க்கையைப் பத்தி நிறைய யோசிச்சுப் பார்த்துதான் சொல்றேன். உனக்கு வெளி உலகமே தெரியாது. நான் ஆபீஸ் போறவன். நாலு இடத்துக்கு போறவன். ஏகப்பட்ட பேர்களோட பழக்கம் இருக்கு. அவங்களோட நிறைய பேசி இருக்கேன். இன்னிக்கு நடப்பு விஷயங்கள் அத்தனையும் சொல்லி இருக்காங்க. பல பேர் குடும்பத்துலயும் பலவிதமான பிரச்னைகள்! அதையெல்லாம் கேக்கறப்ப பயம்மா இருக்கும். நம்ம காலம் மாதிரி இப்ப இல்ல வனஜா. இந்தக் காலத்துல பையன்கள் சரி இல்லை. நோகாம பொண்ணு வீட்ல இருந்து வாங்கி சௌகர்யமான வாழ்க்கையை அமைச்சுக்கணும்ன்னு அலையறானுங்களே தவிர, சொந்தமா... சுயமா சம்பாதிச்சு முன்னேறனும்ங்கற எண்ணத்துல பெரும்பாலான பையன்ங்க இல்லை...''
''யார் யாரோ பேசறதையும், சொல்றதையும் வச்சு ரொம்ப பயந்து போயிட்டீங்க. இந்தப் பையன் நல்ல பையன். நம்பிக்கையோட, பொண்ணைக் காட்டுவோம். அவங்க வீட்டு ஆளுககிட்ட பேசிப் பார்ப்போம். கை நிறைய சம்பாதிக்கற பையன்னா வெறும் கையோட பொண்ணு எடுத்துப்பாங்களா? ஏதோ கொஞ்சம் அதிகமா எதிர் பார்க்கத்தான் செய்வாங்க.''
''ஏழைக்கேத்த எள்ளுருண்டைதான் வனஜா நல்லது. பணக்கார பலகாரம் வாய்க்கு ருசியா இருக்கும். ஆனா... வாழ்க்கைக்கு சுகமா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்...''
''எதுவும் தப்பா நடக்காதுங்க...''
''சரி. நீ ஆசைப்படற. ஒரே பொண்ணோட வாழ்க்கை வசதியான வாழ்க்கையா அமையணும்ன்னு நீ ஆசைப்படறது தப்பு இல்லை. ஆனா... என்னோட கணக்கு என்னிக்கும் தப்பாது. தப்பா இருக்காது...''
அப்போது சுந்தரபாண்டியனின் மொபைல் ஒலித்தது. பேச்சை நிறுத்திவிட்டு மொபைலில் வந்த நம்பரைக் கவனித்தார். வனஜாவின் தம்பி கேசவனின் நம்பர்கள் வந்திருந்தன.