பூவிதழ் புன்னகை - Page 8
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8111
9
அம்மா ஆவதற்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்த ராதா... ஆசை ஆசையாக சாப்பிட்டாள். அலுப்பு நீங்கத் தூங்கினாள். அவளைத் தங்கத் தட்டில் தாங்காத குறையாக தாங்கி, பேணிக் காத்தாள் வனஜா.
ராதாவின் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டாள். சிறு வேலை கூட செய்யவிடாமல் அடைகாக்கும் கோழியாய் பாதுகாத்தாள் மகளை. சுந்தரபாண்டி தினமும் சாத்துக்குடிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொடுத்தார்.
''குடிம்மா. நீ பலவீனமா இருக்கறதா டாக்டரம்மா சொன்னாங்கள்ல்ல? உன்னோட உடல் நலத்தை நல்லா பார்த்துக்கிட்டாதான்... நீ உன்னோட குழந்தையை நல்லபடியா பெத்து வளர்க்க முடியும். ஓய்வே குடுக்காம... இதோ... இந்தப் பழத்தை நான் பிழிஞ்சு எடுக்கற மாதிரி... உன்னை உன் மாமியார் பிழிஞ்சு எடுத்திருக்காங்க. வாயைத் திறந்து எதுவுமே பேசாம... இப்பிடி... மாடா உழைச்சு... ஓடா தேய்ஞ்ச்சு போயிருக்கியேம்மா. ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணுன்னு உன்னை எங்க கண்ணுக்குள்ள பொத்தி வளர்த்தோமே...''
சுந்தரபாண்டியின் பேச்சைத் தடுத்தாள் வனஜா.
''ஏங்க... திரும்பத் திரும்ப அதைப் பத்தியே அவகிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க... வாயும், வயிறுமா இருக்கற பிள்ளைகிட்ட நல்ல விஷயங்களைப் பத்தி மட்டும் பேசுங்களேன்...''
''அம்மா... ஏம்மா... அப்பாவைப் பேசவிடாம தடுக்கறீங்க? எனக்கும் என்னோட மனசுல உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்க்கறதுதான்மா என்னோட மனச் சோர்வுக்கு ஒரு தீர்வா இருக்கு...''
''ஆனா... வெளில நம்ப உறவு வட்டாரத்துல இதைப் பத்தி சொன்னா... 'வீட்டு வேலைதானே செய்யறா... இது ஒரு பெரிய விஷயமா'ன்னு சுலபமா சொல்லிடறாங்க. அந்தந்த இடத்துல அவங்கவங்களை வச்சு நினைச்சுப் பார்த்தாத்தானே கஷ்டம் தெரியும்?'' பெருமூச்செறிந்தபடி வனஜா புலம்பினாள்.
''நல்ல வேளைம்மா. உன் புருஷன் திலீப்பாவது உன் மேல அன்பா இருக்கார். அந்த நிம்மதி போதும்மா. புருஷன் ஒருத்தனோட அன்பும், அரவணைப்பும் இருந்தா போதும். உன் மாமியார் மாதிரி நூறு ஆட்களை சமாளிச்சுடலாம்.''
அப்போது ராதாவின் இதயம் பேசியது. 'அப்பா... என் மாமியாரைப் பத்தி ஏகப்பட்ட விஷயங்களை சொன்ன நான், என் புருஷனைப் பத்தின விஷயங்களை மறைச்சுட்டேன். பாடு பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்தையெல்லாம் என்னோட கல்யாணத்துல செலவு பண்ணிட்டீங்க. கடனாளியா நிக்கறீங்க. இது போக இன்னும் என்னோட கணவரைப் பத்தி சொன்னா... உடைஞ்சு நொறுங்கிப் போயிடுவீங்க. அதனாலதான் உங்ககிட்டயும், அம்மாகிட்டயும் அவரோட அலட்சியப் போக்கைப் பத்தி சொல்லலை. அவர் நல்லவரா மாறுவார். என் குழந்தையைப் பார்த்ததும் அவருக்கு மனசு மாறும். என் மேலயும் பாசம் ஊறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்குப்பா...?'
'என்ன ராதா... நீ இப்பிடி பேச முடியாம தவிக்கற இல்ல?! ஆனா உன்னோட மனசுல துளிர் விட்டிருக்கற நம்பிக்கையை... உன் வயித்துல இருந்து பிறக்கப் போற இளம்தளிர் நிஜமாக்கணும்...' இதயத்தினுள் இருந்து எழும்பிய அந்தப் பேச்சு, அவளுக்கு சற்று தென்பு அளித்தது.
''நீங்க சொல்றது சரிதான்ப்பா. ஆனா... அம்மா சொல்ற மாதிரி உறவுக்கார வட்டத்துக்கெல்லாம் நாம பயப்பட வேண்டியதில்லைப்பா. நம்ப கஷ்டம் தெரிஞ்சா மட்டும் நம்ம கூட வந்து அந்தக் கஷ்டத்துல பங்கு எடுத்துக்கவா போறாங்க? யாருக்காகவும், எதையும் பூசி மொழுக வேண்டியதில்லை...''
''அப்பிடி இல்லடா ராதா... நமக்கு எதுக்கு மத்தவங்களோட இரக்கமும், பச்சாத்தாபமும்னு சொன்னேன்டா...'' வனஜா கூறியதும் ராதா நெகிழ்ந்தாள்.
''அம்மா... நான் இங்க இருக்கற வரைக்கும் என்னோட மாமியரைப் பத்தியோ... என்னை அவங்க ஒரு வேலைக்காரியை வேலை வாங்கறது போல என்னை வேலை வாங்கினது, கடுமையா பேசறது, மாமனாரோட கோழைத்தனம் இதைப்பத்தியெல்லாம் பேசாதீங்கம்மா. என் மனசில உள்ளதை பேறு காலத்துக்காக இங்கே வந்து அன்னிக்கே சொல்லிட்டேன். போதும்மா. இன்னும் கொஞ்ச நாள் அந்த நினைப்பே வேணாம்மா....''
''சரிடா ராதா. நீ நிம்மதியா இரு. நீ இங்க வந்து ஒரு வாரமாச்சு. டிஸம்பர் ஆறாம் தேதி உனக்கு டாக்டரம்மா 'டேட்' சொல்லி இருக்காங்க. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள நாள் ஓடிடும். அதனால நிம்மதியா... சந்தோஷமா இரும்மா. நாங்க வேற எதைப் பத்தியும் பேசலை...''
சுந்தரபாண்டி, ஒரு வாரமாக தன் மனதில் நெருடிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை கேட்டார்.
''மாப்பிள்ளை ஏம்மா உன்னைப் பார்க்கவே வரலை...? ஒரு வாரமாச்சே...?''
''அவருக்கு ஆபீஸ்ல நிறைய வேலைப்பா. அதனாலதான்...''
பொய்யான காரணத்தை உருவாக்கி, அதை உண்மைப்போல பேசுவதற்கு மிகுந்த சிரமப்பட்டாள் ராதா.
''ஹா... ஹா... ஹா....'' ராதாவின் இதயத்தின் ஒரு பக்கம், கிண்டலாக சிரித்தபடி தன் பேச்சை ஆரம்பித்தது.
''உன் புருஷனுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட ஆபீஸ்ல வேலையா? வெட்டி முறிக்கறாரா ஓய்வு இல்லாம? சூழ்நிலைகளை நல்லா சமாளிக்கக் கத்துக்கிட்ட... ராதா...''
''நக்கல் பண்ணது போதும். சும்மா இரு'' என்று கூறி, இதயத்தின் குரலை அடக்கி வைத்தாள்.
அப்போது அழைப்பு மணி ஒலித்தது.
''கேசவன் மாமாவாத்தான் இருக்கும். போய் பாருங்கப்பா...''
சுந்தரபாண்டி எழுந்து போனார். ராதாவின் கால் பக்கம் உட்கார்ந்திருந்த வனஜா, ராதா எழுந்திருக்க முயற்சி செய்வதைப் பார்த்தாள். அவளுக்குக் கை கொடுத்து வசதி செய்தாள்.
ராதா எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்தாள். அப்போது அவளைப் பார்த்த கேசவன், பாட்டு பாடினான்.
''பானை வயிறு போல பக்தர்களைக் காப்பவனே.... மூத்தவனே... அடேங்கப்பா... கணேசா...''
ராதா சிணுங்கினாள்.
''போங்க மாமா. நான் என்ன புள்ளையார் மாதிரியா இருக்கேன்...''
''ஆமாம்மா. புள்ளதானே உன் வயித்துக்குள்ள இருக்கு...'' என்றவன் இரண்டு டிபன் டப்பாக்களை அவளிடம் கொடுத்தான்.
''உங்க மாமி உனக்காக புளி சாதமும், கத்திரிக்காய் குழம்பும் குடுத்தனுப்பி இருக்கா. சாப்பிடும்மா. சாப்பிட்டுட்டு அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு சாதம் நல்லா இருந்துச்சா... உனக்குப் பிடிச்சுதான்னு சொல்லிடும்மா. எதிர்பார்த்துக்கிட்டிருப்பா...''
''சரி மாமா. சாப்பிட்ட உடனே மாமியைக் கூப்பிட்டு பேசிடறேன்.''
''சரிம்மா.''
கேசவன், வனஜா, ராதா, சுந்தரபாண்டி ஆகிய அனைவரும் சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசினார்கள். அதன்பின் கேசவன் விடை பெற்று கிளம்பினான்.